படித்ததில் பிடித்தது
பெரியவாள் சூலூர்பேட்டையில் தங்கியிருந்த போது ஒரு சூரிய கிரகணம் வந்தது.
தற்செயலாக அன்றைய தினம் நாங்கள் தரிசனத்துக்குச் சென்றிருந்தோம். கிரகணம் பிடிக்கும் போது செய்ய வேண்டிய ஸ்நானத்துக்காக அப்போது அங்கிருந்தவர்களுடன் சற்றுத் தொலைவிலிருந்த ஓர் ஆற்றுக்குப் போனார்கள் பெரியவாள்.
நீராடுவதற்கு முன் செய்யவேண்டிய சங்கல்பத்தைச் சொல்லக்கூடிய பண்டிதர் யாரும் அந்தக் கூட்டத்தில் இல்லை.எங்களுக்குப் பெரியவாளே சங்கல்பம் செய்து வைத்தார்கள்!
நீராடிவிட்டு ஸ்ரீமடத்துக்கு எல்லோரும் திரும்பி விட்டோம். பின் விமோசன ஸ்நானம் செய்வதற்காக ஒரு திருக்குளத்துக்குச் சென்றோம்.
போகும் வழி நெடுகிலும் நெருஞ்சி முள். பெரியவாள் பாதங்களில் நெருஞ்சி முட்கள் குத்திப் படாதபாடு படுத்திவிட்டன.குளத்தின் ஒரு படிக்கட்டில் பெரியவாள் உட்கார்ந்து கொண்டு ஒரு காலின் மேல் மற்றொரு காலை வைத்துக்கொண்டு சாட்சாத் தக்ஷிணாமூர்த்தியாகக் காட்சி தந்து கொண்டிருந்தார்கள்.
தனது உள்ளங்காலை உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். எத்தனை நெருஞ்சி முட்கள் அவரது பாதங்களைச் சரண் அடைந்திருந்தனவோ!
அடியார்களாகிய நாங்கள் சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்தோம். என்னை மட்டும் அருகில் அழைத்தார்கள்.
எத்தனை முட்கள் பார்! என்று காட்டப் போகிறார்கள் என்ற நினைப்புடன் அருகில் சென்றேன்.என் உள்ளங்காலைப் பார். நிறைய சக்கிரங்கள் இருக்கின்றன. இங்கே இதோ பார் ஒரே புள்ளியில் மூன்று ரேகைகள் சந்திக்கின்றன. அதனால் வண்டிச் சக்கரம் போல் ஆறு ரேகைகள் தோன்றுகிறதில்லையா? இதற்கு ஷடரம் என்று பெயர். இந்த ரேகை இருப்பவர்கள் ஓரிடத்தில் நிலையாகத் தங்காமல் ஓடிக்கொண்டே இருப்பார்கள். (அதனால்தான் நானும் ஓடிக்கொண்டே இருக்கிறேன்!)
“ராமநாதபுரம் ராஜா சொன்னார்: ”உங்கள் காலில் அபூர்வ ரேகைகள் இருக்கின்றன. நீங்கள் நடந்தபடியே போய்க்கொண்டிருக்கிறீர்கள். அதனால் ரேகைகள் அழிந்துவிடும். தாங்கள் இனிமேல் நடந்து செல்ல வேண்டாம். என் ஆட்களுடன் பல்லக்கு (மேனா) அனுப்புகிறேன்” என்றார்”
”என்னிடமிருந்த பக்தியினால் அப்படிச் சொன்னார். ஆனால் அதெல்லாம் காரிய சாத்தியமில்லை என்று சொல்லிவிட்டேன்!”பின்னர் கிரகண விமோசன ஸ்நானம் செய்துவிட்டு முகாமுக்குத் திரும்பினோம்.இந்த நிகழ்ச்சியைப் பின்னர் என் தாயாரிடம் கூறினேன். அம்மாவுக்குப் பரம பரவசம்!
“வேறே யாருக்கும் கிடைக்காத அனுக்ரஹம் உனக்குக் கிடைச்சிருக்கு! கிரகண விமோசன புண்ய காலத்தில், தனது பாத தரிசனம் கொடுத்து உன்னை ஆசீர்வாதம் பண்ணியிருக்கா….” என்று சொல்லிச் சொல்லி மகிழ்ந்து கொண்டிருந்தார்.இந்த மாபெரும் பேறு, வேறு யாருக்காவது கிடைத்திருக்குமா என்பது சந்தேகம் தான்.பெரியவாளின் தனிப்பெரும் கருணைக்குப் பாத்திரமாகும் தகுதி எனக்கு இருந்ததா என்பதும் சந்தேகம் தான்!
அவ்யாஜ கருணாமூர்த்தி! வேறு, என்ன சொல்ல?