தெய்வவாக்கு
எங்கும் நிறைந்த பரம்பொருள், மாயா சக்தியினால் ஈஸ்வரன் மூலமாக உலகைப் படைத்தது. அப்படிப் படைக்கப்பட்ட போது எல்லாப் பிராணி வர்க்கத்திலும் ஆண் பெண் என இரு வர்க்கம் பிரிக்கப்பட்டது. இந்தப் பூமி, பூமாதேவி என்றும் பாரத மாதாவென்றும், பெண் வர்க்கமாகவே அழைக்கப்பட்டு வருகிறது. பூமிதேவியானவள் பொறுமைக்கு இருப்பிடமானவள். எல்லாவிதப் பயிர்களும் உண்டாவதற்கு ஆதாரமானவள். பூமாதேவி இல்லையென்றால் உலகமே இல்லை.
மனித வர்க்கத்தில் ஆண் பெண் இரண்டு வகை. பூமி தேவி போல் வாழ்க்கையிலே ஏற்படக் கூடிய எல்லாவித சுக துக்கங்களுக்கும் ஆதாரமாக உள்ளது பெண் இனம். வாழ்க்கை என்பது ஆண் பெண் இருவரையும் பொதுவாகக் கொண்டாலும் பெண்ணின் மூலமாகத்தான் வாழ்க்கை ஒளி வீசுகிறது. நல்ல ஒரு பெண்ணைப் பார்த்தால் 'கிரஹலக்ஷ்மி வந்திருக்கிறாள்' என்று சொல்வார்கள்.
ஒரு பூமியில் நெல் விதைக்க வேண்டுமானால், நெல் நன்றாக இருக்கவேண்டும் என்பது பொது விதி. இருந்த போதிலும் விதை நெல்லை பத்திரமாக வைத்திருப்பார்கள். மற்றபடி விதை நெல்லை ஒன்றும் செய்ய மாட்டார்கள். பூமியைத் தண்ணீர்விட்டு நன்றாக உழுது பண்படுத்திப் பிறகு நெல்லைப் போடுவார்கள். அப்படி நெல் போட்ட பிறகும் நெல் நன்றாக விளைவதற்கு பூமிக்குத்தான் உரமிடுவார்கள். நெல் வளர்ச்சிக்கு இடையூறாக முளைக்கக் கூடிய களைகளை பூமியில் இருந்து எடுத்து வெளியே எறிவார்கள். நெல் வளர்வதற்கு பூமிக்குத்தான் அதிக காரியங்கள் நடைபெறுகின்றன. ஆனால் நெல்லுக்கல்ல.
அது போல ஒரு சமுதாயம் வளரவேண்டுமானால், நெல் போன்ற ஆண்களைக் காட்டிலும் பூமி போன்ற பெண்களுக்குத்தான் அதிக காரியங்கள் செய்யவேண்டியிருக்கின்றன. நெல் நிறைய மகசூலாகி லாபம் வந்தாலும் அல்லது குறைந்து போய் நஷ்டம் வந்தாலும் இந்த இரண்டினாலும் அடையக் கூடிய பலன் மனிதனுக்கே தவிர, பூமிக்கல்ல. அது போல இந்த மனித சமுதாயத்தில் வாழ்க்கையில் ஏற்படக் கூடிய சுகதுக்கங்களை எல்லாம் பொறுத்துக் கொண்டு பெண் இனம் வாழ்ந்தாலும் அதனால் வரக்கூடிய கௌரவம் குடும்பத் தலைவனுக்கு ஏற்படுகிறது.
உதாரணமாக ராணுவத்தில் பணி புரிபவர்கள் எல்லோரும் நன்றாகப் பணிபுரிந்தால் அதன் புகழ் அந்தப் படைத் தலைவனுக்குப் போய்ச் சேருகிறது. ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு தனியாகவும் வெகுமதி வழங்குகிறோம். அது போலத்தான் இராணுவம் போன்று பொறுப்புகளைத் தாங்கும் பெண் இனங்கள் சொந்தப் பணிகளையும் வீட்டுப் பணிகளையும் நன்றாகச் செய்தால் அதன் பெருமை - புகழ் எல்லாம் கணவனைச் சேரும். பெண்களையும் புகழ்வார்கள்.