Tuesday, February 17, 2015

"பயமுறுத்தினா தான் மடத்து ஞாபகம் உனக்கு வருமோ! " - மஹாபெரியவா








"பயமுறுத்தினா தான் மடத்து ஞாபகம் உனக்கு வருமோ! "

Experience of Sri A.K.Padmanabhan -

தகவல்.-நெட் உபயம்.

1976, பாளையங்கோட்டையில், நாங்கள் தங்கியிருந்த காலம். நள்ளிரவு வேளை. தாகம் எடுக்கிறதே என்று எழுந்து தண்ணீர் குடம் வைத்திருந்த இடம் பக்கமாகப் போனேன். ஸ்விட்சைப் போட்டு விட்டு, குடத்தைப் பார்த்தால், அதன் கழுத்தில் ஏதோ ஒன்று சுற்றியிருப்பது போல் தோன்றியது. அது லேசாக அசைந்தது. அதன் பின் தான் உறுதி செய்தேன். அது பாம்பு என்பதை…. எனக்கு சப்தநாடியும் ஒடுங்கி விட்டது.

ஹாலில் எல்லாரும் படுத்திருந்தார்கள். பாம்பை விரட்டப்போய், அது ஹாலுக்குள் வந்து விட்டால், ஏக கலாட்டா ஆகி விடும். குடும்பத்தார் பதறிப் போய் விடுவார்கள். நான் நின்ற இடத்தில் இருந்தபடியே பூஜை அறையைப் பார்த்தால் தெரியும்.அங்கே பல சுவாமி படங்களின் மத்தியில், காஞ்சி மஹாபெரியவரின் படம் நடுநாயகமாக இருக்கும். 

இதற்குள் பாம்பு இறங்கியது. அந்த அறை மிகவும் வழுவழுப்பாக இருந்ததாலோ என்னவோ, மிகவும் மெதுவாக ஊர்ந்தது. ஹால் பக்கம் போய்விடுமோ என்று பயந்திருந்த வேளையில், ஸ்வாமி படங்கள் இருந்த பக்கமாகப் போனது. மஹாபெரியவர் படத்தின் முன்னால், தலையைத் தூக்கிப் பார்த்தது. பிறகு, அங்கிருந்த ஒரு துவாரத்தின் வழியாக வெளியேறிவிட்டது.

எனக்கு அப்போது தான் மூச்சே வந்தது. பிறகு, குடும்பத்தாரிடம் தகவல் சொன்னேன். அடுத்தநாளே, காஞ்சி மடத்துக்குப் பயணமானேன். மஹாபெரியவரைத் தரிசனம் செய்தேன்.

பெரியவா, அப்போது சொன்னது என்னை அப்படியே திகைப்பில் ஆழ்த்திவிட்டது.

”பயமுறுத்தினா தான் மடத்து ஞாபகம் உனக்கு வருமோ?”

நான் பெரியவா காலில் தடாலென விழுந்து விட்டேன்.

ஆஹா, வீட்டிற்குள் பாம்பு வந்து, நான் பயந்து போனது எப்படி அவருக்குத் தெரிந்தது? என்னே அவரது ஞானம்! பாம்பின் வடிவாய் வந்ததே அவர் தானோ?

இன்னொருசம்பவத்தையும் குறிப்பிடுகிறேன். 

ஒரு சமயம் கர்நூலில் பெரியவர் முகாமிட்டிருந்தார். நாங்கள் குடும்பத்துடன் பெரியவரைத் தரிசனம் செய்தோம். ஊருக்குக் கிளம்பும் வேளையில், பெரியவர் என்னை அழைப்பதாக ஒருவர் தகவல் சொன்னார். நான் பெரியவா முன் நின்ற போது, “உன் குடும்பத்தில் யாரோ சந்நியாசம் வாங்கியிருக்க வேண்டுமே?” என்றார்.

“எனக்குத் தெரிந்து அப்படி யாருமில்லையே பெரியவா!” என அவரிடம் சொன்னேன். பெரியவா என்னிடம் “நீ ஊருக்குப் போய், பெரியவர்களிடம் விசாரித்து, மடத்துக்குத் தகவல் கொடு” எனச்சொல்லி விடை கொடுத்தார்.

நான் ஊருக்குப் போய் உறவினர்களிடம் விசாரித்தேன். அவர்கள் கூறிய பதில் என்னை திகைக்க வைத்தது.

“ஒரு வாரம் முன்பு தான், என் ஒன்றுவிட்ட சகோதரி மகன் ஆடிட்டர் சீனிவாசன், சேலம் கந்தாஸ்ரமத்தில் துறவறம் மேற்கொண்டு விட்டார்” என்ற தகவல் தான் அது.

பெரியவரின் அந்த ஞானசக்தியை எண்ணி என் கண்கள் பனித்தன. அவர் நடமாடும் தெய்வம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. 

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!












Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.


"இன்றைய பிராமண சங்கம், மஹாபெரியவா



                        






"இன்றைய பிராமண சங்கம், எனக்கு கொஞ்சமும் திருப்தியளிக்காததாக உள்ளது. உபநயனம் போன்ற எளிமையான, ஆனால் அதி முக்கியமான சமஸ்காரங்களைக் கூட ஆடம்பர விழாவாக்கி விடுகிறார்கள்"

(இது ஒரு மறு பதிவு)

பல வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி இது ஓரிக்கையில் இருக்கும்போது சுந்தரராமன்(மடத்தில் பெரியவாளுக்கு சேவை செய்யும் சிறுவன் ), பூணூல் இல்லாமல் இருந்ததை மகான் கவனித்து விட்டார்.

நீ ஏன் இன்னும் உபநயனம் செய்து கொள்ளவில்லை?" என்று மகான் கேட்டார்.

"அதற்குத் தேவையான பணம் அப்பாவிடம் இல்லை போலிருக்கிறது" என்று சுந்தரராமன் சொல்ல, சில நிமிடங்கள் மகான் மௌனமாக இருந்துவிட்டு பிறகு ஒரு பிரசங்கமே செய்துவிட்டார் .

"இன்றைய பிராமண சங்கம், எனக்கு கொஞ்சமும் திருப்தியளிக்காததாக உள்ளது. உபநயனம் போன்ற எளிமையான, ஆனால் அதிமுக்கியமான சமஸ்காரங்களைக் கூட ஆடம்பர விழாவாக்கி விடுகிறார்கள். பட்டுப்புடவைகள், விருந்து, செலவு என்று பணத்தை வாரி வீணாக இறைக்கிறார்கள். இதனால் சம்ஸ்காரத்தின் முக்கிய அம்சத்தையே மறந்து விடுகிறார்கள். எனக்குச் சம்மதமே இல்லாவிட்டாலும் சரி,

பணக்காரன் வேண்டுமானால் தன் அந்தஸ்தைக் காட்டிக் கொள்ளல் இஷ்டத்திற்கு செலவு செய்யட்டும் . ஏழை ஜனங்கள் இதை பார்த்து 'காப்பி' அடிக்கும்போது தான் கஷ்டம் வருகிறது. 'உபநயனம்' போன்ற சிறு விழாக்களுக்குக் கூட தங்களது சக்திக்கு மீறி கடன் வாங்குகிறார்கள். இந்தச் சிறுவிழா நடத்த சிறு தொகையே போதும். . திருமணம் நிச்சயமாகும்வரை கூட பிள்ளைகளுக்குப் பூணூல் போடுவதில்லை. 

கல்யாண சுப முகூர்த்தங்களோ இன்னும் மோசம் . ஆயிரமாயிரமாக செலவுகள் செய்து ஆடம்பர விழாக்களாகச் செய்து வருகிறார்கள். வரதட்சணை கொடுமை பல பெண்களின் வாழ்க்கையே பாதித்துள்ளது. என்னுடைய உபதேசங்கள் எதுவுமே இந்த சமூகக் கொடுமைகளை கொஞ்சமும் மாற்றியதாகவே தெரியவில்லை. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை" என்று சொல்லிவிட்டு மகான் சில நிமிடங்கள் மௌனத்தில் ஆழ்ந்தார்.

பிறகு தொடர்ந்தார்:

"மற்றவர்களைப் பற்றி நான் ஏன் பேசவேண்டும்? நீ ஏன் என் எதிரில் திறந்த மார்புடன் நிற்கிறாய்? இதை எப்படி நான் கவனிக்காமல் போனேன்?" சுந்தரராமனிடம் அடுத்த கட்டளையைப் பிறப்பித்தார், "உடனே போய் பஞ்சாங்கத்தை எடுத்துவா?, அதோடு உன் தோப்பனாரையும் இங்கே அழைச்சுண்டு வா." 

பஞ்சாங்கம் அவர் கையில் தரப்பட்டது சுந்தரராமன் தந்தையும் அங்கே வந்தார் 

பஞ்சாங்கத்தை மிகவும் கவனித்த பெரியவா " அடுத்த வியாழக்கிழமை நாள் மிகவும் நன்றாக இருக்கிறது அன்றே உன் பையனின் உபனயனத்தை நடத்திவிடு என்று பணித்துவிட்டார் 

தந்தை எதோ சொல்ல வாயெடுக்க 

"பணம் இல்லை பந்துக்களை அழைக்க அவகாசம் இல்லை என்றெல்லாம் சொல்லாதே, மடத்து சாஸ்திரிகளுக்கு உன் சக்திக்கேற்றவாறு பணம் கொடுத்தால் உபனயனத்தை நடத்திவிடுவார் , மடத்து உக்ராணத்தில் தேவையான சாமான்கள் இருக்கின்றன நீ பய்யன் அவன் தாயார் தவிர வேறு யாரும் இந்த சுபகாரியத்திர்க்கு அவசியம் இல்லை" என்று மகான் தீர்க்கமாகச் சொல்லிவிட்டார் 

ஆனால் சுந்தரராமனின் தந்தை விடாப்பிடியாக "அடுத்த வியாழனன்று பெரியவா உத்திரவுப்படி நான் நைவேத்யம் தயாரிக்கும் கைங்கர்யம் செய்யவேண்டியுள்ளதே" என்று கூற, மகான் "அன்று நீ தவறாமல் நைவேத்திய கைங்கர்யம் செய்யப்போகிறாய் அதே தினம் உன் குமாரனுக்கும் உபநயனம் செய்யப்போகிறாய்" என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார்.

அவர் மேலும் தொடர்ந்து சொன்னார்: 

"உபநயனம் இதே இடத்தில் கோசாலையில் நடக்க வேண்டும் ஆனால் பசுக்களுக்கு எந்த இடைஞ்சலும் இருக்கக் கூடாது நீ பூர்வாங்க வேலைகளை விடியற்காலையிலேயே ஆரமிச்சுடு , பிறகு சந்திரமௌலீஸ்வரருக்கு நைவேத்யமும் தயார் செய்துவிடு. நான் பூஜையை ஆரம்பிக்கும் நேரத்தில் இங்கே நடக்கும் வைதீக கர்மாக்களிலும் வந்து கலந்து கொள். நான் சந்திரமௌலீஸ்வரருக்கு சந்தனாபிஷேகம் செய்யும் அதே நேரத்தில் அங்கே உபநயன முகூர்த்தம் நடைபெறவேண்டும். இப்போது உன் வேலையைப்பார்", என்று சொல்லி அவரை அனுப்பிவிட்டார் 

மகான் ஒரு விஷயத்தில் முடிவு எடுத்த பின் அதை மாற்ற யாரால் இயலும்? மேலும் சுந்தரராமனின் தந்தை மடத்து ஊழியர் அவரால் எப்படி மறுப்பு சொல்லமுடியும் 

சுந்தரராமன் தான் தாயிடம் சென்று இந்த விஷயத்தைச் சொன்னபோது, அந்த மாதரசி மகிழ்ச்சியடைந்தாலும் உறவினர்களை அழைக்க அவகாசம் இல்லையே , கையில் பணமில்லையே என்கிற மனக்கவலை எழுந்தது.

ஒரு காலத்தில் பணத்தின் அருமை தெரியாமல் வாரி இறைத்ததின் விளைவாகத்தான் அக்குடும்பத்திற்கு வறுமை நிலை வந்தது 

அழைப்பிதழ்கள், உறவினர் கூட்டம், புத்தாடைகள் இவை ஏதுமின்றி உபநயனம் நன்றாகவே நடந்து கொண்டிருந்தது. 

சந்திரமௌலீஸ்வரருக்கு சந்தன அபிஷேகம் நடந்து கொண்டிருந்தத நேரம் ஒரு கணவன் மனைவி கையில் பெரிய மூங்கில் தட்டுடன் அங்கே வந்தார்கள். இருவர் கையிலும் இரண்டு தட்டுகள்.மடத்து நாதஸ்வர வித்வான்கள் இனிமையான கல்யாணி ராக கீர்த்தனையை வாசித்துக் கொண்டு இருந்தனர் . வந்தவர்கள் நங்கவரம் சுந்தராம அய்யரும் அவரது பத்னியும் என்று இவர்களை அடையாளம் கண்டுகொண்டனர் , அவர்கள் இருவரையும் அங்கு பார்த்ததில் எல்லோருக்கும் வியப்பு , சாஸ்த்ரிகளும் மேற்கொண்டு மந்திரம் சொல்வதை அப்படியே நிறுத்திவிட்டார் .

அதையெல்லாம் கவனித்த சுந்தரம் அய்யர் மெதுவான குரலில் பேசலானார் " மகா பெரியவா எங்களண்டை" நாளை காலை, எனக்கு மிகவும் பிரியமான ஒரு பையனுக்கு நான் இங்கே நடத்தும் பூணூல் கல்யாணத்திற்கு எனக்கு யார் உதவி செய்ய வருவார்கள் என்று எதிர்பார்த்தேன் . நீங்கள் சரியான நேரத்திற்கு வந்து இருக்கிறீர்கள் எனக்கு உதவ முடியுமா?" என்று கேட்டுவிட்டார் 

" இது எங்களுக்கு கிடைத்த பாக்யம் என்ன செய்ய வேண்டும் என்று மகாபெரியவா சொன்னா செய்யக் காத்திருக்கிறோம்" என்று கூறினோம். " மகா பெரியவா புன்னகையோடு ஆசிவழங்கவே, கடைகள் மூடுவதற்கு முன்பே கடைவீதிக்கு சென்று கூடுமானவரை சாமான்களை சேகரித்து வந்தோம்" அவர் மேலும் சொன்னார்

:" நாங்கள் மகிழ்ச்சியில் திளைத்தோம்" என்று. சுந்தராமனின் குடும்பத்தினர் முகம் மலர வெளியில் சொல்ல முடியாமல் பேசமுடியாமல் திணறிக்கொண்டு இருக்கா " தயவு செய்து இவற்றை ஏற்றுக்கொள்ளவேண்டும்" என்று அந்த தம்பதியர் மூங்கில் தட்டுகளை அவர்கள் முன் வைத்தார்கள் .

உபனயனத்திர்க்கு வேண்டிய புதிய துணிகள் மாலைகள் பழம் வெற்றிலைபாக்கு எல்லாமே அங்கு வந்தன , அதனால் மகான் சந்திரமௌலீஸ்வரருக்கு சந்தனாபிஷேகம் நடக்கும் அதே நேரத்தில் சுந்தரராமனின் உபநயனமும் நடந்தது .

மகா பெரியவா முன்பு மடத்திலேயே உபநயனம் செய்துகொண்ட சுந்தரராமன் மிகவும் பெரிய அதிர்ஷ்டசாலி என்று எல்லோரும் வாழ்த்தினர் .

பூஜையை முடித்துக்கொண்ட மகானை, குடும்பமே கால்களில் விழுந்து நமஸ்கரிக்க, மகான் ஒரே ஒரு பழத்தை மட்டும் எடுத்து சுந்தராமனின் கையில் கொடுக்க பிறகு சுந்தரராமனின் தாயாரைப் பார்த்து "உன் மகனின் பூணூல் கல்யாணம் விமரிசையாக நடந்துவிட்டதா? என்று கேட்க, அந்த மாதரசியின் கண்களில் நீர் பெருக்கெடுக்க கைகள் உயர்ந்து மகானை வணங்கின.

அன்று மடத்தில் எல்லோருக்கும் சிறப்பு சாப்பாடு






Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.


"ராமேஸ்வரம் கோவிலில்"செக்கு ஆட்டிய நல்லெண்ணெய் அபிஷேகம் செய்வது வழக்கமா?" மஹாபெரியவா



"செக்கு ஆட்டிய நல்லெண்ணெய் அபிஷேகம்
செய்வது வழக்கமா?"

சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு..
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்

ஒவ்வொரு க்ஷேத்திரத்திலும் தனிப்பட்ட
வழிபாட்டு முறைகள் வழக்கத்திலிருக்கும்.

அந்த க்ஷேத்திரத்திலுள்ளவர்களுக்குக் கூடத் தெரியாத
பல செய்திகள் பெரியவாளுக்குத் தெரிந்திருக்கும்.

இராமேஸ்வரத்திலிருந்து வந்தார், ஒரு புரோகிதர்.
மூன்று தலைமுறைகளாக அந்த ஊரிலேயே
இருந்து வருவதாகச் சொன்னார்.

"ராமநாதஸ்வாமி கோவில் நடராஜாவைப்
பார்த்திருக்கியோ?"

"பார்த்திருக்கேன். சேவார்த்திகளை அழைத்துக்
கொண்டு போய் காட்டியிருக்கேன்."

"நடராஜாவுக்கு ஏழு திரைகள் உண்டோ?"

புரோகிதருக்குக் குழப்பம் வந்துவிட்டது.
என்ன பதில் சொல்வதென்று புரியவில்லை.

பெரியவா சொன்னார்கள்.

"திருவாதிரை அன்னிக்கு, ஏழு படுதாக்கள்
திரையாகப் போட்டு, நடராஜருக்குப் பூஜை
செய்வார்கள். ஏழு திரை விலகியதும்
நடராஜாவைத் தரிசிக்கலாம்....சரி
அந்தக் கோவிலில் எத்தனை நடராஜர் இருக்கு?"

ராமேஸ்வரத்தாருக்குக் கொஞ்சம் நடுக்கம்.

"நான் ஒரு நடராஜாவைத்தான் பார்த்திருக்கேன்"

"மூணு நடராஜர் இருக்கு!...போய்ப் பார்..."

"ராமேஸ்வரம் கோவிலில், குருவாயூரைப் போல்,
செக்கு ஆட்டிய நல்லெண்ணெய் அபிஷேகம்
செய்வது வழக்கமா?"

"ஆமாம்" என்று ஒரு போடு போட்டார், வந்தவர்.

"ராமேஸ்வரத்தில் செக்கே கிடையாது! அந்த
க்ஷேத்திரத்து ஸ்வாமி, மண்ணைப் பிடித்து
வைத்து உருவாக்கப்பட்டவர். செக்கு
ஆட்டக்கூடாது என்று ஓர் ஐதீகம்..."

பின்னர், அந்தப் புரோகிதர் மனத்தில் ஒரு குறை
இருக்கக் கூடாது என்பதற்காக, குடும்ப க்ஷேமலாபங்கள்
விசாரித்துப் பிரசாதம் கொடுத்தார்கள், பெரியவா.










Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.



"பெரியவருக்கே உண்மையை உணர்த்திய சிறுவன்"




"பெரியவருக்கே உண்மையை உணர்த்திய சிறுவன்"

(பெரியவாளே சொன்ன நிகழ்ச்சி)

ஆகஸ்ட் 26,2014,தினமலர்.

சிதறு தேங்காய் உடைக்கிற வழக்கம் தமிழகத்திற்கே உரிய தனி வழிபாட்டு முறை. விநாயகர் வழிபாட்டில் மிகவும் பிரசித்தமாக இருக்கிற இந்த சிதறு தேங்காய் துண்டுகளை எடுக்கும் உரிமை யாருக்கு என்று கேட்டால் குழந்தைகளுக்குத் தான்!

இந்த உண்மையை ஒரு குழந்தை மூலமாக, தான் தெரிந்து கொண்டதாக காஞ்சிப்பெரியவர் கூறுகிறார்.

1941ல் சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டிப்பதற்காக, நாகப்பட்டினத்தில் நான் தங்கியிருந்தேன். அங்கே கோயிலில் தினமும் சிதறு தேங்காய் போடுவது வழக்கமாக இருந்தது. ஒருநாள் தேங்காயை கீழே போட்டு உடைக்க கூட இடம் விடாமல், ஒரே நெரிசலாக குழந்தைகள் ஒன்று கூடி விட்டனர். திபுதிபு என்று அவர்கள் ஓடி வந்ததால், என் மீது விழுந்துவிடப் போகிறார்கள் என்ற பயத்தில், ""இப்படியா கூட்டம் போடுவீர்கள். விலகிப் போங்கள்'' என்று உடன் இருந்தவர்கள் குழந்தைகளைக் கண்டித்தார்கள்

அப்போது ஒரு சிறுவன் "டாண்' என்று "பிள்ளையாருக்குத் தேங்காய் போட்டு விட்டு..

"அப்புறம் எங்களை இங்கே வராதீர்கள் என்று சொல்ல உங்களுக்கு என்ன பாத்தியதை(உரிமை) இருக்கிறது? சிதறு தேங்காய் எங்கள் பாத்தியதை தான். அதை எடுத்துக் கொள்ள நாங்கள் வரத்தான் செய்வோம்'' என்றான்.

அவன் ஜோராகப் பேசியதையும், அவனது உள்ள உறுதியையும் பார்த்த போது தான் எனக்கே, அவன் சொல்வது வாஸ்தவம்(உண்மை) என்பதும், குழந்தை சுவாமியான விநாயகரின் பிரசாதத்தில் குழந்தைகளுக்குத் தான் முழுபாத்தியதை என்பதையும் உணர்ந்து கொள்ள முடிந்தது.











Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.




இப்பவும் ஒவ்வொரு மஹா சிவராத்திரி அன்னிக்கும் அந்த தம்பதிய நெனச்சுப்பேன்....." மஹா பெரியவா





"அந்த மஹா சிவராத்திரி அன்னிக்கே ரெண்டு பேரும் ஜோடியா "சிவ சாயுஜ்யத்த" அடஞ்சுட்டா. அதிதி போஜனத்த விடாம பண்ணின அந்த தம்பதிகளுக்கு கெடச்ச "பதவி" யப் பாத்தேளா? 

அதிதி போஜனம் பற்றி மஹா பெரியவா சொன்ன நிகழ்ச்சி.

(இது ஒரு மஹா சிவராத்திரி பதிவு)

"தொள்ளயிரத்து முப்பதெட்டு, முப்பத்தொம்போதுன்னு ஞாபகம் ( 1938-

39). நம்ம ஆச்சார்யாள் மடம் கும்பகோணத்தில் இருந்தப்போ, நடந்த ஒரு சம்பவம். எல்லாரும் ஸ்ரத்தையா கேட்டுட்டாலே, இதோட மஹிமை நன்னா புரிஞ்சுடும்! 




கும்பகோணத்தில் கும்பகோணம் மாமாங்க குளத்தின் மேலண்டக் கரைல ஒரு பெரிய வீடு உண்டு. அதுல குமரேசன் செட்டியார்னு பலசரக்கு வியாபாரி ஒர்த்தர் குடியிருந்தார். எனக்கு நன்னா ஞாபகம் இருக்கு....... அவரோட தர்மபத்னி பேரு சிவகாமி ஆச்சி! அவா காரக்குடி பக்கத்ல பள்ளத்தூர சேந்தவா. அவாளுக்கு கொழந்தை குட்டி கெடையாது. அவா ஊர்லேர்ந்து நம்பகமா ஒரு செட்டியார் பையன அழைச்சுண்டு வந்து ஆத்தோட வெச்சுண்டு, மளிகைக் கடைய அவன் பொறுப்புல விட்டிருந்தா. செட்டியாருக்கு அப்போ, அம்பது, அம்பத்தஞ்சு வயஸ் இருக்கலாம்........அந்த ஆச்சிக்கு அம்பதுக்குள்ளதான் இருக்கும். சதா சர்வ காலமும் ரெண்டுபேரோட வாய்லேர்ந்தும் "சிவ சிவ சிவ சிவ" ங்கற நாமஸ்மரணம்தான் வந்துண்டு இருக்கும். வேற பேச்சே கெடையாது!

செட்டியார் வீட்ல ஒரு ஒத்தை மாட்டுவண்டி இருந்துது. அதுல ஆச்சிய ஒக்கார வெச்சுண்டு செட்டியாரே ஒட்டிண்டு போவார்! நித்யம் காலங்கார்த்தால ரெண்டு பெறும் வண்டில காவிரிக்கு ஸ்நானம் பண்ண வருவா....ஸ்நானத்த முடிச்சுண்டு அப்டியே நம்ம மடத்துக்கும் வந்து நமஸ்காரம் பண்ணிப்டு ஆசீர்வாதம் வாங்கிண்டு போவா . அப்பிடி ஒரு அன்யோன்யமா இருந்தா.

இதெல்லாம் தூக்கியடிக்கற மாதிரி, ஒரு விஷயம் என்னன்னா.............அந்த தம்பதிகள் பல வர்ஷங்களா அதிதி போஜனம் பண்ணிண்டிருந்தா! பிரதி தெனமும் மத்யான்னம் எத்தனை சிவனடியார்கள் வந்தாலும், அவாளுக்கு முகம் கோணாம, அவாளோட கால்களை வாசத்திண்ணையில் ஒக்காரவெச்சு அலம்பி, வஸ்த்ரத்தால தொடச்சு, சந்தனம் குங்குமம் இட்டு, கூடத்ல ஒக்காரவெச்சு, ஏதோ இருக்கறதப் போடாம, ஒவ்வொரு அடியாருக்கும் என்னென்ன பிடிக்கும்னு கேட்டு அதை வாங்கிண்டு வந்து சமைச்சுப் போடுவா. ஆத்ல சமையலுக்கு ஆளெல்லாம் இல்லே! அந்த அம்மாவே தன் கையால சமைச்சுப் போடுவா! அப்டி ஒரு ஒசந்த மனஸ்!

எனக்கு எப்பிடி இதெல்லாம் தெரியுங்கறேளா? நம்ம மடத்துக்கு வந்துண்டு இருந்த சுந்தரமையர்தான் செட்டியாரோட கணக்கு வழக்கெல்லாம் பாத்துண்டு இருந்தார். அவர்தான் இதெல்லாம் சொன்னார்..... ஒருநாள் நல்ல மழை! ஒரு அதிதியை கூட காணோம். செட்டியார் ஒரு கொடையைஎடுத்துண்டு,மஹாமஹக்கொளத்தண்டை வந்து பார்த்தார். கொஞ்சம் நன்னா வாசிச்ச சிவனடியார் ஒர்த்தர் இருந்தார். ஏன்னா.....வழியெல்லாம் தேவாரம் சொல்லிண்டே வந்தார்.

வீட்டுக்கு போனதும், "என்ன காய் பிடிக்கும்? போய் வாங்கிண்டு வந்து சமைச்சுப் போடறோம்"...ன்னு சொன்னார். வந்தவருக்கோ நல்ல பசி போல இருக்கு! "வெறும் மொளக்கீரை கூட்டும், கீரைத்தண்டு சாம்பாரும் பண்ணா போறும்"ன்னார். கைல ஒரு மூங்கில் தட்டோட கீரை பறிக்கப் போனார். செட்டியாரும் இன்னொரு பக்கம் கீரை பறிக்க ஆரம்பிச்சார்...........ஆச்சியோ இவா ரெண்டு பெறும் பறிக்கறதை கொல்லைப் பக்கமா நின்னுண்டு பாத்துண்டே இருந்தா..

... தட்டுக்கள் வந்ததும், அந்த அம்மா என்ன பண்ணா தெரியுமா?

ரெண்டு கீரையையும் தனித் தனியா அலம்பி தனித்தனியா வேக வெச்சு பக்வம் பண்ணா. இதை சிவனடியார் கவனிச்சுண்டே இருந்தார். எல்லாம் பண்ணினதும், சிவனடியார் பறிச்ச கீரையை மட்டும் ஸ்வாமிக்கு நைவேத்யம் பண்ணிட்டு, இவருக்கு பரிமாறினா. அடியாருக்கோ பெருமை பிடிபடலை

போஜனம் முடிஞ்சதும், தான் பறிச்ச கீரையை மட்டும் நைவேத்யம் பண்ணினதப் பத்தி கேட்டார். அந்த அம்மா சொன்னா " ஐயா. கொல்லைல கீரை பறிக்கரச்சே நான் பாத்துண்டே இருந்தேன்.....என் பர்த்தா "சிவ சிவ" ன்னு நாமம் சொல்லிட்டே பறிச்சார். அது அப்பவே சிவார்ப்பணம் ஆயிடுத்து. மறுபடி நிவேதிக்க அவஸ்யமே இல்லே. அதான் நீங்க கொண்டு வந்த கீரையை மட்டும் நைவேத்யம் பண்ணினேன்". அடியாருக்கு என்னமோ மாதிரி ஆயிடுத்து! ரெண்டு பேரையும் ஆசீர்வாதம் பண்ணின்ட்டு போய்ட்டார்.

இப்படி அதிதி போஜனத்த விடாம பண்ணிண்டு இருந்ததுக்கு "பல ப்ராப்தி" என்னன்னா.........ஒரு சிவராத்திரி அன்னிக்கு கும்பேஸ்வரர் கோவில்ல நாலு கால பூஜைக்கும் ஒக்காந்து தரிசனம் பண்ணா...வீட்டுக்கு வந்த ஆச்சி, தனக்கு "ஒச்சலாயிருக்கு"ன்னு சொல்லிட்டு பூஜை ரூம்ல ஒக்காந்தவ, அப்பிடியே சாஞ்சுட்டா.....! பதறிப் போய் "சிவகாமி" ன்னு கத்திண்டே உள்ளே போன செட்டியாரும் அந்தம்மா பக்கத்துலயே சாஞ்சுட்டார்...

!அவ்வளவுதான! அந்த மஹா சிவராத்திரி அன்னிக்கே ரெண்டு பேரும் ஜோடியா "சிவ சாயுஜ்யத்த" அடஞ்சுட்டா. அதிதி போஜனத்த விடாம பண்ணின அந்த தம்பதிகளுக்கு கெடச்ச "பதவி" யப் பாத்தேளா? இப்பவும் ஒவ்வொரு மஹா சிவராத்திரி அன்னிக்கும் அந்த தம்பதிய நெனச்சுப்பேன்....."

பின்குறிப்பு

அதிதி என்பது முதலிலேயே information கொடுத்துவிட்டு வரும் நண்பர்களோ, சொந்தக்காரர்களோ இல்லை. எதிர்பாராமல் வரும் எவருமே அதிதிகள்தான்! "திதி" என்றால், நாள். குறிப்பிட்ட நாளில், நேரத்தில் சாப்பிட வருகிறேன் என்று சொல்லியோ, அல்லது "சாப்பிட வந்துவிடுங்கள்" என்று நாமே ஒரு நாள், நேரம் குறித்து அழைப்பவரோ அதிதி இல்லை. அ-திதி "நேரம் காலம் இல்லாமல் திடீரென்று வருபவர்கள்" தான் அதிதிகள்.

இன்று எதேச்சையாக மஹா சிவராத்திரி !









Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.



Monday, February 16, 2015

மஹா சிவராத்ரி, மஹிமை -- மஹபெரியவா


                          



    மஹா சிவராத்ரி,  மஹிமை  -- மஹபெரியவா

வைகுண்ட ஏகாதசி, மஹா சிவராத்ரி, கோகுலாஷ்டமி, ராமநவமி முதலிய விசேஷ நாட்களில் கூட நாம் வாயைக் கட்டாமல், வயிற்றைச் கட்டாமலிருந்தால் அது இந்த தேசத்தில் பிறந்த நமக்கு ரொம்பக் குறைவாகும். வயிறு குறைந்தாலும் மனஸ் நிறையும்படிப் பண்ணிக் கொள்வதே நமக்கு நிறைவு. அப்படிப் பண்ணிக் கொள்வதற்கான ஸங்கல்ப பலத்தை பகவான் எல்லாருக்கும் அநுக்ரஹிக்க வேண்டும்.

அநேகமாக எல்லா சிவாலயங்களில் கர்ப்பக் கிரஹத்தின் சுவரில் மேற்குப் பாகத்தில் லிங்கோத்பவ மூர்த்தியின் பிம்பம் இருக்கும். (சில கோயில்களில் மட்டும் இந்த இடத்தில் மஹா விஷ்ணு இருக்கிறார்) லிங்கோத்பவ மூர்த்தி என்பது பரமேசுவரனுடைய அறுபத்தி நான்கு மூர்த்திகளுக்குள் ஒன்று. விருஷபாரூடர், அர்த்தநாரீசுவரர், ஹரிஹரர், நடராஜர், காமாரி, பைரவர், தக்ஷிணாமூர்த்தி, ஸோமாஸ்கந்தர், கால ஸம்ஹாரர், இப்படி அறுபத்து நான்கு மூர்த்திகள் பரமசிவனுக்கு உண்டு. அவைகளுக்குள் ஒன்று லிங்கோத்பவ மூர்த்தி.

அந்த மூர்த்திதான் சிவாலயத்திலுள்ள லிங்கத்துக்குப் பின்புறம் காணப்படுகிறது. அதில், லிங்கத்துக்குள் ஒரு திவ்விய மூர்த்தி இருக்கும். அதன் ஜடா மகுடம் லிங்க வட்டத்துக்குள் முடியாமலே இருக்கும். அதன் பாதமும் லிங்கத்தின் அடியில் முடிகிற வரைக்கும் தெரியாது. இந்த மூர்த்திக்குக் கீழே ஒரு வராக மூர்த்தி இருக்கும். மேலே ஹம்ஸ ரூபத்தில் ஒரு மூர்த்தி இருக்கும்.

இந்த லிங்கோத்பவர் யார்?

ஸ்ரீ ருத்ராபிஷகம் பண்ணுவதற்கு முன்பு ஒரு சுலோகம் சொல்லிவிட்டு, அப்புறம்தான் அபிஷகம் பண்ணுவது வழக்கம். அந்த சுலோகம்.
ஆபாதால நப: ஸ்தலாந்த புவன ப்ரஹ்மாண்டமா விஸ்புரத்
ஜ்யோதி: ஸ்பாடிக லிங்க மௌலி விலஸத் பூர்ணேந்து வாந்தாம்ருதை:
அஸ்தோகாப்லுதம் ஏகம் அசம் அநிசம் ருத்ராநுவாகான் ஜபன்
த்யாயேத் ஈப்ஸித ஸித்தயே (அ) த்ருதபதம் விப்ரோ மிஷிஞ்சேத் சிவம் II
இந்த ஸ்லோகத்தில் என்ன தெரியுமா சொல்லியிருக்கிறது?. பாதாள முதல் ஆகாச பரியந்தம் எல்லையில்லாத ஜோதி ஸ்வரூபமாகப் பிரகாசிக்கிற ஸ்படிக லிங்கத்துக்கு அபிஷேகம் பண்ணவேண்டும் என்று சொல்லியிருக்கிறது.

ஸ்படிக லிங்கத்துக்கு ஒரு வர்ணமும் சொல்ல முட்யாது. எந்த வஸ்துவை அதில் வைக்கிறோமோ அதனுடைய வர்ணத்தை அது பிரதிபலிக்கும். குண-தோஷம் இல்லாதது அது. ஞானம் எப்படிப் பரிசுத்தமாக இருக்கிறதோ, அப்படி அந்த ஸ்படிகலிங்கம் இருக்கிறது. அதன் பின் பச்சை வில்வத்தை வைத்தால், லிங்கமே, பச்சையாகத் தோன்றும். சிவப் ¢பான அரளியை வைத்தால் சிவப்பாகத் தோன்றும். அது நிர்விகாரமானது. பரப் பிரம்ம ஸ்வரூபம் நிர்விகாரமாக இருந்தாலும், நம்முடைய மனோபாவத்தை எப்படி வைக்கிறோமோ அப்படித் தோன்றும் என்பதற்குத் திருஷ்டாந்தமாக, இந்த ஸ்படிக லிங்கம் இருக்கிறது. அது எதையும் மறக்காது. அதற்குப் பின்னால் உள்ள வஸ்துக்களையும் அதன் பின்னால் உள்ள வஸ்துக்களையும் அதன் வழியாகப் பார்க்கலாம். பரம சுத்தமாக நிஷ்களங்க திருஷ்டாந்தம். நினைக்கிற ரூபமாக இது தெரியும்.

மேலே சொன்ன சுலோகப்படி, அதன் சிரஸில் பூரண சந்திரன் இருக்கிறது. பூர்ணேந்து என்று சுலோகத்தில் வருவது. ‘பூரண இந்து!': இந்து என்றாலும் சந்திரன் என்றாலும் ஒன்றுதான். ஈஸ்வரன் ஜடையும், கங்கையும், கண் ¢ காது,மூக்கு, கை, கால் முதலிய அவயங்களும் கொண்ட “ஸகள” ரூபத்தில் வருகிறபோது, அவர் மூன்றாம் பிறையை வைத்துக் கொண்டு சந்திர மௌளியாக இருக்கிறார். ரூபமே இல்லாத பரமாத்மா நிஷ்கள் தத்வமாயிறுக்கிறபோது, அங்கே சந்திரன் கங்கை எதுவும் இல்லை. அரூபமாயும் இல்லாமல், ஸ்வரூபமாயும் அவயங்களோடு இல்லாமல், லிங்கமாக சகள – நிஷ்களமாக இருக்கிறபோது அவர் பூரண சந்திரனை உச்சியில் வைத்திருக்கிறார். அதிலிருந்து அமிர்கமே கங்கை மாதிரி கொட்டுகிறது.

யோகிகள் தமது சிரசுக்குள் ஸஹஸ்ரார கமலத்தில் உள்ள சந்திர மண்டலத்தில், ஜ்யோதி ஸ்வரூபத்தைத் தியானம் பண்ணுவார்கள். அந்தச் சந்திர பிம்பத்திலிருந்து அமிருத்தம் ஒழுகும். அதனால் அவர்களுக்குப் பரமானந்தம் உண்டாகிறது. ஸமஸ்த ஸ்வரூபமான ஜ்யோதிர் லிங்கம் குளிர்ந்தால், லோகமெல்லாம் குளிரும். இதனால்தான் சிவ லிங்கத்துக்கு ஒயாமல் அபிஷேகம் செய்வது. ருத்திர அபிஷேகம் செய்வது. ருத்திர அபிஷேகத்துக்கு முன்பு சொல்லும் ஸ்லோகம், இதை எல்லாம் அறிவுருத்துவது.

லிங்கம் ஏன் வட்டவடிவமாயிருக்கிறது? வட்டமான ஸ்வரூபத்துக்குத்தான் அடி முடியில்லை. ஆத்யில்லை. அந்முமில்லை. மற்றவர்களுக்கு உண்டு. முக்கோணத்துக்கு சதுரத்திற்கு உண்டு. ஆதியந்தம் இல்லாத வஸ்து சிவம் என்பதை லிங்காகாரம் காட்டுகிறது.

சரியான வட்டமான ( circle ) இல்லாமல், லிங்கம் நீள வட்டமாக (ellipse) இருக்கிறது. பிரபஞ்சமே எல்லிப்டிக்காகத்தான் இருக்கிறது. நம் சூரிய மணிடலத்தை (Solar System) எடுத்துக் கொண்டாலும் கிரஹங்களின் ¢ அயனம் நீள்வட்டமாகத்தான் இருக்கிறது. என்று நவீன விஞ்ஞானத்தில் சொல்வதும், பிரம்மாண்டமும் ஆவிஸ்புரத் என்று சாஸ்திரம் சொல்வதும் லிங்க ரூபத்துக்கு மிகவும் ஒற்றுமையாக இருக்கிறது.

யாராவது பந்துவை நினைக்கிறோம். சந்தோஷமாயிருக்கிறது. அவருடைய உறுவத்தையும் பார்த்தால்தான் சந்தோஷம் பூரணமாகிறது. அவ்வாறே உறுவமற்ற சிவமும் ஒரு உருவத்தோடு வந்து அநுக்கிரகம் பண்ணினால்தான் ரொம்ப சந்தோஷமாக இருக்கும். ஞானிகளுக்கு மட்டுமே பரமாத்ம ஸ்வரூபத்தின் நிராகார (அருவ) உண்மை புரியும். உருவத்தைப் பார்த்து ஆனந்தம் அநுபவிக்கிற நமக்கு உருவத்தோடு கண்டால்தான் ஆனந்தம் உண்டாகும். அதற்காகத்தான் உறுவமற்ற பரமேசுவரன், அருவுருவான லிங்கமானதோடு நில்லாமல், அந்த லிங்கத்துக்குளேயே திவ்விய ரூபம் காட்டும்லிங்கோத் பவ மூர்த்தியாக இருக்கிறார். இப்படி ரூபத்தைக் காட்டினாலும், வாஸ்தவத்தில் தமக்கு அடியும் இல்லை. அதாவது ஆதியும் அந்தமும் அற்ற ஆனந்த வஸ்துவே தாம் என்று உணர்த்துவதற்காக, மேலே லிங்க வட்டத்துக்குள் ஜடாமுடி முடியாமலும், கீழே அந்த மாதிரித் தம் பாதம் அதற்குள் அடங்காமலும் இருப்பதாகக் காட்டுகிறார்.

அடிமுடி எல்லை இல்லாமல், அவர் ஜ்யோதி ஸ்வரூபமாக நின் ¢றார். ஜ்யோதிர்லிங்கமாக, ஆகாயத்துக்கும் பூமிக்குமாக பரமசிவன் உத்பவித்த இரவே சிவராத்திரியாகும்.

அப்படி ஜ்யோதிஸ்வரூபமாகப் பரமேசுவரன் நின்ற பொழுது, விஷ்ணு அவரது பாதத்தைப் பார்க்க பாதாளத்துக்குப் போனார். பூமியைக் கல்லும் ஸ்வபாவம் வராஹத்திற்கு உண்டு. எனவே, அந்த ரூபத்தை எடுத்துக் கொண்டார். பிரம்மா ஹம்ஸ ஸ்வரூபமானவர். பட்சிக்குப் பறப்பது ஸ்வபாவம். பட்சியாகப் பறந்து ஜோதிர்லிங்கத்தின் முடி தேடிப்போனார். இரண்டு பேருக்கும் தேடிப் போனவை அகப்படவில்லை. ஹம்ஸம் வந்தது. நான் கண்டு விட்டேன் எனப் பொய் சொல்லியது. அதனால்தான் பிரம்மாவுக்குப் பிரத்தியோகமாகப் பூஜை இல்லாமல் போய் விட்டது. பரிவாரமாக மட்டும் வைத்துப் பூஜை செய்வதுண்டு. புராண ஐதிஹ்யத்தில் இப்படி இருக்கிறது.


பிரம்மா ஹம்ஸரூபமாகப் போய்ப் பார்த்ததும் சிவ பெருமானின் சிரஸ் அகப்படவில்லை என்றும் சொல்வதின் ¢ தாத்பரியம் என்னவென்றால், பரமாத்மர் ஆதி அந்த ஹீனமான வஸ்து என்பதுதான். சிருஷ்டி, பரிபாலனம் எல்லாவற்றையும் கடந்த வஸ்து அது எந்பதுதான். இப்படி அடி முடி தேடி பிரம்மாவும் விஷ்ணுவும் பெற முடியாக வரையே, என் சாமர்த்தியத்தால் அறிய முடியும் என்கிற அகங்காரமில்லாமல் அன்போடு பக்தி செய்து உருகினால், வெகு சுலபத்தில் அவர் நமக்கு அகப்பட்டுவிடுவார். அன்பினாலே மிகமிக திருப்தி பெற்று அநுக்கிரகிப்பவர் சிவபெருமான் என்பதாலேயே, அவருக்கு ஆசுதோஷி என்று ஒரு பெயர் இருக்கிறது. ஆஷ§டோஷ் முகர்ஜி என்று ஒரு சீர்திருத்த (Reformist) முக்கியஸ்தரைச் சொல்வார்கள். ஆசுதோஷிதான் ஆஷ§டோஷ் என்றாயிற்று. ஆசுகவி என்றால் கேட்டவுனேயே கவி பாடுகிறவர் அல்லவா? இப்படியே ஸ்மரித்த மாத்திரத்தில் சந்தோஷித்து அநுக்கிரகம் பண்ணுகிற வள்ளள்தான் ஆசுதோஷி.

சகல பிரபஞ்சமும் அடங்கியிருக்கிற லிங்க ரூபமானது ஆவிர்பவித்த சிவராத்திரி மகா சதுர்த்தசி இரவில், அவரை அப்படியே ஸ்மரித்து ஸ்மரித்து அவருக்குள் நாம் அடங்கியிருக்க வேண்டும். அதைவிட ஆனந்தம் இல்லை.















Courtesy  :  http://www.mahaperiyava.info/shivarathiri-in-deivathin-kural-part-1/ 

Thanks for Mahaperiyava bhaktas for the scanned picutres and also Kanchi  mutt for the photos.




Friday, February 13, 2015

அய்யனார் குலதெய்வம் என்றாலும், மகாபெரியவரையும் குலதெய்வமாய்த் தான்








அய்யனார் குலதெய்வம் என்றாலும், மகாபெரியவரையும் குலதெய்வமாய்த் தான் கருதியிருப்பார்!

நன்றி-தினமலர் 04-11-2014

காஞ்சிப்பெரியவரைத் தரிசிக்க கிராமப்பகுதியைச் சேர்ந்த பணக்காரர் ஒருவர் வந்திருந்தார். சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார். அவர் முன் பணிவுடன் நின்ற அவர் ""சுவாமி! உங்க உத்தரவுப்படி நான் நடக்கத் தயாரா இருக்கேன். நீங்க சொல்ற தர்ம காரியங்களுக்கு செலவு பண்ணவும் விரும்பறேன்,'' என்று தெரிவித்தார். 

அதற்கு பெரியவர், ""உன் வீட்டிலுள்ள பெரியவர்களிடம் பக்தி சிரத்தையுடன் பழகு. உன் மனைவி, பிள்ளைகளிடம் அன்பாக இரு. கூடிய வரையில் தப்பு, தண்டான்னு வேண்டாத விஷயங்களில் ஈடுபடாதே. உண்மையைப் பேசி நல்வழியில் நட. அதுவே போதுமானது,'' என்று அறிவுரை கூறினார்.

இதைக் கேட்ட பணக்காரருக்கு ஆச்சரியமாகிப் போனது. பெரியவர் மடத்திற்கு ஏதாவது நன்கொடை கேட்பார் என்று எதிர்பார்த்தால் இப்படி நேர்மாறாகப் பேசுகிறாரே என்று எண்ணிக் கொண்டார். 

இருந்தாலும், அவருடைய எண்ணத்தை மீண்டும் அவருக்குத் தெரிவிக்கும் விதத்தில், ""சுவாமி! நீங்க சொன்னபடி பேச்சைக் கேட்பேன். எதிர்காலத்திலும் நீங்க காட்டுன வழியில் நடந்து கொள்வேன். மேற்கொண்டு நீங்க என்ன உத்தரவு போட்டாலும் அதைக் கேட்கவும் தயாரா இருக்கேன்,'' என்று சொல்லி கைகளைக் கட்டிக் கொண்டு நின்றார்.

அவரை உற்றுப் பார்த்த பெரியவர், ""உங்க குலதெய்வம் அய்யனார். அவரோட கோயில் வாசலில் குதிரை சிலை இருக்கு. அதெல்லாம் பராமரிப்பு இல்லாமல் பழுதாகிட்டுது. அதையெல்லாம் சரி பண்ணி, வர்ணம் பூசி திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்து வை,'' என்று உத்தரவிட்டார். 

இதைச் சொன்னதும் பணக்காரர் பிரமித்துப் போனார். ""ஆமாங்க சாமி! எங்க ஐயாவும்(தந்தை) அந்திம காலத்தில இந்த விஷயத்தை என்னிடம் சொல்லி விட்டுப் போனார். இருந்தாலும் அதை நான் கண்டுக்காம விட்டுட்டேன். தகப்பனார் சொன்ன அதே விஷயத்தை நீங்களும் சொல்றதைக் கேட்டா அந்த அய்யனாரே வந்து கட்டளையிட்டது போல இருக்கு. நிச்சயம் உங்க ஆசியோடு திருப்பணியை இப்பவே ஆரம்பிக்கறேன்'' என்று சொல்லி புறப்பட்டார்.

வந்த பணக்காரரின் குலதெய்வம் அய்யனார் என்பதையும், அந்தக் கோயில் பாழ்பட்டு கிடப்பதையும் மகாபெரியவர் எப்படித்தான் உணர்ந்தாரோ என்று அந்தப் பணக்காரர் ஆச்சரியப்பட்டது போல, நமக்கும் ஆச்சரியமாய்த் தான் இருக்கிறது. அவருக்கு அய்யனார் குலதெய்வம் என்றாலும், மகாபெரியவரையும் குலதெய்வமாய்த் தான் கருதியிருப்பார்



 



Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.