Saturday, April 11, 2015

அதோ, அவர் நடந்து போய் கொண்டு இருக்கிறார். அந்த காலடி சுவடுகளை தொடர்ந்து செல்லுங்கள். - கண்ணதாசன்


அதோ, அவர் நடந்து போய் கொண்டு இருக்கிறார். அந்த காலடி சுவடுகளை தொடர்ந்து செல்லுங்கள். 
கண்ணதாசன்சொன்னது




அதோ, அவர் நடந்து போய் கொண்டு இருக்கிறார். அந்த காலடி சுவடுகளை தொடர்ந்து செல்லுங்கள்.
அதுவே உங்கள் யோகமாக இருக்கட்டும்……"(கண்ணதாசன்-சொன்னது)
(அர்த்தமுள்ள இந்து மதம் 8-வது புத்தகத்தில்)

அதோ, அவர் எங்கே போகிறார் என்று சொல்லாமலேயே போய் கொண்டு இருக்கிறார். இந்த வயதிலும் எந்த வாகனத்திலும் ஏறாமல் போய்க்கொண்டிருக்கிறார்.

கைப்பிடி அவலில் காலமெல்லாம் வாழும் அந்த மகாயோகி தள்ளாத வயதிலும் வாலிபனை போல் புனித யாத்திரை தொடங்கி இருக்கிறார். தெய்வ நம்பிக்கை உச்சத்துக்கு போய் விட்டால் வயது தோன்றாது, பசி தோன்றாது.




உள்ளொளி ஒன்று பரவி விரவி நிற்கிறது. அதோ, அந்த ஒளியோடு அந்த மகாயோகி போய்க்கொண்டு இருக்கிறார். அது வெறும் மானிட ஸ்தூலத்தின் யாத்திரை அன்று. அது ஆன்ம யாத்திரை.

லோகாதய சுகத்தை முற்றும் துறந்துவிட்டு தார்மீக வடிவெடுத்து அவர்கள் புறப்படும்போது தர்மம் நடைபாதை விரிக்கிறது. மகா யோகம் மலர்கள் தூவுகிறது. மகாராஜாக்களுக்கு இல்லாத மரியாதை அவர்களுக்கு கிடைக்கிறது.

ஆந்திராவில் ஒரு கோயில் கட்டப்படுகிறது. அதன் மூலஸ்தானத்தில் இன்னும் சிலை வைக்கப் படவில்லை. அங்கே போய் காஞ்சி பெரியவர் ஓரிரவு தங்கினாராம். சிலை பிரதிஷ்டை ஆகி விட்டது என்று ஆந்திர மக்கள் எல்லாம் மகிழ்ச்சி அடைந்தார்களாம்.

அவர் பிராமண ஜாதியின் தலைவரல்ல. பிராமணர்கள் அப்படி ஒரு நிலையை உண்டாக்க கூடாது.

உலகெங்கிலும் உள்ள அக்ஞாநிகளுக்கு ஞான கண் வழங்கும் பேரொளி. அவரது பெருமை இப்போது தெரியாது. இன்னும் ஐம்பது வருஷங்கள் போனால் ‘இந்து மதம் என்றால் என்ன? என்ற கேள்விக்கு ‘ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்ற சங்கராச்சாரிய சுவாமிகள்’ என்று எதிர்கால மாணவன் பதில் எழுதுவான்.

அந்த ஞான பழத்தை தரிசித்தபோது நான் பெற்ற உள்ளொளியை விவரிக்க முடியாது. கோடியில் ஒருவரே எப்போதாவது இப்படி ஆக முடியும். செஞ்சி கோட்டைக்கு போகிறவன் எல்லாம் தேசிங்கு ராஜா அல்ல. காவி கட்டிய எல்லோருமே மகா யோகிகள் அல்ல. ஞானம், வித்தை, ஒழுக்கம், பண்பாடு ஆகிய அனைத்தும் சேர்ந்த மகாயோகி எங்கோ எப்போதோ அவதரிக்கிறார்.




அதோ, அவர் நடந்து போய் கொண்டு இருக்கிறார். இறைவன் கருணையினால் நமக்கு கிடைத்த அந்த வரம், இன்னும் பல்லாண்டு வாழ வேண்டும். தாய், குழந்தைக்கு தாலாட்டு பாடும் போது அவரை பற்றி பாட வேண்டும். பள்ளிக்கூட பாட புத்தகங்களில் அவரை பற்றி குறிக்க வேண்டும். ஒரு உத்தமமான யோகியை ‘பிராமணன்’ என்று ஒதுக்கி விடுவது, புத்தியுள்ளவன் காரியமாகாது. மேதைகளும் கற்பு அரசிகளும் எந்த ஜாதியிலும் பிறக்கலாம். யோகிகளில் ஒரு சாதாரண யோகியை கூட ஒதுக்க கூடாது என்றால், இந்த மகா யோகியை பிராமணர் அல்லாதார் ஒதுக்குவது எந்த வகையில் நியாயம்?

அதோ அவர், நடந்து போய் கொண்டு இருக்கிறார். புத்தன் சொன்னதை விட, அவர் நமக்கு அதிகமாக சொல்லி இருக்கிறார். இயேசுவின் தத்துவங்களை விட அதிகமான தத்துவங்களை வாரி இறைத்து இருக்கிறார். அவர் ஜாதி வெறியர் ஆகவோ, மத வெறியர் ஆகவோ, ஒரு நாளும் இருந்தது இல்லை. அரசியல் வில்லங்கங்களில் மாட்டி கொண்டது இல்லை.

பகவான் கீதையில் சொன்னது போல் வாழ்ந்து கொண்டு இருப்பவர் அவர் ஒருவரே.

அதோ, அவர் நடந்து போய் கொண்டு இருக்கிறார். அந்த காலடி சுவடுகளை தொடர்ந்து செல்லுங்கள்.
அதுவே உங்கள் யோகமாக இருக்கட்டும்……"








Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

"நீ கையில் பூர்ணகும்பம் எடுத்துண்டுதான் வந்து பாரேன்-

"நீ கையில் பூர்ணகும்பம் எடுத்துண்டுதான் வந்து பாரேன்"


"நீ கையில் பூர்ணகும்பம் எடுத்துண்டுதான் வந்து பாரேன்-
நான் இனி ஒரு நாளும் வரமாட்டேன்!" என்று சவால் விட்டுப்
போன சிறுவன்,அதன் பிறகு அவள் வீட்டுப்படி ஏறவேயில்லை!(பக்தர்களிடம் தோற்பதில்தானே பகவான் மகிழ்ச்சி காண்கிறார்.)
சுப்பிரமணிய சாஸ்த்ரிகள் குடும்பம் திண்டிவனத்தில் இருந்த போது,

குழந்தை சுவாமிநாதன் அந்த ஊரில் முறுக்கு, சீடை பண்ணி வியாபாரம் பண்ணி வந்த ஒரு பாட்டியிடம், கையில் காசு கிடைக்கும் போதெல்லாம் முறுக்கு சீடை வாங்கி உண்டு மகிழ்வான். வெண்ணையை திருடி தின்றாலும், தோழர்களுடன் பகிர்ந்து கொண்ட கண்ணன் போல், சுவாமிநாதனும், தோழர்களும் பாட்டியிடம் நிறைய வாங்கி உண்டார்கள். ஒருநாள் அந்த பன்னண்டு வயது பாலன் சொன்னான்...."பாட்டி! ஒனக்கு இத்தனை வாடிக்கை பிடிச்சு குடுத்திருக்கேனோல்லியோ? அதுனால எனக்கு வெலையக்கொஞ்சம் கொறைச்சு குடேன் " தர்மமான கமிஷனை கேட்டார்.


பாட்டி மறுத்தாள். இன்னுயிரையே இலவசமாக தரவேண்டிய பிக்ஷாண்டியின் அவதாரமென்று அறியாததால் ! சுவாமிநாதனும் விடாமல் அடமாக இருக்க, பாட்டி அசைந்து கொடுக்கவில்லை.
"போ! இனிமே ஒன்கிட்ட நான் வாங்க போறதே இல்லை" என்றான் கோபமாக.
"வாங்காட்டா போயேன்! ஏதோ நீ வாங்காட்டா, என் பொழைப்பே இல்லாம போயி, ஒன்னை பூர்ணகும்பம் வெச்சு கூப்பிடுவேன்னு நெனைச்சுண்டியோ?" பாட்டி அதைவிட கோவமாக சொன்னாள்.
"முடிவா சொல்லு பாட்டி...நான் வர மாட்டேன்னா வர மாட்டேன்!"
என்று மிரட்டிப் பார்த்தார்.அவள் மசியவில்லை.
"நீ கையில் பூர்ணகும்பம் எடுத்துண்டுதான் வந்து பாரேன்-
நான் இனி ஒரு நாளும் வரமாட்டேன்!" என்று சவால் விட்டுப்
போன சிறுவன்,அதன் பிறகு அவள் வீட்டுப்படி ஏறவேயில்லை!
காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் விஜயம் செய்வதால், திண்டிவனமே விழாக்கோலம் பூண்டது. காரணம், ரெண்டு மாசம் வரை அந்த ஊரில் ஓடி விளையாடி செல்லப்பிள்ளையாக இருந்த சுவாமிநாதன்தான், இன்று சங்கராச்சாரியாராக விஜயம் செய்கிறார். ஒவ்வொரு வீட்டு வாசலிலும், தங்கள் வீட்டு குழந்தை பால தண்டாயுதபாணியாக ஜொலித்துக்கொண்டு வரப்போவதால், பூர்ணகும்பம் வைத்துக்கொண்டு காத்திருந்தார்கள்.
அன்று சுவாமிநாதனிடம் முறுக்கிக்கொண்ட முறுக்கு பாட்டியும் பூர்ணகும்பம் ஸித்தம் பண்ணினாள். உள்ளே பழைய குரல் "போயேன். பூர்ணகும்பம் குடுத்து உன்னை கூப்பிடுவேனோ?" அன்று அந்த சமத்து சக்கரைக்கட்டியை விரட்டி அடித்தோமே! அது அப்புறம் இந்தபக்கம் தலையை காட்டவேயில்லை. இப்போதோ அது எட்டவொண்ணா மஹாகுரு பீடத்தில் ! குழந்தை சுவாமி நம்முடைய பூர்ணகும்பத்தை ஏற்குமா? இல்லை நிராகரிக்குமா?

இதோ குழந்தை குருஸ்வாமி தேஜஸ் பொங்கும் ரூபத்தோடு, பாட்டி வீட்டு வாசலில்! அன்று சமத்தாக அளவோடு நின்ற களை, இன்று முகத்தில் தாய்மை பொலிவோடு, தெய்வீகம் பொங்கியோட பாட்டி முன்னால் வந்து நிற்கிறது.


"இதோ நம் வீட்டுக்கருகே வந்து விட்டாரே! இப்போது நான்
என்ன செய்வேன் ?"என்று ஒன்றும் புரியாமல் கதறிக் கண்ணீர்
விடுகிறாள். அவள் வீட்டுக்கு எதிரேயே பல்லக்கு நின்றது.
"அந்த பாட்டி ஏன் உள்ளேயே இருந்து எட்டிப் பார்க்கிறார்?
வெளியே வரச் சொல்லுங்கள்' என்று அன்புக்கட்டளை
பிறக்கிறது.தயாராக இருந்த பூர்ண கும்பத்தைப் பார்த்த பெரியவா
"அவளிடமிருந்து அதை வாங்குங்கள்!" என்கிறார்.
அதைப் பெற்றுக் கொண்டு அவளிடம் "பார்த்தாயா!
கொடுப்பேனான்னு சொன்ன நீயும் கொடுத்துட்ட
வாங்கிப்பேனான்னு சொன்ன நானும் வாங்கிண்டுட்டேன்"
என்று சிரித்து அவள் பயத்தைப் போக்கினார்.


பக்தர்களிடம் தோற்பதில்தானே பகவான் மகிழ்ச்சி காண்கிறார்.












Courtesy :   Facebook post  :   Mannargudi Sitaraman Srinivasan  
Thanks to Mahaperiyava bhaktas for the  photos.

‘என் கையில என்ன இருக்கு! உங்க பண்டரிநாதர்தான் மழையைக் கொண்டு வந்தார்’னு சொல்லிட்டுச் சிரிச் சார் பெரியவா.”













பெரியவாளின் ஆன்ம பலம் எத்தனை சக்தி வாய்ந்தது என்பதை உணர்த்துகிற இரண்டு சம்பவங்களை மெய் சிலிர்க்க விவரித்தார் லக்ஷ்மிநாராயணன்:



”பெரியவா யாத்திரை போறப்ப, அங்கங்கே சின்னச் சின்ன ஊர்லகூட தங்கிட்டுப் போறது வழக்கம். அப்படித்தான், குண்டக்கல்லுக்கு முன்னால ‘ஹக்ரி’ங்கற ஊர்ல பெரியவா தங்கினா. ஊருக்குள்ளே, சுமார் 10 கி.மீ. தூரத்துல சிவன் கோயில் ஒண்ணு இருந்தது. பக்கத்துலயே பெரிய ஆலமரம். அடுத்தாப்ல ஆத்தங்கரை. பாத்ததுமே பெரிய வாளுக்கு அந்த இடம் ரொம்பவே பிடிச்சுப்போச்சு. அங்கே தங்கறதுன்னு முடிவு பண்ணினா.



சின்ன ஊர்தான்; ஆனா, பொட்டல்காடு. நொப்பும் நுரையுமா காட்டாறு ஒண்ணு ஓடிக்கிட்டே இருந்த காலமும் உண்டாம். ஆனா, நாங்க போன சமயத்துல மழையேதும் இல்லாம ஊரே வறண்டு கிடந்துது.
அந்த ஊர்ல கரும்புதான் பிரதான விவசாயம். சர்க்கரை ஆலையும் இருந்தது. தஞ்சாவூர் ஜில்லாக்காரர் ஒருத்தர்தான் அந்த ஃபேக்டரியோட ‘ஜி.எம்’மா இருந்தார். பெரியவா ஊருக்கு வந்திருக்கிற விவரம் தெரிஞ்சு, ஓடிவந்து நமஸ்காரம் பண்ணார். அவர்கிட்டே, ”நான் இங்கே வியாச பூஜை பண்ணலாம்னு இருக்கேன். உங்க ஊர்ல கொஞ்ச நாள் தங்கிக்கலாமா?”னு கேட்டார் பெரியவா.



ஆடிப்போயிட்டார் அந்த ஜி.எம். ”சுவாமி! அது எங்க பாக்கியம்! பெரியவா இங்கேதான் தங்கணும். என்னென்ன ஏற்பாடு பண்ணணுமோ, உத்தரவிடுங்கோ! அதையெல்லாம் நாங்க பண்ணித் தரோம்”னு பவ்யமா சொன்னார்.


அப்புறம்… நாலு லாரி நிறைய கீத்து, சவுக்குக் கட்டையெல்லாம் வந்து இறங்கித்து. 300 அடிக்குப் பந்தல் போட்டு, பெரியவா தங்கறதுக்கும், தரிசனம் பண்றதுக்கும் ஏற்பாடு பண்ணினார் அந்த அதிகாரி. பெரியவாளைத் தரிசனம் பண்றதுக்கு நிறையப் பேர் வருவாங்கறதால, சுமார் ஆயிரம் பேர் உக்கார்றதுக்கு வசதியா ஏற்பாடெல்லாம் பண்ணி முடிச்சார். எல்லா ஏற்பாடுகளும் பிர மாதமா நடந்து முடிஞ்சாலும், அன்னிக்கி ராத்திரி முழுக்கப் பெரியவா தூங் கவே இல்லை” என்று சஸ்பென்ஸோடு சொல்லி நிறுத்தினார் லக்ஷ்மி நாராயணன்.
பெரியவர் ஏன் தூங்கவில்லை? அந்த ஊரும், சிவாலயமும் பெரியவருக்கு சந்தோஷத்தைக் கொடுத்தாலும், அந்த ஆறு பல வருடங்களாக வறண்டே கிடந்தது. பருவமழையும் பொய்த்துப்போனது; ஊரில் கடுமையான தண்ணீர்ப் பஞ்சம். இதில் ரொம்பவே கவலைப்பட்டாராம் பெரியவர்.


லக்ஷ்மிநாராயணன் தொடர்ந்தார்… ”பெரியவா யாரோடயும் பேசாம ஆத்துப் பாதையையே வெறிச்சுப் பார்த்துட்டிருந்தார். சாயந்திரம் திடீர்னு எழுந்தவர், ஆத்தங்கரை நோக்கிப் போனார். ஆத்து மணல்ல இறங்கி நின்னார். கொஞ்சம் யோசிச்சவர், அப்படியே நடக்க ஆரம்பிச்சார். கிட் டத்தட்ட ஒரு கி.மீட்டர் தூரத்துக்கு அந்த மணல்லயே நடந்துபோயிட்டுத் திரும்பினார். அப்புறம் எங்களைக் கூப்பிட்டு, ‘சந்தியா ஜபம் பண்ணப் போறேன். யாராவது என்னைப் பார்க்க வந்தா, காலைல வரச் சொல்லு’னு சொல்லிட்டு, ஜபத்துல மூழ்கினார் பெரியவா.
நல்லா இருட்டிடுச்சு. அப்பல்லாம் ஹரிக்கேன் விளக்குதான். ஒண்ணோ ரெண்டோ பெட்ரோமாக்ஸ் லைட் இருக்கும். எல்லாத்தையும் ஏத்தி வைச்சோம்.



ஆச்சு… ராத்திரி பத்து மணி இருக்கும். காத்து குளுமையா வீசின மாதிரி 
இருந்துது. பொட்… பொட்டுனு உடம்புல ரெண்டொரு மழைத்துளி பட்டுது. லேசா தூத்தல் போட்டுது. அப்புறம், நிதானமா பெய்ய ஆரம்பிச்ச மழை, கொஞ்ச நேரத்துலேயே வேகமெடுத்து ஹோன்னு இரைச்சலோட வலுவா பெஞ்சுது. அங்கே இருந்த ஒரு சைக்கிள் ரிக்ஷாவுல பெரியவாளை உக்காரச் சொல்லிட்டு, பக்கத்திலேயே நான் ஒரு தாழங்குடையைப் பிடிச் சுண்டு நின்னேன்.


கிட்டத்தட்ட நாலு மணி நேரம்… வெளுத்து வாங்கிச்சு மழை. நடுராத்திரி ஒண்ணரை மணிக்குதான் ஓய்ஞ்சுது. காஞ்சு மணலா கிடந்த ஆத்துல தண்ணி ஓட ஆரம்பிச்சுது.


மறுநாள்… விடிஞ்சும் விடியாததுமா ஊர் ஜனங்க எல்லாம் அதிசயப்பட்டு, ‘பெரியவா மழையை வரவழைச்சுட்டார்’னு சொல்லி, கூட்டமா திரண்டு வந்து, அவரைத் தரிசனம் பண்ணிட்டுப் போனாங்க. பெரியவாளும் மனநிறைவோடு வியாச பூஜையைப் பண்ணி முடிச்சார்.
பெரியவா மகா தபஸ்வி! வியாச பூஜைங் கறது நமக்குச் சொன்ன காரணம். ஆனா, அந்த ஊருக்கு என்ன தேவையோ, அதை நிறைவேத்திக் கொடுத்தாரே, அதை இப்ப நினைச்சாலும் உடம்பே சிலிர்க்கிறது” என்று நெகிழ்கிறார் லக்ஷ்மிநாராயணன்.


”இப்படித்தான், மகாராஷ்டிரால பண்டர் பூர்னு சொல்ற 

பண்டரிபுரத்துக்குப் பெரியவா போனப்பவும் நடந்துது” என்று அடுத்த ஆச் சரியத்தையும் விவரித்தார் லக்ஷ்மிநாராயணன்.
பண்டரிபுரத்தில் ஓடும் நதியின் பெயர் பீமா. அந்த நதியில் பத்து வருடங்களுக்கும் மேலாகத் தண்ணீரே இல்லாமல், சுத்தமாக வறண்டு 

கிடந்ததாம்!


”ஆத்துல அங்கங்கே கிணறுகள் மாதிரி தோண்டி, சுமார் நூறு மீட்டர் ஆழத்துலேருந்து தண்ணி எடுப்பாங்க ஜனங்க. அதுவும், குடத்துல அவ்ளோ நீளத்துக்குக் கயிறு கட்டிக் கிணத்துக்குள்ளே இறக்கி… அந்தக் குடம் நிரம்பறதுக்கே எப்படியும் 20, 25 நிமிஷமாவது ஆயிடும். அந்த ஆத்துக்கு அக்கரைல ஒரு பாழடைஞ்ச மண்டபம் இருந்துது. அங்கேதான் பெரியவா தங்கி இருந்தா.


சாயந்தரம் 5 மணி இருக்கும்… பெரியவா அங்கேயே உக்காந்து ஜபம் பண்ண ஆரம்பிச்சுட்டா. சரியா ஒரு மணி நேரம் ஆகியிருக்கும்… கனமழை பெய்ய ஆரம்பிச் சுது. ஆத்துல வெள்ளமா ஓடுச்சு தண்ணி. ரொம்ப நேரத்துக்கு மழை விடவே இல்ல. அப்புறம், பரிசல்கார னைக் கூட்டிண்டு வந்து, ராத்திரி 12 மணிக்குதான் இக்கரைக்கு வந்து சேர்ந்தா பெரியவா.


கூட்டம் பெரியவாளைச் சூழ்ந்துண்டு, நமஸ்காரம் பண்ணித்து. ‘ஸ்வாமி! நீங்கதான் மழையைக் கொண்டு வந்தீங்க’ன்னு நெக்குருகிச் சொன்னாங்க ஜனங்க.


‘என் கையில என்ன இருக்கு! உங்க பண்டரிநாதர்தான் மழையைக் கொண்டு வந்தார்’னு சொல்லிட்டுச் சிரிச் சார் பெரியவா.”

லக்ஷ்மிநாராயணன் சிலிர்ப்போடு இந்தச் சம்பவத்தை விவரித்துவிட்டுக் கடைசியாகச் சொன்னார்… 

”பெரியவா தன்னடக்கத்தோடு அப்படிச் சொன்னாலும், எனக்கு நன்னாத் தெரியும், அவர் சாட்சாத் ஈஸ்வரனின் அம்சம்னு











Courtesy :   Facebook post  :   Mannargudi Sitaraman Srinivasan  

Thanks to Mahaperiyava bhaktas for the  photos.



”நீ போய் கோயிலைச் சுத்திப் பார்த்துட்டு வா”ன்னு என்னை அனுப்பினார் "







மகா பெரியவா தனக்கு நெருக்கமா இருக்கறவாகிட்டயும், தன்னைச் சுத்தி இருக்கறவாகிட்டேயும்தான் கருணை காட்டுவார்னு நினைச்சா, அது தப்பு. அவருக்கு எப்பவுமே ஜனங்கமேல அபரிமிதமான அன்பு உண்டு. அவங்க கஷ்டப்படறதைப் பொறுத்துக்கவே மாட்டார். அவரால அதை சகிச்சுண்டு இருக்கமுடியாது!” 

பல வருடங்களுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி ஒன்றை விவரித்தார் பட்டு சாஸ்திரிகள்.

”திருமழிசைஆழ்வார் பிறந்த க்ஷேத்திரம் திருமழிசை. அந்த ஊருக்குப் பக்கத்திலேயே நூம்பல்னு ஒரு கிராமம் இருக்கு. இங்கே, மகா பெரியவா ஒருமுறை முகாமிட்டிருந்தார். ஒருநாள்… திருக்குளத்துல ஸ்நானம் பண்ணிட்டு, பக்கத்திலேயே இருக்கிற பெருமாள் கோயிலுக்கு வந்தார் பெரியவா. அப்போ மணி 11 இருக்கும்; சுள்ளுனு வெயில் அடிச்சிண்டிருந்தது. சூடுன்னா அப்படியரு சூடு!

கோயில் வாசல்ல பெரிய கதவும், அதுலேயே சின்னதா ஒரு கதவும் இருக்கும். அதைத் திட்டிவாசல்னு சொல்லுவா! அந்த வழியா உள்ளே போன பெரியவா, மதிலை ஒட்டி கொஞ்சம் நிழல் இருந்த இடத்துல போய் அப்படியே சாய்ஞ்சு உட்கார்ந்துட்டார். அவருக்கு எதிரே அடியேன்; பெரியவா கேக்கறதுக்கு எல்லாம் பதில் சொல்லிண்டு இருந்தேன்.

வெயில் நெருப்பா கொதிச்சிண்டு இருந்த இடத்துல நின்னுண்டிருந்தேன். இன்னும் கொஞ்ச நேரம் அப்படியே நின்னுண்டிருந்தா, காலே பொசுங்கிடும்போல இருந்துது. அப்படியரு சூடு! பெரியவாகிட்டே பேசிண்டிருந்த அதே நேரம், தரையோட சூடு பொறுக்கற வரைக்கும் ஒரு கால், அப்புறம் சட்டுன்னு அடுத்த கால்… இப்படியே கால்களை மாத்தி மாத்தி வெச்சு நின்னு சமாளிச்சுண்டிருந்தேன்!

மகா பெரியவா, நம்மோட மனசுல என்ன இருக்குங்கறதையே தெரிஞ்சுக்கற மகான். எதிர்ல நிக்கற என்னோட நிலைமை அவருக்குத் தெரியாம இருக்குமா? சட்டுன்னு பேச்சை நிறுத்தின பெரியவா, ”வெளியில என்னவோ பேச்சு சத்தம் கேக்கற மாதிரி இருக்கு. என்னன்னு போய்ப் பார்த்துட்டு வந்து சொல்லு!”ன்னார்.

விறுவிறுன்னு வெளியே வந்தேன். வாசல்ல நின்னு எட்டிப் பார்த்தேன். அங்கே ஒரு நூத்தம்பது, இருநூறு பேர் நின்னுண்டிருந்தா. எல்லாரும் மகா பெரியவாளை தரிசிக்கிறதுக்காகத்தான் நிக்கறாங்கன்னு தோணுச்சு. பெரியவாகிட்ட வந்து விவரத்தைச் சொன்னேன்.

ஆனா மகா பெரியவாளோ, ”அவா எதுக்கு வந்திருக்கா? ஸ்வாமி தரிசனத்துக்குதானே வந்திருக்கா?! சரியா கேட்டுண்டு வா!”ன்னு மறுபடியும் என்னை அனுப்பினார்.

‘அடடா… பெரியவா சொல்றதுபோல, வெளியில நிக்கறவா எல்லாரும் ஸ்வாமி தரிசனத்துக்கு வந்திருக்கலாம், இல்லையா? நமக்குத் தோணாம போச்சே! பெரியவாளை தரிசனம் பண்ணத்தான் வந்திருக்கானு நானாவே எப்படி நினைச்சுக்கலாம்?’ என்று யோசிச்சபடி, வாசல் பக்கம் நகர்ந்தேன்.

”அப்படியே கையோட, அவாள்லாம் வெயில்ல நிக்கறாளா, நிழல்ல நிக்கறாளானு பார்த்துண்டு வா”ன்னார் பெரியவர்.

‘நீ மட்டும்தான் கால் சூட்டோட என்கிட்ட பேசிண்டு நிக்கறதா நினைக்கறியோ?! உன்னைப்போல எத்தனை பேரு வெயில்ல கால்கடுக்க நின்னுண்டிருக்கானு உனக்குத் தெரியவேணாமா?’ன்னுதான், மகா பெரியவா என்னை அனுப்பிவைச்ச மாதிரி தோணிச்சு எனக்கு.

ஜனங்க கூட்டமா நின்னுண்டிருந்த இடத்துக்கு வந்தேன். ”எல்லாரும் கோயிலுக்கு ஸ்வாமி தரிசனத்துக்கு வந்திருக்கேளா… இல்ல, மகா பெரியவாளை தரிசிக்க வந்திருக்கேளா?”ன்னு கேட்டேன்.

”பெரியவாளை தரிசனம் பண்ணி, ஆசீர்வாதம் வாங்குறதுக்குதான் வந்திருக்கோம்”னு கோரஸா பதில் சொன்னா. ஓடி வந்து பெரியவாகிட்ட விஷயத்தைச் சொன்னேன்.

அவர் உடனே எல்லாரையும் உள்ளே அனுப்பிவைக்கச் சொன்னார். ”இங்கே மதிலோட நிழல் விழறது. எல்லாரும் அப்படியே நிழல்ல உட்கார்ந்துக்குங்கோ”ன்னார்.

வெயிலின் உக்கிரத்தைத் தாங்கமுடியாம தவிச்ச என்னோட நிலைமையைக் கவனிச்ச அதே நேரம், வெளியே ஜனங்க நின்னுட்டிருக் கிறதையும், அவங்களும் வெயில்ல கஷ்டப் படுவாங்களேங்கிறதையும் பெரியவா யோசிச்சு, அவங்களை உடனே உள்ளே அனுப்பச் சொன்னார் பாருங்கோ, அதான் பெரியவாளோட பெருங்கருணை.

இதைக் கேட்கறதுக்கு ரொம்பச் சின்ன விஷயம்போலத் தெரியலாம். ஆனா, எந்த ஒரு சின்ன விஷயத்துலேயும் நுணுக்கமான பார்வையோடு, ஜனங்க மேல மகா பெரியவா காட்டின அன்பையும் அக்கறையையும்தான் நாம இங்கே முக்கியமா கவனிக்கணும்.

கூட்டத்தோடு பேசிண்டிருந்த நேரத்துல, ”நீ போய் கோயிலைச் சுத்திப் பார்த்துட்டு வா”ன்னு என்னை அனுப்பினார். பெரியவா உத்தரவு ஒவ்வொண்ணுக்கும் ஏதாவது உள் அர்த்தம் ஒண்ணு இருக்கும்.

நான் பிராகாரத்தை வலம் வந்தப்ப, அங்கே பிள்ளையார் சந்நிதியைப் பார்த்தேன். ஆச்சரியமும் குழப்பமுமா இருந்தது. தென்கலை நாமத்தோட காட்சி தந்தார் பிள்ளையார். பெருமாள் கோயில்ல பிள்ளையார் எப்படி? தலையைப் பிய்ச்சுண்டேன். யோசிக்க யோசிக்க, பதிலே கிடைக்கலை.

கோயிலைச் சுத்தி முடிச்சு, மகா பெரியவா எதிரே வந்து நின்னேன். என்னை ஒருகணம் உத்துப் பார்த்தார்.

”என்ன… தென்கலை நாமம் போட்ட பிள்ளையார் இருக்காரேனு பிரமிச்சுட்டியோ? வைஷ்ணவ சம்பிரதாயப்படி அவரை ‘தும்பிக்கை ஆழ்வார்’னு சொல்லுவா!” அவரே தான் ஸ்ரீ மத் நாதமுனிகளா திரு அவதாரம் செய்தார் ன்னு விளக்கம் சொல்லிட்டுச் சிரிச்சார் பெரியவா.










Courtesy :   Facebook post  :   Mannargudi Sitaraman Srinivasan  

Thanks to Mahaperiyava bhaktas for the  photos.

, அது அத்தனையும் உனக்குக் கிடைக்கட்டும்னு ஆசீர்வாதம் பண்றதுதான் இந்த வாக்யம்."






பல ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த நிகழ்வு இது.


பெரியவா தரிசனம் தந்துகொண்டிருந்த நேரத்தில், நான்கு, ஐந்து வித்வான்கள் அமர்ந்திருந்தனர்.
சஹஜமாகப் பேசிக்கொண்டிருக்கும்போது, பெரியவா ' பக்தர்கள் எனக்கு நமஸ்காரம் பண்றப்போ, 'நாராயணா, நாராயணா'ன்னு நான் ஆசீர்வாதம் பண்றேன். உங்களைப் போல ஸம்ஸாரிகள்லாம் எப்படிப் பண்ணுவேள்' என அவர்களிடம் கேட்டார்.


'தீர்க்காயுஷ்மான் பவ ஸௌம்ய'ன்னு சொல்லுவோம்' என அவர்களில் ஒருவர் சொன்னார்.

'அதுக்கு என்ன அர்த்தம்?'

'நீண்ட காலத்துக்கு ஸௌக்யமா இருங்கோன்னு அர்த்தம்'.

பக்கத்திலிருந்த மற்றவர்களிடமும் இதைக் கேட்டபோது, அப்படியே அவர்களும் பதில் சொன்னார்கள்.

கொஞ்ச நேரம் மௌனமாக இருந்த பெரியவா, 'நீங்க சொன்ன அர்த்தம் தப்பானது' என மெதுவாகச் சொன்னார்.

பண்டிதர்கள் திகைத்துப் போனார்கள். எல்லாருமே பெரிய பெரிய வித்வான்கள்; சிரோமணி பட்டம் வாங்கியவர்கள்.

கொஞ்சம் சாதாரணமாகவே ஸம்ஸ்க்ருதம் தெரிந்தவர்களுக்கும் கூட இந்த வாக்கியத்தின் அர்த்தம் சுலபமாக இப்படித்தான் புரிந்திருக்கும். அவ்வளவு எளிமையான வார்த்தைகள். ஆனால், இதென்ன, பெரியவா இது தப்பு என்கிறாரே!

'இப்ப நான் சொல்லட்டுமா?'

வித்வான்கள் காதுகளைத் தீட்டிக் கொண்டார்கள்.

"27 யோகங்கள்ல 'ஆயுஷ்மான்'ன்னு ஒண்ணு இருக்கு. பதினோரு கரணங்கள்ல ஒண்ணுத்துக்குப் பேரு 'பவ'. வார நாள்ல, புதன் கிழமைக்கு 'ஸௌம்ய' வாஸரம்னு பேரு.

இந்த மூணுமே, அதாவது ஆயுஷ்மான் யோகமும், பவ கரணமும் ஒரு புதன் கிழமையன்னிக்கு வந்தா அது ரொம்பவே ஸ்லாக்யம்னு சொல்லுவா. அப்பிடி இந்த மூணும் சேர்ந்து வர்றதால எவ்வளவு மேலான பலன்கள் கிடைக்குமோ, அது அத்தனையும் உனக்குக் கிடைக்கட்டும்னு ஆசீர்வாதம் பண்றதுதான் இந்த வாக்யம்."

அமர்ந்திருந்த வித்வான்கள் எழுந்திருந்து, சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தனர்.

இதுவரை கிளிப்பிள்ளை மாதிரி ஒரு வாக்கியத்தைச் சொல்லிக்கொண்டிருந்த அனைவருக்குமே புரிகிறமதிரி அந்த ஞானப்பிள்ளை அன்று எடுத்துக் காட்டியது.








Courtesy :   Facebook post  :   
Mannargudi Sitaraman Srinivasan  
Thanks to Mahaperiyava bhaktas for the  photos.

திருநெல்வேலில தக்ஷிணாமூர்த்தின்னு ஒரு பையன் இருந்தானே, அவன் இப்போ எப்படி இருக்கான்







நாற்பது ஆண்டுகளுக்கு முன், காஞ்சிப் பெரியவரின் ஜன்ம தினத்தன்று அவரைச் சந்தித்து ஆசி பெறுவதற்காக ‘கலவை’யில் எக்கச்சக்கக் கூட்டம் திரண்டிருந்தது. அப்போது ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு நபர் தன் மனைவியோடு, ஸ்வாமிகளின் தரிசனத்துக்காக முன் வரிசையில் காத்திருந்தார். அவர் கழுத்திலும், அவரின் மனைவியின் கழுத்திலும் காதிலும் தங்க நகைகள் ஏராளம் மின்னின. அவர் ஒரு பெரிய தொழிலதிபர் என்பது பார்த்த மாத்திரத்திலேயே புரிந்தது.
பெரியவர் தம் அறையிலிருந்து வெளிப்பட்டதும், முன்னால் இருந்த அந்தத் தம்பதி மீதுதான் அவரது பார்வை விழுந்தது. அந்தத் தொழிலதிபரை, “எப்படி இருக்கே?” என்று விசாரித்தார் பெரியவர்.


அதற்கு அந்தத் தொழிலதிபர், தான் செய்து வரும் தான தருமங்கள் பற்றியும், தொடர்ந்தாற்போல் நான்கு நாட்களுக்குத் தன் சொந்தச் செலவில் இலவசமாக ஏழை பிராமணர்களுக்கு ‘சமஷ்டி உபநயனம்’ செய்து வைத்தது பற்றியும் சொல்லிவிட்டு, அது தொடர்பான கையேடுகளைப் பெரியவரிடம் காண்பித்தார். அதை வாங்கிப் பார்வையிட்ட பெரியவர், “சரி, இதுக்கெல்லாம் உனக்கு எவ்வளவு செலவாச்சு?” என்று கேட்டார். தொழிலதிபர் பெருமிதம் தொனிக்கும் குரலில், “சில லட்ச ரூபாய்கள் ஆகியிருக்கும்” என்றார்.


பெரியவர் சிறிது நேரம் மௌனமாக இருந்தார். பின்னர், “அதிருக்கட்டும்… திருநெல்வேலில தக்ஷிணாமூர்த்தின்னு ஒரு பையன் இருந்தானே, அவன் இப்போ எப்படி இருக்கான்?” என்று சன்னமான குரலில் கேட்டுவிட்டுப் பதிலை எதிர்பாராமல் நகர்ந்து போய்விட்டார்.
தொழிலபதிபர் அப்போது அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை. தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் குமுறிக் குமுறி அழத் தொடங்கிவிட்டார். அவர் மனைவி அவரைச் சமாதானப்படுத்த முயன்றும் முடியவில்லை. அதற்குள் பத்திரிகையாளர்கள் சிலர் அங்கு கூடி, அவர் ஏன் அழுகிறார் என்று விசாரித்தனர். அதற்கு அவர், “நான் அயோக்கியன்… அயோக்கியன்..!” என்று திருப்பித் திருப்பிச் சொல்லிக்கொண்டு இருந்தார். அவரை ஒருவாறு சமாதானப்படுத்தி விஷயத்தைக் கேட்டதற்கு..........அவர் சொன்னார்…
“எனக்கு ஒரு அக்கா உண்டு. அவள் கணவனை இழந்தவள். அவளுக்கு ஒரு பையன். அவன் பெயர்தான் தக்ஷிணாமூர்த்தி. அவர்கள் இருவரும் என் வீட்டில்தான் தங்கி வளர்ந்தார்கள். பின்னர் அக்கா காலமாகிவிட்டாள். அதன்பின் அந்தப் பையனை என் வீட்டில் வைத்திருக்க விரும்பாமல், வீட்டை விட்டுத் துரத்தி விட்டேன். அதன்பின் அவன் எங்கே போனான், என்ன ஆனான் என்று எனக்குத் தெரியாது. ‘ஊருக்கெல்லாம் சமஷ்டி உபநயனம் செய்து வைப்பதாய் பெருமை பேசுகிறாய். ஆனால், உன் சொந்தச் சகோதரி மகனை மறந்துவிட்டாய். நீ பெரிய தர்மவானா?’ என்றுதான் பெரியவர் இப்போது என்னை மறைமுகமாகக் கேட்டார். உடனடியாக அந்தப் பையனைத் தேடிக் கண்டுபிடித்து, நல்ல முறையில் வளர்த்துப் பெரியவனாக ஆக்க வேண்டியது என் பொறுப்பு!” என்றபடி தன் மனைவியுடன் கிளம்பிச் சென்றார் அந்தத் தொழிலதிபர்.




    Courtesy :   Facebook post  :   Mannargudi Sitaraman Srinivasan  
    Thanks to Mahaperiyava bhaktas for the  photos.

நானும் இந்த சாஸ்திரம், வேதம்ங்கிறதையெல்லாம் அப்படியே நம்பிப் போறேன்.








மஹாபெரியவா - (Sharing Message)

1957-59 சென்னை மாநகரின் இந்த அரை நூற்றாண்டு சரித்திரத்தில் ஒரு பொற்காலம். கலியுகத்தில் நம் ஊனக்கண்களுக்கும் காட்சி அருளும் அவதார மூர்த்தி – காஞ்சி முனிவர் – பெரியவாள் என்றிந்தப் பார் புகழும் தவசிரேஷ்டன் தடுத்தாட்கொள்ளும் தயையால் சென்னையில் முகாம் இட்டிருந்த புண்ணிய மாதங்கள். பிரதானமாக மயிலாப்பூர் ஸம்ஸ்க்ருதக் கல்லூரியில், அன்று இளவரசரான புதுப் பெரியவாள் ஸ்ரீ ஜயேந்திரருடன், தங்கியிருந்த அருளாளன் திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம், தொண்டையார்ப்பேட்டை, மாம்பலம் என்று மாநகரின் பல பகுதிகளிலும் தனது புனிதத் திருவடிகளைப் பதித்து, பண்டு தருமம் மிகுந்திருந்த சென்னையில் மீண்டும் தருமப் பயிர் தழைக்க அருள் மழை பெய்து மக்களை அனுக்ரஹித்தார்.

ஒரு நாள் அதிகாலையில் மாம்பலம் சிவா-விஷ்ணு ஆலயத்திலிருந்து ஸ்ரீ திரிபுரசுந்தரி அன்னையுடன் ஸ்ரீமருந்தீஸ்வரர் கோயில் கொண்டுள்ள திருவான்மியூருக்கு அண்ணல் பாதயாத்திரை புறப்பட்டிருந்தார். உடன் செல்லும் பாக்கியம் பெற்ற பக்தர் குழாமில் அடியேனும் இடம் பெற்றிருந்தேன். அன்று முதலமைச்சர் திரு பக்தவத்ஸலம் என்று நினைவு. காவல் துறையாளர் இரண்டு மூன்று பேரும் கூட நடந்தனர்.

சிறிது தூரம் சென்றதும் எதிர்திசையிலிருந்து வந்த ஒருவன் ஸ்ரீ பெரியவாளை நெருங்கினான். செருக்கு மிகுந்த நோக்கு. செருப்புகளைக் கழற்றாத பாதங்கள். அலட்சியமும் அவமரியாதையும் அன்வயமாகியிருந்தன அவனது தோற்றத்தில், தோரணையில்.

முனிபுங்கவர் மீது அவனது ஸ்பரிசம் படாது தடுக்க விரைந்த பக்தர்கள், கைகளால் அரண் கட்டினர். காவல் துறையாளரும் முன் வந்தனர். ஆனால் கருணாமூர்த்தி அவர்களை விலகச் சொல்லிவிட்டு கனிவோடு “உனக்கு என்ன வேண்டும்” என்று வினவினார்.

“எனக்கொண்ணும் வேண்டாம். சங்கராச்சாரியார் பெரியவர்ன்னு பேசிக்கிறாங்களே, அது நீங்கதானே?” என்று வினவினான்.

“அதிருக்கட்டும். உன்னோட பேரென்ன? இந்த விடியக்காலத்துலே எங்கே போயிண்டிருக்கே?” – சரணாகத வத்ஸலனின் பரிவான விசாரணை.

அவன் தன் பெயரைச் சொல்லிவிட்டு, “எனக்கு ஜோலியில்லையா? வேலைக்குப் போய்க்கினு இருக்கேன்” என்று அஸ்திரம் ஏவுவது போல் கூறினான். “நீங்கள் மடாதிபதிகள் சோம்பேறிகள். பயனுள்ள காரியம் ஏதும் செய்யாதவர்கள்” என்ற ஏளனம் – கண்டனம் – அவன் பதிலில் தொனித்தது.

“உனக்கு எங்கே வேலை?” தயாநிதியின் தொடர்ந்த விசாரணை.

“கிண்டியில்” என்று கூறியபின் “ஒண்ணு கேக்கறேன். இந்த இந்து மதத்தை யாரு உண்டாக்கினாங்க?” எனக் கேட்டான்; வினாவில் ஞானம் தேடும் விநயமோ அறிவு வேட்கையோ கடுகளவும் இல்லை.

ஸ்ரீபெரியவாளின் – ஞான மேருவின் – “தெரியாதப்பா” என்ற மறுமொழி ஏதோ வாதத்தில் வெற்றி கொண்ட இறுமாப்பை அவனுக்குத் தந்தது போலும்.

“தெரியாதுங்கிறீங்க; அப்புறம் சாத்திரம் அப்படிச் சொல்லுது, இப்படிச் சொல்லுது’ சிலைமேலே பாலை ஊத்து, நெருப்பிலே நெய்யை ஊத்துண்ணு சொல்றீங்களே? எப்படி, இதெல்லாம் நல்லதுக்குன்னு நம்பறது?” எனக் கணை தொடுத்தான்.

கொஞ்சமும் சலனமுறாமல் தயாபரன் “அதிருக்கட்டும், கிண்டிக்குப் போகணும்னியே, இந்த ரோடுல போனா கிண்டி வந்துடுமா?” என்று வீணை ஒலித் தண்குரலில் வினவினார்.

“அதானே நான் போய்ட்டிருக்கேன்” என்ற பதிலில் “இதென்ன அநாவசியக் கேள்வி” என்ற உதாசீனம்.

“ஆமா… இந்த ரோடு யாரு போட்டது?...” அந்தப் பாமரனின் இதய வீணையை மீட்ட முற்பட்டுவிட்டார் முனிபுங்கவர்.

“இது என்னோட பாட்டன், முப்பாட்டன், அவுங்களோட முப்பாட்டன் காலத்துலேருந்து இருக்கற ரோடு… இதை யார் போட்டிருந்தா என்ன? கிண்டிக்குப் போவுது; அம்புட்டுத்தானே வேணும்?”

“இது கிண்டிக்குப் போற ரோடுன்னு நிச்சயமாச் சொல்றியே”

“இதிலே என்னங்க சந்தேகம்? தினமுந்தான் போய்க்கினு இருக்கேனே… மேலாலும் உசரப் பாருங்க… எந்தெந்த சாலை எங்கே போவுதுன்னு கைகாட்டி போர்டு போட்டிருக்காங்களே சர்க்காரிலே”

மான் அன்பு வலையில் சிக்கிவிட்டது. ஆனால் இது சிறைப்படல் இல்லை; மீட்சி!

“நானும் உன்னைப் போலத்தாம்பா… இந்த ரோடு யாரு போட்டதுன்னு அலட்டிக்காம, மேலே இருக்கிற கைகாட்டி போர்டையும் நம்பி நீ போற மாதிரி, நான் இந்து மதம் யாரு உண்டாக்கியதுன்னு விசாரப்படாமே போறேன்… நீ இந்தக் கைகாட்டிய நம்பறே… அது கூட காத்துலே மழையிலே தெசை மாறலாம்; கீழே விழலாமே.. நானும் இந்த சாஸ்திரம், வேதம்ங்கிறதையெல்லாம் அப்படியே நம்பிப் போறேன். அதெல்லாம் என்னைவிட எவ்வளவோ பெரியவா, முப்பாட்டனில்ல ஆயிரம் ஆயிரம் வருஷங்களா நெலச்சிருக்கிறதை நம்பறேன்; நம்பச் சொல்றேன்” என்று பரிவு ததும்பும் குரலில் கூறிய தயாநிதி,
“சரி, உனக்கு ஜோலியிருக்கே…. என்னைப் போலயா?... ஜாக்ரதையாப் போய்ட்டு வாப்பா” என்று அபயக்கரம் உயர்த்தினார்.

அடுத்த வினாடி அவன் பாதரட்சைகளை உதறி விட்டு நெடுஞ்சாண்கிடையாக விழுந்து நமஸ்கரித்தான்.

“என்னை மன்னிச்சுடுங்க” என்று நாத்தழுதழுக்கக் கூறினான். கன்னங்களைக் கண்ணீர் நனைத்தது.

Those who came to scoff remained to pray (ஏளனம் செய்ய வந்தவர் பிரார்த்தித்து வணங்க அமர்ந்தனர்) என்ற ஆலிவர் கோல்ட் ஸ்மித்தின் (The village Preacher) (கிராம பூஜாரி) கவிதை வரிகள் நினைவுக்கு வந்தன.

அதன் பின் ஸ்ரீ பெரியவாளின் பல முகாம்களிலும் தரிசனத்துக்கு வந்தான் அந்தப் பரம பக்தன், ரஸவாதப் பரிணாமத்தால்!

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!













  Thanks to  FB :  Sundar Iyer   --  மஹாபெரியவா - (Sharing Message)

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.