Monday, April 20, 2015

காரணம் இன்றிக் காரியம் இல்லையே! மகாபெரியவாளின் ஒவ்வொரு அசைவுக்கும் ஒரு காரணம் உண்டு!

காரணம் இன்றிக் காரியம் இல்லையே! மகாபெரியவாளின் ஒவ்வொரு அசைவுக்கும் ஒரு காரணம் உண்டு!








மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்

by BaalHanuman

பெரியவாளின் மகிமையையும் ஞானத்தையும் விளக்கும்படியாக இன்னொரு சம்பவம்!

நடமாடும் தெய்வமாகத் திகழ்ந்த மகா பெரியவாளின் தீட்சண்யத்தை- தீர்க்கதரிசனத்தை விளக்கும் அந்த நிகழ்வை நம்மோடு பகிர்ந்துகொண்டவர் வைத்தியநாதன். சங்கர பக்த ஜன சபாவின் செயலாளரான இவர், தமது இளவயது முதற்கொண்டே மகா பெரியவாளின் அணுக்கத்தில் இருந்த அடியவர்.

இவரின் சிலிர்ப்பான அனுபவத்தை ஒரு விறுவிறுப்பான கதையாகவே இங்கே காண்போம்…

அது, மாசி மாதத்தின் வைகறைப் பொழுது. மார்கழியில் துவங்கிய குளிர் இன்னும் விட்டபாடில்லை. முகம் தெரியாத இருட்டை, தீவட்டி வெளிச்சத்துடன் ஊடறுத்தபடி, வெண்ணியாற்றின் வடகரை வழியே பயணித்துக்கொண்டிருந்தது அந்தப் பல்லக்கு ஊர்வலம்.

முதலில் பல்லக்கு, அதைப் பின்தொடர்ந்து அடியார் கூட்டம், அவர்களுக்கும் பின்னால் யானை, குதிரை, ஒட்டகப் பரிவாரங்கள் என நகர்ந்த அந்த ஊர்வலம்… மாயனூர், ஹரிச்சந்திரபுரம், திட்டச்சேரி தாண்டி நத்தம் என்ற இடத்தை அடைந்தபோது, பல்லக்கின் உள்ளே இருந்து, தண்டத்தால் ஒலியெழுப்பும் சத்தம்! சட்டென்று நின்றது ஊர்வலம்.

அந்த இடத்தில் ஒரு பிள்ளையார் கோயில். அங்கிருந்து இடமும் வலமுமாக இரண்டு பாதைகள் பிரிந்தன.

மெயின் ரோட்டில் இருந்து இடதுபுறமாகத் திரும்பி பயணிப்பதுதான் திட்டம். ஆனால், பல்லக்கின் உள்ளே இருந்து மீண்டும் தண்டத்தால் தட்டும் சத்தம் கேட்டது. அந்த சமிக்ஞை மூலம், ஊர்வலம் வலப்புறமாகத் திரும்ப உத்தரவாகி விட்டதைப் புரிந்துகொண்டார் மாலி என்ற அன்பர். ஊர்வலம் வலதுபுறமாகத் திருப்பப்பட்டது.

”இது, மண்மங்கலம் போற பாதை ஆச்சே…” – அடியார்களில் ஒருவர் சந்தேகம் எழுப்பினார்.

”இப்படிப் போகணும்னு உத்தரவாயிடுச்சுன்னா அதன்படி போயிடணும். நிச்சயமா இதுக்கு ஏதாச்சும் காரண-காரியம் இருக்கும்” – அடியவர் மாலி சொல்ல, அதன் பிறகு எவரிடம் இருந்தும் வேறு கேள்வி எழவில்லை.

மண்மங்கலம் கிராமம் இன்னும் முழுமையாக விழித்துக்கொள்ளவில்லை. அந்த வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த அம்மாள், திண்ணை மாடத்தில் அகல் விளக்கேற்றி வைத்தார். அப்படியே இன்னொரு விளக்கை பெருமாள் கோயில் வாசற்படியில் ஏற்றிவைத்துவிட்டு வந்து, தனது வீட்டுவாசலில் நீர் தெளித்துப் பெருக்க ஆரம்பித்தார். அதே நேரம்… தூரத்தில் ஏதோ பெரிய ஊர்வலம் வருகிற மாதிரி சத்தம் கேட்டு, நிமிர்ந்து பார்த்தவர் ஆச்சரியத்தில் மூழ்கிப் போனார். குதிரையும் யானையுமாக பல்லக்கு ஊர்வலம் ஊருக்குள் வந்துகொண்டிருப்பதைக் கண்டு அவர் கண்கள் வியப்பால் விரிந்தன.

மிகச் சரியாக அவரது வீட்டுவாசலை பல்லக்கு நெருங்கியதும், மீண்டும் உள்ளே தண்டத்தின் சத்தம். பல்லக்கு அங்கேயே நிறுத்தப்பட்டது. எத்தனையோ காப்பியங்களிலும் கதைகளிலும் சொல்லி இருக்கிறார்களே, ஆதவனைக் கண்டு தாமரை மலர்ந்ததாக… அப்படியொரு அற்புதத்தை அன்று நிஜமாகவே மண்மங்கலம் கிராமம் சந்தித்தது.

உடம்பாலும் வாக்காலும், மனத்தாலும் செயலாலும் தன்னை முழுவதுமாகப் பரம்பொருளுக்கு அர்ப்பணித்துக்கொண்ட அந்தத் தெய்வத் தாமரை, மெள்ள பல்லக்கின் திரையை விலக்கித் தன் திருமுகம் காட்ட… அதன்பின்னரே, இன்னும் தாமதிக்கக்கூடாது என்பதுபோல் சட்டென்று மேகத் திரையை விலக்கி, ஆதவனும் தன் ஒளிக்கிரணங்களை அந்தக் கிராமத்தின் மீது வீசி, தெய்வத் தாமரையின் திருவடிகளைத் தொட்டு வணங்கினான்.

ஆமாம்… அந்தக் கிராமம் செய்த புண்ணியம்… மகா பெரியவா என்ற தெய்வக் கமலம், தமது திருவடிகளை அந்த மண்ணில் பதித்துத் திருவருள் புரிந்தது.

வாசல் தெளித்துகொண்டிருந்த பெண்மணி, இப்படியொரு தெய்வீக தரிசனத்தைச் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. கண நேரம் ஸ்தம்பித்து நின்றவள், பிறகு சுதாரித்து உள்ளே ஓடி, கணவரிடம் விஷயத்தைச் சொன்னாள். அவரும் எழுந்து ஓடிச் சென்று, நான்கு சொம்பு தண்ணீரைத் தலைக்கு ஊற்றி அவசர அவசரமாகக் குளித்து முடித்து, விபூதி பூசிக்கொண்டு வருவதற்குள், நிறைகுடமும் பூரண ஆரத்தியும் தயார் செய்துவிட்டிருந்தாள் அந்த மாதரசி.

மகாபெரியவாளுக்கு ஆரத்தி எடுத்து, பாத பூஜை செய்து, அவரை வணங்கி வரவேற்றனர் அந்தத் தம்பதி. சில நிமிடங்களில்… வீட்டின் திண்ணையை அலம்பிச் சுத்தம் பண்ணி, கோலம் இட்டு வைக்க, அங்கே பெரியவா அமர்ந்துகொண்டார்.

இதற்குள் குதிரை, யானை பரிவாரங் களின் சத்தம் கேட்டு ஒட்டுமொத்த ஊரும் விழித்துக்கொண்டு அந்த வீட்டின் முன் திரண்டுவிட்டது. பழத்தட்டுக்களுடனும் மலர் மாலைகளுடனும் சாரை சாரையாக வந்து, மகாபெரியவாளை வணங்கினார்கள். யானை, ஒட்டகங்கள் எல்லாம் ஆற்றங்கரைப் பக்கம் ஓட்டிச் செல்லப்பட, மகாபெரியவாளுடன் வந்த அன்பர்கள் ஊருக்குள் தங்க வசதி செய்து தரப்பட்டது.

‘பெரியவா எப்படி இந்தப் பக்கம் வர நேர்ந்தது?’ என்று எல்லோரும் விசாரிக்கத் தொடங்கினார்கள். தகவல் எதுவும் சொல்லாமல் ஸ்ரீமடத்தில் இருந்து இப்படி திடுதிப்பென்று வரமாட்டார்களே என்று அவர்களுக்கு ஓர் ஐயம்!

”நெடுங்கரைப் பக்கம் திரும்பறதாகத்தான் திட்டம். ஆனா, பெரியவா இந்தப் பக்கம் வரச்சொல்லி உத்தரவு பண்ணினார். வந்துட்டோம். ஏதோ முக்கியமான காரணம் இருக்கும்!” என்று அவர்களுக்குப் பதில் சொன்னார் வைத்தியநாதன்.

மகா பெரியவா இரண்டு நாட்களாக மௌனம் அனுஷ்டிக்கிறார்; அவர் எப்போ வேணும்னாலும் மௌனத்தைக் கலைக்கலாம். ஊர்க்காரர்களுக்கு ஆதங்கம் என்னவென்றால்… மகாபெரியவா வருவது முன்னரே தெரிந்திருந்தால், ஊர் எல்லைக்கே சென்று அவரை பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றிருக்கலாமே என்பதுதான். ஆனால், தெய்வ சித்தம் என்ன என்று அவருக்குத்தானே தெரியும்!

ஸ்நானம், பூஜை எல்லாம் முடிந்து எல்லோருக்கும் ஆகாரம் ஆயிற்று. மகாபெரியவா பசும்பாலும் உலர் திராட்சையும் மட்டும் எடுத்துக்கொண்டார். மற்றவர்களுக்கு ஒவ்வொருத்தர் வீட்டிலும் இலை போட்டுப் பாயசம், அப்பளம் என்று உணவு பரிமாறினார்கள். அதற்குள் செய்தியை அறிந்து அக்கம்பக்கத்து கிராமங்களில் இருந்தும் ஜனங்கள் வந்து சேர்ந்தார்கள். மாசிமாதம் அறுவடை முடிந்த நேரம் என்பதால் மிராசுதாரர்கள், குடியானவர்கள், தொழிலாளர்கள் என்று எல்லோரும் வந்துவிட்டார்கள். தாமரைப் பூ, இளநீர், வாழைத்தார் என்று ஜனங்கள் தாங்கள்கொண்டுவந்ததை பெரியவா முன் சமர்ப்பித்து வணங்கினார்கள். வயதான ஓர் அம்மாள் தினக்கூலி நெல்லை மடியில் கட்டி எடுத்து வந்திருந்தாள். அதை அப்படியே பெரியவா முன்னே கொட்டி, அவரை நமஸ்காரம் பண்ணினாள். அப்போது அவள் முகத்தைப் பார்க்கணுமே… அப்படியொரு சந்தோஷம்! காணிக்கைகளால் அந்தத் திண்ணையே நிரம்பிவழிந்தது.

மகா பெரியவாளிடம் முறையிடுவதற்கு அந்த ஜனங்களுக்கெல்லாம் நிறைய விஷயங்கள் இருந்தன. கல்யாணம் ஆகலை, வீடு கட்ட முடியலை, பாகப்பிரிவினைல சிக்கல்… இப்படி ஒவ்வொருத்தரும் தங்களின் குறையை அவர் முன் சமர்ப்பித்தார்கள். ‘வடக்கே சமயச் சண்டைகள் ஓய்ந்தபாடில்லை. ரத்தம் ஆறா ஓடுறது. பெரியவாதான் அமைதி உண்டாக்கி வைக்கணும்.’ – இப்படியும் நிறையக் கோரிக்கைகள்.

மகா பெரியவா எதுவும் பேசவில்லை. எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார். கை தூக்கி, வந்தவர்கள் அனைவரையும் ஆசீர்வதித்தார். சிலருக்கு எலுமிச்சை, துளசி எனப் பிரசாதமும் கிடைத்தது. நேரம் நகர்ந்துகொண்டு இருந்தது. மகா பெரியவாளின் மௌனம் கலையவில்லை. திடீரென மாலியை அருகில் அழைத்து, சைகையால் பேசினார். கைகளால் லிங்கம் போன்றும், கோயில் கோபுரம் போன்றும் அபிநயித்துக் காட்டி, ‘எங்கே இருக்கிறது?’ என்பதுபோல் சைகையால் கேட்டார்.

அதை மாலி புரிந்துகொண்டார். கூட்டத்தைப் பார்த்து, ”இந்த ஊரில் சிவன் கோயில் எங்கே இருக்கு?” என்று கேட்டார்.

அன்பர் மாலியின் இந்தக் கேள்விக்கு, கூட்டத்தில் எவரிடம் இருந்தும் பதில் இல்லை.‘இந்த ஊர்ல சிவாலயம் எங்கே இருக்கு?”

அவர்களில் பழுத்த பழமான ஒரு முதியவர் மட்டும், ‘இங்கே ஒரு பெருமாள் கோயில் இருக்கு. அதுபோக, மாரியம்மன் கோயிலும் அய்யனார் கோயிலும் உண்டு. ஊர் எல்லையில் ஒரு பிள்ளையார் கோயில் இருக்கு. அவ்வளவுதான். மத்தபடி இங்கே சிவன் கோயில் எதுவும் இருக்கிறதா தெரியலையே?” என்றார். 90 வயது மதிக்கத்தக்க அந்தப் பெரியவருக்கே சிவாலயம் குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை என்றால், மற்றவர்களுக்குத் தெரிந்திருக்க வழி இல்லையே!

மகா பெரியவா மறுபடியும் ஏதோ சைகையால் கேட்டார்… ‘மேல் கோடியில பெருமாள் கோயில் இருந்தா, கீழ்க் கோடியில சிவன் கோயில் இருந்திருக்கணுமே?”

நிச்சயம் இருந்திருக்கும். ஆனால், தற்போது அங்கே சிவாலயம் இல்லை. முன்னொரு காலத்தில் இருந்ததா என்றால், அதுகுறித்தும் அந்த ஊர்க்காரர்களுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. அனைவரும் மௌனமாக இருந்தார்கள்.

அந்த நேரத்தில் ஓர் இஸ்லாமிய தம்பதி அங்கே வந்தனர். தன்னை லத்தீஃப் பாய் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த இஸ்லாமிய அன்பர், தன் மனைவியின் பெயர் மெகருன்னிசா என்றும் தெரிவித்தார். தாம் கொண்டு வந்திருந்த இரண்டு சீப்பு பேயன் பழங்களையும், ரோஜாப்பூக்களையும் மகாபெரியவா முன் சமர்ப்பித்தார்.

அவர்களை தலை முதல் பாதம் வரை ஏற இறங்கப் பார்த்தது நடமாடும் தெய்வம். கருணை மிகுந்த அந்தப் பார்வையில் மெய்ம்மறந்து போனார்கள் அந்த இஸ்லாமிய தம்பதியர். ஒருவாறு சுதாரித்துக்கொண்டு, சிலிர்ப்பான அந்தத் தருணத்தில் இருந்து மீண்டு, லத்தீஃப் பாய் பேசத் தொடங்கினார். அற்புதமான ஒரு தகவலை விவரித்தது அவரது பேச்சு.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னால், அங்கே சிவன் கோயில் ஒன்று இருந்திருக்கிறது. காலமாற்றத்தில் கோயில் சிதிலமாகி, மண்ணுக்குள் புதையுண்டு போனது. கோயில் இருந்த இடமும் பலரால் ஆக்கிரமிக்கப்பட்டு, பலப் பல கைகள் மாறி, இப்போது லத்தீஃப் பாயின் வசம் இருக்கிறது.

‘எங்க வாப்பா பள்ளிவாசல் நிலங்களைக் கவனிச்சுக்கும்போது, கூடவே கோயில் நிலங்களையும் குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்தாக. ஒரு மரக்கால்கூட குறையாம அளந்து கொடுப்பாக. ‘சிவன் சொத்து குலம் நாசம்’னு அவுகளுக்கு இருந்த அதே நேர்மையையும், நல்ல எண்ணத்தையும், புத்தியையும் எனக்கும் கொடுத்திருக்கான் இறைவன். ஆனாலும் என்ன… எனக்குப் பொறந்த ஒரு பெண் பிள்ளையும் மன வளர்ச்சி இல்லாம இருந்து, பத்து வருஷத்துக்கு முன்னாடி இறந்தும் போச்சு.

சரி… நாம அறிந்தோ அறியாமலோ பாவம் செஞ்சிருக்கோம்போல; அதனால்தான் அல்லா நமக்கு இப்படியொரு தண்டனையைக் கொடுத்திருக்காருன்னு சமாதானம் பண்ணிக்கிட்டோம். காலமும் அப்படியும் இப்படியுமா ஓடிப் போயிடுச்சு. நேத்திக்கு கொல்லைப்பக்கம் மண்ல வேலை செஞ்சுட்டிருந்தேன். அப்ப… மண்வெட்டி ஏதோ கல்லுல பட்ட மாதிரி ‘ணங்’குனு ஓசை கேட்டுச்சு. கவனமா மண்ணை விலக்கிப் பார்த்தால்… பெரிய சிவலிங்கம்! ராத்திரி முழுக்க உறக்கம் வரல்லே சாமி! ‘அல்லா… இப்ப என்ன பண்றது!’ன்னு புரியாம, விசனத்தோட உட்கார்ந்திட்டிருந்தோம். விடிஞ்சதும் தான், சாமி இங்கே வந்திருக்கிறதா பக்கத்துல இருந்த ஜனங்க பேசிக்கிட்டாங்க. உடனே இங்கே ஓடி வந்துட்டோம். இதுக்குமேல நான் என்ன செய்யணும்னு சாமி தான் வழி காட்டணும்.

மனசார என் நிலத்தை எழுதித் தர்றேன். இதுக்காக எனக்கு பணம், காசு எதுவும் வேணாம். முன்னே இருந்த மாதிரியே அங்கே சிவன் கோயில் கட்டிக்கலாம். ஊர் ஜனங்களுக்கு அது பயன்பட்டுதுன்னா, அதனால ஊர் ஜனங்க சந்தோஷப்படுவாங்கன்னா, அதுவே அல்லாவையும் சந்தோஷப்படுத்தும்!” என்று நெகிழ்ச்சியோடு, கண்ணீர் மல்கப் பேசி முடித்தவர், அப்படியே இன்னொரு காரியத்தையும் செய்தார்.

இந்தாங்க, கோயில் கட்ட எங்களோட காணிக்கையா நூத்தியொரு ரூபாய். முதல் வரவா இதை வாங்கிக்குங்க!’ என்று வெற்றிலை பாக்குத் தட்டில் வைத்துக் கொடுத்தார். அங்கிருந்த அனைவருக்கும் உடம்பு சிலிர்த்துப் போட்டது.

அதுவரை மௌனமாக எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்தமகா பெரியவா, புன்னகையோடு சைகையால் அந்த இஸ்லாமிய அன்பரை ஏதோ கேட்டார். அது அவருக்குப் புரியாமல் போகவே, ஒரு சிலேட்டும் பலப்பமும் கொண்டு வந்து மகாபெரியவாளிடம் தந்தார்கள். அவர் சிலேட்டில் எழுதிக் காண்பித்தார்… ‘மார்க்கக் கடமையை முடித்துவிட்டீர்களா?’ என்று.

படித்துப் பார்த்த இஸ்லாமிய அன்பர், ”இன்னும் இல்லே சாமி! அதுக்கான பண வசதியை அல்லா இன்னும் எங்களுக்குக் கொடுக்கலை. எத்தனையோ வருஷம் முயற்சி பண்ணியும் மக்கா- மதீனா போகும் பாக்கியம் இன்னும் வாய்க்கலை” என்றார் கண்ணீர் மல்க.

உடனே பெரியவா, வைத்தியநாதன் நின்றிருந்த பக்கமாகத் திரும்பினார். ”இத்தனை உசத்தியான மனுஷர் நிலத்தைத் தரேன்கிறார். அவாளுக்கு நாம எந்த ஒத்தாசையும் செய்ய வேண்டாமா?” என சைகையால் கேட்டார். தொடர்ந்து, என்ன செய்ய வேண்டும் என்பதையும் சைகையாலேயே உத்தரவு பிறப்பித்தார். பெரியவாளின் விருப்பத்தை அப்படியே கூட்டத்தாரிடம் எடுத்துச் சொன்னார் வைத்தியநாதன்.

அவ்வளவுதான்… ஒட்டுமொத்த ஊரும் சேர்ந்து ஒரே குரலில் ஒப்புக்கொண்டது… ”அவங்க புனித யாத்திரை போய்வர ஆகற செலவு மொத்தமும் நம்மளோடது!”

அதைக் கேட்டு இஸ்லாமிய தம்பதிக்கு மனம்கொள்ளா மகிழ்ச்சி! அவர்களுக்கு மட்டுமில்லாமல், அங்கிருந்த எல்லோருக்குமாக, கை தூக்கி ஆசீர்வாதம் செய்தது மானுட தெய்வம்.

பிறகு, மெள்ள எழுந்த மகாபெரியவா, தூணில் சாத்தியிருந்த தண்டத்தை கையில் எடுத்துக்கொண்டார். அப்படியே நடந்து வந்து பல்லக்கில் ஏறி உட்கார்ந்துகொண்டார். மீண்டும் ஊர்க்காரர்களைப் பார்த்து ஒரு புன்னகை; கரம் உயர்த்தி ஆசீர்வாதம்!

பரிவாரங்கள் பின்தொடர, பல்லக்குப் புறப்பட்டது.

ஊர்வலத்துடன் வந்த அன்பர் மகாலிங்கம் சொன்னார்… ‘எனக்கு இப்பத்தான் தெரியுது… மகாபெரியவா ஏன் திடீர்னு இந்த ஊருக்கு வர முடிவு பண்ணினார்னு!”

காரணம் இன்றிக் காரியம் இல்லையே! மகாபெரியவாளின் ஒவ்வொரு அசைவுக்கும் ஒரு காரணம் உண்டு!

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!






Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

Namaskaram

Narayanan.R 

சங்கரனாவது... கிங்கரனாவது? -- மஹா பெரியவா





சங்கரனாவது...  கிங்கரனாவது?
(கார் ஓட்டின பெரியவா!?)

எழுதியவர்;பி.சுவாமிநாதன்.
தட்டச்சு;வரகூரான்.நாராயணன்.

[கட்டுரையில் சில சாராம்சங்கள்]
பெரிய கட்டுரையாய் இருந்ததால் சுருக்கிவிட்டேன்.

கும்பகோணத்தில் வசித்து வந்த திரு சதாசிவம்
ஒவ்வொருஅனுஷ தினத்தன்றும் காஞ்சியில்
பெரியவாள் இருக்கிறாரா என்று உறுதி செய்து கொண்டு
தன் பயணத்தை துவங்கி விடுவார்.வேறு எங்கேனும்
வெளியூர்களில் முகாமிட்டிருந்தால் அப்போது
பயணிக்கமாட்டார்.அப்படி ஒரு அனுஷதினத்துக்கு
முதல் நாள் மாலை.....

பழங்கள்.கல்கண்டு வாங்கப் போனவருக்கு
ஒரு சின்ன அதிர்ச்சி.ஒரு கடையும் காணவில்லை
இவரின் முகத்தைப் பார்த்த கீரை வியாபாரி
"என்ன சாமீ பையும் கையுமா கடைக்குப்
பொறப்படறயா..மெட்ராஸ்ல ஏதோ அரசியல்
பிரச்னையாம்.ஒரு கட்சிக்காரங்க கூட்டமாக
திரண்டு வந்து எல்லாக் கடைகளையும் மூடச்
சொல்லி உத்தரவு போட்டுட்டு போறாங்க.

"அட ஈஸ்வரா வெளியூருக்கு பஸ்ஸெல்லாம் போறதோ!"
என்று ஒரு கேள்வி போட்டார். கடைகளயே பூட்ட
வெச்சவங்க பஸ்ஸுகளை போக விடுவாங்களா..

பிறகு மனைவியிடம் "என்ன ஜானகி இப்படி ஆயிடுத்து?
நாளைய அனுஷத்திற்கு காஞ்சிபுரம் போக முடியமானு
தெரியலயே..ஏன் இந்த சோதனை? என்று கலங்கியவர்
மகா ஸ்வாமிகளை மனதுக்குள் நினைத்துப் பிரார்த்தித்துக்
கொண்டார். ப்ராப்தம் இருந்தா அங்கே இருப்போம்
என்று சொல்லிவிட்டு வாசலில் இரு பக்கத்தையும்
பார்வையால் துழாவிக் கொண்டிருந்தார்.



வாசலில் நின்று கொண்டிருந்த சதாசிவத்தின் அருகே
வெள்ளை நிற அம்பாஸடர் கார் ஒன்று வேகமாக வந்து
நின்றது.பஞ்சகச்சம் அணிந்து தும்பைப்பூ மாதிரியான
வெள்ளை நிறத்தில் சட்டையுடன் விபூதி தரித்த ஒருவர்
காரிலிருந்து கீழே இறங்கினார்.இறங்கியதைப் பார்த்ததும்
சதாசிவ தம்பதிகளுக்கு ஒன்றும் புரியவில்லை.

"சார் நமஸ்காரம்...எம்பேரு சங்கரன்.உள்ளே இருக்கிறது
என் மனைவி.தஞ்சாவூர்லேருந்து வந்திண்டிருக்கோம்.
மனைவிக்கு திடீர்னு தலைவலி.அவளுக்கு நல்ல டிகிரி
காபி சாப்பிட்டா சரியாயிடும்.இன்னிக்குன்னு பார்த்தா
ஓட்டல் எதுவும் இல்லை.உங்களுக்கு சிரமம் இல்லேன்னா
இரண்டு பேருக்கும் ஸ்டாராங்கா காபி போட்டு கொடுக்க
முடியுமா?

"தாராளமா..உள்ளே வாங்கோ.காபி என்ன..டிபன் வேணும்னா
கூட பண்ணித் தர்றேன்" என்று கனிவாகச் சொன்னார்.
மணக்கும் காபியைக் குடித்து விட்டு வாயார வாழ்த்தினார்கள்

அப்போது சதாசிவம்,"இப்போது எதுவரைக்கும் பயணப்
பட்டுண்டுண்டிருக்கேள்?" ஒருவேளை சென்னை என்று
சொன்னால் தொற்றிக்கொண்டு போகலாமே என்ற
ஒரு நப்பாசை.

"நான் காஞ்சிபுரத்துல பெரியவாளைத் தரிசிக்கப்
போயிண்டிருக்கேன்.ஆறு மாசம் ஆஸ்திரேலியாவில்
இருந்துவிட்டு போனவாரம்தான் தஞ்சாவூர் வந்தேன்.
நாளைக்கு அனுஷமா இருக்கு.நீங்களும் வரேளா?
என்று அழைப்பு விடுத்தபோது சதாசிவம் தம்பதிகளுக்கு
அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

நள்ளிரவு வேளையில் கார் வந்து நிற்பதைப் பார்த்து
ஒடோடி வந்தார் மடத்து வாட்ச்மேன். சங்கரன் உடனே
அவர்களைப் பார்த்து "உங்களை மடத்து வாசலில்
இறக்கி விடுவதற்காகத்தான் இங்கே வந்தேன்.நண்பர்
பக்கத்துல இருக்கார்.அவா கிரஹத்துல தங்கிட்டு
நாளைக்குக் காத்தால உங்களை வந்து பார்க்கிறேன்.
என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் சங்கரன்.

காலை மடத்துக்கு அருகே உள்ள கடைகளில் வாங்கிய
பழங்கள்,கல்கண்டு,புஷ்பங்கள் போன்றவற்றை ஒரு
மூங்கில் தட்டில் எடுத்துக்கொண்டு பஞ்சகச்சம் மற்றும்
மடிசார் உடையுடன் பெரியவா தரிசனத்துக்காக
காத்துக் கொண்டிருந்தனர் சதசிவம் தம்பதிகள்
.சங்கரனை இடை இடையே தேடினார் நன்றி சொல்ல 
வேண்டும் என்ற அவாவில்.

ஸ்ரீமடத்தின் உதவியாளர் ஒருவர்,சதாசிவத்தின்
தோளைத் தொட்டு,"மாமா...கூப்பிட்டுண்டே இருக்கேன்..
அப்படி யாரைத் தேடறேள்? பெரியவா உங்களைக்
கூப்பிடறா....வாங்கோ,.எம்பின்னால்" என்று சொல்லிவிட்டு
விறுவிறுவென்று நடந்தார்.பின் தொடர்ந்தனர் தம்பதிகள்.

"வாப்பா சதாசிவம்..கும்பகோணத்துல உனக்கு பழம்
ஏதும் கிடைக்கலையோ? அதான் மடத்து வாசல்லயே
வாங்கிண்டு வந்திருக்கே போலிருக்கு" என்று கேட்டபோது
ஆடித்தான் போனார் சதாசிவம்."ஆமாம் பெரியவா..
அங்கே ஏதோ பிரச்னை.கடைகளும் இல்லை..
பஸ்ஸும் இல்லை..."

"அதான் சொகுசா ஒரு கார்ல நன்னா தூங்கிண்டே
மடத்துக்கு வந்து சேர்ந்துட்டியே...அப்புறம் என்ன...
இந்தா" என்று பிரசாதத்தை நீட்டவும் என்ன பதில்
சொல்வதென்று தெரியாமல் பிரசாதத்தை வாங்கிக்கொண்டு
கண்களில் ஒற்றிக் கொண்டார்.பிறகு "சங்கரன்னு ஒருத்தர்..
அவர்தான் தன்னோட கார்ல என்னைக் கூட்டிண்டு
வந்து நேத்து ராத்திரி இறக்கி விட்டுட்டுப் போனார்.
அவருக்குத்தான் நன்றி சொல்லணும்"என்றார் குழைவாக.

"மடத்துக்கு வரணும்னு நினைச்சே...வந்துட்டே......
இனிமே சங்கரனாவது,கிங்கரனாவது"என்று பெரும்
குரல் எடுத்து,சிரிக்க ஆரம்பித்தது அந்த பரபிரம்மம்.
சதாசிவத்துக்கு ஏதோ புரிவது போல் இருந்தது.ஆனால்
புரியாதது மாதிரியும் இருந்தது.

"பஸ் எல்லாம் ஓட ஆரம்பிச்சுடத்து...மடத்துல போஜனம்
பண்ணிட்டு,ஜாக்கிரதையா ஊர் போயிட்டு வா"என்று
ஆசிர்வதித்தார் பெரியவா.

நடந்து முடிந்த காட்சிகளின் பிரமிப்பில் இருந்து மீள
முடியாமல் வெளியே வந்த சதாசிவம்,நேற்று நள்ளிரவு
தான் மடத்து வாசலில் இறங்கியபோது பணியில்
இருந்த வாட்ச்மேனைக் கண்டு அருகில் அழைத்து
""ஏம்ப்பா..நேத்து ராத்திரி பன்னிரண்டு மணிக்கு
ஒரு வெள்ளை அம்பாஸடர் கார்ல நான் மடத்து
வாசல்ல இறங்கினபோது ஒரு பெரியவர் வண்டி
ஓட்டிண்டு வந்தாரே ...அவர் திரும்ப இன்னிக்கு
வந்தாரா?" என்று கேட்டார்.

"என்ன சாமீ.....நேத்து ராத்திரியா? எனக்கு டூட்டியே
இல்லியே சாமீ...கலையில்தானே நான் வந்திருக்கேன்"

சதாசிவம் மீண்டும் அதிர்ந்தார்,"இல்லேப்பா....நேத்து
ராத்திரி உன்னைப் பார்த்தேனே....இதே இடத்து
வாசல்ல..." என்றார்.புருவம் உயர்த்தி, "என்ன சாமீ
நீங்க...சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்றீங்க..
நேத்திக்கு ராத்திரி செக்யூரிட்டி டூட்டிக்கு ஆளே இங்கு
இல்ல சாமீ" என்று சொல்லிவிட்டுப் போனார்.

சதாசிவத்தின் கண்களில் ஜலம் தளும்பியது.
"அப்படி என்றால் ...நேற்று இரவு என்னையும்
என் மனைவியையும் கும்பகோணத்தில் இருந்து
இங்கே கூட்டிக்கொண்டு வந்த சங்கரன் யார்?"
என்று மனம் நெகிழ்ந்து அரற்றினார்.சர்வமும்
உணர்ந்த சங்கரனாக அவருக்கு மகா பெரியவா
ஒரு விநாடி காட்சி தந்து மறைந்தார்,

"பெரியவா,,," என்று பெரும் குரலெடுத்து அழைத்து
அந்த மடத்தின் வாசலில் ....மண் தரையில்.....
பெரியவா இருக்கும் திசையை நோக்கி
சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார் சதாசிவம்
கூடவே அவரது மனைவியும்..


Posted here by Narayanan Ramaswamy










Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

        காஞ்சி காமகோடி 
ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்






 1. உடம்பினால் நல்ல காரியம் செய்யவேண்டும். கோயிலுக்குப் போய் பிரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்ய வேண்டும். தண்டம் சமர்ப்பித்தல் என்று சமஸ்காரத்தைச் சொல்லுவார்கள். தடியைப்போல் விழுவது தான் அது. இந்த உடம்பு நமதன்று, அவருடையது என்று நினைத்து அவர் சந்நிதியில் போட்டு விட வேண்டும்.

2. இந்த ஜென்மத்திற்குப் பின்பும் உபயோகப்படக் கூடிய சில காரியங்கள் செய்யப்பட வேண்டியது அவசியம். விபூதி இட்டுக் கொள்ளுதல், ருத்ராக்ஷம் அணிதல், ச்ராத்தம் செய்தல் முதலிய காரியங்கள் நாம் எப்பொழுதும் சௌக்யமாக இருப்பதற்கு உதவுங்காரியங்கள்.

3. நாமாவும் ரூபமும் இல்லாத மதம் நமது மதம். பேர் ஏன் இல்லை? அடையாளம் ஏன் இல்லை? மற்ற மதங்களுக்கெல்லாம் இருக்கிறதே என்று ஒரு சமயம் யோசித்துப் பார்த்தேன். அப்புறம் எனக்கு நிரம்ப சந்தோஷமாக இருந்தது. பேரில்லாமல் இருப்பது ஒரு கௌரவம் என்பது ஏற்பட்டது.

4. நம்முடைய மதம் எவ்வளவோ யுகங்களாக நீடித்து வாழ்ந்து வருகிறது. நமக்குத் தெரியாமல் ஏதோ ஒன்று இதைத் தாங்கிக் கொண்டிருக்கிறது. எவ்வளவோ வித்யாசங்கள் இருந்தாலும் இந்தமதம் அழியாமல் நிற்கிறது. லோகம் புரண்டு போனாலும் நம்முடைய கடமைகளைச் செய்து கொண்டு பயமின்றி அன்புடன் சாமாண்ய தர்மங்களை நன்றாக ரக்ஷித்து விசேஷதர்மத்தைக் கூடியவரை ரக்ஷிக்க வேண்டும். அதற்குரிய சக்தியைப் பகவான் அளிப்பாராக.
            
5. மூன்று மூர்த்திகளுக்கும் மேலே அதீதராகப் பரமசிவன் இருக்கிறார். அவர் ப்ரம்மாவுக்கு அனுக்ரஹம் பண்ணுகிறார். காமேச்வரனாக அருள் புரிகிறார். பராசக்தி காமேச்வரியாக அனுக்ரஹிப்பாள். பரமேச்வரனுடைய அனுக்ரஹத்தால் ப்ரம்மா வேதங்களை அறிந்து கொள்கிறார். நான்கு வேதங்களையும் நான்கு முகத்தில் சொல்லிக் கொண்டு சிருஷ்டியைச் செய்து கொண்டிருக்கிறார்.


                  

6. வேதத்திலிருப்பதை எல்லோருக்கும் நன்றாக விளங்க வைப்பது பதினெட்டு புராணங்கள். பதினெட்டு உப புராணங்கள் வேறே இருக்கின்றன. பதினெட்டு புராணங்களும் சேர்ந்து நான்கு லட்சம் கிரந்தம். ஒரு கிரந்தம் என்பது 32 எழுத்துக்ள் கொண்டது. பதினெழு புராணங்கள் மூன்று லட்சம் கொண்டவை மிகுதியுள்ள ஒரு லட்ச கிரந்தம் ஸ்காந்த புராணம். பரமசிவனைப் பற்றிச் சொல்பவை பத்து புராணங்கள், அவைகளுள் ஒன்றே லட்சம் கிரந்தம் உடையது.

7. பாபத்தை ஒரேக்ஷணத்தில் துவம்சம் பண்ணும் ஒரு வஸ்து உண்டு. இரண்டு எழுத்துக்களாலான பெயர் அது. வேதங்களின் ஜீவரத்னம் அதுவே. கோயிலில் மஹாலிங்கம் போலவும் தேகத்தில் உயிர் போலவும் அது வேதங்களின் மத்தியில் இருக்கிறது. (சிவ என்ற இரண்டு எழுத்துக்களே அது) அதை ஒருதரம் சொன்னால் போதும். வேறு ஒரு காரியத்துக்கு நடுவிலும் சொல்லலாம். சொன்னால் அந்த க்ஷணத்திலேயே பாபத்தைப் போக்கிவிடும்.

8. வேதங்களுள் யஜுர் வேதம் முக்கியமானது. அதற்குள் அதன் மத்திய பாகமாகிய நாலாவது காண்டம் முக்கியமானது. அதற்குள்ளும் மத்திய பாகமான நாலாவது ப்ரச்னம் முக்கிய மானது. அதுதான் ஸ்ரீருத்ரம். அதற்குள்ளும் ‘நம: சிவாய’ என்ற பஞ்சாக்ஷர வாக்கியம் மத்தியில் இருக்கிறது. அதன் மத்தியில் ‘சிவ’ என்ற இரண்டு அக்ஷரங்கள் அடங்கியுள்ளன. இதையே ஜீவரத்னம் என்று பெரியோர்கள் சொல்லுவார்கள். இந்தஅபிப்பிராயத்தை அப்பய்ய தீக்ஷிதர் ப்ரம்மதர்க்க ஸ்தவத்தில் சொல்லியிருக்கிறார்கள். அந்த ப்ரம்மம் சிவஸ்வரூபம் என்று தெரிகிறது.

9. அப்படிப்பட்ட ஸ்வரூபத்தை ஆராதிப்பதற்கு அடையாளமாகச் சிவபக்தர்கள் எல்லோரும் ஐந்து வித காரியங்களைச் செய்து கொண்டிருக்க வேண்டும். அவைகளாவன: (1) விபூதி தரித்தல், (2) ருத்ராக்ஷம் அணிதல், (3) பஞ்சாக்ஷர மந்திரத்தை ஜபம் செய்தல், பஞ்சாக்ஷர மந்திரம் உபதேசமாகாதவர்கள் ‘சிவ’ என்ற பதத்தை ஜபம் செய்தல், (4) வில்வ தளத்தால் பரமேச்வரனைப் பூசித்தல், (5) இருதயத்தில் சதா சிவத்யானம் செய்தல் இவைகள் ஒவ்வொன்றும் ஈச்வரனுக்கு விசேஷப்ரீதியைக் கொடுக்கக் கூடியது. 
(குறிப்பு: பஞ்சாக்ஷர மந்திரத்தை உபதேச பெற்று ஜபம் செய்தல் சிறப்பு. எனினும் உபதேசம் பெறாதவரும் இம்மந்திரத்தைத் தாராளம் சொல்லலாம். கொல்வாரேனும் குணம் பல நன்மைகள் இல்லாரேனும் இயம்புவராயிடின் எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால் நல்லார் நாமம் நமச்சிவாயவே - சம்பந்தர்.)

10. பரமேச்வரனுடைய கீர்த்தியை நாம் வாக்கினால் சொல்லுவதனாலும் கேட்பதனாலும் பவித்திரர்களாக ஆகிறோம். அவருடைய ஆக்ஞையை யாரும் மீறமுடியாது. அகம்பாவமாக இருக்கும்போது அவர் சிக்ஷிக்கிறார். குழந்தைகள் ஏதாவது தப்பு செய்தால் நாம் அடிக்கிறோம். அதுபோல பரமேச்வரன் தேவதைகளை சிக்ஷித்தார். காளகூடவிஷம் பாற்கடலில் உண்டானபொழுது அதைச் சாப்பிட்டு ரக்ஷித்தார். சகல தேவதைகளும் பரமேச்வரனுடைய குழந்தைகள்.
                  
11. பரமேச்வரன் ஓங்காரம், ஸ்வரூப ப்ரம்மமும் ஓங்காரந்தான். அதனுடைய அர்த்தத்தை விசாரிக்கும் ஓர் உபநிஷத்தே தனியாக இருக்கிறது. அதற்கு மாண்டூக்யோபநிஷத் என்று பெயர். அதில் ‘சாந்தம் சிவம் அத்வைதம் சதுர்த்தம் மன்யந்தே’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. சிவஸ்வரூபம் தான் பரப்பிரம்மம். ப்ரதோஷ காலத்தில் ஈச்வர தரிசனம் செய்ய வேண்டும். ஈச்வரன் கோயிலில் ப்ரதோஷ காலத்தில் எல்லாத் தேவர்களும் வந்து ஈச்வர தரிசனம் செய்கிறார்கள்.

12. சாங்க்ய சூத்திரத்தில் மூன்று கண் உள்ளவன் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அமரமும் அப்படியே சொல்லுகிறது. லோகத்தில் ஈச்வரன் என்ற சப்தம் சிவனுக்கே வழங்கப்படுகிறது. அவன் மஹாபுருஷன், ப்ரம்ம சூத்திரத்தில் ‘சப்தாதேவப்ரமித’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஈசானன் என்னும் சப்தத்திற்கு எது அர்த்தமோ அதுதான் பரமேச்வர ஸ்வரூபம்.




13. நம்முடைய ஆசார்ய ஸ்வாமிகள் ப்ரச்நோத்தர ரத்ன மாலிகா என்ற க்ரந்தத்தில் ஒரு கேள்வி கேட்கிறார். ‘கோ ப்ராம்மணை ருபாஸ்ய:?’ ‘காயத்ரி அர்க்காக்னி கோசர: சம்பு:’ எந்த வஸ்து காயத்ரி, அக்னி, அர்க்கன் (சூரியன்) என்னும் மூன்றிலும் ப்ரகாசிக்கிறது? சிவன் தான். காயத்ரியின் பரமதாத்பர்யமாயிருப்பவர் அவரே. சூரியனிடத்தில் பிரகாசிப்பவரும் அவர் தான். ஸ்ரீருத்ரத்தில் பரமேச்வரன் அக்னி ஸ்வரூபியாக இருக்கிறார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. எனவேஇந்த மூன்றிலும் பரமேச்வரனை ஆராதிக்க வேண்டும்.

14. விவாஹ காலத்தில் அம்பாளை அவசியம் ஆராதிக்க வேண்டும். ருக்மணி ஸ்ரீகிருஷ்ணன் பர்த்தாவாக வரவேண்டுமென்று அம்பிகையை ஆராதித்தாள். அம்பிகையின் ஆராதனத்தால் பதிபக்தியும் குருபக்தியும் உண்டாகிறது. அதற்காகத்தான் ருக்மணி பூஜை செய்தாள்.




15. ஜகத்துக்குத் தாயாகவும் கருணையுடையவளாகவும் இருக்கும் பரதேவதையிடம் பக்தி இருக்க வேண்டும். எப்படி குழந்தைக்கு வேண்டியதைத் தாய் தருவாளோ அப்படி அம்பிகை லோகத்தில் வித்தை, செல்வம் முதலியவைகளை அடையச் செய்து பின்பு தானாகப் பழுத்துப் பரமானந்தத்தைப் பெறும்படி அனுக்ரஹம் செய்வாள்.





16. அம்பாளுக்கும் பரமேச்வரனுக்கும் உள்ள சம்பந்தம் எப்படிப்பட்டதென்றால் சரீர சரீரி பாவ சம்பந்தம். உடலும் உயிரும் எப்படியோ அப்படிதான் சரீர சரீரி பாவமும். இந்த உடலுக்கு உயிர் இருக்கிறது. இந்த உயிருக்கு இன்னோர் உயிர் ஆதாரமாக இருந்தால் அதைத்தான் உயிருக்கு உயிராய் இருப்பது என்று சொல்வர். பரமேச்வரன் உயிர் என்றால் அந்த உயிருக்கு உடம்பு எது? அம்பாள்தான். ‘சரீரம் த்வம் சம்போ:’ என்று ஆசார்யாள் அம்பாளைப் பார்த்துச் சொல்லுகிறார்.

17. சர்வஜகத்தும் பரமேச்வரனுடைய சரீரம். அதற்கு அப்படியே கவசம் மாதிரி இருப்பது அம்பிகை சரீரம். அப்படி இருக்கும்படியான நிலையில் பஞ்சபூதங்களுக்கும் மேலே மனசு என்று ஒன்று இருக்கிறதே அதுவும் நீதான். ஆகாசமும் நீதான். அக்னியும் காற்றும் ஜலமும் பூமியும் நீதான். நீயே எல்லா ஸ்வரூபமாகவும் ஆகியிருக்கிறாய் கொஞ்சம் கொஞ்சம் எங்களிடத்திலிருக்கும்படியான ஞானம், ஆனந்தம் எல்லாவற்றுக்கும் ஆதாரமாக சிதானந்த ஸ்வரூபமாக இருப்பவளும் நீதான். சமஸ்த ப்ரபஞ்சமும் உன்பரிணாமத்தைத் தவிர வேறு ஒன்றும் கிடையாது. சிவன் சரீரி, நீ அவனுக்குச் சரீரம், சிவயுவதி பாவம் உங்கள் இரண்டு பேரிடத்திலும் இருக்கிறது. இப்படி ஆசார்யாள் சௌந்தர்ய லஹரியில் சொல்லியிருக்கிறார்கள்.




18. தொடர்ச்சியாக வந்த தாரையை நாம் அறுத்துவிடக் கூடாது. ப்ராணாயாமத்தோடு சித்த ஏகாக்ரத்தோடு மந்த்ரலோப மில்லாமல் பரமேச்வர அர்ப்பணம் பண்ணி எல்லாவற்றையும் கர்மானுஷ்டானங்கள் பண்ணவேண்டும். பக்திச்ரத்தையோடு கர்மகலாபத்தோடு பண்ண வேண்டும். அர்த்தத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

19. காயத்ரி என்னும் வார்த்தைக்கு எவர்கள் தன்னை கானம் பண்ணுகிறார்களோ அவர்களை ரக்ஷிப்பது என்பது அர்த்தம். கானம் பண்ணுவது என்பது ப்ரேமையுடனும் பக்தியுடனும் உச்சரிப்பதாகும். யார் தன்னைப் பயபக்தியுடனும் ப்ரேமையுடனும்த உச்சாரணம் செய்கிறார்களோ அவர்களை காயத்ரி மந்திரம் ரக்ஷிக்கும்.






20. ப்ரதோஷ காலத்தில் எல்லோரும் சிவஸ்மரணம் பண்ண வேண்டும். மனதினாலும் வாக்கினாலும் ‘சிவ’ என்ற இரண்டு அக்ஷரங்களைத் தியானித்துச் சொல்ல வேண்டும். நித்யம் சந்த்யாகாலம் ப்ரதோஷ காலமாகும். த்ரயோதசி சந்த்யா காலத்தில் இருக்கிறது மஹாபிரதோஷ காலமாகும். நித்யமும் சாயங்காலத்தில் ஐந்து நிமிஷமாவது சிவ ஸ்மரணை பண்ணிக்கொண்டு வர எல்லோரும் சங்கல்பம் செய்து கொள்ளவேண்டும். ஆயுள் பர்யந்தம் செய்வதாக சங்கல்பம் பண்ணிக் கொண்டு மனதினால் ஸ்மரணம் பண்ணிக்கொண்டுவாக்கினால் சிவநாமாவைச் சொல்ல வேண்டும்.









Courtesy : POSTED IN FACEBOOK BY MAHAPERIYAVA BHAKTHAS

 Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos edited by self.(Narayanan Ramaswamy)

திருப்பதி பற்றிய அரிய தகவல்கள்!

              திருப்பதி பற்றிய அரிய தகவல்கள்!




  
திருப்பதி பற்றிய அரிய தகவல்கள்!

தெய்வச் சிலைகள் பொதுவாக கருங்கல்லில் செதுக்கப்பட்டிருக்கும். எங்காவது ஒரிடத்திலாவது சிற்பியின் உளி பட்ட இடம் தெரியும். ஆனால், இப்படி எவ்விதமான அடையாளத்தையும் வெங்கடாஜபதி சிலையில் காணமுடியாது. அது மட்டுமல்ல! சிலையில் வடிக்கப் பட்டுள்ள நெற்றிச் சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் பாலீஷ் போட்ட நகைபோல பளபளப்பாக மின்னுகின்றன.

* திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். இருந்தாலும், அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்யும் போதும், பெருமாளுக்கு வியர்த்துவிடும். பீதாம்பரத்தால் அந்த வியர்வையை ஒற்றி எடுப்பார்கள். ஏனெனில், ஏழுமலையான் சிலை எப்போதும் 110 டிகிரி பாரன்ஹுட் வெப்பத்திலேயே இருக்கும் இது ஒரு அதிசயம் தானே! ஒவ்வொரு வியாழக் கிழமையும், ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்வதற்கு முன்னதாக நகைகளைக் களைவர். அப்போது ஏழுமலையானின் ஆபரணங்கள் சூடாகக் கொதிப்பதை உணர்கின்றனர்.

* இங்குள்ள மடைப்பள்ளி மிகவும் பெரியது. இங்கு லட்டு, பொங்கல், தயிர்சாதம், புளிச்சாதம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், பாயாசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி ஆகியவை தினமும் தயாராகின்றன. இதில் லட்டு முதலிடம் பெற்று விளங்குகிறது.

* ஏழுமலையானுக்கு ஒருபுதிய மண்சட்டியிலேயே பிரசாதம் படைப்பர். தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்யமும், கர்ப்பகிரகத்திற்கு முன்னுள்ளகுலசேகரப்படியைத் தாண்டுவதில்லை. இந்த மண்சட்டியும், தயிர்சாதமும் பிரசாதமாக கிடைப்பதை வாழ்வில் மிகப்பெரிய பாக்கியமாகப் பக்தர்கள் கருதுகின்றனர்.

* பெருமாளுக்கு உடுப்பு மிகவும் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகிறது. ஒரு முழம் நீளமும், ஆறு கிலோ எடையும் கொண்ட பட்டுப்புடவை பீதாம்பரமே இவருக்குரிய ஆடையாகத் திகழ்கிறது. இதை பெருமாளுக்கு சாத்த அலுவலகத்தில் 12 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த ஆடைக்கு மேல்சாத்து வஸ்திரம் என்று பெயர். வெள்ளியன்று மட்டுமே இதை அணிவிக்க முடியும். பணம் செலுத்தியவர்கள் வஸ்திரம் சாத்த 3 வருடங்கள் காத்திருக்க வேண்டும்.


* உள்சாத்து வஸ்திரம் என்ற ஆடையையும் பெருமாளுக்கு அணிவிப்பர். இதற்குரிய கட்டணம் 20 ஆயிரம் ரூபாய். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சாத்துவதற்கு அனுமதிக்கிறார்கள். பணம் செலுத்தியபின் இதை அணிவிக்க 10 வருடங்கள் காத்திருக்கவேண்டும்.

* பக்தர்கள் சமர்ப்பிக்கும் வஸ்திரங்கள் தவிர, அரசாங்கம் சமர்ப்பிக்கும் வஸ்திரங்களை ஆண்டுக்கு இரண்டு முறை பெருமாளுக்கு அணிவிக்கின்றனர்.

* ஏழுமலையானின் அபிஷேகத்திற்கு எங்கிருந்து பொருட்கள் வருகிறது தெரியுமா? 

ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்தில் இருந்து கஸ்தூரி, சீனாவில் இருந்து புனுகு, பாரீசில் இருந்து வாசனைத் திரவியங்கள் வருகின்றன. ஒரு தங்கத் தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படும். 51 வட்டில் பால் அபிஷேகம் செய்தபின், கஸ்தூரியும், புனுகும் சாத்துவர்.தினமும் காலை 4.30- 5.30 மணிக்குள் அபிஷேகம் நடக்கும். அபிஷேகத்திற்கு ஆகும் செலவு ஒரு லட்சம். பணம் செலுத்தியவர்கள் 3 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும்.

* பெருமாளுக்குரிய ரோஜாப்பூக்கள் ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து விமானத்தில் கொண்டுவரப்படுகின்றன. ஒரு ரோஜாப்பூவின் விலை ரூ.80. பக்தர்களின் செலவிலேயே இந்தப் பூக்கள் வந்து சேர்கின்றன.

* சீனாவில் இருந்து கற்பூரம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், லவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப்பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன.

* ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய். இவருடைய நகைகளை வைத்துக் கொள்ள இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை.

* ஏழுமலையான் சாத்தியிருக்கும் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை கொண்டது. இதை 3 அர்ச்சகர்கள் சேர்ந்து தான் சாத்தமுடியும். சூரிய கடாரியின் எடை 5 கிலோ. ஒற்றைக்கல் நீலம் மட்டும் 100 கோடி மதிப்பு கொண்டது. உலகிலேயே இதைப்போன்ற நீலக்கல் வேறு கிடையாது.

* பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள் பெருமாளுக்கு காணிக்கைகளைச் செலுத்தியுள்ளனர். ராஜேந்திரச்சோழன், கிருஷ்ண தேவராயர், அச்சுதராயர் ஆகியோருடைய திருப்பணிகள் கல்வெட்டு மற்றும் செப்பேடுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.

* மராட்டிய மன்னர் ராகோஜி போன்ஸ்லே மிகப்பெரிய எமரால்ட் பச்சைக்கல்லை பெருமாளுக்கு காணிக்கையாக்கியுள்ளார். இப்பதக்கம் இவருடைய பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலில் பலதிருப்பணிகள் செய்த கிருஷ்ணதேவராயர் தனது மனைவியுடன் நிற்கும் சிலை கோயிலில் உள்ளது. கோயிலுக்குள் வரிசையில் செல்லும் போது இதைக் காணலாம்.


* அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்வதற்கான வெள்ளி வெங்கடாஜபதி விக்ரகம் 966ம் ஆண்டில் செய்யப்பட்டதாகும். பல்லவ மன்னன் சக்திவிடங்கனின் மனைவி காடவன் பெருந்தேவி இந்த விக்ரகத்திற்குரிய நகைகள் தந்துள்ளார்.

* வெள்ளிக்கிழமைகளிலும், மார்கழி மாதத்திலும் பெருமாளுக்கு வில்வார்ச்சனை செய்யப்படுகிறது.

* மகா சிவராத்திரியில் ÷க்ஷத்ரபாலிகா என்ற உற்சவம் நடைபெறும். அன்று உற்சவர் வைர விபூதி நெற்றிப்பட்டை அணிந்து திருவீதியுலா எழுந்தருள்வார். தாளப்பாக்கம் அன்னமய்யா ஏழுமலையானையே பரப்பிரம்மமாகவும், சிவாம்சமாகவும், சக்தி அம்சமாகவும் பாடிய பாடல்கள் சிறப்பானவை. 

* அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தன்னுடைய மூன்றாவது கண்ணைத் திறக்கிறார் என்றொரு ஐதீகம் உள்ளது.

* திருமலை திருப்பதி கோயில் ஸ்தலவிருட்சம் புளியமரம்.

* சாத்வீக கோலத்தில் இருந்தாலும் தெய்வீக கோலங்களில் ஆயுதம் இடம் பெற்றிருக்கும். ஆனால், திருமலையில் ஏழுமலையான் எவ்விதமான ஆயுதமும் பிடிக்காமல் நிராயுதபாணியாக சேவை சாதிக்கிறார்.

* ஆங்கிலேயர்களில் சர்தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன், லெவெல்லியன் என்ற வீரர் ஆகியோர் பெருமாளின் பக்தர்களாக இருந்ததோடு பல நேர்த்திக்கடன்களைச் செலுத்தியுள்ளனர். இதில் இன்று வரை பெருமாளுக்கு மன்றோ தளிகை என்றொரு ஒரு நிவேதனம் ஆங்கிலேயர் பெயரால் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

* திருப்பதி அலமேல்மங்கைக்குரிய ஆடைகத்வால் என்னும் ஊரில் பருத்தியில் தயாரிக்கப்படுகிறது. செஞ்சு இனத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். தாயாரின் திருமேனியில் படும் இந்த ஆடையை நெய்யும் போது மூன்றுவேளை குளிப்பதும், மாமிசம் உண்ணாமல் இருப்பதும் ஆகிய நடைமுறைகளைத் தவறாமல் பின்பற்றுகின்றனர்.

* ஏழுமலையான் அபிஷேக நீர் குழாய் மூலம் இங்குள்ள புஷ்கரணியிலேயே (கோயிலை ஒட்டிய தெப்பக்குளம்) மீண்டும் கலக்கிறது. ஏழுமலையானின் திருமேனியில் பட்டதால் அந்நீரின் புனிதத்தன்மையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

* 1180 கல்வெட்டுகள் இங்கு உள்ளன. இதில் 1130 கல்வெட்டுகள் தமிழ் மொழியிலும், 50 கல்வெட்டுகள் தெலுங்கு மற்றும் கன்னடமொழியிலும் அமைந்துள்ளன.




[இந்த தகவல்கள் திருமலை திருப்பதி கோயில் ஏடுகளில் இருந்து எடுக்கப்பட்டவை. தொகுப்பு: டாக்டர். பி. உமேஷ் சந்தர் பால்]



Courtesy :   Facebook post  :   Hariharan

Thanks for  Lord Venkateswara bhaktas for the beautiful photos and videos by channel 18  posted and edited by self.