Tuesday, June 21, 2016

மகாத்மாகாந்திஜி --இந்த காஞ்சி மட சங்கராச்சர்யாரை பார்க்கவேண்டும் என்ற உந்துதல் அவருள்







தென்னிந்தியாவுக்கு 1927 பிற்பகுதியில் வந்தார். யாரோ சொல்லி கேள்விப்பட்டு வெகு ஆர்வமுடன் இந்த காஞ்சி மட சங்கராச்சர்யாரை பார்க்கவேண்டும் என்ற உந்துதல் அவருள் ஏற்பட்டது. விசாரித்ததில் அப்போது விஜய யாத்ரையில் பரமாச்சர்யார் கேரளாவில் நெல்லிச்செரி என்கிற ஊரில் தங்கியிருக்கிறார் என்று அறிந்தார்.


மகாத்மாகாந்திஜி பாலகாட்டில் நெல்லிச்செரி சென்றநாள் 15.10.1927.
''இங்கே காஞ்சி பரமாச்சார்யர் எங்கே தங்கியிருக்கிறார்?''
''பாபுஜி அவர் அதோ அந்த மாட்டுத் தொழுவத்தில் தான் வாசம் பண்ணுகிறார்''
''மாட்டுத் தொழுவத்திலா? ஜகத் குருவா?''
''அவர் எங்கும் இது போன்ற இடத்தில் தான் தங்குகிற சந்நியாசி''
பசுமாட்டுத் தொழுவத்தில் வாசலில் வந்து நின்ற மகாத்மாவை பரமாச்சாரியார் வரவேற்றார். காந்திக்கு இது ஒரு புது அனுபவம். கதரில் நெய்த, காவி உடையில், ஆதி சங்கரரின் வாரிசாக, மாலை வெயிலில் முகம் பொன்னிறமாக ஜொலிக்க புன்னகை அணிந்து நின்ற சிறிய உருவம் காந்தியை ஒரு கலக்கு கலக்கியது. உருகிப்போய் விட்டார். இரு கரங்களும் தானாகவே உயர்ந்தன. சேர்ந்தன. அவற்றின் பக்தி த்வனி அலாதியாக வெளிப்பட்டது, பேச்சின்றி. பேச்சுக்கு அப்பாற்பட்ட ஒரு ஆனந்தானுபவம் அவருக்கு.
பரமாசார்யருக்கோ, இந்த நாடு செய்த புண்யத்தால் தோன்றி, வெகு எளிமையின் சின்னமாக, சத்யஸ்வரூபமாக நாட்டின் சுதந்திர விழிப்பின் தலைவன், இந்த மாபெரும் தேசத்தில் ஒரு ஏழை விவசாயியின் கோலத்தைக் கொண்டவரைச் சந்தித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.


மகாத்மாவுக்கோ தெய்வீகத்தின், தெய்வத்தின், வேதகால உருவாக காட்சியளிக்கும் ஒரு பரமாச்சார்யரை சந்தித்ததில் ஆனந்தம்.
''தாங்கள் அமர வேண்டும்'' என்றார் ஆச்சார்யர்.
தனது மதிப்பையும் மரியாதையும் வணக்கத்தையும் காந்திஜி ஆச்சர்யருக்கு தலை குனிந்து மனப்பூர்வமாக அளித்தார். அவரும் பெற்றுக்கொண்டார். அவர் அருகிலேயே காந்திஜி தரையில் அமர்ந்தார்.
நிசப்தத்தில் பரிபூர்ண அமைதியில் இரு உயர்ந்த உள்ளங்கள் கலந்தன. ஒன்றின. சில நிமிஷ ஆன்ம விசாரத்திற்குப் பிறகு, சம்பாஷணை துவங்கியது.
''ஸம்ச்க்ரிதத்திலேயே பேசுவோமா?''என்றார் ஆசார்யர்.
''நீங்கள் ஸம்ச்க்ரிதத்திலேயே பேசுங்கள். நான் புரிந்துகொள்ள முடியும். நான் ஹிந்தியில் பதில் சொல்கிறேனே.'' என்றார் தேச பிதா.
''ஆஹா, அப்படியே பேசுவோமே. எனக்கும் அந்த பாஷையில் நீங்கள் பேசுவது புரிந்து கொள்ள முடியும்.''
மூன்றாம் மனிதர் ஒருவர் இல்லாமல் இரு மனித ரூப தெய்வங்களும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சம்பாஷித்தனர். இன்று நான் இதை எழுதும் வரை என்ன பேசினார்கள் இருவரும் என்று ஒருவருக்கும் தெரியாது.



காந்திஜியோடு உடன் வந்திருந்த ராஜாஜி வெளியே தான் நின்று கொண்டிருந்தார். மணியோ 6 ஆகப்போ கிறது. காந்திஜி இரவு உணவு அருந்தும் நேரம் அது. 6 மணிக்குப் பின் அவர் எந்த உணவும் அருந்த மாட்டாரே. ராஜாஜிக்கு கவலை. 6 மணிக்கு சில நிமிஷங்கள் முன்பு மாட்டுத் தொழுவத்திற்குள் நுழைந்தார். இருவரையும் வணங்கிவிட்டு
''பாபுஜி நீங்கள் உணவு அருந்தும் நேரம்'' என்று நினைவூட்டினார்.
''கைகளை உயர்த்தி, நிறுத்து என்ற சைகையில் காந்திஜி ராஜாஜியிடம் ''இந்த மகானோடு நான் அனுபவித்த சம்பாஷணையே எனது இன்றைய உணவு. உள்ளம் வயிறு இரண்டும் நிரம்பியிருக்கிறதே'' என்றார்,.
''சுவாமிஜி நான் விடைபெறுகிறேன் நன்றி''
''எனக்கும் ரொம்ப சந்தோஷம். இந்தாருங்கள். ஒரு பொன்னிற ஆரஞ்சு பழம் நீட்டினார் மஹா பெரியவர்.
''எனக்கு ஆரஞ்சு ரொம்ப பிடிக்கும்' மீண்டும் நன்றி'' என்று புன்னகையோடு பெற்றுக்கொண்டு சென்றார் காந்திஜி.
அன்று கோயம்பத்தூரில் ஒரு கூட்டம். காந்திஜி-மஹா பெரியவா என்ன பேசினார்கள் என்று நிறைய பேர் ஆவலாக கேட்டதற்கு தேச பிதா கூட்டத்திற்கு
''எனக்கு ஆன்ம திருப்தி கிடைத்த ஒரு சந்திப்பு. எனது எத்தனையோ கேள்விகளுக்கு விடை கிடைத்தது'' என்ற பதிலே கிடைத்தது.
பல வருஷங்களுக்கு அப்புறம், 1968ல் நவம்பர் மாதம் ஒரு விழாவில் பரமாச்ர்யசாரிடம் சிலர் நீங்கள் மகாத்மாவோடு பேசியது பற்றி சொல்லுங்கள் என்று கேட்டார்கள். அப்போது அவர் காந்திஜி பாலக்காடு வருவதற்கு சில நாட்கள் முன்பு கொல்லப்பட்ட ஆர்ய சமாஜ் துறவி சுவாமி ஸ்ரத்தானந்தாவைப் பற்றியும் பேசினோம். அப்போது காந்திஜி இத்தகைய சம்பவங்கள் எதிர்காலத்திலும் நேரிடலாம். கொலையாளிகள் மீது எனக்கு எக்காலத்திலும் வெறுப்போ,கோபமோ பகை உணர்ச்சியோ தோன்றாமல் அவர்களை அன்போடு அணைக்க எண்ணம் உருவாக வேண்டும் என்பது என் வேண்டுதல் சுவாமி. இதைபெற நான் முயற்சிப்பேன் '' என்று கூறினார்.
பரமாச்சார்யர் தொடர்ந்து இந்த 'பூலோகத்தில் இப்படி ஒரு அபூர்வமான '' பகைவனுக்கும் அருள்வதற்கு நெஞ்சம் வேண்டும். என்று நினைத்து அதை அடைந்து கடைப்பிடித்தவர் ஒருவர் அரிது '' என்றார்.


..

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !! 
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!



Thanks to Facebook : Sudha  Viswanathan