சன்னிதானத்தில் ஒரு விலைமாது
நன்றி: காஞ்சிமஹாபெரியவா பிளாக்
துறவு என்ற சொல்லுக்கு முழுப் பொருளாக வாழ்ந்து வரும் மஹாஸ்வாமிகள் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். ஊருக்கு வந்திருந்த அந்தப் புனிதர் இன்று ஒரு நாள் மட்டும் தான் அங்கிருப்பார் என்று கேள்விப்பட்ட பக்த கோடிகள் அவரது தரிசனத்திற்காக வெளியே காத்திருந்தார்கள். அந்த சமயத்தில் தான் அவளும் அங்கு வந்தாள். குனிந்த தலை நிமிராமல் வந்தவள் ஒதுக்குப்புறமாய் ஒரு மூலையில் உட்கார்ந்தாள். அது வரை பேரமைதியோடு இருந்த கூட்டத்தில் முணுமுணுப்புகள் ஆரம்பித்தன.
"இவள் எல்லாம் இங்கே வரலாமா?"
"என்ன தைரியம் பாரேன்"
"இந்த இடத்தையாவது சனியன் விட்டு வைக்கக் கூடாதா?"
"கலி முத்திடுச்சு. அதுக்கான அறிகுறி தான் இதெல்லாம்"
கூனிக் குறுகி உட்கார்ந்திருந்த அவள் காதுகளில் இந்த விமரிசனங்கள் விழாமல் இல்லை. தான் இந்த ஏச்சுகளுக்குப் பொருத்தமானவள் என்பதிலும் அவளுக்கு உடன்பாடு உண்டு. ஆனால் அந்த மகானைப் பற்றி நிறையவே கேள்விப்பட்டிருந்ததால் அவரைத் தன் வாழ்நாளில் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டும் என்ற பேராவலில் வந்திருக்கிறாள். அதுவரை தன்னை யாரும் அங்கிருந்து அப்புறப்படுத்தி விடக் கூடாதென சகல தெய்வங்களையும் வேண்டிக்கொண்டிருந்தாள்.
மஹாஸ்வாமிகளின் நிழல் என்று எல்லோராலும் கருதப்படும் சந்தானம் கூட்டத்தில் எழுந்த சலசலப்பைக் கவனித்தார். இது வரை அமைதி காத்த பக்தர்கள் மத்தியில் திடீரென எழுந்த இந்த சலசலப்பு ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்து விட்டதன் அறிகுறியென அவருக்குப் பட்டது. கூட்டத்தினரை அவர் கேள்விக்குறியோடு பார்க்க, ஒருவர் அவரருகே வந்து அவளைக் கை காட்டி விளக்கினார்.
"சிவ சிவா" சந்தானம் தன் காதுகளைப் பொத்திக் கொண்டார். 'மஹாஸ்வாமிகளின் சன்னிதானத்தில் ஒரு விபசாரியா, இது என்ன சோதனை?' அவளை எரித்து விடுவது போல் பார்த்தார். ஆனால் அவளோ குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருந்தாள்.
சந்தானத்தைப் பொருத்த வரை தெய்வம் கூட மஹாஸ்வாமிகளுக்கு அடுத்தபடி தான். எத்தனையோ போலிகளுக்கு மத்தியில் எந்த மாசும் தன்னை நெருங்க முடியாத நெருப்பாக வாழ்ந்து வரும் மஹாஸ்வாமிகள் முன் இது போன்ற அசுத்தங்கள் வருவதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. அவளை எப்படி வெளியே அனுப்புவது என்று அவர் யோசித்து முடிவுக்கு வரும் முன் மஹாஸ்வாமிகள் தியானம் முடிந்து வெளி ஹாலிற்கு வந்து விட்டார். பக்தர்கள் எழுந்து வரிசையானார்கள். அவளும் எழுந்து அந்த வரிசையின் கடைசியில் நின்றாள். சந்தானம் தீயில் நிற்பது போல் துடித்தார். எப்படியாவது அவளை உடனடியாக அனுப்பி விட வேண்டும் என்று தீர்மானித்து அவர் முதலடி எடுத்து வைத்த போது மஹாஸ்வாமிகள் தன் பார்வையாலேயே தடுத்து நிறுத்தினார். சந்தானம் வேறு வழியில்லாமல் தவித்தபடி நின்றார்.
பக்தர்கள் ஒவ்வொருவரும் அந்த மகானிடம் ஓரிரு வார்த்தைகள் பேசி, வணங்கி, பிரசாதம் வாங்கிக் கொண்டு நகர்ந்தார்கள். ஆனாலும் வெளியேறாமல் சிலர் தள்ளி நின்று வேடிக்கை பார்த்தார்கள். எதையும் தன் ஞான திருஷ்டியால் அறியும் சக்தி படைத்த அந்த மகான் அவளிடம் என்ன சொல்லப் போகிறார் என்றறிய அவர்களுக்கு ஆவல்.
கடைசியில் அவளும் மஹாஸ்வாமிகள் முன்பு வந்து நின்றாள். வந்ததில் இருந்து தலையை நிமிர்த்தாதவள் முதல் முறையாக தலையை நிமிர்த்தி அவரைப் பார்த்தாள். அவளைப் பற்றி அறியாதது ஒன்றுமில்லை என்று அவரது கண்கள் சொல்லின. ஆனாலும் அந்தக் கண்களில் கருணை சிறிதும் குறைந்திருக்கவில்லை. மற்றவர்களைப் போல வாய்விட்டுப் பேச அவளிடம் வார்த்தைகள் இருக்கவில்லை. கனத்த மனதுடன் அவர் முன் மண்டியிட்டு அழுதாள். ஓரிரு நிமிடங்கள் கழித்து தன்னை சுதாரித்துக் கொண்டு எழுந்தாள். அவர் கையிலிருந்து பிரசாதம் வாங்கிக் கொண்டு வேகமாய் அங்கிருந்து வெளியேறினாள்.
வேடிக்கை பார்த்தவர்களுக்கு மிகவும் சப்பென்றாகி விட்டது. " அவர் ஞானி. அவருக்கு எந்த வித்தியாசமுமில்லை. ஆனால் இவள் இந்தப் பாவத்தையும் சேர்த்து எந்த கங்கையில் கழுவுவாளோ" என்று தங்களுக்குள் பேசிக்கொண்டு கலைந்தார்கள்.
எல்லோரும் போகும் வரை காத்திருந்த சந்தானம் பின்பு மிகவும் வருத்தத்துடன் ஆரம்பித்தார். "ஸ்வாமி அவள்..."
"தெரியும் சந்தானம்"
"நீங்க மட்டும் தடுக்காமல் இருந்திருந்தால் நான் அவளை அப்போதே அனுப்பியிருப்பேன்"
"அறியாமையால் தவறும் பாவமும் செய்வது, அதன் பலன்களை அனுபவிப்பது, தன் செயல்களுக்காக வருந்துவது, பின்பு திருந்துவது என்று இந்த நான்கு கட்டங்களும் ஒவ்வொரு மனிதன் வாழ்க்கையிலும் உண்டு சந்தானம். இதில் நீயும் நானும் கூட விதிவிலக்கல்ல. தவறுகளின் அளவுகளில் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் தவறோ பாவமோ செய்யாத அந்தத் தனிப்பெரும் குணம் பரம்பொருள் ஒருவனுக்கே உண்டு. அந்தப் பரம்பொருள் கூட மனித அவதாரம் எடுத்த போது ஒரு சில தவறுகள் செய்து விட்டதாய் இதிகாசங்கள் சொல்கின்றன. அப்படி இருக்கும் போது சாதாரண மனிதர்கள் எம்மாத்திரம், சந்தானம்"
ஆனாலும் சந்தானத்திற்கு சமாதானம் ஆகவில்லை. "அவள் எப்படியோ இருந்து விட்டுப் போகட்டும் ஸ்வாமி. அவள் இங்கே வந்து இந்த இடத்தின் புனிதத்தை ஏன் கெடுக்க வேண்டும்"
மஹாஸ்வாமிகள் புன்னகைத்தார். "உனக்கு இங்கு வந்த மற்றவர்களின் சரித்திரம் தெரியாததால் நீ அவளை மட்டும் ஒருமைப்படுத்துகிறாய். இவளை விட அதிகம் பாவம் செய்தவர்களும் இங்கு வந்திருந்தார்கள். அவர்கள் எப்படியே இருந்தாலும் இங்கு அவர்களை இன்று வரவழைத்த ஆன்மீக சக்தி என்றாவது ஒரு நாள் எல்லாவற்றையும் உணர வைக்கும். திருத்தும். அதற்காக பிரார்த்திப்பதும், ஆசி வழங்குவதும் மட்டுமே நம் கடமை. விமரிசிப்பதும், தீர்ப்பு சொல்லவும் நாம் யார்?"
ஒப்புக்குத் தலையாட்டினாலும் சந்தானத்தின் மனதில் அவள் அங்கு வந்த விஷயம் நெருடலாகவே இருந்தது.
மறுநாள் காலை ஸ்வாமிகளை வழியனுப்ப நிறைய பக்தர்கள் வந்திருந்தனர். காரில் ஏறப் போன மஹாஸ்வாமிகளின் விழிகள் ஒரு கணம் ஓரிடத்தில் நிலைத்து நின்றன. சந்தானம் தன் பார்வையையும் அங்கு திருப்பினார். தலையை மொட்டை அடித்துக் கொண்டு, உடலில் சிறு ஆபரணமும் இல்லாமல், தூய வெள்ளை சேலையால் முக்காடு போட்டுக் கொண்டு ஒருத்தி நின்றிருந்தாள். உற்றுப் பார்த்த பின்பு தான் தெரிந்தது-அவள் நேற்று வந்தவள். இன்று அவள் தலை நிமிர்ந்திருந்தது. முகத்தில் அமைதியும் உறுதியும் தெரிந்தது. கை கூப்பி வணங்கி நின்றாள்.
"நேற்று வந்தவர்களில் யாரும் இவ்வளவு சீக்கிரம் மாறவில்லை, சந்தானம்" என்று புன்னகையுடன் சொல்லிய மஹாஸ்வாமிகள் கையை உயர்த்தி எல்லோருக்கும் ஆசிகள் வழங்கி விட்டு காரில் ஏறினார். கண்கள் கலங்க தன் இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி அவளிருந்த திக்கை நோக்கிக் கூப்பி விட்டு காரில் ஏறிய சந்தானம் "என்னை மன்னிச்சுடும்மா" என்று முணுமுணுத்தது மஹாஸ்வாமிகளுக்கு மட்டும் கேட்டது
No comments:
Post a Comment