Tuesday, May 5, 2015

வந்தாச்சு . நாளைக்கு மயிலாப்பூர் சித்திரகுள தெரு மடத்துல போய் போட்டுடுங்கோ..."










வந்தாச்சு . நாளைக்கு மயிலாப்பூர் சித்திரகுள
தெரு மடத்துல போய் போட்டுடுங்கோ..."

(நெஞ்சம் மறப்பதில்லை)

எஸ்.ராமசுப்பிரமணியன்

ஏப்ரல் 02,2014,தினமலர்



அது, 1965ம் ஆண்டு! சென்னை திருவல்லிக்கேணி ரங்கநாதன் தெருவில் வசித்துக் கொண்டிருந்தோம். நான், இந்து உயர்நிலைப்
பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். முழு ஆண்டுத்தேர்வு நடந்து கொண்டிருந்தது. அன்று ஞாயிற்றுக் கிழமை. மறுநாள் மதியம், "சயின்ஸ்' பரீட்சை. படிக்காமல் பிள்ளைகளோடு பம்பரம் விளையாடிக் கொண்டிருந்தேன்

வெளியே எங்கேயோ போயிருந்த அப்பா, திரும்பி வந்து கொண்டிருப்பதைக் கண்டதும் ஆட்டத்திலிருந்து அம்பேல் ஆகி, மின்னலாய் வீட்டுக்குள் நுழைந்து, விஞ்ஞான புத்தகத்தை பிரித்து அமர்ந்தேன். உள்ளே நுழைந்த அப்பா, "டேய் கிளம்புடா...'என்றார்.

என் வயிற்றில் பந்தாய் பயம் உருண்டது. 

அப்போதெல்லாம் அப்பாவுடனோ, அம்மாவுடனோ வெளியே செல்ல வேண்டுமென்றால், கதிகலங்கும். நடத்தித்தான் அழைத்து செல்வர்.
காரணம்: அப்பா செல்வாக்கோடு வீட்டில், "பெட்டி நிறைய பணம் வைத்துக் கொண்டு புழங்கியிருந்த போது நான் பிறந்திருக்கவில்லை. நான் பிறந்த பின், வீட்டில் பெட்டியே இருக்கவில்லை. 

சிந்தாதிரிப்பேட்டையில் இருந்தபோது, எழும்பூருக்கு கூட டாக்சியில் செல்லும் வழக்கமுடைய அப்பா, திருவல்லிக்கேணியில் இருந்து அடையாறுக்கும், மாம்பலத்திற்கும் கூட நடந்தே சென்று திரும்புவது உண்டு. அந்த நேரத்தில் பஸ் பயணம் என்பது, எங்களுக்கு பிரமிப்பூட்டும் விஷயம்
.
சாதாரண சாயாக்கடை வைத்து படிப்படியாய் முன்னேறி, ஸ்டார் ஓட்டல் வைத்தவர்கள் வரலாற்றை வாசித்து இருக்கிறேன். ஒன்றன் பின், ஒன்பது ஓட்டல்கள் வைத்தும் உருப்படாமல் ஓட்டாண்டியான, அப்பாவின் வரலாற்றை அம்மா சொல்லிக் கேட்டு இருக்கிறேன். அப்பாவின் ஓட்டல்களில், காசு கொடுத்து சாப்பிட்டு போனவர்களை விட, ஓசியில் சாப்பிட்டு போனவர்களே அதிகம்.

அப்பா, "டேய் கிளம்புடா...'என்றதும் புத்தகத்திலிருந்து பார்வையைத் திருப்பி, "எங்கே?' என்று தைரியமாக கேட்டுவிட்டேன். ஆனாலும், உதறலெடுத்துக் கொண்டுதான் இருந்தது. அப்பா என்னை உக்கிரப்பார்வை பார்த்தார். "போற எடம் தெரியலேன்னா வரமாட்டியோ?' என்று கோபமாகக் கேட்டார். அவரது பார்வையின் தகிப்பை தாங்க முடியாமல், "இல்லை... பரீட்சை... 
படிக்கணும்...'என்று இழுத்தேன். "நீ பரீட்சைக்கு படிச்சுண்டிருந்த லட்சணத்தை பார்த்துண்டுதானே வந்தேன். கிளம்புடான்னா...' என்று ஒரு அதட்டல் போட்டார்.

பேசாமல் சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்பினேன். நாற்பத்தைந்து நிமிட நடையில் நாங்கள் எழும்பூர் ஹால்ஸ் சாலையை எட்டி இருந்தோம். பேபி ஆஸ்பிடலுக்கு எதிரிலிருந்த, "மினர்வா டுடோரியல்ஸ்' வளாகத்துக்குள் நுழைந்த போதுதான், காஞ்சி மாமுனிவர், பெரியவர், பரமாச்சாரியர், ஜகத்குரு ஸ்ரீசந்திரகேகர சரஸ்வதி சுவாமிகள், அங்கு முகாமிட்டிருப்பது எனக்குத் தெரிய வந்தது.

என் உள்ளத்தில் உற்சாகம் பீறிட்டு பிரவகிக்க ஆரம்பித்தது. உற்சாகத்திற்கு காரணம் பெரியவாளை தரிசித்தால், அவரிடம், ஆசி பெற்றுக் கொள்வதோடு, அங்கேயே சாப்பாடும் சாப்பிட்டு விட்டுச் செல்லலாம். ஓட்டல் நடத்தி, வந்தவன் போனவனுக்கெல்லாம் ஓசியிலேயே சாப்பாடு போட்டு அனுப்பிய அப்பா , எனக்கு ஒருவேளை சாப்பாட்டையாவது திருப்தியாய் சாப்பிட வைப்போம் என்று, வியர்க்க விறுவிறுக்க, வெயிலில் நடத்தி அழைத்துச் சென்றதை இப்போது நினைத்தாலும் மனசு கனத்துப்போகிறது.

அப்பா தோளிலிருந்த துண்டை எடுத்துக் இடுப்புக்குக் கொடுத்தார். நானும் சட்டையை அவிழ்த்து இடுப்பில் சுற்றிக் கொண்டேன். 
அப்பாவும், நானும் சுவாமிகள் அருள் பாலித்துக்கொண்டிருந்த அறைக்குச் சென்று, தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினோம்.

பரமாச்சாரியார் அப்பாவை பார்த்தார். அடியேனையும் பார்த்தார். கண்களை மூடிக்கொண்டு, ஒரு நிமிடம் தியானித்தார்.
சன்னிதானத்தின் முன் கைக்கட்டி நின்றிருந்த போதிலும், சமையலறையிலிருந்து புறப்பட்டு காற்றில் கலந்து வீசிக் கொண்டிருந்த நறுமணம், என் நாசியை தாக்கி, வசீகரித்து அழைத்துக் கொண்டிருந்தது.

பெரியவாள் கண்களை திறந்து அப்பாவைப் பார்த்தார்."பிள்ளையாண்டனுக்கு இன்னும் பிரம்மோபதேசம் செய்யலியா?' என்று கேட்டார்.

"இன்னும் வேளை வரவில்லை...' என்றார் அப்பா தயக்கத்தோடு!

"வந்தாச்சு . நாளைக்கு மயிலாப்பூர் சித்திரகுள தெருமடத்துல போய் போட்டுடுங்கோ...' என்று திருவாய் திறந்து உத்தரவிட்டார். அப்பா என்னை அழைத்துக்கொண்டு, அடுத்த அறையிலிருந்த ஸ்ரீமடத்தின் மேனேஜரை அணுகினார்.

எனக்கு "உபநயனம் (பூணூல்) செய்து வைப்பது குறித்து அப்பா ஐந்தாண்டுதிட்டமே தயாரித்து வைத்திருந்தார். அப்பா இருந்த நிலையில், அவரது பிளானை ராத்திரி கனவில் மட்டுமே நிறைவேற்றி வைக்கமுடியும்! ஆனாலும், அப்பா, மேனேஜரிடம், தன் ஆதங்கத்தையும், பெரியவர்களின் ஆசியை ஏற்று, மறுநாள் பிரம்மோபதேசம் செய்து, தன் தன்மானம் தடுப்பதையும் எடுத்துரைத்தார். கூட நாளை நான் பரீட்சை எழுத வேண்டியிருப்பதையும் கூறினார். "பரீட்சை எப்போ?' என்று கேட்டார் 

மேனேஜர் என்னிடம். நான் மத்தியானம் இரண்டு மணிக்கு என்றேன், பெரியவா சொன்னா, அதுல விஷயம் இருக்கும். பையனைப் பரீட்சை எழுத வைக்க வேண்டியது என் பொறுப்பு. நீங்க வீணா விவாதம் பண்ணிண்டு இருக்காம, சாயரட்சை குடும்பத்தோட மடத்துக்கு வந்து சேர்ந்துடுங்கோ, என்று கண்டிப்பாக கூறிவிட்டார். அதற்கு மேல், அவரிடமும் எதுவும் பேச முடியவில்லை.

மறுநாள் திங்கட்கிழமை. அப்பா அம்மா நான் ஆகிய மூன்றே பேர்களோடு, நான்காம் பேருக்குத் தெரியாமல், மயிலாப்பூர் சித்திரைக் குளத்தெரு, சங்கர மடத்தில் பரமாச்சாரியாரின் அருளோடும், சகல வைதீக சடங்குகளோடும், எனக்கு பிரம்மோபதேசம் நடந்து முடிந்தது. மதியம் நான், பரீட்சைக்கு எழுத பள்ளிக்கூடம் போக மடத்திலிருந்து வாகனம் ஏற்பாடு செய்து தந்தனர்.

பரீட்சை எழுதி திரும்பி வந்த என்னையும், என்னோடு உபநயனம் நடந்த ஐந்து பேரையும், "புரசைவாக்கம் தர்மபிரகாஷ்' திருமண மண்டபத்தில் முகாமிட்டிருந்த பரமாச்சாரியாரிடம் அழைத்துச் சென்றனர்.

உடன் வந்திருந்த ஸ்ரீமடத்து சாஸ்திரிகள், "அபிவாதயே...' என்று துவங்கும் நமஸ்கார மந்திரம் சொல்லித்தர, நாங்கள் அறுவரும் அதைத் திருப்பிச் சொல்லி, சுவாமிகளை நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினோம்.

மந்திரத்தின் கடைசி வாரிசுகளான, "ராமசுப்ரமணிய சர்மா அஸ்மீபோஹோ' என்பதைச் சொல்லிவிட்டு, ஆறு பேருக்கும் நடுநாயகமாக நின்றிருந்த நான், எனக்கு மிகச் சரியாக எதிரிலிருந்த பரமாச்சாரியாரின் பாதங்களைத் தொட்டு வணங்கிவிட்டேன்.

பாதங்களில் ஸ்பரிசம் பட்டதும், பரமாச்சாரியாரின் தேகம் சட்டென்று சிலிர்த்தது. வணங்கி எழுந்த என் தலையில், "நறுக்கென்று ஒரு குட்டு விழுந்தது. நிமிர்ந்து பார்த்தேன்.......அப்பா! அப்பா என்னை குட்டியதை சுவாமிகள் பார்த்துவிட்டார். "குழந்தையை வையாதீங்கோ, தெரியாம தொட்டுடுத்து...' என்றபடி என்னை அழைத்து அருகே அமர்த்தி குட்டுப்பட்ட இடத்தில், தன் பட்டுக்கரங்களால் தொட்டுத் தடவி ஆசிர்வதித்து வழியனுப்பிவைத்தார். அடுத்த பதினைந்தாவது மாதம், அப்பா செத்துப்போனார். அப்பாவை தகனம் செய்துவிட்டு திரும்பிய அன்று, அம்மா என்னை அருகே அழைத்தார். என் மார்பில் தவழ்ந்து கொண்டிருந்த பூணூலை தொட்டுப் பார்த்தார். "உனக்கு பிரம்மோபதேசம் ' நடந்ததுக்கு மொதநாள் பெரியாவளைப் பார்க்க போய் இருந்தியே... அங்கே என்ன நடந்ததுன்னு சொல்லு...' என்றார். நான் நடந்த நிகழ்ச்சிகளை அப்படியே சொன்னேன்.

அப்பாவின் அத்தியாயம் அஸ்தமிக்கப் போறதுன்னு உனக்கும், எனக்கும் தாண்டா தெரியலை. பராமாச்சாரியரோட ஞானதிருஷ்டியில், ஒண்ணேகால் வருஷத்துக்கு முந்தியே தெரிஞ்சிருக்குடா...' என்று சொல்லி, அழ ஆரம்பித்தார்

நான் புரியாமல், அம்மாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். அம்மா அழுகையை நிறுத்திவிட்டு தொடர்ந்து சொன்னார்...

"வந்தாச்சு... வேளை வந்தாச்சுன்னு சொன்னார் இல்லையா? அதுக்கு என்ன அர்த்தம்ன்னு தெரியுமா? அப்பாவுக்கு போக வேண்டிய நேரம் வந்தாச்சு. உனக்கு கர்மம் செய்ய வேண்டிய வேளை வந்தாச்சுன்னு அர்த்தம்டா. அன்னிக்கு மட்டும் பெரியவா பிடிவாதமா உனக்கு, "பிரம்மோபதேசம்' செய்து வெக்கலேன்னா, உனக்கு உபநயனம் முறையா நடக்காமயே போயிருக்கும். இன்னிக்கு உங்கப்பாவை நீ தகனம் செய்றதுக்கு முன்னால சுடுகாட்டுலேயே, "காட்டுப்பூணல்' போட்டு வெச்சிருப்பா. காலத்துக்கும், உன் உடம்புல அந்த காட்டுப் பூணல் தான் ஊஞ்சலாடிண்டு இருந்திருக்கும்...' என்று அம்மா விவரமாக விளக்கிய போது, மெய்சிலிர்த்தது எனக்கு. நடமாடும் தெய்வமாய் இருந்து, அருளாசி வழங்கிக் கொண்டிருந்த பரமாச்சாரியாரின் ஞான திருஷ்டியை, இப்போது நினைத்துப் பார்த்தாலும் புல்லரிக்கிறது மனது!

எஸ்.ராமசுப்பிரமணியன்











Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.
ன்றி  : தினமலர்

திருப்பாவை – திருவெம்பாவை -- மகா பெரியவா







திருப்பாவை – திருவெம்பாவை                     மகா பெரியவா


மார்கழி மாதம் பிறந்து விட்டால் போதும் – தமிழ்நாட்டிலுள்ள எல்லாக் கோவில்களின் கோபுரங்களிலிருந்தும் இசைமாரி பொழிய ஆரம்பித்து விடும் – விடியற்காலை நாலு மணியிலிருந்தே ! சிவன் கோவிலாக இருந்தால், திருவெம்பாவையும் திருபள்ளிஎழுச்சியும்; பெருமாள் கோவிலாக இருந்தால், திருப்பாவை. இது தவிர, திருப்பாவை – திருவெம்பாவை மாநாடுகள்; வைணப் புலவர்கள் காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு, ஊர் ஊராகச் சென்று சொற்பொழியாற்றுவார்கள். பள்ளிக்கூடங்களில், பாவப் பாடல் போட்டி – பரிசுகள் !

இத்தனைக் கோலாகலம் எப்போது, யாரால் ஆரம்பிக்கப்பட்டது ? தலைக்காவேரியில்,நீர்த்திவலைகலாகக் தோன்றும் காவேரி, பறந்து விரிந்து வெள்ளமாகப் பெருகி அகண்டகாவேரியாக மாறிப் பிரமிக்க வைக்கிறது. அப்படித்தான், பாவைகள் பப்ளிக் ஆனதும், யாரோ சில சைவர்களும் வைணவர்களும் தனித்தனியாக முணுமுணுத்துக் கொண்டிருந்த பாவைகள், பார் எங்கும் பரவி, விசுவரூபம் எடுத்துவிட்டன.

1949, மகாசுவாமிகள் திருவிடமருதூரில் தங்கியிருந்தார்கள். மகாலிங்கஸ்வாமி கோவிலில், செட்டியார் வகுப்பைச் சேர்ந்த ஓர் அம்மையார் கையில் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு நாள்தோறும் பாடி வருவதைப் பெரியவா கவனித்துவிட்டர்கள். ‘ அந்த ஆச்சி என்ன பாடிக்கொண்டிருக்கா தெரியுமோ ?’ உடன் வந்துக்கொண்டிருந்த பக்தர் ராமமூர்த்தியையும் கைங்கர்யபரர் கண்ணனையும் பார்த்துக் கேட்டார்கள். பெரியவா. ஒரே குரலில், ‘தெரியாது’ என்று பதில் வந்தது. ‘அந்த ஆச்சி அம்மாள், திருவெம்பாவை படிச்சிண்டிருக்கா – நல்ல ராகத்தோட..’ இரண்டு நிமிஷ நடை. ‘இந்தப் பாடல்களை எல்லோரும் பாட வேண்டும் என்று பிரசாரம் செய்தால், யாரவது பாடுவார்களா ?.. ‘ஒருவரும் பாட மாட்டார்கள். இது, யாருக்குத் தெரியும் ?..’ பெரியவாள் சிந்தனையில் ஆழ்ந்தார்கள். அவர்கள் மனத்திரையில் மணிவாசகரும் ஆண்டாளும் காட்சி தந்தார்கள் போலும் ! அற்புதமான பாடல்கள், அறைக்குள்ளேயே கிடக்கின்றன, அரங்கத்துக்கு வந்தால் லோகோபகாரமாக இருக்குமே ?..

‘ராமமூர்த்தி.. திருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு நடத்தணும்; ஏற்பாடு செய் ..’ அவ்வாறே ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழ்நாட்டின் முன்னணிப் பாடகர்கள், சொற்பொழிவாளர்கள் கலந்துகொண்டார்கள், ஏகப்பட்ட விளம்பரம் !

திருவெம்பாவை – திருப்பள்ளிஎழுச்சி – திருப்பாவை புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் அச்சிடப்பட்டு இலவசமாக விநியோகிக்கப்பட்டன. பாவைப் பாடல்களின் பண் நயமும் இலக்கிய நயமும் அறிஞர்களால் விளக்கி மொழியப்பட்டன. அவற்றின் பக்தி ரசத்தைச் சுவைத்து மயங்காதவரே இல்லை. பாவைப் பாடல் இசைத்தட்டுக்கள் அமோகமாக விற்பனை ஆயின. மார்கழி மாதம் வந்தது. பெரியவா, வெறும் உபதேசியார் அல்லர். உபதேசங்களை நத்திக் காட்டுபவர்கள். ‘மார்கழி விடியற்காலையில் பாவைப் பாடல்களைப் பாட வேண்டும் ‘ என்று சொல்லிவிட்டால் மட்டும் போதுமா ? ‘பிரகலாதன்’ என்று ஒரு யானை ஸ்ரீமடத்தில் இருந்தது. ராமமூர்த்தியையும் கண்ணனையும் அதன் மேல் உட்கார்ந்துகொண்டு, கையில் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில், புத்தகத்தைப் பார்த்துப் பாவைப் பாடல்களைப் பாடிக்கொண்டு, திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோவிலின் நான்கு வீதிகளிலும் பவனி வரச் செய்தார்கள்.

அப்புறம் கேட்பானேன் !

தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் பாவை வெள்ளம் பாய்ந்தது; பக்திப் பயிர் வளர்ந்தது; நாயன்மார் – ஆழ்வார் பக்கம் மக்கள் பார்வை திரும்பியது. தமிழ் பக்தி இலக்கியத்துக்கு அடித்தது யோகம் ! ஓரிரு ஆண்டுகள் சென்றன. ராமமூர்த்தியையும் கண்ணனையும் அழைத்தார்கள், பெரியவாள். ‘ஞாபகம் இருக்கா ? — திருவெம்பாவை யாருக்குத் தெரியும் ? அதை யாரும் பாடமாட்டா – ன்னு சொன்னேளே ? — இப்போ யாரவது பாடராளா ?…’ இது, பெரியவாள் கொடுத்த குட்டு இல்லை; அன்புடன் வழங்கிய ஷொட்டு !









Courtesy : Facebook : Halasya Sundaram Iyer
Thanks to Mahaperiyava Bhaktas for the scanned pictures.

Scanned photos of Mahaperiyava and Mahans


For the scanned photos of Mahaperiyava  - Kanchi paramacharya , Sringeri acharyas, Ramana Bhagavan , and other mahans pls. click to this link.

I have edited many pictures and also got some rare pictures of Mahaperiyava  - PAramacharya- Kanchi Mahaswami from kanchi mutt websites and their respective videos.


Pls. see to them at

https://plus.google.com/u/0/photos/105940625170738334348/albums/5194977976602255473

யாருக்கு அதிகச் சம்பளம் -- காஞ்சி மகா பெரியவர்


         யாருக்கு அதிகச் சம்பளம்?  
        ( காஞ்சி மகா பெரியவர்)




 ========================================

ஒருமுறை காஞ்சிப் பெரியவர் எண்ணாயிரம் என்ற ஊரைப் பற்றிக் கேட்டார். அது விழுப்புரத்தில் இருந்து 20-25 கி.மீ. தூரத்தில் உள்ளது. 
காளமேகப் புலவரின் சொந்த ஊர் என்று சொல்லப்படுவது. புகழ்பெற்ற விஷ்ணு ஸ்தலம். ஒரு காலத்தில் மிகப்பெரிய பல்கலைக்கழகமாக இருந்திருக்கிறது. நிறைய சாஸ்திரங்களை எல்லாம் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். பெரியவர் அது பற்றி நிறைய விஷயங்களை என்னிடம் சொன்னார். எந்தெந்த சாஸ்திரங்கள் எல்லாம் வேதத்தில் இருந்தது என்றெல்லாம் சொன்னார். அதை எழுதிக்கொள்ளக் கூட முடியவில்லை. அவற்றில் பல இப்போது இல்லை. என்னுடைய முன்னோடி டி.எஸ். ராமன் என்று ஒருவர் இருந்தார். அவர்தான் அங்கே கல்வெட்டுகளைப் படித்துப் பதிந்தார். அவற்றைப் பின்னால் வெளியிட்டோம். அங்கே கல்வெட்டில் ஆசிரியர்களுக்கு எவ்வளவு சம்பளம், மாணவர்களுக்கு எவ்வளவு சம்பளம் என்றெல்லாம் இருக்கிறது. அந்தக் கல்வெட்டு இன்றும் உள்ளது.

அந்தக் கல்வெட்டைப் பார்த்த பிறகு ஒருநாள் பெரியவரைச் சந்தித்தேன். பெரியவர், “யார் அப்போ முக்கியமான ஆசிரியர் என்று தெரிய வந்ததா? அப்போ எந்தப் பாடம் ரொம்ப முக்கியமானதா இருந்ததுன்னு தெரியுமா?” என்று கேட்டார். “யாருக்கு எவ்ளோ கொடுத்தார்கள் என்று குறித்துக் கொண்டுவா, தெரியும்.” என்றார்.

அப்படிச் செய்து பார்த்தபோது, வியாகரண பண்டிதருக்கு (இலக்கண ஆசிரியருக்கு) மிக அதிக ஊதியம். ஒரு பட்சத்துக்கு ஒரு பவுன். கூடவே சில கலம் நெல். இலக்கணம் சொல்லிக் கொடுப்பதும், படிப்பதும் கஷ்டம். அதை உயர்வாக மதித்ததால் அதற்கு அதிக ஊதியம். இப்படியே சம்பளம் படிப்படியாக ஒவ்வொரு பிரிவிற்கேற்ப குறைந்து கொண்டே வருகிறது. குறைவான சம்பளம் வேதம், வேதாந்தம் சொல்லிக் கொடுப்பவருக்குத்தான்.

பெரியவர் அதைக் கேட்டுவிட்டு, “சரிதான். வேதம் சொல்லிக் கொடுப்பவர்களை என்னை மாதிரி நினைத்துக் கொண்டு விட்டார்கள் போலிருக்கிறது” என்று சொல்லிச் சிரித்தார்.







Courtesy - Facebook : Krishnamoorthi Balsubramanian
Thanks for Mahaperiyava bhaktas for the scanned photos

லோகத்தில் மனசுக்கு ரொம்பவும் ஆனந்தமாகவும் சாந்தமாகவும் இருக்கப்பட்ட பல விஷயங்களுக்கு,














நல்ல ஸங்கீதம் அதுவும் குறிப்பாக நம்முடைய ஸங்கீதத்துக்கே எடுத்த வீணையோடு கானம் என்றால் அது ஈசுவரனின் பாதத்துக்குத் கொண்டு சேர்ப்பதற்காகவே இருக்கும்"





(மோக்ஷத்துக்கு வழிகாட்டி!)

இந்த வார கல்கி.

லோகத்தில் மனசுக்கு ரொம்பவும் ஆனந்தமாகவும் சாந்தமாகவும் இருக்கப்பட்ட பல விஷயங்களுக்கு, அப்பர் ஸ்வாமிகள் ஒரு லிஸ்ட் கொடுக்கிறார். 

இந்திரியங்களுக்கு அகப்படுகிற சுகங்கள் போல இருந்தாலும், நிரந்தரமான, தெய்வீகமான ஆனந்தத்தைத் தருகிற வஸ்துக்களைச் சொல்கிறார். 

அந்த வஸ்துக்கள் என்ன? 

                       

முதலில், துளிக்கூட தோஷமே இல்லாத வீணா கானம்; அப் புறம், பூரண சந்திரனின் பால் போன்ற நிலா; தென்றல் காற்று; வஸந்த காலத்தின் மலர்ச்சி; வண்டுகள் ரீங்காரம் செய்துகொண்டிருக்கிற தாமரைத் தடாகம்.

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறைப் பொகையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே."

இந்திரியங்களால் பெறுகிற இன்பங்களை ஈசுவர சரணார விந்த இன்பத்துக்கு உபமானமாக அடுக்கும்போது, ‘மாசில் வீணை’ என்று சங்கீதத்துக்கே முதலிடம் தருகிறார்.




நல்ல ஸங்கீதம் அதுவும் குறிப்பாக நம்முடைய ஸங்கீதத்துக்கே எடுத்த வீணையோடு கானம் என்றால் அது ஈசுவரனின் பாதத்துக்குத் கொண்டு சேர்ப்பதற்காகவே இருக்கும். நம் பூர்வீகர்கள் இசையை ஈசுவரனின் சரணங்களிலேயே ஸமர்ப் பணம் பண்ணினார்கள். 

அந்த இசை அவர்களையும், அதைக் கேட்கிறவர்களையும் சேர்த்து, ஈசுவர சரணாரவிந்தங்களில் லயிக்கச் செய்தது. தர்ம சாஸ்திரம் தந்த மகரிஷி யாக்ஞவல் கியரும் ‘சுஸ்வரமாக வீணையை மீட்டிக் கொண்டு, சுருதி சுத்தத்தோடு, லயம் தவறாமல் நாதோபாஸனை செய்துவிட்டால் போதும் தியானம் வேண்டாம்; யோகம் வேண்டாம்; தபஸ் வேண்டாம்; பூஜை வேண்டாம். கஷ்டமான சாதனைகளே வேண்டாம் 

இதுவே மோக்ஷத்துக்கு வழிகாட்டிவிடும்’ என்கிறார்



  






Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

Tuesday, April 28, 2015

போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்!

கலிகாலத்தில் இறைவனின் நாமத்தைச் சொன்னாலே போதும் என்பதை அகிலமெங்கும் பரப்பிய பெருமை ஸ்ரீபோதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுக்கு உண்டு. திருவிசநல்லூர் ஸ்ரீதர ஐயாவாளும் இருவரும் சம காலத்தவர்கள். கும்பகோணத்துக்கு அருகே திருவிடைமருதூரை அடுத்து அமைந்திருக்கிறது கோவிந்தபுரம். இங்குதான் போதேந்திரர். அதிஷ்டானம் கொண்டுள்ளார். 22-8-2008, வெள்ளியன்று இந்த அதிஷ்டானத்துக்கு மகா கும்பாபிஷேகவைபவம் சிறப்பாக நடைபெற்றது. காஞ்சி காமகோடி ஆசார்ய பரம்பரையில் ஐம்பத்தொன்பதாவது பீடாதிபதியாக விளங்கியவர் பகவன்நாம போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். இவரது காலம் கி.பி. 1638-1692. அன்னிய மதத்தினர் இந்துக் கோயில்களை நாசம் செய்துகொண்டிருந்த காலகட்டத்தில் தான் இவரது நாம ஜப பிரசாரம் முனைப்புடன் துவங்கியது. நாம ஜபத்தின் மூலம் இறைவனை அடையலாம். கஷ்டங்களைப் போக்கலாம்; பிரச்னைகளைத் தீர்க்கலாம் என்று நாம ஜபத்தின் மேன்மைகளைப் பல இடங்களிலும் சொல்லி, அந்த எளிய வழிபாட்டை மேம்படுத்தினார்.

ஒரு மடாதிபதியாக காஞ்சிபுர மடத்தில் அவர் தங்கியிருந்த காலத்தைவிட வெளியே பயணித்து, நாம ஜப மேன்மையைப் பரப்பிய காலமே அதிகம் என்று சொல்லலாம். நாம பஜனை சம்பிரதாயத்தின் முதல் குரு என்று போற்றப்படுவர் அவர்.

நாம சங்கீர்த்தனம். நாம ஜபம் என்றால் என்ன?

பொதுவாக, பகவன் நாமத்தை எந்த நேரமும் உச்சரித்துக் கொண்டிருப்பது என்பதுதான் இதன் பொருள். நாம சங்கீர்த்தனம் என்றால், இறைவனின் ஒரு திருநாமத்தை வாத்திய கோஷ்டிகளின் உதவியுடன் ராகம் அமைத்துப் பாடிக்கொண்டே இருப்பது முதலில் பாடிய வரிகளையே மீண்டும் மீண்டும் பாடிக்கொண்டு இருப்பார்கள். பெரும்பாலும் ஆர்மோனியம் மிருதங்கம். கஞ்சிரா முதலான பக்கவாத்தியங்களை வாசித்துக்கொண்டு பக்தியில் திளைத்து ஆடிய வண்ணம் நாம சங்கீர்த்தனத்தைச் செய்வார்கள் பாகவதர்கள். இதைக் கேட்டுக் கொண்டிருப்பவர்களும் மெய்மறந்து இறை இன்பத்தில் ஐக்கியமாகி விடுவார்கள். பாகவதர்களுடன் இணைந்து பக்தர்களும் பகவானின் நாமத்தைச் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். நாம ஜபம் என்பது தனிப்பட்ட ஒருவரோ அல்லது சிலரோ சேர்ந்து பகவன் நாமங்களை மனதுக்குள்ளோ அல்லது வாய்விட்டோ சொல்லி இறைவனை வழிபடுவது நம சிவாய நாராயணாய ராம ராம கிருஷ்ண கிருஷ்ண என்று அவரவருக்குப் பிடித்த கடவுளின் நாமத்தைச் சொல்லி வழிபடலாம்.

கலியுகத்தில் நாம ஜபத்தை யார் வேண்டுமானாலும். எப்போது வேண்டுமானாலும் உச்சரித்து இறைவனை வணங்கலாம். இதற்கு கால நேரம் கிடையாது. என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது. இந்தக் கலிகாலத்தில் பகவன் நாமங்களே நம்மைக் கரை சேர்க்கும் என்று சொன்ன போதேந்திரர் தினமும் ஒரு லட்சத்து எட்டாயிரம் முறை ஸ்ரீராம நாமத்தைத் துதித்து வந்தார். இதிலிருந்தே அவரது பக்தியின் பெருமையை நாம் புரிந்துகொள்ளலாம். போதேந்திரர் தமிழ்நாட்டில் அவதரித்த காலத்தில்தான் நாட்டில் ஏராளமான மகான்கள் தோன்றினர். கன்னட தேசத்தில் புரந்தரதாசர். கனகதாசர் முதலானோரும் ஆந்திராவில் ராமதாசர், ஷேத்ரக்ஞர். மகாராஷ்டிரத்தில் துக்காராம் போன்றோரும் வங்களாத்தில் கிருஷ்ண சைதன்யர், நித்யானந்தர் போன்றோரும் காசியில் கபீர்தாசர், துளசிதாசர் ஆகியோரும் வடக்கே ஸ்வாமி ஹரிதாஸ், ஸ்ரீவல்லபர், குருநானக் குருகோவிந்தசிங், மீரா போன்றோரும் அவதரித்தனர். மொத்தத்தில் பார்த்தால். இவர்கள் அனைவருமே பாகவத சம்பிரதாயத்தின் மேன்மையையும் நாம ஜபத்தின் பெருமையையும் பரப்பி இருக்கிறார்கள். ஒரே காலத்தில் பல்வேறு இடங்களில் பல மகான்கள் அவதரித்துப் பக்தியைப் பரப்ப வேண்டும் என்பது இறைவனின் சங்கல்பம் போலிருக்கிறது.

போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அவதார வரலாற்றை அறிந்துகொள்வோம்? புராணம் போற்றும் புண்ணிய நகரம் காஞ்சிபுரத்தில், மண்டனமிஸ்ரர் அக்ரகாரத்தில் வசித்து வந்தவர் கேசவ பாண்டுரங்கன் என்ற அந்தணர். ஆந்திர தேசத்தில் இருந்து காஞ்சிக்கு வந்து குடியேறியவர். அவருடைய மனைவியின் பெயர் சுகுணா இந்தத் தம்பதிக்கு 1638ல் ஆதிசங்கர பகவத்பாதரின் அம்சமாக போதேந்திரர் அவதரித்தார். குழந்தை பிறந்த வேளையை வைத்து, அதன் எதிர்காலத்தையும் சிறப்பு அம்சங்களையும் கணித்த பாண்டுரங்கன் புருஷோத்தமன் என்று பெயர் சூட்டினார். அப்போது காஞ்சி காமகோடி மடத்தில் 58வது பீடாதிபதியாக விளங்கிய ஆத்மபோதேந்திரர் என்கிற விஸ்வாதிகேந்திரா சரஸ்வதி ஸ்வாமிகளிடம் உதவியாளராக இருந்து வந்தார் பாண்டுரங்கன். ஒரு நாள், தந்தை, மடத்துக்குப் புறப்படும்போது, நானும் வருவேன் என்று அடம் பிடித்தான் ஐந்தே வயதான புருஷோத்தமன், சரி என்று அவனையும் கூட்டிக்கொண்டு ஸ்ரீமடத்துக்குச் சென்றார். பீடத்தில் இருந்த ஸ்வாமிகளைக் கண்டதும். பக்தி உணர்வு மேலிட, எவரும் சொல்லாமல் தானாகவே நமஸ்காரம் செய்தான் பாலகன் புருஷோத்தமன்.

விளையும் பயிரின் சாதுர்யம், ஒரு வேதவித்துக்குத் தெரியாமல் இருக்குமா? ஸ்வாமிகள், புருஷோத்தமனைப் பார்த்து புன்னகைத்தார். ஸ்வாமிகள் முன் கைகூட்டி, வாய் பொத்தி நின்றிருந்தது குழந்தை. பாண்டுரங்கனைப் பார்த்து இந்தக் குழந்தை யாருடையது? என்றார் ஸ்வாமிகள். தங்களுடைய பரிபூரண ஆசீர்வாதத்தோடு பிறந்த இந்தக் குழந்தையும் தங்களுடையதோ.. நம்முடையது என்று நீர் சொல்வதால், இந்தக் குழந்தையை நமக்கே விட்டுத்தர முடியுமா? யதேச்சையாக, தான் சொன்ன வார்த்தைகளின் முழுப்பொருள் அப்போதுதான் பாண்டுரங்கனுக்குப் புரிந்தது. சற்றுத் தடுமாறினார். வாய் தவறி வார்த்தைகளை உதிர்த்துவிட்டோமோ என்று ஐயப்பட்டார். இருந்தாலும், வாயில் இருந்து வந்து விழுந்த வார்த்தைகள் இறைவனின் சங்கல்பத்தால் எழுந்தவையாக இருக்கும் என்று அனுமானித்தார். ஸ்வாமிகளைப் பணிந்து தங்களுடைய விருப்பமே என்று விருப்பமும் என்றார்.

இதைக்கேட்டு சந்தோஷப்பட்ட ஸ்வாமிகள், நல்லது. இன்றைய தினத்தில் இருந்து மடத்தின் குழந்தையாகவே புருஷோத்தமன் பாவிக்கப்படுவான். தைரியமாகச் செல்லுங்கள் என்றார். கணவரின் இந்தச் செயலைக் கேள்விப்பட்ட மனைவி சுகுணா கலங்கவில்லை. பகவானின் விருப்பம் அதுவானால், அதற்கு நாம் என்ன செய்ய முடியும்? என்று தன்னையும்தேற்றிக்கொண்டு கணவரையும் தேற்றினான். மடத்தில் வளர்ந்தாலும் தினமும் பெற்றோரைச் சந்தித்து நமஸ்கரித்து ஆசி பெறும் உயரிய வழக்கத்தைக் கொண்டிருந்தான் புருஷோத்தமன். ஐந்து வயதில் அட்சர அப்பியாசம்; ஏழு வயதில் உபநயனம், பதினாறு வயது முடிவதற்குள் வேதம், வேதாந்தம் போன்றவற்றைத் திறம்படக் கற்று தேர்ந்தான். சகலத்திலும் உயர்ந்தது நாராயணன் நாமமே என்று தெளிந்த புருஷோத்தமன், தினமும் ஒரு லட்சத்து எட்டாயிரம் ராம நாமத்தை ஜபிப்பதாக, ஆசார்யா சன்னிதியின் முன் அமர்ந்து சங்கல்பம் எடுத்துகொண்டான். (அதன்பின் கடைசிவரை இதைத் தவறாமல் கடைப்பிடித்தும் வந்தார்). அடுத்தடுத்து வந்த காலகட்டத்தில் புருஷோத்தமனின் பெற்றோர், ஒருவர், பின் ஒருவராக இறைவனின் திருப்பதம் அடைந்தனர்.

நாளாக நாளாக புருஷோத்தமனின் தேஜஸும் பவ்யமும் கூடிக் கொண்டே வந்தது. ஆசார்ய பீடத்தில் அமர்வதற்கு உண்டான அத்தனை தகுதிகளும் புருஷோத்தமனுக்கு இருப்பதாகப் பெருமைப்பட்டுக் கொண்டார் விஸ்வாதிகேந்திரர். உரிய காலம் வந்ததும் அவனைப் பீடத்தில் அமர்த்தி அழகு பார்க்க விரும்பினார் ஸ்வாமிகள். அதற்குரிய வேளையும் வந்தது. ஒரு தினம் விஸ்வாதிகேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பக்தி மார்க்கத்தைப் பரப்பும் பொருட்டு காசி யாத்திரை புறப்பட்டார். அப்போது புருஷோத்தமனும் உடன் வருவதாகச் சொன்னார். காசியில் சில காலம் தங்க உத்தேசித்துள்ளேன். எனவே, நீ இப்போது என்னுடன் வர வேண்டாம். சிறிது காலத்துக்குப் பிறகு புறப்பட்டு வா என்றார் ஸ்வாமிகள். புருஷோத்தமனும் ஸ்வாமிகளைப் பிரிய மனம் இல்லாமல் ஒப்புக்கொண்டான். ஸ்வாமிகள் காசியை அடைந்தார். அப்போது, ந்ருஸிம்மாச்ரமி ஸ்வாமிகள் என்னும் மகான் காசி ஷேத்திரத்தில் தங்கி, பகவன் நாமங்களைப் பிரசாரம் செய்து கொண்டிருந்தார். இருவரும் சந்தித்து உரையாடி, ஆன்மிக விவாதங்களை மேற்கொண்டனர். அப்போது, நாம் சங்கீர்த்தன வைபவங்கள் அதிக அளவில் காசியில் நடந்ததைப் பார்த்து ஸ்வாமிகள் பெருமிதம் கொண்டார். இந்த அளவுக்குத் தென்னாட்டில் நாம சங்கீர்த்தனம் வளர வேண்டுமானால் அது புருஷோத்தமனால்தான் முடியும். விரைவிலேயே அவனுக்கு மடாதிபதி பட்டம் சூட்டவேண்டும் என்று முடிவெடுத்தார்.

குருநாதரின் பிரிவைத் தாங்க முடியாமல் ஒரு கட்டத்தில் தன் நண்பனுடன் காசிக்கு யாத்திரை சென்றான் புருஷோத்தமன். அங்கே புருஷோத்தமனைப் பார்த்த மாத்திரத்தில் பெருமகிழ்வு கொண்டு, அவனை ஆனந்தமாக அணைத்து சந்தோஷப்பட்டார் ஸ்வாமிகள். இருவரும் காஞ்சிபுரம் திரும்பிய பின், ஒரு சுபதினத்தில் புருஷோத்தமனுக்குப் பட்டாபிஷேகம் செய்வித்து, காஞ்சி மடத்தின் பீடாதிபதியாக ஆக்கினார் ஸ்வாமிகள். அப்போது புருஷோத்தமனுக்கு ஸ்வாமிகளால் சூட்டப்பட்ட திருநாமமே. போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். அதன்பின் பல இடங்களுக்கு யாத்திரை சென்று. நாம ஜபத்தின் பெருமைகளைப் பலருக்கும் போதித்தார் போதேந்திரர். ஏராளமான கிரந்தங்களை இயற்றினார். விளக்கவுரைகள் எழுதினார்.

ஒரு சமயம் விஸ்வாதிகேந்திர ஸ்வாமிகளுடன் போதேந்திரர் யாத்திரை சென்று கொண்டிருந்தார். அப்போது உடல் நலம் குன்றி மகா சமாதி அடைந்தார். விஸ்வாதிகேந்திர ஸ்வாமிகள். குருநாதருக்குச் செய்ய வேண்டிய கர்மங்களை முறையாகச் செய்து முடித்து, போதேந்திரர், காஞ்சிபுரத்துக்கே திரும்பிவிட்டார். வெவ்வேறு ஊர்களில் நடக்கும் போதேந்திரரின் நாம ஜப உற்சவங்களுக்குப் பெருமளவில் ஜனங்கள் வர ஆரம்பித்தார்கள். இதே காலத்தில்தான், போதேந்திரருக்கு திருவிசநல்லூரில் நாம ஜபத்தில் பிரபலமாக இருந்த ஸ்ரீதர ஐயாவாளுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் இணைந்தே யாத்திரைகள் மேற்கொண்டனர். கிராமம் கிராமமாகச் சென்று நாம ஜபத்தின் உயர்வைச் சொன்னார்கள். ஒருமுறை போதேந்திரரும் ஸ்ரீதர ஐயாவாளும் பெரம்பூர் என்கிற கிராமத்துக்கு சிஷ்யகோடிகளுடன் வந்து சேர்ந்தனர். அந்த ஊரில் வசித்து வந்த ஆசாரமான அந்தணர் ஒருவர் தங்கள் இல்லத்துக்கு எழுந்தருளி. பிட்சை ஏற்குமாறு ஸ்வாமிகள் இருவரையும் கேட்டுக் கொண்டார். அதன்படி அவரது இல்லத்துக்கு ஸ்வாமிகளும் சிஷ்யகோடிகளும் சென்றனர்.

போதேந்திர ஸ்வாமிகள் பிட்சை எடுத்து உண்ட பிறகே ஸ்ரீதர ஐயாவாள் பிட்சை எடுத்து உண்பது வழக்கம் எனவே போதேந்திரர் முதலில் பிட்சை எடுத்துக்கொள்ள அமர்ந்தார். ஸ்ரீதர ஐயாவாளும், சிஷ்யகோடிகளும் ஊர் ஜனங்களும் ஸ்வாமிகளுக்கு எதிரே பவ்யமாக நின்று கொண்டிருந்தனர். அந்தணர் இல்லதைச் சேர்ந்தவர்கள் ஸ்வாமிகளது இலையில் பிட்சைக்காரன் பதார்த்தங்களை ஒவ்வொன்றாகப் பரிமாறத் தொடங்கினார்கள்.
அந்த அந்தணருக்கு ஒரே மகன். சுமார் ஐந்து வயது இருக்கும். ஊமை, சின்னஞ்சிறுவன் ஆனதாலும் உணவில் மேல் கொண்ட பிரியத்தினாலும் ஸ்வாமிகளின் இலையில் பரிமாறப்பட்ட பதார்த்தங்கள் தனக்கு உடனே வேண்டும் என்று ஜாடையில் சொல்லி அடம்பிடித்துக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும் ஸ்வாமிகளுக்கு துக்கம் வந்தது. ராம நாமத்தை சொன்னால் மோட்சம் அடையலாம். அப்படி இருக்கும்போது ஊமையான இந்தச் சிறுவன் எப்படி பகவன் நாமத்தைச் சொல்ல முடியும்? எப்படி இவன் கரை ஏறுவான் என்பதே ஸ்வாமிகளின் கவலை. ஆனால், அடுத்து அங்கே என்ன நடக்கப் போகிறது என்பதை ஸ்வாமிகள் அறியாதவரா என்ன?

சிறுவனின் பரிதாப நிலையை நேராகப் பார்த்த பிறகு, ஸ்வாமிகளுடைய கவனம் பிட்சையில் செல்லவில்லை. விருப்பம் இல்லாமல் சாப்பிட்டார். பல பதார்த்தங்களை இலையில் மீதம் வைத்து விட்டு எழுந்து, வெளியே வந்து அமர்ந்தார். அப்போது ஸ்வாமிகளிடம் ஆசி பெற ஏராளமானோர் கூடினர். அந்தணரின் குடும்பத்தினரும் பவ்யமாக நின்றிருந்தனர்.

ஊமையான அந்தச் சிறுவன் மட்டும் பசியுடன் ஸ்வாமிகள் சாப்பிட்ட இலைக்கு முன் தவிப்புடன் நின்றிருந்தான். அவரது இலையில் சில பதார்த்தங்கள் மீதம் இருந்தன. அங்கே வேறு எவரும் இல்லாததால் இலைக்குமுன் அமர்ந்து ஸ்வாமிகள் உண்டது போக மிச்சம், மீதி இருந்த உணவு வகைகள் ஒன்றையும் விடாமல் பரபரவென்று உட்கொண்டான். பசி எனும் நெருப்பு தற்போது தணிந்துவிட்டதால், சிறுவனின் உள்ளத்தில் ஆனந்தம் குடிகொண்டது.

அடுத்து நடந்த நிகழ்வை ஆச்சரியம் என்றுதான் சொல்ல வேண்டும். இதுவரை எந்த ஒரு வார்த்தையயுமே உச்சரிக்காமல் இருந்த அவனுடைய வாய் ஸ்ரீராம ராம என்று சந்தோஷமாக உச்சரித்தது. இதையே தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தான். தனக்குப் பேச வந்துவிட்டதே என்கிற ஆனந்தத்தில் அவன் கூத்தாடினான். வாய் பேச முடியாத தன் மகனின் வாயில் இருந்து ஸ்ரீராம கோஷம் வருவதைக் கேட்ட அவனுடைய பெற்றோர். திகைத்துப் போய் வாசலில் இருந்து வீட்டின் உள்ளே ஓடினர்.

மகனே.. மகனே! உனக்கு பேச்சு வந்துவிட்டது. அதுவும் ராம நாம ஜபத்துடன் உன் பேச்சைத் துவக்கி இருக்கிறாய் என்று கூறி அவனுடைய பெற்றோர் கண் கலங்க அவனைக் கட்டித் தழுவினர்.

வெளியே, வாசலில் அமர்ந்திருந்த அந்த மகான் அமைதியாக அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார். இதெல்லாம் நடந்தது இவருடைய கருணையில்தானே! பேச முடியாத மகன் பேசக் காரணமாக இருந்தது இவரல்லவா? ஒரு நாளைக்கு ஒரு லட்சத்து எட்டாயிரம் முறை, எந்த நேரமும் பகவானின் நாமத்தையே ஜபித்துக் கொண்டிருக்கும் போதேந்திரரின் நாவில்பட்ட உணவின் மீதியை உட்கொண்டதால் அல்லவா, அந்தச் சிறுவன் பேசினான்! அவன் பேச வேண்டும் என்பதற்காகத்தான். அந்த மகான் தனது இலையில் பதார்த்தங்களை மிச்சம் வைத்துவிட்டு எழுந்து சென்றாரோ? மகனுடன் சென்று, அந்த மகானின் திருப்பாதங்களில் விழுந்து தொழுதனர் பெற்றோர்.

கோவிந்தபுரத்தில் போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் இருந்த இடத்துக்கு அருகில்தான் காவிரி நதி! கோடை அல்லாத காலங்களில் கொப்பளித்துக் கொண்டும் கழித்துக் கொண்டும் ஓடும் அந்த நதியின் அழகை ரசிப்பதற்கும் அங்கே கூடும் சிறுவர்களுடன் விளையாடுவதற்காகவும் காவிரிக் கரைக்கு அடிக்கடி செல்வார் ஸ்வாமிகள்.

கள்ளங் கபடம் இல்லாத அந்தச் சிறுவர்களுக்கு இணையாக வயது வித்தியாசம் பாராமல் விளையாடுவார் ஸ்வாமிகள். சிறுவர்களின் ஆனந்தம் கண்டு குதூகலிப்பார். சில சமயம் ஆற்றங்கரையில் சாகசங்கள் சிலவற்றை செய்து காண்பித்து சிறுவர்களை மகிழ்விப்பார் ஸ்வாமிகள். இது ஸ்வாமிகளுக்கும் சந்தோஷமாக இருக்கும். காவிரி ஆற்றங்கரையில் போதேந்திர ஸ்வாமிகள் இருப்பதை சிறுவர்கள் பார்த்துவிட்டால் போதும். அவர்களுக்கு குஷி பிறந்துவிடும். துள்ளிக் குதித்து ஓடிவந்து விளையாடுவதற்கென்று ஸ்வாமிகளுடன் ஒட்டிக்கொண்டு விடுவார்கள்.

அது அடிக்கடி நடக்கக்கூடிய ஒன்று என்றாலும், அன்றைய தினம் நடக்கப் போகும் விளையாட்டுதான் ஸ்வாமிகளின் இறுதியான விளையாட்டு என்பதை. பாவம் அந்தச் சிறுவர்கள் அறியவில்லை!

அது கோடை காலம் காவிரி ஆற்றில் தண்ணீர் வற்றிப்போய் இருந்தது. நதியின் பெரும் பகுதியில் மணல் தெரிந்தது. தண்ணீர் இருக்கும் இடத்தைத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டி இருந்தது.

மணல் பகுதியில் இருந்த குழி ஒன்றுக்குள். தான் இறங்கிக்கொண்டு மேலே மணலைப் போட்டு மூடுமாறு சிறுவர்களிடம் கூறினார் ஸ்வாமிகள். சிறுவர்கள் ஆனந்தமாக மணலை அள்ளிப் போடுகிற நேரம் பார்த்து ஏ பசங்களா! என் மேல் மணலை அள்ளிப் போட்டு மூடிவிட்டு, நீங்கள் அனைவரும் வீட்டுக்குப் போய்விட வேண்டும். வீட்டில் எவரிடமும் இந்த விஷயத்தைச் சொல்லக்கூடாது. நாளை பொழுது விடிந்ததும் இங்கே வந்து என்னைப் பாருங்கள் என்ன? என்றார்.

ஸ்வாமிகளுடனான ஒரு விளையாட்டே இது என்று நம்பிய அந்த அப்பாவிச் சிறுவர்கள் போட்டி போட்டுக்கொண்டு. குழிக்குள் மணலை நிரப்பினார்கள். ஸ்வாமிகளது உருவம் மறைந்துவிட்டது. வாங்கடா, வீட்டுக்குப் போகலாம். சாமீ ஜபம் பண்றாரு. இங்கே நாம நின்னா அவருக்குத் தொந்தரவா இருக்கும் என்று இருட்டுகிற வேளையில் அனைவரும் கலைந்துவிட்டனர். மறுநாள் காலை தங்களது அன்றாட அலுவல்களின் பொருட்டு ஸ்வாமிகளைத் தேடினர் அவரது சிஷ்யர்கள். ஆசி பெற வேண்டி. ஊர் மக்கள் ஸ்வாமிகளைத் தேடி வந்தனர். இப்படிப் பலரும் ஸ்வாமிகளைத் தேடி கொண்டிருக்க... அவரைக் காணவில்லை என்கிற தகவல் பரவியது பல இடங்களில் தேடிப் பார்ததனர்.

ஸ்வாமிகளுடன் ஆற்றங்கரையில் அடிக்கடி விளையாடும் சிறுவர்களைக் கூப்பிட்டு விசாரித்தார்கள் பெரியோர். அப்போதுதான், முந்தைய தினம் நடந்த சம்பவத்தின் வீரியம் அந்தச் சிறுவர்களுக்குப் புரிய ஆரம்பித்தது. கண்களில் நீர் கசிய ஸ்வாமிகளின் மேல் மணலைப் போட்டு மூடிய விவரத்தைத் தேம்பித் தேம்பிச் சொன்னார்கள்.

சீடர்களும் ஊர்க்காரர்களும் பதறிப்போய் ஆற்றங்கரைக்கு ஓடினார்கள். சிறுவர்கள் அடையாளம் காட்டிய இடத்தில், மேடாக இருந்த மணலைக் கைகளால் விலக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் மணலை அள்ளிக்கொண்டிருந்தபோது ஒரு கட்டத்தில் அசாரீ வாக்கு ஒன்று எழுந்தது. பக்தர்களே! நாம் இந்த இடத்திலேயே ஞானமயமான சித்த சரீரத்தில் இருந்துகொண்டு ஜீவன் முக்தராக விளங்குவோம். அதோடு, உலக நன்மைக்காக பகவன் நாம சங்கீர்த்தனம் செய்துகொண்டே இருப்பதால், நமக்கு எந்தத் தொந்தரவும் செய்ய வேண்டாம். தோண்டுவதை நிறுத்துங்கள் இதற்கு மேலே பிருந்தாவனம் ஒன்றை அமைத்துத் தினமும் ஆராதித்து வாருங்கள். ஒவ்வொரு நாளும் லட்சத்துக்கு எட்டாயிரம் நாம ஜபம் செய்கிற பக்தர்களுக்கு நாம் தரிசனம் தருவோம் என்று அந்தக் குரல், ஸ்வாமிகளின் மொழியாக ஒலித்தது! இந்த அசரீரி வாக்கைக் கேட்ட அவருடைய பக்தர்களும் சீடர்களும் அதற்கு மேல் குழியைத் தோண்டாமல் மண்ணைப் போட்டு மூடி விட்டார்கள். அவர் மீது கொண்ட குருபக்தி காரணமாக சில பக்தர்கள். ஆற்று மணலில் விழுந்து தேம்பி அழுதனர். இன்னும் சிலரோ, நாம சங்கீர்த்தனம் செய்யத் தொடங்கினர்.

ஸ்வாமிகள் நிரந்தாமாகக் குடிகொண்ட இடத்தில் அவரது அசரீரி வாக்குப்படியே ஒரு துளசி மாடம் அமைத்து, மகா அபிஷேகம் நடத்தி, தினமும் நாம சங்கீர்த்தனம் செய்து வந்தனர் அவரது பக்தர்கள். ஆற்றங்கரை மணலுக்குள் ஸ்வாமிகள் ஐக்கியமான தினம் கி.பி.1692ம் வருடம் புரட்டாசி மாதம் பவுர்ணமி. இப்போதும் ஸ்வாமிகளின் அதிஷ்டானத்தில் பவுர்ணமியில் ஆரம்பித்து. மகாளய அமாவாசை வரை பதினைந்து நாட்கள் ஆராதனை உற்சவம் பாகவதர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதற்காக நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இங்கு வந்து குவிக்கிறார்கள். ஜீவசமாதியில் இருந்துகொண்டு போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் இன்றைக்கும் நாமம் ஜபித்துக்கொண்டு தன்னைத் துதிக்கும் பக்தர்களுக்குக் காட்சி தந்து அருள்கிறார். அவரது அதிஷ்டானத்தில் இருந்து வரும் ராம நாம ஒலியைக் கேட்பவர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள். போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அதிஷ்டானத்தை தரிசிப்போமா? பிரம்மாண்டமான ஆஞ்சநேயர் சன்னிதி. போதேந்திரரின் அதிஷ்டானம் இவை இரண்டும்தான் இங்கே பிரதானம். ஸ்ரீபோதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் டிரஸ்ட் அமைப்பினர் இந்த அதிஷ்டானத்தைத் திறம்பட நிர்வகித்து வருகிறார்கள். பாலிஷ் செய்யப்பட்ட கருங்கற்களால் அதிஷ்டானத்தைப் புதுமைப்படுத்தி இருக்கிறார்கள். உயரமான தூண்கள் கொண்ட ஒரு மண்டபத்தின் நடுவே அதிஷ்டானம் இதை வலம் வரலாம்.

கும்பாபிஷேகத்தின் காரணமாக இந்த அதிஷ்டானத்தைச் சுற்றிலும் உள்ள இடங்களைச் சற்றுத் தோண்டி எடுத்து சீரமைக்க ஆரம்பித்தார்கள். அப்போது சுமார் ஆறடிக்குக் கீழே அதிஷ்டானத் தோற்றத்தில் ஓர் அமைப்பு தென்பட்டதது. இது, ஆதியில் மருதாநல்லூர் ஸ்ரீசத்குரு ஸ்வாமிகளால் அமைக்கப்பட்ட அதிஷ்டானமாக இருக்கலாம் என்கிறார்கள். இன்னும் கொஞ்சம் கீழே பார்த்தால், ஆற்று மணல், ஆம்! மணலுக்குள்தானே தன்னை மூடிக்கொண்டார். இந்த மகான்? மருதாநல்லூர் ஸ்வாமிகள் (இவரது காலம் கி.பி 1777-1817 என்பர்) போதேந்திரரின் அதிஷ்டானத்தை அமைத்தது பற்றி, தெரிந்து கொள்ளலாம். மருதாநல்லூர் சத்குரு ஸ்வாமிகள் காலத்தில் தஞ்சையை ஆண்டு வந்த மகாராஜா, சத்ரபதி சிவாஜியின் வழி வந்தவர். ஆன்மிகத்தின் பாதையில் தன்னைப் பெரிதும் ஈடுபடுத்திக் கொண்டவர். மகான்களைப் போற்றியவர்.

மருதநல்லூர் ஸ்வாமிகளின் காலத்தில், கோவிந்தபுரத்தில் உள்ள போதேந்திரரின் அதிஷ்டானத்தை பக்தர்கள் தரிசிக்க முடியமால் இருந்து வந்தது. காரணம், அப்போது கரை புரண்டு ஓடிய காவிரியின் வெள்ளம் போதேந்திரரின் அதிஷ்டானத்தை முழுவதும் முழ்கடித்துவிட்டது. எவரது கண்களுக்கும் அந்த அதிஷ்டானம் தென்படவில்லை. இந்த நிலையில் தஞ்சை மகாராஜாவின் விருப்பப்படி, காவிரி நதியைச் சற்றே வடக்குப் பக்கம் திருப்பி, போதேந்திரரின் அதிஷ்டானத்துக்கு எதிர்காலத்தில் எந்தவித பாதிப்பும் வராமல், தடுப்பு வேலைகளைத் திறம்பட செய்தார் மருதாநல்லூர் ஸ்வாமிகள். மக்கள் சக்தியால் முடியாத ஒரு பணியை மகான் சாதித்ததில் பெரிதும் மகிழந்த தஞ்சை மகாராஜா, மருதாநல்லூர் ஸ்வாமிகளை ஏகத்துக்கும் கவுரவித்து மகிழ்ந்தான். போதேந்திரரின் அதிஷ்டானத்தை மருதாநல்லூர் ஸ்வாமிகள் எப்படிக் கண்டுபிடித்தார். என்று தகவல் சொல்வார்கள். சுட்டெரிக்கும் காவிரியின் மணலில் படுத்துக்கொண்டே உருண்டு வருவாரார் தினமும் ஒரு நாள். மகிழ்ச்சி மேலிட ஸ்ரீபோதேந்திரரின் அதிஷ்டானம் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து விட்டேன். இங்குதான் அவரது ஜீவன் உறங்கிக் கொண்டிருக்கிறது. என்று கூத்தாடினார்.

அப்போது உடன் இருந்த அரசு அதிகாரிகளும் பக்தர்களும்-அதெப்படி இங்குதான் அவரது ஜீவன் உறங்குகிறது என்பதை சர்வ நிச்சியமாகக் கூறுகிறீர்கள்? ஆற்று மணலில் எல்லாப் பகுதிகளும் எங்களுக்கு ஒரே மாதிரிதானே காட்சி தருகிறது என்று கேட்டார்கள். அதற்கு மருதாநல்லூர் ஸ்வாமிகள். பக்தர்களே! படுத்துக்கொண்டே ஒவ்வொரு பகுதியிலும் என் காதை வைத்துக் கேட்டுக் கொண்டே வந்தேன். இந்த இடத்தில் மட்டும்தான் இன்னமும் ராம ராம எனும் நாம கோஷம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறது. எனவே, இங்குதான் அவரது ஜீவன் ராம நாமாவை உச்சரித்து வருகிறது என்று தீர்மானித்தேன் என்றார். அடுத்த கணம் அங்கு கூடி இருந்தார்கள் அனைவரும் மணற்பரப்பில் விழுந்து. போதேந்திரரை மானசீகமாகத் தொழுதார்கள். அதன்பின்தான் போதேந்திரருக்கு இங்கே அதிஷ்டானம் அமைக்கப்பட்டது. கிழக்கு நோக்கிய முகப்பில் அதிஷ்டானத்தின் பிரதான வாயில். முகப்பில் மூன்று நிலை ராஜகோபுரம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. தற்போது நித்ய பூஜை. அன்னதானம் என்று எதற்கும் இங்கே குறைவில்லை. தினமும் காலை ஆறு மணிக்கு சுப்ரபாத சேவை. எட்டு மணிக்கு உஞ்சவிருத்தி. ஒன்பது மணிக்கு ஆஞ்சநேயருக்கு அபிஷேகம். பதினொரு மணிக்கு அதிஷ்டான பூஜை. அதன் பிறகு சமாராதனை, அன்னதானம்.

Kannappa swmigal - கன்னப்பா சுவாமிகயில்













Courtesy : Thanks to tamil paper -- "the hindu - " 
Photos scanned by myself.











Kannappa Swamigal Temple, Kavankarai, Near Red Hills)