Tuesday, May 5, 2015

யாருக்கு அதிகச் சம்பளம் -- காஞ்சி மகா பெரியவர்


         யாருக்கு அதிகச் சம்பளம்?  
        ( காஞ்சி மகா பெரியவர்)




 ========================================

ஒருமுறை காஞ்சிப் பெரியவர் எண்ணாயிரம் என்ற ஊரைப் பற்றிக் கேட்டார். அது விழுப்புரத்தில் இருந்து 20-25 கி.மீ. தூரத்தில் உள்ளது. 
காளமேகப் புலவரின் சொந்த ஊர் என்று சொல்லப்படுவது. புகழ்பெற்ற விஷ்ணு ஸ்தலம். ஒரு காலத்தில் மிகப்பெரிய பல்கலைக்கழகமாக இருந்திருக்கிறது. நிறைய சாஸ்திரங்களை எல்லாம் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். பெரியவர் அது பற்றி நிறைய விஷயங்களை என்னிடம் சொன்னார். எந்தெந்த சாஸ்திரங்கள் எல்லாம் வேதத்தில் இருந்தது என்றெல்லாம் சொன்னார். அதை எழுதிக்கொள்ளக் கூட முடியவில்லை. அவற்றில் பல இப்போது இல்லை. என்னுடைய முன்னோடி டி.எஸ். ராமன் என்று ஒருவர் இருந்தார். அவர்தான் அங்கே கல்வெட்டுகளைப் படித்துப் பதிந்தார். அவற்றைப் பின்னால் வெளியிட்டோம். அங்கே கல்வெட்டில் ஆசிரியர்களுக்கு எவ்வளவு சம்பளம், மாணவர்களுக்கு எவ்வளவு சம்பளம் என்றெல்லாம் இருக்கிறது. அந்தக் கல்வெட்டு இன்றும் உள்ளது.

அந்தக் கல்வெட்டைப் பார்த்த பிறகு ஒருநாள் பெரியவரைச் சந்தித்தேன். பெரியவர், “யார் அப்போ முக்கியமான ஆசிரியர் என்று தெரிய வந்ததா? அப்போ எந்தப் பாடம் ரொம்ப முக்கியமானதா இருந்ததுன்னு தெரியுமா?” என்று கேட்டார். “யாருக்கு எவ்ளோ கொடுத்தார்கள் என்று குறித்துக் கொண்டுவா, தெரியும்.” என்றார்.

அப்படிச் செய்து பார்த்தபோது, வியாகரண பண்டிதருக்கு (இலக்கண ஆசிரியருக்கு) மிக அதிக ஊதியம். ஒரு பட்சத்துக்கு ஒரு பவுன். கூடவே சில கலம் நெல். இலக்கணம் சொல்லிக் கொடுப்பதும், படிப்பதும் கஷ்டம். அதை உயர்வாக மதித்ததால் அதற்கு அதிக ஊதியம். இப்படியே சம்பளம் படிப்படியாக ஒவ்வொரு பிரிவிற்கேற்ப குறைந்து கொண்டே வருகிறது. குறைவான சம்பளம் வேதம், வேதாந்தம் சொல்லிக் கொடுப்பவருக்குத்தான்.

பெரியவர் அதைக் கேட்டுவிட்டு, “சரிதான். வேதம் சொல்லிக் கொடுப்பவர்களை என்னை மாதிரி நினைத்துக் கொண்டு விட்டார்கள் போலிருக்கிறது” என்று சொல்லிச் சிரித்தார்.







Courtesy - Facebook : Krishnamoorthi Balsubramanian
Thanks for Mahaperiyava bhaktas for the scanned photos

No comments: