Saturday, February 7, 2015

காலத்தைக் கடந்தவர் ! ஸ்ரீ காஞ்சி காமகோடி ஆசாரிய ஸ்வாமிகள்





காலத்தைக் கடந்தவர் !
வைகாசி மாதம் உச்சிப் போது கத்ரி முடிந்தும் வெயில் உக்ரம் தணியவில்லை.
அப்போது லால்குடிக்கு அருகில், நீண்ட நாட்களுக்கு முன்பு ஸ்வாமிகள் முகாமிட்டிருந்த நேரம்.
தெருவில் நடமாட்டமே இல்லை. பறவைகள் கூட ஒடுங்கி இங்கொன்றும் அங்கொன்றுமாய்ப் பறந்தன. தலைச் சுமை விற்பனையாளர்கள் வெயிலுக்குப் பயந்து ஒதுங்கி விட்டனர். கானல் நீர் தரைக்கு மேல் அழகாக அசைவது தெரிந்தது.
அத்தகைய வெயிலில், ஸ்ரீ காஞ்சி காமகோடி ஆசாரிய ஸ்வாமிகள் தெருவில் விறுவிறுவென்று நடந்து சென்ற அரிய காட்சியை வெகு சிலர் தான் பார்த்திருக்க முடியும் ! நிலவொளியில் நடப்பது போல் ஸ்வாமிகள் மட்டும் அந்தக் கடும் கோடையில், தன்னந் தனியாக பாதரட்சை அணிந்து, கையில் தண்டமுடன் வேகமாக நடந்து சென்றார். அவருடன் வேறு யாரும் வரவில்லை. ஸ்வாமிகள் மட்டும் அப்படிப் போவது வழக்கமில்லை; மிக அபூர்வம்!
பின்னால் பத்தடி தள்ளி நாதசுரக்காரர் கையில் நாதசுரத்துடன் ஓடோடியும் வந்தார். அவருக்குப் பின்னால் தவுல்காரர்; ஸ்வாமிகளுக்குக் குடை பிடிப்பதற்காக ஒருவர் பட்டுக் குடையுடன் ஓடோடி வந்தார். மடத்து சிப்பந்திகள் கையில் வெள்ளிப் பாத்திரங்களுடன் அரக்க பறக்க ஓடி வந்தனர். இவர்கள் எல்லோரும் வெகு வேகமாக ஓடி வந்து, ஸ்வாமிகளுக்கு முன்னால் சென்றனர். தீ மிதிப்பது போல் பதை பதைக்கிற அந்த வெயிலில் ஸ்வாமிகள் வேகமாக நடந்து போனதும், பின்னால் பரிவாரங்கள் ஓடிவந்து கலந்து கொண்டதுமான அந்த நிகழ்ச்சியை யாரோ ஓரிருவர் தான் கண்டிருக்க முடியும்.
அந்தக் காட்சியானது முதலையிடம் சிக்கிக்கொண்ட யானையரசன், ‘ஆதிமூலமே‘ என்று கதறியவுடன், மறுகணமே ஸ்ரீமந்நாராயணன் வைகுண்டத்திலிருந்து தன் பரிவாரங்களெல்லாம் தொடர ஓடி வந்த மட்டற்ற காருண்யத்தை பார்த்தவர்களுக்கு நினைவூட்டியது.
ஸ்வாமிகளைத் தொடர்ந்து கடைசியாகச் சென்றவர்களிடம் விசாரித்த போது அவர் கூறிய விவரம்:
ஒரு பக்தர் வீட்டுக்கு 12 மணிக்கு ஸ்வாமிகள் பிக்ஷைக்கு வருவதாக ஏற்றுக் கொண்டிருந்தார்கள். மடத்திலே பூஜைகள் எல்லாம் முடிவதற்கு 11 :30 மணி ஆகி விட்டது. தர்சனத்திற்கு வந்த மக்கள் கூட்டம் கலையவில்லை. அவர்களை சமாளிப்பதே பணியாளர்களுக்கு சரியாக இருந்தது. மணி 11 : 50 ஆகியும் மடத்தின் பணியாளர்கள் புறப்படுவதாகக் காணவில்லை. ஸ்வாமிகளுக்கோ பக்தனை காத்திருக்க வைக்க மனம் இல்லை. யாரையும் எதிர் பாராமல் அந்த அன்பர் வீட்டுக்கு தாமே புறப்பட்டு விட்டார்கள்.
குறிப்பிட்ட நேரத்துக்கு எதையும் செய்யத் தெரியாத அல்லது செய்யும் பழக்கமில்லாதவர்கள் நாம்! நேரத்தையும் காலத்தையும் கடந்த ஸ்வாமிகளோ, குறிப்பிட்ட தருணத்தில் தாம் ஏற்றுக் கொண்ட கடமையை ஆற்றுவதில் தீவிர கவனமுடையவர்கள் என்பது மட்டுமல்ல….
ஸ்வாமிகளைப் போன்ற யதீஸ்வரர்களுக்கு உரிய நேரத்தில் பிக்ஷாவந்தனம் செய்வது மிகப் பெரும் புண்ணியம். அதே சமயத்தில் காலந் தாழ்த்தி அவர்களுக்கு பிக்ஷாவந்தனம் செய்விப்பது பலமடங்கு பாவமாகும்.
தமது பக்தர், அந்த அபசாரத்துக்கு ஆளாக ஸ்வாமிகள் தாமே காரணமாக இருந்துவிடக் கூடாது என்று கருணையுடன் கருதி இருக்கலாம் அல்லவா ?
பரமாச்சாரியார் காலத்தைக் கடந்தவர்; ஆனால் காருண்யத்தைக் கடந்தவர் அல்லவே !
--------

Thanks  : Facebook : Siva sankaran  & thanks for photos by Mahaperiyava bhaktas

ஸ்ரீ பெரியவாள் தன் முந்தைய குரு பற்றியும்


ஸ்ரீ பெரியவாள் தன் முந்தைய குரு பற்றியும்,தன்னைப்பற்றியும் சொன்ன ஸ்வாரஸ்ய நிகழ்வு-பெரியவாள் ரா.கணபதியிடம்" ரா.கணபதி நேரில் கேட்ட அற்புத நிகழ்வு. ஸ்ரீசரணாள் அந்த அண்ணாவைப் பற்றிப் பல கூறியதிலிருந்து: “நாங்கள்ளாம் கொட்டம் அடிப்போம். அண்ணா ஸாதுவா இருந்துண்டு இருப்பார். அவர் மௌன பார்க்கவ கோத்ரம். அதைச் சொல்லி, ‘அதுக்கேத்த மாதிரி மௌனி, மௌனி’ன்னு தமாஷ் பண்றது” என்றார். மாதாமஹர் வேதவித்வான் என்பது மட்டுமன்றி கந்தனின் பிதா நரஸிம்ஹ சாஸ்திரியும் அத்யயனம் செய்து வைதிக வாழ்க்கை நடத்தியவர். அதனால் அவர் எட்டு வயஸிலேயே பிள்ளைக்கு உபநயனம் செய்து வேதப் பயிற்சி தொடங்கிவிட்டார். “அவருக்கு முழு வித்யாஸமா, இங்கே எங்காத்திலேயானா அப்பா ஸர்க்கார் உத்யோகம். அதுபோக பாக்கி வேளையெல்லாம் ஆத்துல ஸங்கீதக் கச்சேரிதான். நானா ஸ்கூல், ஸ்கூலாத் திண்டாடிட்டு, கடைசில அமெரிக்கன் மிஷன் ஸ்கூல்ல படிச்சிண்டிருந்தேன். அண்ணாதான் பூர்ண வைதிகம், அண்ணாதான் பூர்ணவைதிகம்” என்று நெஞ்சார்ந்த மரியாதைத் தழதழப்புடன் கூறினார், உணர்ச்சிகளை வெகுவாகக் கட்டுப்படுத்தும் ஸ்ரீசரணர். “அவர் இங்க்லீஷ் படிப்பே படிச்சதில்லே. நாங்கள்ளாம் போட்டுப் பொளப்போம். அவருக்கு இங்க்லீஷ் தெரியலைனு சிரிச்சுக்கிண்டு சாந்தமாகவே இருந்துடுவார். “நாங்க ட்ராயர், ஷர்ட், கோட்டுக்கூட, காப் எல்லாம் போட்டுக்கொண்டு அமக்களப்படுத்தினாலும் அவருக்குக் கொஞ்சங்கூட அந்த ட்ரெஸ்ல சபலம் கெடயாது. பால்யத்திலேயே அப்டியொரு மனஸுக் கட்டுப்பாடு. சாந்தி, தாந்தி 2 ரெண்டுமே ஸ்வாபாவிகமா அவருக்கு இருந்தது. “பரங்கிப்பேட்டை ஸாயபுமார்கள்ளேருந்து நம்மாத்துல அப்பாவுக்கு ஸகல விதமான ஜனங்களும் friends. இந்த நாள் ஃபாஷனுக்கு நாங்க இருந்அ தினுஸு ரொம்ப தூரந்தான்; அதுவும் அம்ம வெறும் நாள்லயே ஏறக்கொறய தெவச மடி பார்க்கரவதான்-னாலும் அந்தக் கால தசைக்கு அப்பா இந்த மாதிரி விஷயத்துல கொஞ்சம் கொஞ்சம் ‘முற்போக்கு’ன்னு சொல்றேளே, அந்த மாதிரி(2. இப்டி இருக்கற எடங்கள்-ல நெருப்பாட்டம் ஆசாரமாயிருக்கறவாளுக்கு ரொம்ப ச்ரமமும் எரிச்சலுமாத்தானே இருக்கும்? அண்ணா செறு வயஸானாலும் நெருப்பாட்டம் மடி! ஆனாலும் எங்காத்துல எல்லாத்துக்கும் சாந்தமா நெகிழ்ந்து குடுத்துண்டு அவர் பாட்டுக்கு ஒதுங்கியிருப்பார்.” பிறிதொரு ஸமயம் சொன்னார். ” ஆசார்யளோட பீடத்துல ஒக்காரணும்னா எவ்வளவு வைதிக பரிசுத்தி வேணுமோ அவ்வளவும் எனக்கு முன்னாடி இருந்தாரே அவருக்குத்தான் இருந்தது. ஏன் பின்னே அத்தனை சுருக்க அவரை ஆசார்யாள் தங்கிட்டயே எடுத்துண்டுட்டார்னு யோஜிச்சு, யோசிச்சுப் பாத்திருக்கேன். முடிவா, என்ன தோணித்துன்னா, வரப்போற அவைதிக ப்ரளய ஸமுதாயத்துக்கு அத்தனை சுத்தரை ஆசார்யராப் பெற லாயக்கில்லை-னுதான் அவரை எடுத்துண்டு, என்னை அங்கே இழுத்து ஒக்காத்தி வெச்சிருக்கார் போலேயிருக்குன்னு!” அவர் சிரித்துக்கொண்டுதான் சொன்னார். கேட்டவர்களுக்குத்தான் நெஞ்சு தழுதழுத்தது. காந்தன் அத்யயனம் ஆரம்பித்துச் சிரித்து காலத்திலேயே அவருடைய பிதா பித்ருலோகம் ஏகிவிட்டார் ------------------------------------------ Courtesy : Facebook - Mahaperiyava bhakta and also photos.

இரண்டுமே சத்யந்தான்! ஒன்றுதானே! மகா பெரியவா


இரண்டுமே சத்யந்தான்! ஒன்றுதானே! பெரியவாளிடம் ஒரு பக்தர் வந்தார். அவருடைய முகம், எல்லோரையும் ஒரு மாதிரியாகப் பார்க்க வைத்தது. காரணம்? ஏதோ ஒரு வித skin disease அவரைத் தாக்கியதால், முகம் மட்டும் பயங்கர கருப்பாக ஆகியிருந்தது. பாவம். முகத்தை மறைத்துக் கொள்ள முடியுமா? “பெரியவாதான் எனக்கு ஒரு மருந்து சொல்லணும். வெளில போகவே ரொம்ப கஷ்டமா இருக்கு. போகாம இருக்கவும் முடியாது. எல்லா வைத்யமும் பண்ணிட்டேன்….” மஹா வைத்யநாதம் தீர்க்காத வியாதியா! “ஒங்காத்துப் பக்கத்ல ஆஞ்சநேயர் கோவிலோ, சன்னதியோ இருக்கோ?.” “இருக்கு பெரியவா…பெருமாள் கோவில்ல ஆஞ்சநேயர் சன்னதி இருக்கு” “ரொம்ப நல்லதாப் போச்சு. நீ தெனோமும் அந்த ஆஞ்சநேயருக்கு வெண்ணை சாத்தி, அதை வழிச்சு எடுத்துண்டு போயி, ஒன்னோட மூஞ்சி முழுக்க தடவிண்டு கொஞ்ச நேரம் ஊறணும். அப்றம் அதை சோப்பு கீப்பு போட்டு அலம்பாம, ஒரு துணியால நன்னா தொடச்சுக்கோ!…பண்றியா?” “பெரியவா உத்தரவு. கட்டாயம் பண்றேன் ” கொஞ்ச நாள் தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு சாற்றிய வெண்ணையை முகத்தில் தடவிக் கொண்டு வந்தார். கொஞ்சங்கொஞ்சமாக வெண்ணையை துடைத்து எடுக்கும்போது, கூடவே அட்டக் கருப்பும் சேர்ந்து வர ஆரம்பித்து, முகம் பளிச்சென்று ஆகிவிட்டது! தர்சனத்துக்கு மிகவும் சந்தோஷமாக வந்தார். “என்ன? த்ருப்தியா? சொஸ்தமாச்சா? எப்டி ஆஞ்சநேய வைத்யம்?..” என்று சிரித்தார். “ஆஞ்சநேய வைத்யம் இல்லே; ஆச்சார்யாள் வைத்யம்” என்று நன்றியும் சந்தோஷமும் கலந்து கூறினார் பக்தர். இரண்டுமே சத்யந்தான்! ஒன்றுதானே! Courtesy : facebook and thanks to Mahaperiyava bhaktas

"நீங்கள் எல்லாருமே திருடாள்!" மஹா பெரியவா


"நீங்கள் எல்லாருமே திருடாள்!" "சிரிக்க வைத்தும் சிந்தனையைச் சிறக்க வைத்தும்" ரா.கணபதி. சிவபெருமான் மீது பெரும் பக்தி கொண்டவர். சிவராத்திரி தினத்தில் (2012)சிவநாமம் கூறியபடி அவர் உயிர் பிரிந்தது ஆச்சரியம் என்றனர் உடன் இருந்த அன்பர்கள்.அவரைப் போற்றும் விதமாக வரும் சிவராத்திரி ஃபிப்ரவரி 17 வரை பெரியவா கட்டுரைகள் பழசு,புதுசு தினம் இரண்டு போஸ்டாகும். கட்டுரையாளர்;ரா.கணபதி. தட்டச்சு;வரகூரான் நாராயணன். குருநாதன் முகத்தில் குறும்பு நகை.விளையாட்டுப் பிள்ளை போல் கண்களில் ஓர் ஒளி.எதிரே இருந்தவரிடம் கேட்கிறார்; "இப்போ இங்கே இருந்து போறானே,அவன் பேர் என்ன?" "ஸ்ரீகண்டன்" "இல்லை,அப்படிச் சொன்னால் ஸர்க்கார் அபிப்பிராயத்துக்கு விரோதமாயிடும்." ஏன் என்று புரியாமல் அடியார் விழிக்கிறார். அவரை விழிக்க விட்டு சிறிது வேடிக்கை பார்த்த பின் பெரியவாள் சொல்கிறார். "திருக்கண்டன்-னு சொன்னாத்தான் ராஜாங்கத்தார் ஒப்புக்கொள்வர்." அடியாருக்குப் புரிந்து விடுகிறது.பெரியவாளோடு சேர்ந்து அவரும் சிரிக்கிறார். 'ஸ்ரீ' என்று வருமிடத்திலெல்லாம் 'திரு' என்று மாற்றவேண்டும்; ஸ்ரீரங்கம்,ஸ்ரீபெரும்பூதூர் போன்ற பெயர்களைத் திருவரங்கம்,திருப்பெரும்பூதூர் என்றே இனி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக அன்று காலைதான் செய்தி வெளியாகியிருந்தது. அதனால் 'ஸ்ரீகண்டன்' என்று மட்டும் சொல்லலாமா? பெரியவாள், பெரியவாள், "இந்த இடத்திலே ஸ்ரீகண்டனை திருக்கண்டன்-னு சொல்றது தப்பு; தெரியுமோ?" என்று கேட்கிறார். அது எப்படித் தப்பு என்பதையும் விளக்குகிறார். "ஸ்ரீ என்றால் லக்ஷ்மி என்று மாத்திரம் நினைத்துக் கொண்டு,'ஸ்ரீ'யைத் 'திரு' ஆக்கு என்கிறார்கள். ஆனால் 'ஸ்ரீ' என்பதற்கு வேறே பல அர்த்தங்களும் உண்டு. பாம்பு,பாம்பின் விஷம் இதற்கெல்லாங்கூட 'ஸ்ரீ' என்று பெயர்.'மங்கள காரியங்களுக்கு உதவாத செவ்வாய்க் கிழமைக்கு 'மங்களவாரம்' என்று பெயர் வைத்த மாதிரி பாம்பை 'ஸ்ரீ' என்று சொல்வதுண்டு. "'ஸ்ரீகண்டன்' என்றால் லக்ஷ்மியைக் கண்டத்தில் (கழுத்தில்) வைத்துக் கொண்டிருக்கிற மஹா விஷ்ணு என்று அர்த்தமில்லை. மஹாவிஷ்ணு லக்ஷ்மியை வக்ஷ்ஸ்தலத்தில் (மார்பில்)தான் வைத்துக் கொண்டிருக்கிறாரே தவிரக் கண்டத்திலே அல்ல. ஸ்ரீகண்டன் என்றால் ஸரியான அர்த்தம், ஸ்ரீ என்கிற பாம்பைக் கழுத்தில் போட்டுக் கொண்டிருக்கிற அல்லது ஆலஹால விஷத்தைக் கழுத்தில் வைத்துக்கொண்டிருக்கிற நீலகண்டனான பரமசிவன் என்பதே. இப்படி அறிவுச்சுடர் தெறித்த பெரியவாளின் முகத்தில் மறுபடியும் நகைச் சுவையின் பச்சொளி மேவியது. "திருக்கண்டனோ இல்லையோ, அவன் திருடன்" என்றார். மேலும் பரபரப்பூட்டும் விதத்தில், "நீங்கள் எல்லாருமே திருடாள்!" என்றார். "புரியவில்லையா? சீமான்,சீனிவாஸன்-னு எல்லாம் சொல்கிறது எதை? ஸ்ரீமான்,ஸ்ரீனிவாஸன் என்பதைத் தானே? 'ஸ்ரீ' தமிழில் 'சீ" ஆகுமென்றால் "சீ"யை யெல்லாமும் இனிமேல் 'திரு' என்றுதானே சொல்லணும்? என்னை 'ஜகத்குரு' என்று டைட்டில் கொடுத்து வைத்திருக்கிறீர்களோல்லியோ? அதனால் நீங்களெல்லாம் என் சீடர்கள்; சீ-டர்கள்;அதாவது திரு-டர்கள்." விழுந்து விழுந்து சிரிக்கிறார்.அவர் மட்டுமா? அத்தனை பேருமே! ஆனால் சிரிப்பிலேயே இதுபோன்ற மொழி பெயர்ப்புகளைக் குறித்து அவர்கள் சிந்தனையைச் சிறக்கவும் வைத்து விடுகிறார் courtesy : Varagooran narayanan - facebook , Photos : thanks to mahaperiyava bhaktas weblinks

ஜோஷி என்ற வடக்கத்தி பையன் பெரியவாளிடம் ரொம்ப பக்தி


Courtesy : Sivasankaran - facebook and mahaperiyava bhaktas for photos. ஜோஷி என்ற வடக்கத்தி பையன் பெரியவாளிடம் ரொம்ப பக்தி. அவனுக்கு பெரியவாளை தரிசனம் பண்ணியதிலிருந்து ஊருக்கு போகவே மனசில்லை. அவன் நமஸ்காரம் பண்ணிவிட்டு எழுந்ததும் அவனைப் பற்றி விஜாரித்து விட்டு, "இந்த ஊர்ல இருக்கற கோவில் எல்லாத்தையும் தரிசனம் பண்ணிட்டு ஊருக்கு போ" என்றார். பாலக்ருஷ்ண ஜோஷி சற்று தைரியமாக "நன்னா புரியறது பெரியவா. உங்க உத்தரவுப்படியே எல்லாக் கோவிலையும் தரிசனம் பண்ணிட்டு, திரும்ப மடத்துக்கே வந்துடறேன்" பெரியவா லேசுப்பட்டவரா என்ன? சிரித்துக் கொண்டே " அதான் பிரசாதமெல்லாம் இப்பவே குடுத்துடப் போறேனே! திரும்ப எதுக்கு மடத்துக்கு வரப் போறே? ஓஹோ.......ஸ்வாமி தரிசனம் பண்ணிட்டு மத்யான்னம் மடத்துல சாப்டுட்டு பஸ் ஏறலாம்னு முடிவு பண்ணிட்டியாக்கும்? பேஷ்.! பேஷ்!" என்றார். ஜோஷியின் கண்களில் கண்ணீர் கட்டி நின்றது "ஏம்பா அழறே?" "கொஞ்ச நாளைக்கு உங்களோடையே இருக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு. அதனாலே............" "என்ன.....மடத்துலேயா? இங்க சன்யாசிகள்னா தங்குவா! ஒன்னாட்டம் பசங்களுக்கு இங்க என்ன வேலை? ஸ்வாமி தரிசனம் பண்ணிட்டு ஊர் போய் சேரு" சாஷ்டாங்கமாக பெரியவா சரணத்தில் விழுந்தான் "பெரியவா அப்படி சொல்லப்படாது. நேக்கு மடத்துல தங்கி, ஒங்களுக்கு கொஞ்ச நாள் கைங்கர்யம் பண்ணனும்னு ரொம்ப ஆசையா இருக்கு" "நேக்கு கைங்கர்யம் பண்ண நெறைய பசங்கள் இருக்கா. நீ கெளம்பற வழியப் பாரு" ஜோஷி மடத்தைவிட்டுப் போகவில்லை. நான்கு நாட்கள் விடாமல் பெரியவா கண்ணில் படுவதுபோல், அவர் அறை வாசலில் கால் கடுக்க நிற்பான், அவர் போகுமிடமெல்லாம் போவான். ஐந்தாம் நாள் "நீ இன்னும் மெட்ராஸ் போகலை?" தெரியாதவர் போல் கேட்டார். "இல்லை பெரியவா. நான் மெட்ராஸ்லேர்ந்து கெளம்பறச்சே ஒரு சங்கல்பம் பண்ணிண்டு கெளம்பினேன்" "அப்படி என்ன சங்கல்பமோ?" கிண்டலாக கேட்டார். "கொஞ்ச காலம் உங்களோட பாதாரவிந்தங்கள்ள சேவை பண்ணறதுதான் பெரியவா" "சாத்தியமில்லாத சங்கல்பத்தை பண்ணிக்கப்படாது" அங்கிருந்து போய் விட்டார். ஜோஷி மனஸ் தளரவேயில்லை. ரெண்டு நாள் கழித்து தரிசனம் குடுத்துக் கொண்டிருந்தபோது அவனைப் பார்த்த பெரியவாளின் மனஸ் நெகிழ்ந்தது. "ஒங்கப்பாவுக்கு உத்தியோகமா? வியாபாரமா?" "வைர வியாபாரம் பெரியவா" "ஒன்னோட குணத்துக்கு பிற்காலத்ல நீயும் பெரியா வைர வியாபாரியா வருவே. அப்போ......நீ நேர்மையான வைர வ்யாபாரிங்கற பேரை வாங்கணும். சரி! சரி! ஒன் ஆசைப்படியே கொஞ்ச நாள் மத்த பசங்களாட்டம் கைங்கர்யம் பண்ணிட்டு போ" பச்சைக் கொடி காட்டினார் பெரியவா. இரவில் பெரியவா சயனிக்கும் அறைக்குள்ளேயே படுத்துக் கொள்ளும் பாக்யம் பெற்றான். ஒரே சந்தோஷம்! மூன்றாம் நாள் பெரியவா சொன்னார் " பாலக்ருஷ்ண ஜோஷி.....நீ இனிமே ஒரு கார்யம் பண்ணி ஆகணும்! பகல் பூர எங்கூட இருந்து மத்தவா மாதிரி கைங்கர்யம் பண்ணு. ராத்திரி வேளைல மட்டும் நீ இங்க படுத்துக்க வேணாம்......." சொல்லி முடிப்பதற்குள் பதறிப்போன ஜோஷி "பெரியவா அப்படி மட்டும் சொல்லிடாதீங்கோ! நானும் மத்தவா மாதிரி இந்த ரூம்லேயே படுத்துக்கறேன். க்ருபை பண்ணணும்" அழுதான். "நான் காரணமாத்தான் சொல்றேன். நீ கேக்கணும்" "சரி கேக்கறேன்" மனசில்லாமல் ஒத்துக் கொண்டான். "அப்டி சொல்லு. ராத்திரி நேரா சமையல்கட்டுக்கு போ! அங்க அடுப்புக்கு பக்கத்ல ஒரு பெரிய மர பெஞ்ச் கெடக்கும். அதுல சௌகர்யமா படுத்துண்டு தூங்கு. விடியக்காலம் எழுந்து பல் தேச்சு, ஸ்நானம் பண்ணிட்டு இங்க கைங்கர்யத்துக்கு வந்துடு.......என்ன புரியறதா?" கறாராக கட்டளையிட்டார். மற்ற பையன்கள் இங்கே இருக்க, தன்னை மட்டும் சமையல்கட்டுக்கு ஏன் அனுப்பினார்? மனஸ் பாரமாக, ஒரு பையனிடம் "ஏண்டா, உங்கள்ள யாரையாவது பெரியவா இதுவரைக்கும் ராத்திரி கோட்டை அடுப்பங்கரைல போய் தூங்க சொல்லியிருக்காளா?" "சேச்சே! எங்க யாரையும் பெரியவா அப்படி சொன்னதே கெடையாது" முகத்தை சுளித்துக் கொண்டு பதில் சொன்னான். ஜோஷிக்கு ஒரே அவமானம். கேவி கேவி அழுதுகொண்டே வெறிச்சோடிக் கிடந்த அடுப்பங்கரை பெஞ்சில் படுத்துக் கொண்டான். ஒன்றும் சாப்பிடவில்லை. துக்கம் தொண்டையை அடைத்தது. விடிந்து ஸ்நானம் பண்ணிவிட்டு, காமாக்ஷி அம்மன் கோவில் சந்நிதியில் உட்கார்ந்து கொண்டான். பெரியவா கைங்கர்யத்துக்கு போகணும் என்று தோன்றவில்லை. மத்யான்னம் மடத்துக்கு வந்து சாப்பிட்டான் திரும்ப காமாக்ஷியிடமே போய் உட்கார்ந்தான். இரவு மடத்து அடுப்பங்கரை. பெரியவா பக்கமே போகவில்லை. மூன்றாம் நாள் காலை பெரியவா ஒரு பையனிடம் "ஏண்டாப்பா, ரெண்டு நாளைக்கு முன்னாடி பாலக்ருஷ்ண ஜோஷின்னு ஒரு பையன் கைங்கர்யம் பண்ண வந்தானே.........அவனை காணோமே? எங்கடா போய்ட்டான்? ஒருவேளை சொல்லிக்காம மெட்ராஸ் போயிட்டானோ?" "இல்லே பெரியவா. இங்கதான் இருக்கான்" "பின்ன ரெண்டு நாளா காணோமேடா..........போய் அவனை அழைச்சிண்டு வா". வந்தான். பெரியவா முன்னால் கூனிக்குறுகி நின்றான். "வா கொழந்தே! எங்க ரெண்டு நாளா ஒன்னை இந்தப் பக்கமே காணோம்? ஒடம்பு கிடம்பு சரி இல்லியோ?". பதிலே இல்லை. குழந்தைத்தனமான சிரிப்புடன் "என்கிட்டே ஏதாவது வருத்தமோ........கோபமோ?" "கோபமெல்லாம் இல்லை பெரியவா.........மனசுக்கு கொஞ்சம் வருத்தம்" "வருத்தமா! எம்பேர்லையா!!!" ஆச்சர்யமாக கேட்டார். "சொல்லு சொல்லு. ஒன் வருத்தத்தை நானும் தெரிஞ்சுக்கணுமோல்லியோ!......" "வேற ஒண்ணும் இல்லை பெரியவா! மொதல் ரெண்டு நாள் என்னையும் ராத்ரிலே மத்த பையன்களோட இங்கியே படுத்துக்கச் சொன்னேளா.....ரொம்ப சந்தோஷமா இருந்தது. திடீர்னு முந்தாநாள் கோட்டை அடுப்புக்கு பக்கத்ல பெஞ்ச்ல போய் படுத்துக்கோ' ...ன்னு சொல்லிட்டேளே! நான் இவாள மாதிரி இந்த பக்கத்து பிராமணனா இல்லாம, குஜராத்தி பிராமணனா இருக்கறதாலே என்னை அங்க போய் படுத்துக்கச் சொல்லிட்டேளோ.ன்னு மனசுக்கு ரொம்ப கஷ்டமாயிடுத்து. அதான் ரெண்டு நாளா இங்க வரலை. என்னை மன்னிச்சுடுங்கோ பெரியவா" கதறிவிட்டான். பெரியவா நிலைமையை புரிந்து கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார். மிச்ச பசங்களை வெளியே போகச் சொன்னார். பரம வாத்சல்யத்துடன் ஜோஷியை பக்கத்தில் கூப்பிட்டு " அடடா.......பாலகிருஷ்ணா........நான் ஒன்னை கோட்டை அடுப்புக்கிட்ட பெஞ்ச்ல படுத்துக்க சொன்னதுக்கு, நீ இப்பிடி அர்த்தம் பண்ணிண்டுட்டியா? அடப்பாவமே........நான் அப்டி எல்லாம் நெனச்சுண்டு அதை சொல்லலேப்பா......சின்னப் பையன் தப்பாப் புரிஞ்சுண்டுட்டியே ! இதுக்கு விசேஷ காரணமெல்லாம் இல்லேடா ஜோஷி........நல்ல வேளை சொன்னியே...அதுக்கு ஒரே காரணம். இதோ பாருடா"......என்று கூறி, தான் இடையில் கட்டியிருந்த வஸ்த்ரத்தை தொடை வரை நகர்த்தி காட்டினார். ஆச்சார்யாளின் தொடைகளில் அடை அடையாய் கொசுக்கடி தழும்புகள்!! "கொழந்தே! ஜோஷி........இதெல்லாம் என்னன்னு தெரியறதோ நோக்கு? ராத்திரி வேளைல கொசு கடிச்ச தழும்பு. நான் ஒரு சந்நியாசி. பொறுத்துக்குவேன். நீ....கொழந்தை! ரெண்டு நாள் ராத்திரி நீ கொசுக்கடில ரொம்ப ஸ்ரமப்பட்டதை பாத்தேன். என்னாட்டம் நோக்கும் சேப்பு [சிவப்பு] ஒடம்பு. அவஸ்தைப்படாம நீயாவது சௌக்யமா தூங்கட்டுமேன்னுதான் பத்ரமான எடத்துக்கு ஒன்னைப் போகச் சொன்னேன். அடுப்பு உஷ்ணத்துக்கு கொசு அங்க எட்டிக் கூட பாக்காது! நன்னா தூங்குவே! நீ என்னடான்னா........வேற விதமா, விபரீதமா நெனச்சுண்டுட்டியே!......" பெரியவா முடிக்கவில்லை.."ஹோ" வென்று கதறி அழ ஆரம்பித்துவிட்டான் ஜோஷி. "பெரியவா என்னை மன்னிச்சேன்னு சொல்லுங்கோ. ஒங்களோட கருணையை புரிஞ்சுக்காம நான் ஏதேதோ ஒளறிட்டேன்" காருண்யமூர்த்தி கைதூக்கி ஆசிர்வதித்தார் "ஜோஷி. பிற்காலத்ல நீயும் சிறந்த வைர வியாபாரிய வருவே. ஞாயமான வெலைக்கு வித்து நல்லபடி வியாபாரம் பண்ணு" ஆசிர்வதித்தார்

தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) -- பெரியவா


Courtesy : Halasya Sundaram Iyer -- Facebook Thanks : Mahaperiyava bhaktas for photos தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) வேதம் பிராம்மணர் கடமை இவ்வளவு தூரம் கேட்டதற்குப் பிரயோஜனமாக, பிராம்மணர்கள் எல்லாரும் ஏதாவது ஒரு காரியம் வேதத்தை ரக்ஷிப்பதற்காகப் பண்ணவேண்டும். நித்தியம் பிரம்ம யக்ஞம் பண்ண வேண்டும். பஞ்ச மஹா யக்ஞங்களில் அது ஒன்று. இங்கே 'பிரம்ம' என்றால் வேதம் என்று அர்த்தம். அகண்ட தீபம் போல் மந்திர சக்தியானது நம்மிடம் அணையாதிருப்பதற்காக நாம் அதைச் செய்ய வேண்டும். நாம் அத்தியயனம் பண்ணவேண்டிய சாகையின் மஹரிஷி எவரோ அவருக்குத் தர்ப்பணம் பண்ணவேண்டும். பண்ணி விட்டு இரண்டு அக்ஷரமாவது வேத அத்யயனம் பண்ண வேணடும். அதுவும் முடியாவிட்டால், காயத்ரீ ஜபத்தையாவது விடாமல் செய்ய வேண்டும். காயத்ரீ வேதத்தின் ஸாரமானது. காயத்ரீயை உபதேசம் பண்ணிக் கொண்ட பின்பு தான், வேதாக்ஷர உச்சாரணம் செய்ய வேண்டுமென்று சொல்லப்பட்டிருக்கிறது. அத்தகைய காயத்ரீயை ஸஹஸ்ராவிருத்தி [ஆயிரம் முறை ஜபிப்பது] தினந்தோறும் செய்யவேண்டும். கடைசி பக்ஷம் பத்தாவது பிரதி வேளையும் செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. காயத்ரீ மந்திரம் சித்த சாந்திக்குக் காரணம். அதனுடைய தேவதை சூரியன். சூரியனுக்கு உரிய நாளாகிய ஞாயிற்றுக்கிழமை, இந்த காலத்தில் எல்லோருக்கும் லீவு நாளாக இருக்கிறது. ஆகையால் அன்று மட்டுமாவது விடியற்காலம் 4-மணிக்கு எழுந்து எல்லாரும் ஸஹஸ்ராவிருத்தி காயத்ரி ஜபம் பண்ணவேண்டும். செய்தால் க்ஷேமம் உண்டாகும். புருஷஸூக்தம், ஸ்ரீ ஸூக்தம், ருத்ரம் முதலான வேத ஸூக்தங்களையாவது எல்லா பிராம்மணர்களும் கற்றுக் கொள்ள வேண்டும். Courtesy : Halasya Sundaram Iyer -- Facebook Thanks : Mahaperiyava bhaktas for photos

விதண்டாவாதியும் மஹாபெரியவாளும்"


விதண்டாவாதியும் மஹாபெரியவாளும்" (கோபப் புயலாய் இருந்த பெரியவா அருட் தென்றலாய் மாறிய நிகழ்ச்சி) ரா.கணபதி. சிவபெருமான் மீது பெரும் பக்தி கொண்டவர். சிவராத்திரி தினத்தில் (2012) சிவநாமம் கூறியபடி அவர் உயிர் பிரிந்தது ஆச்சரியம் என்றனர் உடன் இருந்த அன்பர்கள்.அவரைப் போற்றும் விதமாக வரும் சிவராத்திரி ஃபிப்ரவரி 17 வரை பெரியவா கட்டுரைகள் பழசு,புதுசு தினம் இரண்டு போஸ்டாகும். சொல்லின் செல்வர் ஸ்ரீகாஞ்சி முனிவர். ஆசிரியர்------ஸ்ரீ ரா. கணபதி. ஓர் இரவு பெரியவாளிடம், ஒரு வெளியூர் அடியார், மறுநாள் அதிகாலை ஊருக்குப் புறப்படவிருப்பதாகச் சொல்லிப் பிரஸாதம் கேட்டபோது, " நாளைக்கு விடிகாலை ஊருக்குப் போறயா? ஸ்ரீராமநவமியாச்சே?, ஒண்ணு, வந்தது வந்தே, இங்கே மடத்துல ராமர் பூஜைக்கு இருக்கணும், இல்லாட்டா, இன்னி ஸாயங்காலம் ரயிலுக்கே போயாவது இருக்கணும். அப்ப ஊருக்குப் போய்ச்சேர்ந்து ஆத்துலயாவது பூஜை பண்ண முடிஞ்சிருக்கும். ஆத்தையும் கோட்டை விட்டுட்டு, இங்கேயும் இல்லாம, நாளை காலம்பர பஸ்ஸிலே போறேங்கறியே!" என்றார் ஸ்ரீசரணர். 'அடியார்' என்று மரியாதையை உத்தேசித்துச் சொல்லப்பட்ட அந்நபர் ஒரு விதண்டாவாதி. மரியாதை முறை பாராது ஜகத்குருவிடமும் விதண்டை செய்பவர். அதற்கேற்பவே இப்போது, " நான் வேதத்துல ஸ்பஷ்டமா சொல்லியிருக்கிறதுகளைத்தான் பண்ணுகிறது. வேதந்தானே நமக்கு எல்லாம்? அதுல இல்லாதது எதுக்கு? வேதத்துல ராமனை, க்ருஷ்ணனைப் பத்தியெல்லாம் எங்கே இருக்கு? வேதம் ஏற்பட்டு, எத்தனையோ காலம் கழிச்சுப் பொறந்து அதைப் பின்பத்தினவாதானே அவாளும்? அதனால, ராமர், க்ருஷ்ணர் சமாசாரமெல்லம் எதுவும் நான் எடுத்துக்கிறதில்லே. ராமநவமியும் பண்றதில்லே. ராமர் படம் கூட ஆத்துல கிடையாது." என்றார். அப்படியானால், அவர் வேதோக்த கர்மாக்கள் செய்வாரா என்றால் அதுவும் மாட்டார்! இது ஸ்ரீசரணாளுக்கா தெரியாது? 'புரு, புரு, புரு' என்று ஒரு வேகம் ஏறி, பெரியவர்தானா பேசுகிறாரென வியப்புறுமாறு பெரியவர் விளாச ஆரம்பித்தார்! "ஓ! வேதத்துல இல்லாத எந்த ஒண்ணும் ஒனக்குத் தள்ளுபடியாடாப்பா? ஸரி, அப்ப கார்த்தால எழுந்த ஒடனே டூத்பேஸ்ட், அப்புறம் காபி மூஞ்சில் முழிக்கறையே, டூத்பேஸ்டும் காபியும் வேதத்துல சொல்லியிருக்கோ? அப்புறம் சோப்புத்தேச்சுண்டு குளிக்கறயே, அந்த சோப்பு? ஒன் ஆம்படையா க்ரைண்டர்ல அறைச்சு, ப்ரெஸ்டீஜ்--ல சமைச்சதைச் சாப்படறயே, அந்த க்ரைண்டரும் குக்கரும் வேதத்துல சொன்னதுதானாடாப்பா? எல்லாத்தையும் விட, 'ஆபீஸ்'னு, அதைத்தான் ஜீவனோபாயத்துக்கே வழியா வெச்சுண்டு போறியே, ஸூட் மாட்டிக்கிண்டு! ஸூட் வேதத்துல இல்லேங்கறது இருக்கட்டும். மொதலுக்கே மோசமா வேதத்துலே இப்படித்தான் ப்ராமண ஜாதிக்காரனை ஆஃபீஸ் உத்யோகம் பார்க்கச்சொல்லியிருக்கோ? ஆஃபீஸுக்கு ஸ்கூட்டரோ, பஸ்ஸோ, எலெக்ட்ரிக் ட்ரெயினோ எதுவோ ஒண்ணுல போறியே, அந்த வாஹனாதிகள் எந்த வேதத்துல இருக்கு?" என்றார். அதோடு விட்டரா? மேலும் மேலும், மின்விளக்கு, மின்விசிறி, ஸினிமா, கிரிக்கெட் என்பதாக அடியாரது அனுபவத்திற்கு உரிய பலவற்றை அடுக்கிக் கொண்டே போய், அது ஒவ்வொன்றும் 'வேதத்தில் சொல்லியிருக்கா/" என்றோ, 'எந்த வேதத்தில் சொல்லியிருக்கு' என்றோ முத்தாய்ப்பு வைத்தார்! முடிவாக, " வேதத்துல எங்கேயும் 'டைரக்'டா இந்த மாதிரி ஒரு அத்வைத ஸன்யாஸி, மடம்னு வெச்சுண்டு 'பப்ளிக்' பூஜை பண்ணீண்டு, பூஜை ப்ரஸாதம் குடுக்கலாம்னு இருக்கறதா தெரியெல்லே--ன்னு கூட உன் மாதிரி மேதைகளோட ஆராய்ச்சியில ஏற்படலாம்! அதனால், நீ இப்ப எங்கிட்ட கேக்கற ப்ரஸாதமே வேதத்துல சொல்லாததுதான்--னு ஆகறது. போய்ட்டு வா!" என்றாரே பார்க்கலாம்! விதண்டாவாதி ஆடியே போய் விட்டார்! தடாலென்று தண்ட நமஸ்காரம் செய்து ஸ்ரீசரணரிடம் தம்மை க்ஷமித்து நல்லறிவு தர வேண்டினார்! கோபப்புயலாயிருந்த ஸ்ரீசரணாள் அக்கணமே அருட்தென்றலாகிக் கூறலானார். வேதகாலத்திற்குப் பிற்பட்டும் அதில் நேராக உள்ளவற்றை அநுஸரித்தே, அந்த விருக்ஷத்துடைய புதுப் புதுக் கிளை, இலை என்றெல்லாம் காலம் தோறும் அநேகம் ஏற்பட்டு வைதீக ஸம்ப்ரதாயத்தில் அங்கமாகக் கலந்து விட்டன. அதெல்லாமும் வேதமாகவே மதித்து, போற்றி, நாமெல்லாம் அநுஸரிக்க வேண்டியவைதான். மூலமாக ஒரு 'தியரி' இருந்து அதை அப்புறம் காலம் தோறும் 'அடாப்ட்' பண்ணிப் புதுப் புது 'டிஸ்கவரி' கள் செய்தால் அதெல்லாவற்றையும் கூட அந்தத்துறையைச் சேர்ந்ததாகவேதானே எடுத்துக் கொள்கிறோம்? அப்படியும் வேத தாத்பரியங்களை ப்ரயோஜனப்படுத்திப் பிற்காலங்களில் அநேகம் சேர்ந்து தற்போதுள்ள ஹிந்து மதம் என்கிறதை ரூபம் பண்ணீயிருக்கிறது----என்பதை தீர்க்கமாக விளக்கி விட்டுத் தொடர்வார்: "இது ஒரு அம்சம். இன்னொரு அம்சம், வேதத்தில் என்னென்ன கார்யம் சொல்லியிருக்கோ, அநுமதிச்சிருக்கோ, அந்தக் கார்யங்களுக்காகவே, ஆனா வேதத்தில் சொல்லாத உபகரணங்கள் பிற்காலங்களீல் கண்டு பிடிச்சிண்டே வந்திருக்கா. அத்யயனம், யக்ஞம், பூஜை, ஜபம், த்யானம் முதலான அநுஷ்டானங்கள் பண்றதைப்பற்றி மட்டும் வேதத்தில் சொல்லி நிறுத்திடலை. எழுந்ததும் தந்த தாவனம்--னு பல் தேய்ச்சுக்கறது, அப்புறம் ஸ்நானம் பண்றது, சாப்படறது, பானம் பண்றது, ஸ்வதர்ம கர்மா பண்ணி ஸம்பாதிக்கறது, வாழ்க்கை--ன்னு ஏற்பட்டிருக்கிறதில அங்கே இங்கே ஓடறது, ப்ரயாணம் பண்றது, 'ரிக்ரியேஷன்' னு கொஞ்சம் உல்லாஸமாயிருக்கறது---எல்லாமே வேதத்துல சொன்ன, அநுமதிச்சிருக்கற கார்யந்தான். ஆனா அந்தக் கார்யம் நடத்திக்க அன்னிக்கு இருந்த உபகரணம் போய், இன்னிக்கு வேறே வந்திருக்கலாம். அன்னிக்குக் குதிரை மேலேயோ மாட்டு வண்டியிலேயோ ப்ரயாணம் பண்ணிணா--ன்னா இன்னிக்கு ஸ்கூட்டர், எலெக்ட்ரிக் ட்ரெயின் வந்திருக்கலாம். இதுகளை வேதத்தில சொன்னபடியே இருந்தாத்தான் ஏத்துக்கிறதுன்னு ஒரு 'பாலிஸி'யா வெச்சுண்டு தள்ளுபடி பண்ண வேண்டியதில்லே! இந்த உபகரணங்களில் எது எது வேதத்தின் 'ஸ்பிரிட்' டுக்கு விருத்தமாயிருக்கோ[ விரோதமாகயிருக்கின்றனவோ] அநாசாரத்தை உண்டாக்கறதோ அதையெல்லாம்தான் தள்ளுபடி பண்ணணும். டூத்பேஸ்ட்லேந்து, காபிலேந்து ஆரம்பிச்சு, அநாசாரம் கலந்ததையெல்லாம்தான் நிஷேதிக்கணும் [ விலக்க வேண்டும் ] . சிலது ஸந்தர்ப்பக் கொடுமையால் சேந்த தவிர்க்க முடியாத அநாசாரமாயிருக்கு---ப்ராமணன் வைதீக வ்ருத்தியை [ தொழிலை ] விட்டுட்டு, ஆஃபீஸ், கம்பெனி--ன்னு உத்யோகம் பார்க்கறது இப்படி ஏற்பட்டு விட்டதுதான். இது பெரிய்ய அநாசாரந்தான், பெரிய அபசாரமே! ஆனாலும் என்ன பண்ணலாம்? தவிர்க்க முடியாததா ஆயிருக்கே? அதனாலே, பெருமை பெருமையா, 'நாமாக்கும் பெரிய உத்யோகம் பண்ணி, வாரி வாரிக் குவிச்சுக்கிறோம்! இன்னும் பெரிசாப் பண்ணி ஜாஸ்தியா குவிச்சுக்கணும்'னு பறக்காம, பகவான் கிட்ட மன்னிப்பு கேட்டுண்டு, 'இப்படி இருக்கே'ன்னு தாபப்பட்டுண்டுதான், வாழ்க்கையோட அத்யாவஸ்யத் தேவைக்கானதை மட்டும் உத்யோகம் பண்ணி ஸம்பாதிச்சுக்கணும். நெறைய 'டயம்' ஒழியும்படிப் பண்ணிண்டு அந்த டயத்துல வேதத்யயனாதிகள், அநுஷ்டானாதிகள் பண்ண ஆரம்பிக்கணும். ரிடயர் ஆன விட்டு, வேதத்துக்கே வாழ்க்கையை அர்ப்பணம் பண்ணணும். அப்படி இப்பவே ஸங்கல்பம் பண்ணிக்கணும். "ராமநவமி, கோகுலாஷ்டமி, இன்னும் இப்ப இருக்கிற ரூபத்துல ஹரிகதை, பஜனை--ன்னெல்லாம் வேதத்துல இல்லாததுகளும் வேத வழியில் நாம சேர்கிறதற்கு ரொம்ப ஒத்தாசை பண்றவைதான். வேதகாலத்துப் புருஷ ஸிம்ஹங்களா இல்லாமப் பூஞ்சையா வந்திருக்கிற பின்தலைமுறைக்காராளை அவா மனஸுக்கு ரஞ்சகமான மொறையிலேயே வேத வழிக்குக் கொண்டு சேர்த்துப் பரோபகாரம் பண்ணிண்டு வந்திருக்கிறது இதுகள்தான். ஸங்கீதக் கச்சேரியில பல்லவி பாடறதுன்னு சன்ன பின்னலாத் தாளத்தை வித்யாசப்படுத்தறதைத் தேர்ந்த வித்வான்கள்தான் ரொம்பவும் ரஸிச்சுத் தாங்களும் பங்கு எடுத்துப்பா. மத்தவாளுக்கு அது கடபுடாதான்! வைதீகாநுஷ்டானங்கள் பூஞ்சையான நமக்குக் கொஞ்சம் அப்படி இருக்கறதுதான்! பல்லவிக்கு முன்னாடி ஸர்வஜன ரஞ்சகமா அநேக கீர்த்தனைகள், பல்லவியிலேயே ராகமாலிகை ஸ்வரம், அப்பறம் துக்கடான்னு கச்சேரி பத்ததியில் நன்னா இளக்கிக் குடுத்து லேசு பண்ணி எல்லாரையும்˜ப்ளீஸ்™ பண்ணிட்டா, அதனாலேயே அவாளும் இந்தப் பல்லவி ஸமாசாரம் என்னன்னு நாமுந்தான் தெரிஞ்சுப்போமேன்னு ˜இன்ட்ரெஸ்ட்™ எடுத்துக்கறாளோல்லியோ? அந்த மாதிரிதான் ராமநவமியும், ஜன்மாஷ்டமியும், பஜனையுமே நமக்கெல்லாமும் ரஞ்சகமாயிருந்துண்டு, அதோட, இதுக்கெல்லாமும் வேதந்தானே மூலம்கிறா? அதுலயுந்தான் நமக்குப் பரிசயம் வேணும்னு நம்மை உத்ஸாகப்படுத்தற இன்ஸென்டிவ்கள்! பல்லவியானாலும், துக்கடாவானாலும் எல்லாம் ஸங்கீதம்தானே? அந்த மாதிரி, வாஜபேய யாகத்துலேந்து, ஹரி போல்வரை எல்லாமே ஒரே ஸனாதன தர்மத்தின் ஸ்பிரிட்டில் தோணினதுதான். துக்கடா கேக்கறதுலேயே ஆரம்பிச்சவா அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா ஈடுபாடு ஜாஸ்தியாயிண்டே போய் ராகம் கண்டு பிடிக்கறது, தாங்களே பாட்டுக் கத்துக்கறதுன்னு போய், பல்லவி பாடறதுலேயே ˜எக்ஸ்பெர்ட்டா ஆனதாக்கூட ஒண்னு ரெண்டு கேஸ் நானே பார்த்திருக்கேன். கச்சேரின்னா அதுக்கு நடுநாயகம் பல்லவிதான். ˜இன்னிக்கு என்ன மெய்ன்னு அதைத்தான் மெய்னாகவே வெச்சிருக்கறதாத் தெரியறது? அப்படி வேத ஸம்ப்ரதாய பத்ததின்னா, அதுக்கு வேத யக்ஞாதிகள்தான் மெய்ன். அதுதான் நமக்குப் பூர்த்தி ஸ்தானம். அந்த யக்ஞாதிகளைப் பண்ணணுமே தவிர, அதுதான் எல்லாம்னு சும்மா வாயால சொல்லிண்டு, ஆனா அதையும் பண்ணாம, அதுக்கு அழைச்சிண்டு போறதுகளையும் பண்ணாம விட்டுடறது தனக்குத்தானே ஹானி உண்டாக்கிக்கறதுதான். இப்படி அழைச்சுண்டு போறதுகளும், எந்த லக்ஷ்யத்துல கொண்டு சேர்க்கிறதோ அந்த லக்ஷ்யத்தின் ˜ஸ்பிரிட்டிலேயே பொறந்ததுதானானதால், இதுகளையும் ஒரு போதும் தள்ளாம யக்ஞாதிகள் பண்றவா அநுஷ்டிக்கத்தான் வேணும். மத்த ஸமூஹத்துக்கும் அப்பத்தான் தடுமாத்தம் உண்டாகாம வழிகாட்டினதா இருக்கும். இன்னி வரைக்கும் நல்ல சிஷ்டாசாரத்தோட இருக்கிறவா அப்படித்தான் ரெண்டையும் அநுஷ்டிச்சுண்டும் வரா. நீயும் ஸ்ரீராமநவமி பூஜை மாதிரி சின்னதா ஒரு பூஜைல ஆரம்பிச்சு வாஜபேயி ஆற வரைக்கும் மேலே மேலே அபிவ்ருத்தியா [வாயாக]!. நாளைக்கு இங்கேயே வழக்கமான மடத்துப் பூஜையோட ராமர் பூஜையும் பாரு! ரெட்டை ப்ரஸாதமும் தரேன். ஸந்தோஷமாப் போய்ட்டு வா! உருகிவிட்டார் உருகி, மாஜி விதண்டாவாதி! அருட்செல்வம் சிந்தனைச் செல்வமாகவும், சொற்செல்வமாகவும் அலர்ந்ததற்கு ஓர் அழகான உதாரணம்! Courtesy : Varagooran Narayanan - Facebook and Mahaperiyava bhaktas for photos