Saturday, February 7, 2015

ஜோஷி என்ற வடக்கத்தி பையன் பெரியவாளிடம் ரொம்ப பக்தி


Courtesy : Sivasankaran - facebook and mahaperiyava bhaktas for photos. ஜோஷி என்ற வடக்கத்தி பையன் பெரியவாளிடம் ரொம்ப பக்தி. அவனுக்கு பெரியவாளை தரிசனம் பண்ணியதிலிருந்து ஊருக்கு போகவே மனசில்லை. அவன் நமஸ்காரம் பண்ணிவிட்டு எழுந்ததும் அவனைப் பற்றி விஜாரித்து விட்டு, "இந்த ஊர்ல இருக்கற கோவில் எல்லாத்தையும் தரிசனம் பண்ணிட்டு ஊருக்கு போ" என்றார். பாலக்ருஷ்ண ஜோஷி சற்று தைரியமாக "நன்னா புரியறது பெரியவா. உங்க உத்தரவுப்படியே எல்லாக் கோவிலையும் தரிசனம் பண்ணிட்டு, திரும்ப மடத்துக்கே வந்துடறேன்" பெரியவா லேசுப்பட்டவரா என்ன? சிரித்துக் கொண்டே " அதான் பிரசாதமெல்லாம் இப்பவே குடுத்துடப் போறேனே! திரும்ப எதுக்கு மடத்துக்கு வரப் போறே? ஓஹோ.......ஸ்வாமி தரிசனம் பண்ணிட்டு மத்யான்னம் மடத்துல சாப்டுட்டு பஸ் ஏறலாம்னு முடிவு பண்ணிட்டியாக்கும்? பேஷ்.! பேஷ்!" என்றார். ஜோஷியின் கண்களில் கண்ணீர் கட்டி நின்றது "ஏம்பா அழறே?" "கொஞ்ச நாளைக்கு உங்களோடையே இருக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு. அதனாலே............" "என்ன.....மடத்துலேயா? இங்க சன்யாசிகள்னா தங்குவா! ஒன்னாட்டம் பசங்களுக்கு இங்க என்ன வேலை? ஸ்வாமி தரிசனம் பண்ணிட்டு ஊர் போய் சேரு" சாஷ்டாங்கமாக பெரியவா சரணத்தில் விழுந்தான் "பெரியவா அப்படி சொல்லப்படாது. நேக்கு மடத்துல தங்கி, ஒங்களுக்கு கொஞ்ச நாள் கைங்கர்யம் பண்ணனும்னு ரொம்ப ஆசையா இருக்கு" "நேக்கு கைங்கர்யம் பண்ண நெறைய பசங்கள் இருக்கா. நீ கெளம்பற வழியப் பாரு" ஜோஷி மடத்தைவிட்டுப் போகவில்லை. நான்கு நாட்கள் விடாமல் பெரியவா கண்ணில் படுவதுபோல், அவர் அறை வாசலில் கால் கடுக்க நிற்பான், அவர் போகுமிடமெல்லாம் போவான். ஐந்தாம் நாள் "நீ இன்னும் மெட்ராஸ் போகலை?" தெரியாதவர் போல் கேட்டார். "இல்லை பெரியவா. நான் மெட்ராஸ்லேர்ந்து கெளம்பறச்சே ஒரு சங்கல்பம் பண்ணிண்டு கெளம்பினேன்" "அப்படி என்ன சங்கல்பமோ?" கிண்டலாக கேட்டார். "கொஞ்ச காலம் உங்களோட பாதாரவிந்தங்கள்ள சேவை பண்ணறதுதான் பெரியவா" "சாத்தியமில்லாத சங்கல்பத்தை பண்ணிக்கப்படாது" அங்கிருந்து போய் விட்டார். ஜோஷி மனஸ் தளரவேயில்லை. ரெண்டு நாள் கழித்து தரிசனம் குடுத்துக் கொண்டிருந்தபோது அவனைப் பார்த்த பெரியவாளின் மனஸ் நெகிழ்ந்தது. "ஒங்கப்பாவுக்கு உத்தியோகமா? வியாபாரமா?" "வைர வியாபாரம் பெரியவா" "ஒன்னோட குணத்துக்கு பிற்காலத்ல நீயும் பெரியா வைர வியாபாரியா வருவே. அப்போ......நீ நேர்மையான வைர வ்யாபாரிங்கற பேரை வாங்கணும். சரி! சரி! ஒன் ஆசைப்படியே கொஞ்ச நாள் மத்த பசங்களாட்டம் கைங்கர்யம் பண்ணிட்டு போ" பச்சைக் கொடி காட்டினார் பெரியவா. இரவில் பெரியவா சயனிக்கும் அறைக்குள்ளேயே படுத்துக் கொள்ளும் பாக்யம் பெற்றான். ஒரே சந்தோஷம்! மூன்றாம் நாள் பெரியவா சொன்னார் " பாலக்ருஷ்ண ஜோஷி.....நீ இனிமே ஒரு கார்யம் பண்ணி ஆகணும்! பகல் பூர எங்கூட இருந்து மத்தவா மாதிரி கைங்கர்யம் பண்ணு. ராத்திரி வேளைல மட்டும் நீ இங்க படுத்துக்க வேணாம்......." சொல்லி முடிப்பதற்குள் பதறிப்போன ஜோஷி "பெரியவா அப்படி மட்டும் சொல்லிடாதீங்கோ! நானும் மத்தவா மாதிரி இந்த ரூம்லேயே படுத்துக்கறேன். க்ருபை பண்ணணும்" அழுதான். "நான் காரணமாத்தான் சொல்றேன். நீ கேக்கணும்" "சரி கேக்கறேன்" மனசில்லாமல் ஒத்துக் கொண்டான். "அப்டி சொல்லு. ராத்திரி நேரா சமையல்கட்டுக்கு போ! அங்க அடுப்புக்கு பக்கத்ல ஒரு பெரிய மர பெஞ்ச் கெடக்கும். அதுல சௌகர்யமா படுத்துண்டு தூங்கு. விடியக்காலம் எழுந்து பல் தேச்சு, ஸ்நானம் பண்ணிட்டு இங்க கைங்கர்யத்துக்கு வந்துடு.......என்ன புரியறதா?" கறாராக கட்டளையிட்டார். மற்ற பையன்கள் இங்கே இருக்க, தன்னை மட்டும் சமையல்கட்டுக்கு ஏன் அனுப்பினார்? மனஸ் பாரமாக, ஒரு பையனிடம் "ஏண்டா, உங்கள்ள யாரையாவது பெரியவா இதுவரைக்கும் ராத்திரி கோட்டை அடுப்பங்கரைல போய் தூங்க சொல்லியிருக்காளா?" "சேச்சே! எங்க யாரையும் பெரியவா அப்படி சொன்னதே கெடையாது" முகத்தை சுளித்துக் கொண்டு பதில் சொன்னான். ஜோஷிக்கு ஒரே அவமானம். கேவி கேவி அழுதுகொண்டே வெறிச்சோடிக் கிடந்த அடுப்பங்கரை பெஞ்சில் படுத்துக் கொண்டான். ஒன்றும் சாப்பிடவில்லை. துக்கம் தொண்டையை அடைத்தது. விடிந்து ஸ்நானம் பண்ணிவிட்டு, காமாக்ஷி அம்மன் கோவில் சந்நிதியில் உட்கார்ந்து கொண்டான். பெரியவா கைங்கர்யத்துக்கு போகணும் என்று தோன்றவில்லை. மத்யான்னம் மடத்துக்கு வந்து சாப்பிட்டான் திரும்ப காமாக்ஷியிடமே போய் உட்கார்ந்தான். இரவு மடத்து அடுப்பங்கரை. பெரியவா பக்கமே போகவில்லை. மூன்றாம் நாள் காலை பெரியவா ஒரு பையனிடம் "ஏண்டாப்பா, ரெண்டு நாளைக்கு முன்னாடி பாலக்ருஷ்ண ஜோஷின்னு ஒரு பையன் கைங்கர்யம் பண்ண வந்தானே.........அவனை காணோமே? எங்கடா போய்ட்டான்? ஒருவேளை சொல்லிக்காம மெட்ராஸ் போயிட்டானோ?" "இல்லே பெரியவா. இங்கதான் இருக்கான்" "பின்ன ரெண்டு நாளா காணோமேடா..........போய் அவனை அழைச்சிண்டு வா". வந்தான். பெரியவா முன்னால் கூனிக்குறுகி நின்றான். "வா கொழந்தே! எங்க ரெண்டு நாளா ஒன்னை இந்தப் பக்கமே காணோம்? ஒடம்பு கிடம்பு சரி இல்லியோ?". பதிலே இல்லை. குழந்தைத்தனமான சிரிப்புடன் "என்கிட்டே ஏதாவது வருத்தமோ........கோபமோ?" "கோபமெல்லாம் இல்லை பெரியவா.........மனசுக்கு கொஞ்சம் வருத்தம்" "வருத்தமா! எம்பேர்லையா!!!" ஆச்சர்யமாக கேட்டார். "சொல்லு சொல்லு. ஒன் வருத்தத்தை நானும் தெரிஞ்சுக்கணுமோல்லியோ!......" "வேற ஒண்ணும் இல்லை பெரியவா! மொதல் ரெண்டு நாள் என்னையும் ராத்ரிலே மத்த பையன்களோட இங்கியே படுத்துக்கச் சொன்னேளா.....ரொம்ப சந்தோஷமா இருந்தது. திடீர்னு முந்தாநாள் கோட்டை அடுப்புக்கு பக்கத்ல பெஞ்ச்ல போய் படுத்துக்கோ' ...ன்னு சொல்லிட்டேளே! நான் இவாள மாதிரி இந்த பக்கத்து பிராமணனா இல்லாம, குஜராத்தி பிராமணனா இருக்கறதாலே என்னை அங்க போய் படுத்துக்கச் சொல்லிட்டேளோ.ன்னு மனசுக்கு ரொம்ப கஷ்டமாயிடுத்து. அதான் ரெண்டு நாளா இங்க வரலை. என்னை மன்னிச்சுடுங்கோ பெரியவா" கதறிவிட்டான். பெரியவா நிலைமையை புரிந்து கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார். மிச்ச பசங்களை வெளியே போகச் சொன்னார். பரம வாத்சல்யத்துடன் ஜோஷியை பக்கத்தில் கூப்பிட்டு " அடடா.......பாலகிருஷ்ணா........நான் ஒன்னை கோட்டை அடுப்புக்கிட்ட பெஞ்ச்ல படுத்துக்க சொன்னதுக்கு, நீ இப்பிடி அர்த்தம் பண்ணிண்டுட்டியா? அடப்பாவமே........நான் அப்டி எல்லாம் நெனச்சுண்டு அதை சொல்லலேப்பா......சின்னப் பையன் தப்பாப் புரிஞ்சுண்டுட்டியே ! இதுக்கு விசேஷ காரணமெல்லாம் இல்லேடா ஜோஷி........நல்ல வேளை சொன்னியே...அதுக்கு ஒரே காரணம். இதோ பாருடா"......என்று கூறி, தான் இடையில் கட்டியிருந்த வஸ்த்ரத்தை தொடை வரை நகர்த்தி காட்டினார். ஆச்சார்யாளின் தொடைகளில் அடை அடையாய் கொசுக்கடி தழும்புகள்!! "கொழந்தே! ஜோஷி........இதெல்லாம் என்னன்னு தெரியறதோ நோக்கு? ராத்திரி வேளைல கொசு கடிச்ச தழும்பு. நான் ஒரு சந்நியாசி. பொறுத்துக்குவேன். நீ....கொழந்தை! ரெண்டு நாள் ராத்திரி நீ கொசுக்கடில ரொம்ப ஸ்ரமப்பட்டதை பாத்தேன். என்னாட்டம் நோக்கும் சேப்பு [சிவப்பு] ஒடம்பு. அவஸ்தைப்படாம நீயாவது சௌக்யமா தூங்கட்டுமேன்னுதான் பத்ரமான எடத்துக்கு ஒன்னைப் போகச் சொன்னேன். அடுப்பு உஷ்ணத்துக்கு கொசு அங்க எட்டிக் கூட பாக்காது! நன்னா தூங்குவே! நீ என்னடான்னா........வேற விதமா, விபரீதமா நெனச்சுண்டுட்டியே!......" பெரியவா முடிக்கவில்லை.."ஹோ" வென்று கதறி அழ ஆரம்பித்துவிட்டான் ஜோஷி. "பெரியவா என்னை மன்னிச்சேன்னு சொல்லுங்கோ. ஒங்களோட கருணையை புரிஞ்சுக்காம நான் ஏதேதோ ஒளறிட்டேன்" காருண்யமூர்த்தி கைதூக்கி ஆசிர்வதித்தார் "ஜோஷி. பிற்காலத்ல நீயும் சிறந்த வைர வியாபாரிய வருவே. ஞாயமான வெலைக்கு வித்து நல்லபடி வியாபாரம் பண்ணு" ஆசிர்வதித்தார்

No comments: