"நீங்கள்
எல்லாருமே
திருடாள்!"
"சிரிக்க வைத்தும் சிந்தனையைச் சிறக்க வைத்தும்"
"சிரிக்க வைத்தும் சிந்தனையைச் சிறக்க வைத்தும்"
ரா.கணபதி. சிவபெருமான் மீது பெரும் பக்தி கொண்டவர். சிவராத்திரி தினத்தில் (2012)சிவநாமம் கூறியபடி அவர் உயிர் பிரிந்தது ஆச்சரியம் என்றனர் உடன் இருந்த அன்பர்கள்.அவரைப் போற்றும் விதமாக
வரும் சிவராத்திரி ஃபிப்ரவரி 17 வரை பெரியவா கட்டுரைகள்
பழசு,புதுசு தினம் இரண்டு போஸ்டாகும்.
கட்டுரையாளர்;ரா.கணபதி.
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
குருநாதன் முகத்தில் குறும்பு நகை.விளையாட்டுப்பிள்ளை போல் கண்களில் ஓர் ஒளி.எதிரே
இருந்தவரிடம் கேட்கிறார்; "இப்போ இங்கே இருந்து போறானே,அவன் பேர் என்ன?"
"ஸ்ரீகண்டன்"
"இல்லை,அப்படிச் சொன்னால் ஸர்க்கார் அபிப்பிராயத்துக்கு விரோதமாயிடும்."
ஏன் என்று புரியாமல் அடியார் விழிக்கிறார். அவரை விழிக்க விட்டு சிறிது வேடிக்கை பார்த்த பின்
பெரியவாள் சொல்கிறார். "திருக்கண்டன்-னு சொன்னாத்தான் ராஜாங்கத்தார் ஒப்புக்கொள்வர்."
அடியாருக்குப் புரிந்து விடுகிறது.பெரியவாளோடு சேர்ந்து அவரும் சிரிக்கிறார். 'ஸ்ரீ' என்று
வருமிடத்திலெல்லாம் 'திரு' என்று மாற்றவேண்டும்;
ஸ்ரீரங்கம்,ஸ்ரீபெரும்பூதூர் போன்ற பெயர்களைத் திருவரங்கம்,திருப்பெரும்பூதூர் என்றே இனி
வழங்க வேண்டும் என்று தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக அன்று காலைதான் செய்தி
வெளியாகியிருந்தது. அதனால் 'ஸ்ரீகண்டன்' என்று மட்டும் சொல்லலாமா? பெரியவாள்,
பெரியவாள், "இந்த இடத்திலே ஸ்ரீகண்டனை திருக்கண்டன்-னு சொல்றது தப்பு; தெரியுமோ?"
என்று கேட்கிறார். அது எப்படித் தப்பு என்பதையும் விளக்குகிறார்.
"ஸ்ரீ என்றால் லக்ஷ்மி என்று மாத்திரம் நினைத்துக் கொண்டு,'ஸ்ரீ'யைத் 'திரு' ஆக்கு என்கிறார்கள்.
ஆனால் 'ஸ்ரீ' என்பதற்கு வேறே பல அர்த்தங்களும் உண்டு. பாம்பு,பாம்பின் விஷம் இதற்கெல்லாங்கூட
'ஸ்ரீ' என்று பெயர்.'மங்கள காரியங்களுக்கு உதவாத செவ்வாய்க் கிழமைக்கு 'மங்களவாரம்' என்று பெயர்
வைத்த மாதிரி பாம்பை 'ஸ்ரீ' என்று சொல்வதுண்டு.
"'ஸ்ரீகண்டன்' என்றால் லக்ஷ்மியைக் கண்டத்தில் (கழுத்தில்) வைத்துக் கொண்டிருக்கிற மஹா விஷ்ணு
என்று அர்த்தமில்லை. மஹாவிஷ்ணு லக்ஷ்மியை வக்ஷ்ஸ்தலத்தில் (மார்பில்)தான் வைத்துக்
கொண்டிருக்கிறாரே தவிரக் கண்டத்திலே அல்ல. ஸ்ரீகண்டன் என்றால் ஸரியான அர்த்தம், ஸ்ரீ என்கிற
பாம்பைக் கழுத்தில் போட்டுக் கொண்டிருக்கிற அல்லது ஆலஹால விஷத்தைக் கழுத்தில்
வைத்துக்கொண்டிருக்கிற நீலகண்டனான பரமசிவன் என்பதே.
இப்படி அறிவுச்சுடர் தெறித்த பெரியவாளின் முகத்தில் மறுபடியும் நகைச் சுவையின் பச்சொளி
மேவியது.
"திருக்கண்டனோ இல்லையோ, அவன் திருடன்" என்றார். மேலும் பரபரப்பூட்டும் விதத்தில்,
"நீங்கள் எல்லாருமே திருடாள்!" என்றார்.
"புரியவில்லையா? சீமான்,சீனிவாஸன்-னு எல்லாம் சொல்கிறது எதை? ஸ்ரீமான்,ஸ்ரீனிவாஸன் என்பதைத்
தானே? 'ஸ்ரீ' தமிழில் 'சீ" ஆகுமென்றால் "சீ"யை யெல்லாமும் இனிமேல் 'திரு' என்றுதானே
சொல்லணும்?
என்னை 'ஜகத்குரு' என்று டைட்டில் கொடுத்து வைத்திருக்கிறீர்களோல்லியோ? அதனால்
நீங்களெல்லாம் என் சீடர்கள்;
சீ-டர்கள்;அதாவது திரு-டர்கள்."
விழுந்து விழுந்து சிரிக்கிறார்.அவர் மட்டுமா? அத்தனை பேருமே!
ஆனால் சிரிப்பிலேயே இதுபோன்ற மொழி பெயர்ப்புகளைக் குறித்து அவர்கள் சிந்தனையைச்
சிறக்கவும் வைத்து விடுகிறார்
Courtesy : Facebook post : Varagooran Narayanan
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.