Friday, February 13, 2015

கிராமத்தில் உள்ள கோவிலின் மஹிமையை நீ அறிவாயோ" -- மகா ஸ்வாமிகள்.




"கிராமத்தில் உள்ள கோவிலின் மஹிமையை
நீ அறிவாயோ"

தொகுத்தவர்-அழகர் நம்பி.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

சிவன் கோவிலின் அர்ச்சகர் தங்கள் கிராமத்துக்
கோவிலில் வருமானம் இல்லாததால் நகரத்துக்குச்
சென்றார். பேற்றோர்களின் அறிவுரை அவரிடம்
செல்லுபடியாகவில்லை.

நகரத்துக் கோவிலில் நல்ல வருமானம். தன்
வசதிகளைப் பெருக்கிக் கொண்டவர் வசதிக்கு ஏற்ப
வாழ்ந்து வந்தார். கூடவே தலைக் கனமும் ஏறியது.

பலன்-நகரத்துக் கோவிலின் பணி பறிபோனது.

மனக்குறையுடன் பெரியவாளை தரிசனம் செய்ய
சென்றிருந்தார். தன் குறைகளை கொட்டினார்.

"கிராமத்தில் வருமானம் இல்லாததால் தான் இங்கு
வந்தேன்.இங்கு வேலை போய்விட்டது" என்று
கண் கலங்கியவராகக் கூறினார்.

"கிராமத்தில் உள்ள கோவிலின் மஹிமையை
நீ அறிவாயோ" என்றார்கள் ஸ்வாமிகள்.

அதற்கு பதிலே இல்லை அர்ச்சகரிடம்.

"உன் ஊர் கோவில் பாடல் பெற்ற ஸ்தலம். கோவில்
ஆகம விதிப்படி கட்டப்பட்டது. அப்படிப்பட்ட கோவிலில்
பூஜை செய்வது உன் புண்ணியம். நீ வெளியில் சென்று
கஷ்டப்படுவது பகவானுக்கு விருப்பமில்லை போலும்.
நீ கிராமத்திற்கு சென்று அப்பாவுடனே பூஜையை செய்"
என்றார்கள் பெரியவா.

பெரியவாளின் உத்தரவாயிற்றே.அதன்படியே தன்
கிராமத்து கோயிலின் பூஜையை கவனித்துக்
கொள்ள சென்று விட்டார்.

ஒரு மாதம் கடந்த நிலையில் அக்கோவிலின்
திருப்பணி வேலைகள் ஆரம்பித்து விட்டன.
ஒரு வருடத்தில் கும்பாபிஷேகமும் முடிடைந்தன.
பக்தர்களின் கூட்டம் அலை மோதியது.

மேலும் ஒரு வருடம் கடந்தது. பெரியவாளை
தரிசனம் செய்யச் சென்றார் அந்த அர்ச்சகர்.

"இப்போ எந்தக் கோவிலில் பூஜை?" என்றார்கள்

கதறியபடியே காலில் விழுந்து வணங்கினார்
அர்ச்சகர்.நடந்தவற்றை அப்படியே தெரிவித்தார்.

"ஜீவிதத்திற்கு கஷ்டமில்லை தானே" என்றார்கள்
பெரியவா.

"எல்லாம் ஸ்வாமிகளின் ஆசியினால் தான்"
என்றார் ஆனந்தக் கண்ணீருடன்.

"நான் என்ன பண்ணிப்பிட்டேன் பெரிதாக
எல்லாம் சிவனின் அருள்" என்றார்கள் ஸ்வாமிகள்.

தன்னை முன்னிறுத்திக் கொள்வதில் எப்போதும்
பெரியவாளுக்கு விருப்பம் கிடையாது.

No comments: