Friday, February 13, 2015

குங்குமப்பொட்டின் மங்கலம், நெஞ்சம் இரண்டில் சங்கமம் -- காஞ்சி மகாபெரியவா !!


குங்குமப்பொட்டின் மங்கலம், நெஞ்சம் இரண்டில் சங்கமம்

ஜனவரி 20,2015,- தினமலர்

காஞ்சி மகாபெரியவருக்கு ஒரு சமயம் கடுமையான காய்ச்சல், கபம் இருந்தது. வெங்குடி டாக்டர் என்பவர் தான், பெரியவரைச் சோதித்து மருந்து கொடுப்பார். இந்தத் தடவை அவர் கொடுத்த மருந்துகளை ஏனோ சாப்பிடவில்லை. காய்ச்சலும் குறையவில்லை.

ஒரு பக்தை தினமும் தரிசனத்திற்கு வருவார். பெரியவருக்கு காய்ச்சல் என்பதை அறிந்து, குங்குமப்பூவை சந்தனத்துடன் சேர்த்து கொஞ்சம் சூடுபண்ணி கொண்டு வந்தார். பெரியவரிடம் கொடுத்து, ""சுவாமி! கொஞ்சம் பற்று போட்டுக்கொள்ளுங்கள்,'' என்றார்.

அதை ஒரு தொன்னையில் வாங்கிக் கொண்ட பெரியவர் ஒரு ஓரமாக வைத்து விட்டார். பற்று போட்டுக் கொள்ளவில்லை.

அந்த அம்மையார் பெரியவர் பற்றுப் போடுவார் என காத்து நின்றார்.

இதனிடையே வெளியே மேளச்சத்தம் கேட்டது.

தனக்கு மருந்து தந்த பக்தையை நோக்கி, ""வாசல்லே காமாட்சி வந்திருக்கா! போய் தரிசனம் பண்ணிட்டு வாயேன்,'' என்றார்.

அந்த அம்மையாரும் வெளியே போய்விட்டார். அவர் வெளியே செல்லவும், ஒரு விவசாயக் குடும்பப் பெண்மணி சுவாமியைத் தரிசிக்க உள்ளே வந்தார்.

பரம ஏழையான அந்தப் பெண்ணின் இடுப்பில் அவளது குழந்தை. ஆறுமாதம் தான் இருக்கும். அதற்கு ஏகமாய் ஜலதோஷம். மூச்சு விட திணறிக் கொண்டிருந்தது.

அந்தப் பெண் பெரியவரிடம்,""சுவாமி! கொழந்தைக்கு ஜல்ப்பு...மருந்து வாங்க வழியில்லே! சாமி தூண்ணுறு(திருநீறு) கொடுக்கணும்,'' என்று கண்களில் நீர் மல்க கேட்டார்.

பெரியவர் அவசர அவசரமாக, முன்பு வந்த பக்தை கொடுத்த குங்குமப்பூ தொன்னையை எடுத்து அவரிடம் கொடுத்தார்.

""இதை வீட்டுக்கு எடுத்துட்டு போ. குழந்தைக்கு இரண்டு, மூணு தடவை பற்றுப்போடு,'' என்றார். அத்துடன், ""ரோட்டிலே போகும் போது தூசு விழுந்துடும்! மறைச்சு எடுத்துண்டு போ,'' என்று எச்சரிக்கை வேறு!

அவள் சென்றதும், தன் அருகில் இருந்த குங்குமத்தை எடுத்தார். அதை சிறிது தண்ணீர் விட்டு பசை மாதிரி ஆக்கி, நெற்றியில் பற்று போட்டுக் கொண்டாற்போல இட்டுக் கொண்டார்.

இதற்குள் காமாட்சியைத் தரிசிக்க சென்ற குங்குமப்பூ அம்மையார் திரும்பினார். பெரியவர் நெற்றில் பற்று போட்டிருந்தது கண்டு, தான் கொடுத்த மருந்தைத் தான் இட்டிருக்கிறார் என்று ஏராளத்துக்கு சந்தோஷப்பட்டார்.

மறுநாள் வழக்கம் போல் அந்த அம்மையார் வந்தார்.

"உன் குங்குமப்பூவால் கபம் குறைந்தது' என்றார். அம்மையாருக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது.

பெரியவர் இங்கே வார்த்தையைக் கவனமாகக் கையாண்டார்

. ""உன் குங்குமப்பூவால் "என்' கபம் குறைந்தது என்று சொல்லவில்லை. அந்தஏழைக் குழந்தைக்கு கபம் குறைந்திருக்கும் இல்லையா! அதைத் தான் அப்படி குறிப்பிட்டார்.

ஆக, அவர் வைத்த குங்குமம், இரண்டு நெஞ்சங்களில் மகிழ்ச்சியை சங்கமிக்கச் செய்து விட்டது.

இதுதான் மகாபெரியவரின் கருணா கடாட்சம்!+




Courtesy  :  Facebook   :   Varagooran Narayanan

Thanks for  Mahaperiyava bhaktas for the photos.

No comments: