Friday, February 13, 2015

பெரியவாளிடம் வேண்டிக்கொண்டதும், "அதுக்கென்ன? வரேனே" என்று சொல்லிவிட்டார்.




மிகவும் வயஸான ஒரு பாட்டிக்கு, தன் வீட்டிலும் ஹோமம் செய்ய வேண்டும் என்று மிகுந்த ஆசை. பெரியவாளிடம் அளவு கடந்த பக்தி. அப்போதெல்லாம் யாராவது தங்கள் க்ருஹத்திற்கு பெரியவாளை அழைத்தால், பெரியவாளின் திருவடிகள் அவ்வீடுகளில் கட்டாயம் பதியும். இந்தப் பாட்டியும் ஹோமத்துக்கு பெரியவாளை அழைக்க வேண்டும் என்று ரொம்ப ஆசைப்பட்டாள்.

பெரியவாளிடம் வேண்டிக்கொண்டதும், "அதுக்கென்ன? வரேனே" என்று சொல்லிவிட்டார்.

பாட்டிக்கோ பரம சந்தோஷம்! ஹோமத்துக்கு பார்த்துப் பார்த்து ஏற்பாடு பண்ணினாள். ஆயிற்று. ஹோமம் ஆரம்பித்தாகிவிட்டது.

"பெரியவா இன்னும் வரலியே!.." பாட்டி வாசலுக்கும் உள்ளுக்கும் நடையாய் நடந்து கொண்டிருந்தாள். பூர்ணாஹுதியைக் கூட கொஞ்சம் பொறுத்திருந்து பார்த்துவிட்டு செய்யலாம் என்று வேத ப்ராஹ்மணர்கள் சொன்னார்கள்.

அப்போதும் கூட பூர்ணாஹுதி குடுக்கும் வரை பெரியவா வரவேயில்லை. பாட்டிக்கு ஒரே சோகம். ஹோமப்ரஸாதம் எடுத்துக் கொண்டு பெரியவாளை தர்சனம் பண்ணச் சென்றாள்.

"பெரியவா ஹோமத்துக்கு வர்றதா சொன்னேள். ஆனா, வராம இருந்துட்டேளே!" தன் ஆதங்கத்தை பெரியவாளிடம் புலம்பினாள். அழகாக சிரித்துக் கொண்டே அவள் சொல்வதைக் கேட்டார். 

"நா, ஹோமத்துக்கு வரலேன்னு யார் சொன்னா? வந்தேனே!.."

பாட்டிக்கு ஒண்ணும் புரியவில்லை...................... வந்தாரா?

"என்னது? பெரியவா வந்தேளா? நேக்கு ஒண்ணும் புரியலே..."

"ஹோமத்தை போட்டோ எடுத்தியா?"

"எடுத்தா....."

"அதை ப்ரிண்ட் போட்டுப் பாரு"

பாட்டி உடனேயே போட்டோ எடுத்தவனை அதை ப்ரிண்ட் போடத் துரத்தினாள். வந்ததும் அவைகளைப் பார்த்தபோது, அதில் ஒன்று பூர்ணாஹுதி நடந்தபோது எடுக்கப்பட்ட படம்......

அந்த அக்னி ஜ்வாலை ஒரு ஆள் உயரத்திற்கு எழும்பி எரிகிறது.....அந்த ஜ்வாலை ஸாக்ஷாத் பெரியவா தண்டத்துடன் நிற்பது போலவே எரிந்து கொண்டிருந்தது!

அந்த போட்டோ இன்றும் சேலத்தில் உள்ள ஸ்ரீ பெரியவா க்ருஹத்தில் உள்ளது. 

"நா, ஹோமத்துக்கு வரலேன்னு யார் சொன்னா? வந்தேனே!.." பெரியவா சொன்னது எத்தனை சத்யம்!! பஞ்ச பூதங்களையும் படைத்தவன் எவனோ, அவனே இங்கே அக்னி ஸ்வரூபமாக ப்ரத்யக்ஷமாக நிற்கிறான்!! 

இதில் நம்முடைய பக்தியை விட, மஹான்களின் பரம கருணை, அவ்யாஜ கருணை ஒன்றினால் மட்டுமே இம்மாதிரி நடக்கும்





காஞ்சி மகாப்பெரியவர் குறித்த மிக அபூர்வமான ஒரு தகவல்.



காஞ்சி மகாப்பெரியவர் குறித்த மிக அபூர்வமான ஒரு தகவல்.

(வபனம் மற்றும் ஸ்நானம்)

நன்றி-19-11-2014 தினமலர்.

மகா பெரியவர் வபனம் செய்வது(முடி மழித்தல் முறை) குறித்து தெரிந்து கொள்ளுங்கள். அவர் இரண்டு பவுர்ணமிக்கு ஒரு முறை, ஆறு அல்லது குளக்கரைக்குச் சென்று வபனம் செய்து கொள்வார்.

அவர் வபனம் செய்யச் செல்லும் போது, முதலில் சுவாமியை வணங்குவார். நீர்நிலையில் கரையில் அமர்வார். ஒரு வாழை இலையில் கத்தி, ஒரு கிண்ணத்தில் பால், ஒரு கிண்ணத்தில் தண்ணீர் வைக்கப்படும். ஒரு கடிகாரத்தையும் வைத்து விடுவார்கள்.

பெரியவர், முதலில் பாலை தன் தலையில் தடவிக் கொள்வார். கத்தியை தன் தலையில் வைத்து விட்டு, பிறகு இலையில் வைத்து விடுவார். முடி திருத்துபவர் பெரியவரை வணங்கி விட்டு தலைமுடியை மழிப்பார். பிறகு கை, கால்களிலுள்ள நகங்களை ஒழுங்குபடுத்துவார். இந்தப்பணி முடிந்த பிறகு, பெரியவர் நதி அல்லது குளத்திலுள்ள மண்ணை எடுத்து கை, கால்களில் தடவிக் கொள்வார். வாய் கொப்பளித்து விட்டு நீராடச் செல்வார்.

இதற்குள் சீடர்கள் ஐந்து பெரிய மண் உருண்டைகளை தயார் செய்து வைத்து விடுவார்கள். அவர் ஆற்றில் நீராடத் தயாரானதும், நான்கு சீடர்கள் அந்த உருண்டைகளை சின்ன சின்னதாய் பிரித்து உருட்டுவார்கள். நான்கு பேரும் 12 முறை அந்த உருண்டைகளை பெரியவர் கையில் கொடுப்பார்கள். அதை பெரியவர் காலில் தடவிக் கொண்டு 12 முறை மூழ்கி எழுவார்.

இதன்பின், திரும்பவும் 12 உருண்டைகளைக் கையில் கொடுப்பார்கள். அதை இடுப்பு வரை தடவிக் கொண்டு, மீண்டும் 12 முறை மூழ்கி எழுவார். அதையடுத்து இன்னும் 12 உருண்டைகள் தரப்படும். அதை மார்பு வரை தடவிக் கொண்டு 12 முறை குளியல்...பின் இன்னும் 12 உருண்டைகளைப் பெற்று முகம், தலையில் தடவி குளிப்பார்கள். கடைசியாக தரப்படும் 12 உருண்டைகளை உடல் முழுவதும் தடவிக் கொண்டு 12 முறை மூழ்கி எழுவார். பெரியவர் மூழ்கும் போது, ஒவ்வொரு முறையும் சீடர்களும் மூழ்கி எழுவர்.

அவர் குளிக்கும் போது, அவரது கையிலுள்ள தண்டம் ஒரு "ஸ்டாண்டில்' வைக்கப்பட்டிருக்கும். அந்த தண்டத்தின் முன்னும் மண் உருண்டைகளை ஒரு மரத்தட்டில் வைத்துக் காட்டுவார்கள். கரைக்கு வரும் பெரியவர், அந்த தண்டத்தை எடுத்துக் கொண்டு மீண்டும் ஆற்றில் இறங்கி 12 முறை மூழ்கி எழுவார்.

பின், பெரியவர் தான் கட்டியிருக்கும் ஆடையை நீரிலேயே விசர்ஜனம் (களைதல்) செய்து விடுவார். இதை அதிர்ஷ்டமுள்ள ஒரு பக்தர் பிரசாதமாக எடுத்துக் கொள்வார். பின் பக்தர்கள் பெரியவருக்கு சால்வைகள் கொடுப்பார்கள். மங்கள ஆரத்தி எடுத்து, வாத்தியம் முழங்க மடத்திற்கு திரும்புவார்கள்

ஆரத்தி எடுப்பவர்களுக்கு வெள்ளிக்காசு பிரசாதம் தரப்படும்

இந்த அபூர்வத்தகவலை படித்த நாமும், பெரியவரின் அருட்பிரசாதம் பெற்றவர்களாகிறோம்.






Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.


அம்மை அப்பனிடம் பக்தி! --மஹா பெரியவா




அம்மை அப்பனிடம் பக்தி! 

(மாணவர்களுக்கு அறிவுறை)

மனத்தில் அன்பும், சந்தோஷமும் இருக்கிற போதுதான் புத்தி தெளிவாக இருக்கிறது. புத்தி தெளிவாக இருக்கிற போது படித்தால் பாடம் நன்றாக ஏறுகிறது. கோபம், ஆத்திரம், அழுகை, பொறாமை எல்லாம் உண்டாகிறபோது புத்தி குழம்பிப் போகிறது. அப்போது படிப்பும் ஏறமாட்டேன் என்கிறது.

தினமும் கொஞ்ச நாழி ஸ்வாமியைப் பார்வதி - பரமசிவனாகவோ, மகாலக்ஷ்மி - மகாவிஷ்ணுவாகவோ நினைத்துக் கொண்டு விட்டீர்களானால் மனம் நல்லதாக ஆகும்; புத்தியும் தெளிவாக ஆகும். அதனால் படிப்பும் நன்றாக வரும். நன்றாகப் பாஸ் பண்ணி விடலாம்.

ரொம்பப் புத்திசாலியாக இருந்து நிறைய மார்க் வாங்கிப் பாஸ் பண்ணினால்கூட, நல்லவன் என்ற பெயரெடுக்கா விட்டால் பிரயோஜனம் இல்லை. நல்ல பெயர் இல்லாவிட்டால் பிற்காலத்தில் வாழ்க்கையில் முன்னேறவே முடியாது. நல்லவனாக இருந்துவிட்டால் அது நமக்கு சந்தோஷம்; மற்றவர்களுக்கும் சந்தோஷம்; பெரியவனான பின் வாழ்க்கையில் முன்னுக்கு வருவதற்கும் அதுதான் உதவும். நம்மை நல்லவர்களாக, புத்திசாலிகளாக, இரண்டாகவும் செய்வது ஸ்வாமியிடம் நாம் வைக்கிற பக்திதான்.

இந்தச் சின்ன வயதிலிருந்தே ஸ்வாமியைப் பிடித்துக் கொள்ள வேண்டும். இப்போதுதான் அவரைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளவும் முடியும். வயதாக ஆக வேறு பல தினுசான ஆசைகள் எல்லாம் வந்து, ஸ்வாமியை நினைக்கவொட்டாமல் இடைஞ்சல் செய்யும். இப்போது உங்களுக்கு அந்த இடைஞ்சல் இல்லை. அதனால் இப்போதே அவரிடம் பக்தி வைக்கப் பழகிவிட்டால் அப்புறம்கூட அந்த ஆசைகள் உங்களிடம் வந்து உபத்திரவம் பண்ணாது.

நீங்கள் எல்லோரும் க்ஷேமமாக இருக்க வேண்டும். நிறைய மார்க் வாங்கி, நன்றாய்ப் பாஸ் பண்ணி வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வரவேண்டும். இதற்கெல்லாம் வழியாக இப்போதிலிருந்தே ஸ்வாமியிடம், அம்மையப்பனிடம் பக்தியோடு இருங்கள்.

- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்.






+




Courtesy : Facebook post  :  Varagooran Narayanan
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.


"சாஸ்திரத்தை மீறி விட்டோமோ’" காஞ்சி மஹாபெரியவாளின் பக்தர்





"சாஸ்திரத்தை மீறி விட்டோமோ’"

(முன்பு படித்த கட்டுரைதான் ஆனாலும் சற்று விரிவாக)

பெரியவர்கள் உலக மக்களிடம் மிகுந்த அன்பு கொண்டவர்கள்.

தம்மைஅடக்கிக் கொண்டு, தம்மைச் சுருக்கிக்கொண்டு, தம்மை உருக்கிக் கொண்டு, உலக மக்களின் துயர்களை எல்லாம் அடக்குபவர்கள், துன்பத்தைத் துரத்துபவர்கள்.

தர்மசாஸ்திரத்தை வாழ்வின் அடித்தளமாகக் கொண்ட ஆன்றோர்கள், கடல்கடந்து செல்வதை சாஸ்திரம் அனுமதிக்காது என்பார்கள்.

காஞ்சி மஹாபெரியவாளின் பக்தர் ஒருவர், சாஸ்திர நியதிகளை உயிராகப் போற்றிவந்தார்.

இவருக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தது.

குடும்ப நலனையும் எதிர்காலத்தையும் கருத்தில்கொண்டு, வெளிநாடு செல்லும் வாய்ப்பை ஏற்றுக்கொண்டார்.

அந்த நாட்டின் சூழலும் பணியின் தன்மையும் திருப்தியே என்றாலும், ‘சாஸ்திரத்தை மீறி விட்டோமோ’ என்ற உறுத்தல், பக்தரைவாட்டியது.

தனது மனக்கலக்கத்துக்கு மருந்தாக… மஹாபெரியவாளைஅனுதினமும் தியானித்து வந்தார்!

அவருக்கு காஞ்சி மஹான் திருவருள் புரிந்தசம்பவத்தை உள்ளம் உருக விவரித்தார் அகிலா கார்த்திகேயன்…

ஒரு விடுமுறையில் இந்தியா வருவதற்கான ஏற்பாடுகளை ஆசைஆசையாகச் செய்தார்.

குடும்பத்தாரைப் பார்க்கப் போகிறோம் என்பதைவிட,வெகு நாட்களுக்குப் பிறகு காஞ்சி மஹானைத் தரிசிக்கப் போகிறோம் என்ற குதூகலமே அவருக்கு அதிகம் இருந்தது.

சென்னை வந்ததும்,விமானநிலையத்தில் இருந்து டாக்ஸி பிடித்து காஞ்சிபுரம் சென்றார்.

காஞ்சிமடத்தில், அன்றைய சமையல் குறித்து சிப்பந்திகளிடம் பேசிக்கொண்டிருந்தார் மஹாபெரியவா.

தரிசனத்துக்காக வந்திருந்த அடியவர்களுக்கு வியப்பு.

சமையல் இன்னின்ன மாதிரியெல்லாம் இருக்கவேண்டும் என்பது முதற்கொண்டு பெரியவா சிரத்தை எடுத்துக்கொள்கிறாரே? இதுவரை இப்படியெல்லாம் சொன்னது கிடையாதே’என்ற ஆச்சரியம் அவர்களுக்கு.

இந்த நிலையில்தான் மடத்துக்கு வந்துசேர்ந்தார் பக்தர்.

மஹாபெரியவாளைக் கண்டதும் நெடுஞ்சாண் கிடையாக வீழ்ந்து வணங்கினார்.

அவரை ஆசீர்வதித்த பெரியவா, சிப்பந்திகளை அழைத்து, ”இவருக்கு, உடனே ஆகாரம் பண்ணி வையுங்கோ” என்றார்.

வந்ததும் வராததுமாக அந்தப் பக்தரை சாப்பிட அழைத்துச் செல்லும்படி பெரியவா சொல்வது ஏன் என்று ஊழியர்களுக்குப் புரியவில்லை.

ஆனால்,கடல் கடந்து தன் பக்தன் வந்திருக்கிறான்; வந்ததும், தன்னைத் தரிஸிக்க ஓடிவந்துவிட்டான் .... எனில், அவனுடைய நிலை என்ன என்பது பெரியவாளுக்குத் தெரியாதா?!

வயிறாரச் சாப்பிட்டு முடித்த பக்தர், மீண்டும் மஹாபெரியவாளுக்கு எதிரில் வந்து நின்றார்.

அவரை உற்றுப் பார்த்த பெரியவா, ”என்ன… உன் விரதம் பூர்த்தி ஆயிடுத்தா?” என்றார் கருணையும் கரிசனமும் பொங்க.

அதைக் கேட்டு வியந்து நின்றார் பக்தர்; அவரிடமிருந்து வார்த்தைகளே வரவில்லை! ‘பெரியவா… பெரியவா…’ என்று திருப்பித்திருப்பிச் சொன்னபடியே இருந்தார்; கண்களில் கரகரவென நீர் வழிந்தது!

மெள்ளப் புன்னகைத்த காஞ்சி மஹான், ”நானே சொல்லிடறேன்!” என்றுஆரம்பித்தார்…

”இவர், வெளிநாட்டுலே இருந்து வர்றார். அங்கே புறப்பட்டதுலேருந்து எந்த ஆகாரமும் எடுத்துக்கல. என்னை வந்து பார்க்கறவரைக்கும் ஆகாரம் எடுத்துக்கறதில்லேன்னு ஒரு சங்கல்பத்தோட விரதமாஇருந்து, இங்க வந்து சேர்ந்திருக்கார்…” என்றவர், பக்தரைப் பார்த்து, ”என்னநான் சொல்றது சரியான்னோ?” என்று கனிவுடன் கேட்டார்.

அவ்வளவுதான்…தரிசனத்துக்காக நின்றிருந்த அனைவரும் அசந்து போனார்கள். எனில், அந்தப்பக்தரை கேட்கவும் வேணுமா… நெக்குருகி நின்றார் அவர்!

இதற்கு நடுவில்இன்னொரு சம்பவமும் நடந்தது.

அந்த பக்தர் சாப்பிடச் சென்றிருந்தநேரத்தில், தன்னை தரிசிக்க வந்திருந்த மற்ற அன்பர்களிடம்,”வெளிநாட்டுலேருந்து இப்ப இங்கே வந்திருக்காரே…அவர்கிட்டேயிருந்து நான் என்ன கேட்டு வாங்கலாம்னு சொல்லுங்கோ” என்று கேட்டாராம்.

இதுவும் அங்கேயுள்ளவர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது. ஏனெனில், எவரிடமும் ‘இதைக் கொடு, அதைக் கொடு’ என்று எதையும் கேட்டறியாதவர் பெரியவர்.

ஆகவே, பதில் சொல்லத் தெரியாமல்திகைத்துப் போனார்கள் அந்த அன்பர்கள்.

இந்த வேளையில்தான் சாப்பிட்டு முடித்து மீண்டும் பெரியவாளைத் தரிசிக்க வந்தார் அந்த பக்தர்!

அவரையும்சுற்றியிருந்த மற்ற அடியவர்களையும் மெல்லிய சிரிப்புடன் பார்த்த மஹாபெரியவா, ”இவருகிட்டேயிருந்து என்ன கேட்டு வாங்கலாம்னு யாருமே சொல்லலையே…” என்று கேட்டுவிட்டு, அவரே தொடர்ந்தார்…

”சரி சரி… இவரை அழைச்சுண்டு போய், எள்ளு புண்ணாக்கையும் தையல் இலையையும் எனக்காக வாங்கித் தரச் சொல்லி, வாங்கிக்கோங்கோ!”என்றார்.

அந்த பக்தர், பரம சந்தோஷத்தில் திளைத்தார்.

தெய்வத்துக்கு நிகரான காஞ்சி மஹான், தன்னிடம் கேட்டு வாங்கிக்கொண்டாரே’ என்றுநெகிழ்ந்தார்.. ஆனால், மடத்தில் கைங்கர்யம் செய்பவர்களுக்கு மட்டும் சற்று தவிப்பு; ஆனால் பெரியவாளிடம் நேரே கேட்கவும் தயக்கம்!

இதையெல்லாம்உணராமல் இருப்பாரா பெரியவா.

அவர்களைப் பார்த்து புன்னகைத்தவர்,

”இந்த பக்தர், என் மேல ரொம்ப பக்தியா, அபிமானமா இருக்கார்.

எங்கிட்ட இருக்கற பிரியத்துனால எனக்கு எதையாவது சேர்ப்பிக்கணும்னு ரொம்பவும் ஆசைப்படறார்.

ஆனா கடல்கடந்து போனவாகிட்டேருந்து, அப்படி எதையும்வாங்கிண்டுட முடியாதபடி, தர்மம் தடுக்கறது.

இருந்தாலும் எனக்கு என்னோட பக்தர் முக்கியம் இல்லையா?!

அவரோட மனசை நோக விட்டுட முடியுமா?”

என்று கூறிவிட்டு சற்றே நிறுத்தியவர், மீண்டும் தொடர்ந்து பேசினார்.

”இப்போ அவர் வாங்கிண்டு வர எள்ளுப் புண்ணாக்கை, மடத்துல இருக்கிற பசு மாட்டுக்குக் கொடுங்கோ ...

அந்தப் பசுகிட்டே இருந்து தினமும் கறக்கிற பாலை எனக்குக் கொடுங்கோ.

நான் சந்தோஷமா ஏத்துக்கறேன்.

ஏன்னா, இப்போ அவர் கொடுத்த புண்ணாக்கைப் பசுமாடு சாப்பிட்டு, அது கொடுக்கறபாலில் அந்த தோஷம் எல்லாம் போயிடறதோன்னோ?

பசு மாட்டு வழியா வந்தா

எல்லாவிதமான தோஷமும் நிவர்த்தியாயிடும்.

அதனால அவர் மனசுல நெனச்சபடி, எனக்குக் கொடுத்த மாதிரியும் ஆச்சு.

அதை நான் ஏத்துண்ட மாதிரியும் ஆச்சு. இல்லையா?”

என்றார் விளக்கம் சொல்வதுபோல!

இப்படி, தர்மத்துக்கும் குந்தகம் இல்லாமல், தன் மீது அபிமானமும் பக்தியும் செலுத்தும் பக்தர் மனமும் ஆனந்தப்படும்படி செயல்பட்ட கருணை, மஹாபெரியவாளைத் தவிர வேறு யாருக்கு இருக்கும்

’காலடி’யும் மூன்று எழுத்துகள்தான் ’காஞ்சி’யும் மூன்று எழுத்துக்கள்தான் எனக்கு இரண்டுமே ஒன்றுதான்.

அனைவருக்கும் அந்த மஹானின் கருணையும், காருண்யமும், அருளும், அனுக்கிரஹமும் கிட்டட்டும்.







Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos. 

"பொன் மழை-ஆதி சங்கரர் இல்லை-நம் சங்கரர்"









"பொன் மழை-ஆதி சங்கரர் இல்லை-நம் சங்கரர்"

கட்டுரையாளர்;எஸ்.கணேச சர்மா
தட்டச்சு;வரகூரான்
.17-07-2013-இது போஸ்டானது.

காஞ்சிபுரம் செல்பவர்கள் காமாட்சி அம்மன் கோவிலை கொஞ்சம் தூரத்தில் நின்று ஒரு நிமிஷமாவது அதன் கம்பீரத்தை, காந்தம் போல் கவரும் கோபுர அழகை, அதன் பின்னே இருக்கும் கோடானு கோடி திவ்ய அனுபவங்களை ஒரு கணமேனும் நினைக்க நேரமில்லை.

காமாட்சி அம்மனுக்கு மேலே உள்ள அழகிய விமானம் ஒரு காலத்தில் தக தக வென்று கண்ணைப் பறிக்கும் பொன்மயமாக இருந்தது. காலம் செல்ல செல்ல விமானத்தின் மீது இருந்த தங்க ரேக் கெல்லாம் அழிந்து உதிர்ந்து வெறும் செம்பாக காட்சி அளித்தது. வருத்தமான ஒரு விஷயம்.

அப்போதெல்லாம் மடத்துக்கு பண வசதி போதாது. அன்பர்களும், பக்தர்களும் கொடுப்பதை வைத்து தான் மடம் நடந்து கொண்டிருந்தது.பல நாட்கள் பிட்சா வந்தனத்துக்கு யார் வரப் போகிறார்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பது கூட உண்டு. சந்நியாச தர்மப்படி அந்த பிட்சாவந்தனத்தை வைத்துத்தான் பெரியவாளுக்கு பிட்சையே நடக்கும்.

என்ன தோன்றியதோ ஒரு நாள் மஹா பெரியவா மானேஜர் அவரிடம் வந்தபோது

“விமானத்துக்கு தங்கரேக்கைப் பயன்படுத்தாமல் ஏன் வெறும் செம்பாக வைத்திருக்கிறீர்கள்?”

என்ன பண்றது பெரியவா பண வசதி போறவில்லையே ” – மானேஜர்

பெரியவா யோசனை பண்ணினா. பிறகு ஒரு ஆசாரியை வரவழைத்து விமானத்துக்கு தங்க ரேக்கு பதிக்க எவ்வளவு பவுன் ஆகுமென்று கேட்டார்.

விமானமெல்லாம் கழற்றிக் கீழே வைக்கப்பட்டது.

பார்த்துவிட்டு,ஆசாரி பல பவுன்கள் வேண்டும் என்றார். பெரியவா தலையை ஆட்டினார்,

“இவ்வளவு பவுனுக்கு எங்கே போவது?” என்ற கேள்விக்குறி பெரியவா முகத்தில்.

அடிக்கடி “காமாட்சியோட விமானத்துக்கு தங்க ரேக்கு பண்ண ஆசையிருக்கு,எப்படி என்றுதான் தெரியலை?” என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.

அந்த சமயம் மகாராஜபுரம் விஸ்வநாதய்யர், (அந்தகாலத்தில் பிரபல கர்நாடக சங்கீத வித்வான் ) பெரியவாளை தரிசனம் பண்ண உள்ளே வந்தார். பெரியவா கட்டளைப்படி தேவகானம் பொழிந்தார் பெரியவா அவரிடம்,

“எனக்கு காமாட்சி அம்மனின் விமானத்தை தங்க ரேக்கால் ஒளி வீசச் செய்யணும்னு மிகவும் ஆசையாக இருக்கு.

இவர்களெல்லாம் அது முடியாத காரியம். பவுனுக்கு எங்கே போவது என்கிறார்கள். பெரிய குறையாக இருக்கிறது.
ஆனால்,உன் பாட்டைக் கேட்டதும் அந்தக் குறை தணிந்துவிட்டது. உனக்குக் கனகதாரா தோத்திரம் தெரியுமோ?” என்று கேட்டார்.

“சுமாராகத் தெரியும்” என்றார் விஸ்வநாதய்யர். அங்கே வந்திருந்த பெண்மணிகளில் சிலர்,”எனக்குத் தெரியும்” என்று முன் வந்தனர். எல்லோரும் சேர்ந்து கனகதாரா தோத்திரத்தை முழக்கினார்கள். அதைச் சொல்லி முடித்தார்களோ இல்லையோ ஒரு அதிசயம் நடந்தது.

அங்கேயிருந்த ஒரு தட்டில் அத்தனை பெண்களும் தங்கள் நகைநட்டுகளைக் கழட்டிப் போட்டனர். “ஆசார்யரது ஸ்லோகத்தை இன்றைக்குச் சொன்னாலும் பொன்மாரி பொழிகிறதே” என்று பெரியவர் புளகாங்கிதம் அடைந்தார். அதை அப்படியே ஆசாரியிடம் அள்ளிக் கொடுத்து

”ஐந்து நாட்களுக்குள் தங்க விமானம் பண்ணி எடுத்து வா” என்றார்.

அந்த பவுனை எடை போட்டுப் பார்த்தபோது ஆசாரி கேட்ட பவுனுக்கு ஒரு குந்துமணி கூடவுமில்லை, குறையவுமில்லை என்று அதிசயப்பட்டார் ஆசாரி.

சர்வ வல்லமை படைத்த தெய்வமான பெரியவா ஒன்று நினைத்தால் அது நடக்காமல் போய்விடுமா ?

ஆறே நாளில் தங்க விமானம் வந்து,கும்பாபிஷேகமும் அமோகமாக நடந்தேறியது.

ஆதி சங்கரர் முழங்கிய கனக தாரா ஸ்தோத்ரத்தை கேட்டு ஒரு ஏழைப் பெண்ணுக்காக அம்பாள்,அன்று பொன்மழை பொழிந்தாள்.

இன்று பல ஏழைப் பெண்மணிகள் அம்பாளாகவே உருவெடுத்து மனதால் ஒன்றுபட்டு, நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று தாரளமாக விரும்பி அளித்த கனகம் காமாட்சி அம்மன் விமானத்துக்கு ஒளி மயம் தந்தது. அந்த ஒளி மஹா பெரியவா முகத்திலும் வீசியது என்று சொல்லி இதை முடிக்கலாமா?















Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

‘பார்வதீ – பரமேச்வரென’ என்று வருவதை வேறே மாதிரி பதம் பிரித்தால் ‘பார்வதீப -ரமேச்வரென’ என்று வரும்."




‘பார்வதீ – பரமேச்வரென’ என்று வருவதை வேறே மாதிரி பதம் பிரித்தால் ‘பார்வதீப -ரமேச்வரென’ என்று வரும்."

(பெரியவாளின் அர்த்தமான விளக்கம்)

இதுவரை பிரசுரமாகாத மகா பெரியவரின் அருள்வாக்கு இது

நன்றி-பால ஹனுமான்.

காளிதாஸர் ‘ரகு வம்சம்’ என்று ஒரு காவியம் எழுதியிருக்கிறார். அதை ஆரம்பிக்கும்போது, இந்த ஜகத் முழுதையும் ஸ்ருஷ்டித்து, நடத்தி வரும் ஆதி தம்பதியான ஸ்வாமிக்கும் தேவிக்கும் நமஸ்காரம் செய்து, தமிழில் கடவுள் வாழ்த்து என்று சொல்லுகிறார்களே, அப்படி ஒரு ச்லோகம் செய்திருக்கிறார்.

அந்த ச்லோகத்துக்கு அர்த்தம், சொல்லையும் பொருளையும் போல ஒன்றை விட்டு மற்றதைப் பிரிக்க முடியாதபடி ஒன்று சேர்ந்திருக்கும் ஸ்வாமிக்கும் தேவிக்கும் எனக்கு நல்ல சொல்லும் உயர்ந்த அர்த்தமும் உள்ளதாக எழுதும் ஆற்றல் ஸித்திக்க வேண்டும்,” என்பது.

வாக் – அர்த்தவ் – இவ
ஸம்ப்ருக்தௌ வாக் – அர்த்த ப்ரதிபத்தயே!

ஜகத: பிதரௌ வந்தே பார்வதீ – பரமேச்வரௌ!

இதிலே முடிவாக ‘பார்வதீ – பரமேச்வரௌ’ என்று வருகிறது. இதற்கு வெளிப்படையாகத் தெரியும் அர்த்தம், பர்வத ராஜகுமாரியானதால் பார்வதி என்று பேர் பெற்ற அம்பாளுக்கும், சிவ பெருமானுக்கும் காளிதாஸர் நமஸ்காரம் தெரிவிக்கிறார் என்பதாகும்.

ஆனால், எனக்கோ இதற்கு வேறு விதமாகவும் அர்த்தம் செய்யலாம் என்று தோன்றுகிறது. காளிதாஸரின் ஸப்ஜெக்ட்-மாட்டர் ரகுவின் பரம்பரையில் வந்த அத்தனை ராஜாக்களின் சரித்திரத்தையும் சொல்வதுதான். அந்தப் பரம்பரைக்கே மிகவும் பெருமை சேர்த்து, ‘ரகு குல திலகர்’ என்றே பெயர் பெற்றுள்ள ராமசந்திர மூர்த்தியின் திவ்ய சரித்திரத்தையும் மற்ற ராஜாக்களைவிட இந்த ‘ரகு வம்ச’ காவியத்தில் விஸ்தாரமாகப் பாடியிருக்கிறார்.

ராமர் யார்? ஸாக்ஷாத் மஹா விஷ்ணுவின் தசாவதாரங்களில் மிகவும் முக்யமான இரண்டு பேரில் ஒருத்தர். மற்றவர் க்ருஷ்ண பரமாத்மா. இவர்களுக்கு மூலவரான மஹாவிஷ்ணுவையும் விட இந்த இரண்டு அவதாரங்களைத்தான் நம் தேசம் பூராவும் அவர்களுடைய அவதார காலத்திலிருந்து அதி விசேஷமாகக் கொண்டாடி வருகிறோம்.

சீதையோ ஸாக்ஷாத் மஹாலக்ஷ்மி அவதாரம். ருக்மிணி – ஸத்யபாமாக்களை ஜனங்கள் அவ்வளவாகக் கொண்டாடுவதில்லை. ஸீதைக்கே விசேஷ மஹத்வம் தருகிறோம்.

அப்படியிருக்க, காளிதாஸர் செய்த ச்லோகத்தில் பார்வதி – ப்ரமேச்வரர்களை மாத்திரம் சொல்லிவிட்டு மஹாவிஷ்ணு – மஹாலக்ஷ்மிகளை விட்டிருப்பாரா என்று யோசித்துப் பார்த்தேன்.

அப்படிப் பார்த்ததில் அவர் மஹா விஷ்ணு – மஹாலக்ஷ்மிகளையும் இந்த ச்லோகத்தில் சொல்லியே இருக்கிறாரென்று தெரிந்தது.

எப்படி என்றால்: ‘பார்வதீ – பரமேச்வரென’ என்று வருவதை வேறே மாதிரி பதம் பிரித்தால் ‘பார்வதீப -ரமேச்வரென’ என்று வரும்.

‘ப’ என்று சொன்னாலே ‘பதி’ என்று அர்த்தம் உண்டு. பழங்காலத்தில் இந்தத் தமிழ் தேசத்தில் பல ராஜாக்கள் தங்களுக்கு ‘ந்ருப நுங்கன்’ – அதாவது ‘ராஜாக்களில் சிரேஷ்டமானவர்’ என்று பட்டப் பெயர் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ‘ந்ருப’ என்றால் என்ன அர்த்தம்? ‘ந்ரு’ என்றால் ‘நர’- அதாவது ‘மனுஷ்யர்’ என்று அர்த்தம். ‘நரஸிம்ஹ’ ஸ்வாமியை ‘ந்ருஸிம்ஹர்’ என்றும் சொல்வதுண்டு.

இப்படித்தான் ‘ந்ருப’ என்பதில் ‘ந்ரு’ என்பது ஜன ஸமூஹத்தையும், ‘ப’ என்பது ‘பதி’ என்பதையும் குறிக்கும். ‘ந்ருப’ என்பது ஜனங்களுக்கு அதிபதியான ராஜாவைக் குறிக்கும்.

இப்படிப் பார்க்கும்போது ‘பார்வதீப’ என்பது பார்வதிக்குப் பதியான சிவ பெருமானைச் சொல்வதாகிறது.

‘ரமேச்வர’ என்பது ‘ரமா’வான மஹாலக்ஷ்மிக்கு நாயகனான மஹா விஷ்ணுவைச் சொல்வதாகிறது.

ஆகக்கூடி, காளிதாஸர் தம்முடைய ச்லோகத்தில் சிவ – விஷ்ணு பேதமில்லாமல் இரண்டு பேரையும் அவர்களுடைய தேவிமார்களின் பெயருடன் சேர்த்து நமஸ்காரம் தெரிவித்திருக்கிறார் என்று அர்த்தம் பண்ணிக்கொண்டு திருப்தி அடைந்தேன். இந்த ஸமரஸ பாவம் நம் எல்லோருக்கும் ஏற்ப, அத்தனை தெய்வங்களுமான ஏக பரமாத்மா அநுக்ரஹிக்க வேண்டும்!








Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

“இப்ப உனக்கு நான் அந்த மாதிரி ஏன் பண்ணினேன்னு தெரிஞ்சுண்டாகணும் இல்லையா? துக்ளக் ஆசிரியர் சோ கூறுகிறார்…





“இப்ப உனக்கு நான் அந்த மாதிரி ஏன் பண்ணினேன்னு தெரிஞ்சுண்டாகணும் இல்லையா?
இல்லைனா மூளை சும்மா இருக்காது, இல்லை ?”

துக்ளக் ஆசிரியர் சோ கூறுகிறார்…

நன்றி-பால ஹனுமான்.

நான் ஒரு incident சொல்றேன். ஆச்சரியமா இருக்கும்.

“நான், Indian Express Group-ல நிறைய பேர், Goenka, grand sons… Arun Shourie, Gurumurthy எல்லோரும் மஹா சுவாமிகளைப் பார்க்கப் போயிண்டிருக்கோம்.

அப்போ போற வழியிலே, என் வாய் சும்மா இல்லை. என் வாய்தான் எப்பவுமே சும்மா இருக்காதே…”ஏன் இந்த மகா ஸ்வாமிகள் இப்படிப் பண்ணினார்னு ஒரு விஷயம் பத்திக் கேட்டேன். அது சரியில்லையே, ஏன் அப்படிப் பண்ணினார்?” என்று.

நான் தான் பெரிய ப்ருஹஸ்பதி ஆச்சே… எல்லாத்தைப் பத்தியும் பேச முடியுமே!” பகவான் கொடுத்த எதை use பண்றேனோ இல்லையோ, வாயை மட்டும் நன்னா useபண்ணிண்டு இருக்கேன். So, அந்த மாதிரி கேட்டுட்டேன். அப்ப குருமூர்த்தி அவாள்லாம், “நமக்கு என்ன தெரியும்? என்னமோ பண்ணியிருக்கார். நமக்குத் தெரியாது” என்றனர்.

இது தாம்பரத்துக்கும் முன்னால் நடந்த சம்பவம். காஞ்சீபுரத்துக்குப் போய் உட்கார்ந்தோம் அவர் முன்னாலே… நிறைய பேர் இருந்தா. அதனால இந்த incidentசொல்றதில்ல தப்பில்ல… ஒரு 200 ~ 250 பேர் இருந்தா. அவர் நிறைய விஷயங்கள் பேசினார். பேசிட்டு, என்னைப் பார்த்து, “இப்ப உனக்கு நான் அந்த மாதிரி ஏன் பண்ணினேன்னு தெரிஞ்சுண்டாகணும் இல்லையா? இல்லைனா மூளை சும்மா இருக்காது, இல்லை ?”

ஆடிப் போயிட்டேன். எழுந்து ஓடிப் போயிடலாம் போல இருந்தது. சாதாரணமாகவே அவர் முகத்தைப் பாக்கறதே கஷ்டம். இந்த மாதிரி சொன்னதுக்கப்புறம் என்ன பண்றதுன்னே தெரியலே. நைசா நழுவிடலாமா என்கிற அளவுக்கு வந்துட்டேன். அப்புறம் பெரிய explanation கொடுத்தார்.

எனக்காக இல்ல. அங்க இருக்கற எல்லாருக்காகவும் – தெரிஞ்சுக்கட்டும்னு…

எப்படி அவருக்குத் தெரிஞ்சுது சார் ? எப்படிக் கண்டு பிடிச்சார் அவர் ? நாங்க இங்க எங்கேயோ பேசிண்டிருக்கோம். நான் கேட்டிருக்கேன். அங்க போய் உட்கார்ந்தவுடன், “இது உனக்குத் தெரிஞ்சாகணும் இல்லியா?” என்று கேட்கிறார். இது மாதிரி சில powersஎல்லாம் இருக்கு சார்.

நான் இத சொல்றத வச்சு நான் அவருக்கு என்னமோ ஆத்மார்த்த சிஷ்யன் என்று எல்லாம் நினைச்சுடாதீங்கோ. கிடையாது. ஏதோ சில சமயம் பார்த்திருக்கிறேன். பேசியிருக்கிறேன்.. ஆனா அவருக்கு என் தாத்தா மேல ரொம்ப அபிமானம் உண்டு. அதனால கொஞ்சம் பேசுவார். அப்படி வச்சுக்கணுமே ஒழிய நான் என்னமோ அவருக்கு ரொம்ப close, சிஷ்யன் அப்படி எல்லாம் நினைச்சுடாதீங்கோ…எனக்கு அந்த அருகதை கிடையாது. But, எதுக்கு சொல்ல வந்தேன்னா, நமக்கு மீறின விஷயங்கள் நிறைய தினம் உங்க Life-லேயும் நடக்கிறது. என் Life-லேயும் நடக்கிறது. நம்ப Realizeபண்றதில்ல. இதெல்லாம் கடவுளோட வேலைன்னு…








Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.