"பொன் மழை-ஆதி சங்கரர் இல்லை-நம் சங்கரர்"
கட்டுரையாளர்;எஸ்.கணேச சர்மா
தட்டச்சு;வரகூரான்
.17-07-2013-இது போஸ்டானது.
காஞ்சிபுரம் செல்பவர்கள் காமாட்சி அம்மன் கோவிலை கொஞ்சம் தூரத்தில் நின்று ஒரு நிமிஷமாவது அதன் கம்பீரத்தை, காந்தம் போல் கவரும் கோபுர அழகை, அதன் பின்னே இருக்கும் கோடானு கோடி திவ்ய அனுபவங்களை ஒரு கணமேனும் நினைக்க நேரமில்லை.
காமாட்சி அம்மனுக்கு மேலே உள்ள அழகிய விமானம் ஒரு காலத்தில் தக தக வென்று கண்ணைப் பறிக்கும் பொன்மயமாக இருந்தது. காலம் செல்ல செல்ல விமானத்தின் மீது இருந்த தங்க ரேக் கெல்லாம் அழிந்து உதிர்ந்து வெறும் செம்பாக காட்சி அளித்தது. வருத்தமான ஒரு விஷயம்.
அப்போதெல்லாம் மடத்துக்கு பண வசதி போதாது. அன்பர்களும், பக்தர்களும் கொடுப்பதை வைத்து தான் மடம் நடந்து கொண்டிருந்தது.பல நாட்கள் பிட்சா வந்தனத்துக்கு யார் வரப் போகிறார்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பது கூட உண்டு. சந்நியாச தர்மப்படி அந்த பிட்சாவந்தனத்தை வைத்துத்தான் பெரியவாளுக்கு பிட்சையே நடக்கும்.
என்ன தோன்றியதோ ஒரு நாள் மஹா பெரியவா மானேஜர் அவரிடம் வந்தபோது
“விமானத்துக்கு தங்கரேக்கைப் பயன்படுத்தாமல் ஏன் வெறும் செம்பாக வைத்திருக்கிறீர்கள்?”
என்ன பண்றது பெரியவா பண வசதி போறவில்லையே ” – மானேஜர்
பெரியவா யோசனை பண்ணினா. பிறகு ஒரு ஆசாரியை வரவழைத்து விமானத்துக்கு தங்க ரேக்கு பதிக்க எவ்வளவு பவுன் ஆகுமென்று கேட்டார்.
விமானமெல்லாம் கழற்றிக் கீழே வைக்கப்பட்டது.
பார்த்துவிட்டு,ஆசாரி பல பவுன்கள் வேண்டும் என்றார். பெரியவா தலையை ஆட்டினார்,
“இவ்வளவு பவுனுக்கு எங்கே போவது?” என்ற கேள்விக்குறி பெரியவா முகத்தில்.
அடிக்கடி “காமாட்சியோட விமானத்துக்கு தங்க ரேக்கு பண்ண ஆசையிருக்கு,எப்படி என்றுதான் தெரியலை?” என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.
அந்த சமயம் மகாராஜபுரம் விஸ்வநாதய்யர், (அந்தகாலத்தில் பிரபல கர்நாடக சங்கீத வித்வான் ) பெரியவாளை தரிசனம் பண்ண உள்ளே வந்தார். பெரியவா கட்டளைப்படி தேவகானம் பொழிந்தார் பெரியவா அவரிடம்,
“எனக்கு காமாட்சி அம்மனின் விமானத்தை தங்க ரேக்கால் ஒளி வீசச் செய்யணும்னு மிகவும் ஆசையாக இருக்கு.
இவர்களெல்லாம் அது முடியாத காரியம். பவுனுக்கு எங்கே போவது என்கிறார்கள். பெரிய குறையாக இருக்கிறது.
ஆனால்,உன் பாட்டைக் கேட்டதும் அந்தக் குறை தணிந்துவிட்டது. உனக்குக் கனகதாரா தோத்திரம் தெரியுமோ?” என்று கேட்டார்.
“சுமாராகத் தெரியும்” என்றார் விஸ்வநாதய்யர். அங்கே வந்திருந்த பெண்மணிகளில் சிலர்,”எனக்குத் தெரியும்” என்று முன் வந்தனர். எல்லோரும் சேர்ந்து கனகதாரா தோத்திரத்தை முழக்கினார்கள். அதைச் சொல்லி முடித்தார்களோ இல்லையோ ஒரு அதிசயம் நடந்தது.
அங்கேயிருந்த ஒரு தட்டில் அத்தனை பெண்களும் தங்கள் நகைநட்டுகளைக் கழட்டிப் போட்டனர். “ஆசார்யரது ஸ்லோகத்தை இன்றைக்குச் சொன்னாலும் பொன்மாரி பொழிகிறதே” என்று பெரியவர் புளகாங்கிதம் அடைந்தார். அதை அப்படியே ஆசாரியிடம் அள்ளிக் கொடுத்து
”ஐந்து நாட்களுக்குள் தங்க விமானம் பண்ணி எடுத்து வா” என்றார்.
அந்த பவுனை எடை போட்டுப் பார்த்தபோது ஆசாரி கேட்ட பவுனுக்கு ஒரு குந்துமணி கூடவுமில்லை, குறையவுமில்லை என்று அதிசயப்பட்டார் ஆசாரி.
சர்வ வல்லமை படைத்த தெய்வமான பெரியவா ஒன்று நினைத்தால் அது நடக்காமல் போய்விடுமா ?
ஆறே நாளில் தங்க விமானம் வந்து,கும்பாபிஷேகமும் அமோகமாக நடந்தேறியது.
ஆதி சங்கரர் முழங்கிய கனக தாரா ஸ்தோத்ரத்தை கேட்டு ஒரு ஏழைப் பெண்ணுக்காக அம்பாள்,அன்று பொன்மழை பொழிந்தாள்.
இன்று பல ஏழைப் பெண்மணிகள் அம்பாளாகவே உருவெடுத்து மனதால் ஒன்றுபட்டு, நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று தாரளமாக விரும்பி அளித்த கனகம் காமாட்சி அம்மன் விமானத்துக்கு ஒளி மயம் தந்தது. அந்த ஒளி மஹா பெரியவா முகத்திலும் வீசியது என்று சொல்லி இதை முடிக்கலாமா?
Courtesy : Facebook post : Varagooran Narayanan
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.
No comments:
Post a Comment