Friday, February 13, 2015

காஞ்சி மகாப்பெரியவர் குறித்த மிக அபூர்வமான ஒரு தகவல்.



காஞ்சி மகாப்பெரியவர் குறித்த மிக அபூர்வமான ஒரு தகவல்.

(வபனம் மற்றும் ஸ்நானம்)

நன்றி-19-11-2014 தினமலர்.

மகா பெரியவர் வபனம் செய்வது(முடி மழித்தல் முறை) குறித்து தெரிந்து கொள்ளுங்கள். அவர் இரண்டு பவுர்ணமிக்கு ஒரு முறை, ஆறு அல்லது குளக்கரைக்குச் சென்று வபனம் செய்து கொள்வார்.

அவர் வபனம் செய்யச் செல்லும் போது, முதலில் சுவாமியை வணங்குவார். நீர்நிலையில் கரையில் அமர்வார். ஒரு வாழை இலையில் கத்தி, ஒரு கிண்ணத்தில் பால், ஒரு கிண்ணத்தில் தண்ணீர் வைக்கப்படும். ஒரு கடிகாரத்தையும் வைத்து விடுவார்கள்.

பெரியவர், முதலில் பாலை தன் தலையில் தடவிக் கொள்வார். கத்தியை தன் தலையில் வைத்து விட்டு, பிறகு இலையில் வைத்து விடுவார். முடி திருத்துபவர் பெரியவரை வணங்கி விட்டு தலைமுடியை மழிப்பார். பிறகு கை, கால்களிலுள்ள நகங்களை ஒழுங்குபடுத்துவார். இந்தப்பணி முடிந்த பிறகு, பெரியவர் நதி அல்லது குளத்திலுள்ள மண்ணை எடுத்து கை, கால்களில் தடவிக் கொள்வார். வாய் கொப்பளித்து விட்டு நீராடச் செல்வார்.

இதற்குள் சீடர்கள் ஐந்து பெரிய மண் உருண்டைகளை தயார் செய்து வைத்து விடுவார்கள். அவர் ஆற்றில் நீராடத் தயாரானதும், நான்கு சீடர்கள் அந்த உருண்டைகளை சின்ன சின்னதாய் பிரித்து உருட்டுவார்கள். நான்கு பேரும் 12 முறை அந்த உருண்டைகளை பெரியவர் கையில் கொடுப்பார்கள். அதை பெரியவர் காலில் தடவிக் கொண்டு 12 முறை மூழ்கி எழுவார்.

இதன்பின், திரும்பவும் 12 உருண்டைகளைக் கையில் கொடுப்பார்கள். அதை இடுப்பு வரை தடவிக் கொண்டு, மீண்டும் 12 முறை மூழ்கி எழுவார். அதையடுத்து இன்னும் 12 உருண்டைகள் தரப்படும். அதை மார்பு வரை தடவிக் கொண்டு 12 முறை குளியல்...பின் இன்னும் 12 உருண்டைகளைப் பெற்று முகம், தலையில் தடவி குளிப்பார்கள். கடைசியாக தரப்படும் 12 உருண்டைகளை உடல் முழுவதும் தடவிக் கொண்டு 12 முறை மூழ்கி எழுவார். பெரியவர் மூழ்கும் போது, ஒவ்வொரு முறையும் சீடர்களும் மூழ்கி எழுவர்.

அவர் குளிக்கும் போது, அவரது கையிலுள்ள தண்டம் ஒரு "ஸ்டாண்டில்' வைக்கப்பட்டிருக்கும். அந்த தண்டத்தின் முன்னும் மண் உருண்டைகளை ஒரு மரத்தட்டில் வைத்துக் காட்டுவார்கள். கரைக்கு வரும் பெரியவர், அந்த தண்டத்தை எடுத்துக் கொண்டு மீண்டும் ஆற்றில் இறங்கி 12 முறை மூழ்கி எழுவார்.

பின், பெரியவர் தான் கட்டியிருக்கும் ஆடையை நீரிலேயே விசர்ஜனம் (களைதல்) செய்து விடுவார். இதை அதிர்ஷ்டமுள்ள ஒரு பக்தர் பிரசாதமாக எடுத்துக் கொள்வார். பின் பக்தர்கள் பெரியவருக்கு சால்வைகள் கொடுப்பார்கள். மங்கள ஆரத்தி எடுத்து, வாத்தியம் முழங்க மடத்திற்கு திரும்புவார்கள்

ஆரத்தி எடுப்பவர்களுக்கு வெள்ளிக்காசு பிரசாதம் தரப்படும்

இந்த அபூர்வத்தகவலை படித்த நாமும், பெரியவரின் அருட்பிரசாதம் பெற்றவர்களாகிறோம்.






Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.


No comments: