"காலத்தை வென்றவர் காவியம் ஆனவர்"
ஜூலை-10 தினமலர்.
ஒரு சமயம் சிவாரத்திரி வேளை. மகாபெரியவர் காஞ்சி மடத்தில் இருந்தார். அங்கே பெண், மாப்பிள்ளைகளுக்கு இலவசமாகப் பொருத்தம் பார்த்து தரும் ஜோதிடர் ஒருவர் வந்தார்.
வந்தவர், மடத்து ஏஜன்டையும், ஊழியர்களையும் அழைத்தார்.
""உங்களுக்கெல்லாம் வருத்தமான ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டிய நிலையில் இருக்கிறேன். நமது மகாபெரியவரின் ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்தேன். அவருக்கு மிகப்பெரிய கண்டம் ஒன்று வந்துள்ளது. நேரம் சரியில்லை. சிவராத்திரியைத் தாண்டுவதே பெரிய விஷயம்,'' என்று சொல்லி விட்டார்.
எல்லாருமே வருத்தத்தில் ஆழ்ந்துவிட்டனர்.
அவர்களின் முகக்குறிப்பைக் கொண்டே மகாபெரியவர் என்ன ஏதென்று விசாரித்தார். எல்லாருமே சமாளித்து விட்டார்கள். பெரியவரிடம் ஏதும் சொல்லவில்லை.
சிவராத்திரி நாளும் வந்து விட்டது. எல்லாரும் பதைபதைப்பாக இருந்தார்கள். "சிவராத்திரி கழிந்து விட்டால், ஜோசியர் சொன்னது பலிக்காமல் போய்விடும். சீக்கிரமாக இந்தநாள் கழியட்டும்' என்று எல்லார் மனதிலும் ஏக்கம்.
அன்று பெரியவர் எல்லாரையும் அழைத்து, ""ஏன் எல்லாரும் அமைதியாக இருக்கிறீர்கள். இன்று சிவராத்திரி. சிவநாம கீர்த்தனை, சிவஸ்துதிகள், ராமநாம பஜனை செய்யுங்கள்,'' என்று சொன்னார்.
பெரியவருக்கு ஜோசியர் சொன்ன விஷயம் தெரிந்து விட்டதா? தெரியாதா? என்ற சந்தேகத்துடன், அவர் இட்ட கட்டளைப்படி எல்லாரும் வழிபாட்டைத் துவங்கினர். பஜனை பாடியபடியே, பெரியவரை எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஒருவழியாக இரவு கழிந்தது. மடத்து ஊழியர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
காலையில், எல்லாரையும் அழைத்த பெரியவர்,""என் வாழ்நாள் முடியப்போகிறது என்று கவலையுடன் இருந்தீர்களா? என்னை காலன் இப்போது அணுகமாட்டான். நான் சித்தியாவதற்கு இன்னும் பல வருடங்கள் ஆகும். ஆகவே, நீங்கள் எல்லாரும் அதைப் பற்றிய சிந்தனையை விட்டுவிடுங்கள். சித்தத்தை சிவன்பால் செலுத்துங்கள்<'' என்று அனுக்கிரகம் செய்தார்.
அது மட்டுமல்ல! நூறாண்டு காலம் நம்மிடையே வாழ்ந்தார், காலத்தை வென்று காவியமானார். இன்றும் வாழும் தெய்வமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
Courtesy : Facebook post : தினமலர் , Varagooran Narayanan
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.