Tuesday, February 17, 2015

தேடினேன் வந்தது! "இது வேண்டாமே' என்று சொன்னதோடு - மஹாபெரியவா



தேடினேன் வந்தது!

("இது வேண்டாமே' என்று சொன்னதோடு
, "நாளை பச்சைக் கடலை வரும்' )

ஆகஸ்ட் 13,2014,தினமலர்.

ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.வி. சுவாமிநாதன், தன் 11 வயது முதலே காஞ்சிப் பெரியவரைத் தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இவர் டில்லியில் பணியாற்றிய சமயம், ஒருநாள் பகல் விமானத்தில் சென்னை வந்து மாலையில், காஞ்சிபுரம் தேனம்பாக்கத்தில் உள்ள சிவாஸ்தானத்தில், பெரியவரைத் தரிசிக்க உத்தேசித்திருந்தார்.

டில்லி பாலம் விமானநிலையத்திற்குச் செல்லும் வழியில், அரசு செயலர் ராமச்சந்திரன் வீட்டுக்குச் சென்று, தான் காஞ்சிபுரம் சென்று பெரியவரைத் தரிசிக்க இருப்பதைத் தெரிவித்தார்

ராமச்சந்திரன் தன் வீட்டு தோட்டத்தில் காய்த்திருந்த பச்சைக் கொண்டைக்கடலையை நிறைய பறித்து பெரியவரிடம் சமர்ப்பிக்கும்படி வேண்டிக் கொண்டார். 

அன்று ஏதோ காரணத்தால் விமானம் புறப்பட தாமதமானது. அதனால், மாலையில் சென்னை வர வேண்டிய விமானம் இரவில் தான் வந்து சேர்ந்தது. மறுநாள் காலையில் சுவாமிநாதன் சிவாஸ்தானம் கிளம்பி வந்தார். பெரியவருக்கு சமர்ப்பிக்கும் திரவியங்களை எல்லாம் தட்டுகளில் எடுத்து வைத்தார். அருகில் இருந்த பெரியவரின் சீடர் ஒருவர், "" பச்சைக் கடலையை கொண்டு வந்துள்ளீர்களே! ஏதும் விசேஷமா?'' என்று கேட்டார். 

அதற்கு சுவாமிநாதன், வரும் வழியில் செயலர் ராமச்சந்திரனைச் சந்தித்த விபரத்தையும், அவர் கடலை பறித்து தந்து பெரியவருக்கு சமர்ப்பிக்க சொன்னதையும் தெரிவித்தார். 

அந்த சீடர்,"" நேத்து காலை சரியா 11 மணி இருக்கிறப்போ ஜபம், அனுஷ்டானம் எல்லாம் முடிஞ்சதும், பெரியவர் பச்சைக் கொண்டைக் கடலை கிடைக்குமா?'' என்று கேட்டார். 

அருகிலுள்ள வயல் வரப்பெல்லாம் தேடிப் பார்த்தும் எங்கும் தென்படவில்லை. இல்லை என்று எப்படி சொல்வது என்று தயக்கத்துடன் பெரிய வெள்ளைக் கடலைகளை கொஞ்சமாக எடுத்து வைத்தேன்.

பெரியவரோ, "இது வேண்டாமே' என்று சொன்னதோடு, "நாளை பச்சைக் கடலை வரும்' என்று மட்டும் தெரிவித்தார். அதன்படி நீங்களும் கொண்டு வந்து விட்டீர்கள்,'' என்று சொல்லி, அதிகாரியை வியப்பில் ஆழ்த்தினார். 

காஞ்சிபுரத்தில் இருந்தபடியே, டில்லி லோதி ரோட்டில் பச்சைக் கடலை இருப்பதை அறிந்து, அதை வரவழைத்த முனிபுங்கவரான காஞ்சிப்பெரியவரின் ஞான திருஷ்டியைக் கண்ட அனைவரின் நெஞ்சமும் பரவசத்தில் ஆழ்ந்தது. 

சி. வெங்கடேஸ்வரன்







Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.



No comments: