Saturday, April 11, 2015

”நீ போய் கோயிலைச் சுத்திப் பார்த்துட்டு வா”ன்னு என்னை அனுப்பினார் "







மகா பெரியவா தனக்கு நெருக்கமா இருக்கறவாகிட்டயும், தன்னைச் சுத்தி இருக்கறவாகிட்டேயும்தான் கருணை காட்டுவார்னு நினைச்சா, அது தப்பு. அவருக்கு எப்பவுமே ஜனங்கமேல அபரிமிதமான அன்பு உண்டு. அவங்க கஷ்டப்படறதைப் பொறுத்துக்கவே மாட்டார். அவரால அதை சகிச்சுண்டு இருக்கமுடியாது!” 

பல வருடங்களுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி ஒன்றை விவரித்தார் பட்டு சாஸ்திரிகள்.

”திருமழிசைஆழ்வார் பிறந்த க்ஷேத்திரம் திருமழிசை. அந்த ஊருக்குப் பக்கத்திலேயே நூம்பல்னு ஒரு கிராமம் இருக்கு. இங்கே, மகா பெரியவா ஒருமுறை முகாமிட்டிருந்தார். ஒருநாள்… திருக்குளத்துல ஸ்நானம் பண்ணிட்டு, பக்கத்திலேயே இருக்கிற பெருமாள் கோயிலுக்கு வந்தார் பெரியவா. அப்போ மணி 11 இருக்கும்; சுள்ளுனு வெயில் அடிச்சிண்டிருந்தது. சூடுன்னா அப்படியரு சூடு!

கோயில் வாசல்ல பெரிய கதவும், அதுலேயே சின்னதா ஒரு கதவும் இருக்கும். அதைத் திட்டிவாசல்னு சொல்லுவா! அந்த வழியா உள்ளே போன பெரியவா, மதிலை ஒட்டி கொஞ்சம் நிழல் இருந்த இடத்துல போய் அப்படியே சாய்ஞ்சு உட்கார்ந்துட்டார். அவருக்கு எதிரே அடியேன்; பெரியவா கேக்கறதுக்கு எல்லாம் பதில் சொல்லிண்டு இருந்தேன்.

வெயில் நெருப்பா கொதிச்சிண்டு இருந்த இடத்துல நின்னுண்டிருந்தேன். இன்னும் கொஞ்ச நேரம் அப்படியே நின்னுண்டிருந்தா, காலே பொசுங்கிடும்போல இருந்துது. அப்படியரு சூடு! பெரியவாகிட்டே பேசிண்டிருந்த அதே நேரம், தரையோட சூடு பொறுக்கற வரைக்கும் ஒரு கால், அப்புறம் சட்டுன்னு அடுத்த கால்… இப்படியே கால்களை மாத்தி மாத்தி வெச்சு நின்னு சமாளிச்சுண்டிருந்தேன்!

மகா பெரியவா, நம்மோட மனசுல என்ன இருக்குங்கறதையே தெரிஞ்சுக்கற மகான். எதிர்ல நிக்கற என்னோட நிலைமை அவருக்குத் தெரியாம இருக்குமா? சட்டுன்னு பேச்சை நிறுத்தின பெரியவா, ”வெளியில என்னவோ பேச்சு சத்தம் கேக்கற மாதிரி இருக்கு. என்னன்னு போய்ப் பார்த்துட்டு வந்து சொல்லு!”ன்னார்.

விறுவிறுன்னு வெளியே வந்தேன். வாசல்ல நின்னு எட்டிப் பார்த்தேன். அங்கே ஒரு நூத்தம்பது, இருநூறு பேர் நின்னுண்டிருந்தா. எல்லாரும் மகா பெரியவாளை தரிசிக்கிறதுக்காகத்தான் நிக்கறாங்கன்னு தோணுச்சு. பெரியவாகிட்ட வந்து விவரத்தைச் சொன்னேன்.

ஆனா மகா பெரியவாளோ, ”அவா எதுக்கு வந்திருக்கா? ஸ்வாமி தரிசனத்துக்குதானே வந்திருக்கா?! சரியா கேட்டுண்டு வா!”ன்னு மறுபடியும் என்னை அனுப்பினார்.

‘அடடா… பெரியவா சொல்றதுபோல, வெளியில நிக்கறவா எல்லாரும் ஸ்வாமி தரிசனத்துக்கு வந்திருக்கலாம், இல்லையா? நமக்குத் தோணாம போச்சே! பெரியவாளை தரிசனம் பண்ணத்தான் வந்திருக்கானு நானாவே எப்படி நினைச்சுக்கலாம்?’ என்று யோசிச்சபடி, வாசல் பக்கம் நகர்ந்தேன்.

”அப்படியே கையோட, அவாள்லாம் வெயில்ல நிக்கறாளா, நிழல்ல நிக்கறாளானு பார்த்துண்டு வா”ன்னார் பெரியவர்.

‘நீ மட்டும்தான் கால் சூட்டோட என்கிட்ட பேசிண்டு நிக்கறதா நினைக்கறியோ?! உன்னைப்போல எத்தனை பேரு வெயில்ல கால்கடுக்க நின்னுண்டிருக்கானு உனக்குத் தெரியவேணாமா?’ன்னுதான், மகா பெரியவா என்னை அனுப்பிவைச்ச மாதிரி தோணிச்சு எனக்கு.

ஜனங்க கூட்டமா நின்னுண்டிருந்த இடத்துக்கு வந்தேன். ”எல்லாரும் கோயிலுக்கு ஸ்வாமி தரிசனத்துக்கு வந்திருக்கேளா… இல்ல, மகா பெரியவாளை தரிசிக்க வந்திருக்கேளா?”ன்னு கேட்டேன்.

”பெரியவாளை தரிசனம் பண்ணி, ஆசீர்வாதம் வாங்குறதுக்குதான் வந்திருக்கோம்”னு கோரஸா பதில் சொன்னா. ஓடி வந்து பெரியவாகிட்ட விஷயத்தைச் சொன்னேன்.

அவர் உடனே எல்லாரையும் உள்ளே அனுப்பிவைக்கச் சொன்னார். ”இங்கே மதிலோட நிழல் விழறது. எல்லாரும் அப்படியே நிழல்ல உட்கார்ந்துக்குங்கோ”ன்னார்.

வெயிலின் உக்கிரத்தைத் தாங்கமுடியாம தவிச்ச என்னோட நிலைமையைக் கவனிச்ச அதே நேரம், வெளியே ஜனங்க நின்னுட்டிருக் கிறதையும், அவங்களும் வெயில்ல கஷ்டப் படுவாங்களேங்கிறதையும் பெரியவா யோசிச்சு, அவங்களை உடனே உள்ளே அனுப்பச் சொன்னார் பாருங்கோ, அதான் பெரியவாளோட பெருங்கருணை.

இதைக் கேட்கறதுக்கு ரொம்பச் சின்ன விஷயம்போலத் தெரியலாம். ஆனா, எந்த ஒரு சின்ன விஷயத்துலேயும் நுணுக்கமான பார்வையோடு, ஜனங்க மேல மகா பெரியவா காட்டின அன்பையும் அக்கறையையும்தான் நாம இங்கே முக்கியமா கவனிக்கணும்.

கூட்டத்தோடு பேசிண்டிருந்த நேரத்துல, ”நீ போய் கோயிலைச் சுத்திப் பார்த்துட்டு வா”ன்னு என்னை அனுப்பினார். பெரியவா உத்தரவு ஒவ்வொண்ணுக்கும் ஏதாவது உள் அர்த்தம் ஒண்ணு இருக்கும்.

நான் பிராகாரத்தை வலம் வந்தப்ப, அங்கே பிள்ளையார் சந்நிதியைப் பார்த்தேன். ஆச்சரியமும் குழப்பமுமா இருந்தது. தென்கலை நாமத்தோட காட்சி தந்தார் பிள்ளையார். பெருமாள் கோயில்ல பிள்ளையார் எப்படி? தலையைப் பிய்ச்சுண்டேன். யோசிக்க யோசிக்க, பதிலே கிடைக்கலை.

கோயிலைச் சுத்தி முடிச்சு, மகா பெரியவா எதிரே வந்து நின்னேன். என்னை ஒருகணம் உத்துப் பார்த்தார்.

”என்ன… தென்கலை நாமம் போட்ட பிள்ளையார் இருக்காரேனு பிரமிச்சுட்டியோ? வைஷ்ணவ சம்பிரதாயப்படி அவரை ‘தும்பிக்கை ஆழ்வார்’னு சொல்லுவா!” அவரே தான் ஸ்ரீ மத் நாதமுனிகளா திரு அவதாரம் செய்தார் ன்னு விளக்கம் சொல்லிட்டுச் சிரிச்சார் பெரியவா.










Courtesy :   Facebook post  :   Mannargudi Sitaraman Srinivasan  

Thanks to Mahaperiyava bhaktas for the  photos.

, அது அத்தனையும் உனக்குக் கிடைக்கட்டும்னு ஆசீர்வாதம் பண்றதுதான் இந்த வாக்யம்."






பல ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த நிகழ்வு இது.


பெரியவா தரிசனம் தந்துகொண்டிருந்த நேரத்தில், நான்கு, ஐந்து வித்வான்கள் அமர்ந்திருந்தனர்.
சஹஜமாகப் பேசிக்கொண்டிருக்கும்போது, பெரியவா ' பக்தர்கள் எனக்கு நமஸ்காரம் பண்றப்போ, 'நாராயணா, நாராயணா'ன்னு நான் ஆசீர்வாதம் பண்றேன். உங்களைப் போல ஸம்ஸாரிகள்லாம் எப்படிப் பண்ணுவேள்' என அவர்களிடம் கேட்டார்.


'தீர்க்காயுஷ்மான் பவ ஸௌம்ய'ன்னு சொல்லுவோம்' என அவர்களில் ஒருவர் சொன்னார்.

'அதுக்கு என்ன அர்த்தம்?'

'நீண்ட காலத்துக்கு ஸௌக்யமா இருங்கோன்னு அர்த்தம்'.

பக்கத்திலிருந்த மற்றவர்களிடமும் இதைக் கேட்டபோது, அப்படியே அவர்களும் பதில் சொன்னார்கள்.

கொஞ்ச நேரம் மௌனமாக இருந்த பெரியவா, 'நீங்க சொன்ன அர்த்தம் தப்பானது' என மெதுவாகச் சொன்னார்.

பண்டிதர்கள் திகைத்துப் போனார்கள். எல்லாருமே பெரிய பெரிய வித்வான்கள்; சிரோமணி பட்டம் வாங்கியவர்கள்.

கொஞ்சம் சாதாரணமாகவே ஸம்ஸ்க்ருதம் தெரிந்தவர்களுக்கும் கூட இந்த வாக்கியத்தின் அர்த்தம் சுலபமாக இப்படித்தான் புரிந்திருக்கும். அவ்வளவு எளிமையான வார்த்தைகள். ஆனால், இதென்ன, பெரியவா இது தப்பு என்கிறாரே!

'இப்ப நான் சொல்லட்டுமா?'

வித்வான்கள் காதுகளைத் தீட்டிக் கொண்டார்கள்.

"27 யோகங்கள்ல 'ஆயுஷ்மான்'ன்னு ஒண்ணு இருக்கு. பதினோரு கரணங்கள்ல ஒண்ணுத்துக்குப் பேரு 'பவ'. வார நாள்ல, புதன் கிழமைக்கு 'ஸௌம்ய' வாஸரம்னு பேரு.

இந்த மூணுமே, அதாவது ஆயுஷ்மான் யோகமும், பவ கரணமும் ஒரு புதன் கிழமையன்னிக்கு வந்தா அது ரொம்பவே ஸ்லாக்யம்னு சொல்லுவா. அப்பிடி இந்த மூணும் சேர்ந்து வர்றதால எவ்வளவு மேலான பலன்கள் கிடைக்குமோ, அது அத்தனையும் உனக்குக் கிடைக்கட்டும்னு ஆசீர்வாதம் பண்றதுதான் இந்த வாக்யம்."

அமர்ந்திருந்த வித்வான்கள் எழுந்திருந்து, சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தனர்.

இதுவரை கிளிப்பிள்ளை மாதிரி ஒரு வாக்கியத்தைச் சொல்லிக்கொண்டிருந்த அனைவருக்குமே புரிகிறமதிரி அந்த ஞானப்பிள்ளை அன்று எடுத்துக் காட்டியது.








Courtesy :   Facebook post  :   
Mannargudi Sitaraman Srinivasan  
Thanks to Mahaperiyava bhaktas for the  photos.

திருநெல்வேலில தக்ஷிணாமூர்த்தின்னு ஒரு பையன் இருந்தானே, அவன் இப்போ எப்படி இருக்கான்







நாற்பது ஆண்டுகளுக்கு முன், காஞ்சிப் பெரியவரின் ஜன்ம தினத்தன்று அவரைச் சந்தித்து ஆசி பெறுவதற்காக ‘கலவை’யில் எக்கச்சக்கக் கூட்டம் திரண்டிருந்தது. அப்போது ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு நபர் தன் மனைவியோடு, ஸ்வாமிகளின் தரிசனத்துக்காக முன் வரிசையில் காத்திருந்தார். அவர் கழுத்திலும், அவரின் மனைவியின் கழுத்திலும் காதிலும் தங்க நகைகள் ஏராளம் மின்னின. அவர் ஒரு பெரிய தொழிலதிபர் என்பது பார்த்த மாத்திரத்திலேயே புரிந்தது.
பெரியவர் தம் அறையிலிருந்து வெளிப்பட்டதும், முன்னால் இருந்த அந்தத் தம்பதி மீதுதான் அவரது பார்வை விழுந்தது. அந்தத் தொழிலதிபரை, “எப்படி இருக்கே?” என்று விசாரித்தார் பெரியவர்.


அதற்கு அந்தத் தொழிலதிபர், தான் செய்து வரும் தான தருமங்கள் பற்றியும், தொடர்ந்தாற்போல் நான்கு நாட்களுக்குத் தன் சொந்தச் செலவில் இலவசமாக ஏழை பிராமணர்களுக்கு ‘சமஷ்டி உபநயனம்’ செய்து வைத்தது பற்றியும் சொல்லிவிட்டு, அது தொடர்பான கையேடுகளைப் பெரியவரிடம் காண்பித்தார். அதை வாங்கிப் பார்வையிட்ட பெரியவர், “சரி, இதுக்கெல்லாம் உனக்கு எவ்வளவு செலவாச்சு?” என்று கேட்டார். தொழிலதிபர் பெருமிதம் தொனிக்கும் குரலில், “சில லட்ச ரூபாய்கள் ஆகியிருக்கும்” என்றார்.


பெரியவர் சிறிது நேரம் மௌனமாக இருந்தார். பின்னர், “அதிருக்கட்டும்… திருநெல்வேலில தக்ஷிணாமூர்த்தின்னு ஒரு பையன் இருந்தானே, அவன் இப்போ எப்படி இருக்கான்?” என்று சன்னமான குரலில் கேட்டுவிட்டுப் பதிலை எதிர்பாராமல் நகர்ந்து போய்விட்டார்.
தொழிலபதிபர் அப்போது அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை. தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் குமுறிக் குமுறி அழத் தொடங்கிவிட்டார். அவர் மனைவி அவரைச் சமாதானப்படுத்த முயன்றும் முடியவில்லை. அதற்குள் பத்திரிகையாளர்கள் சிலர் அங்கு கூடி, அவர் ஏன் அழுகிறார் என்று விசாரித்தனர். அதற்கு அவர், “நான் அயோக்கியன்… அயோக்கியன்..!” என்று திருப்பித் திருப்பிச் சொல்லிக்கொண்டு இருந்தார். அவரை ஒருவாறு சமாதானப்படுத்தி விஷயத்தைக் கேட்டதற்கு..........அவர் சொன்னார்…
“எனக்கு ஒரு அக்கா உண்டு. அவள் கணவனை இழந்தவள். அவளுக்கு ஒரு பையன். அவன் பெயர்தான் தக்ஷிணாமூர்த்தி. அவர்கள் இருவரும் என் வீட்டில்தான் தங்கி வளர்ந்தார்கள். பின்னர் அக்கா காலமாகிவிட்டாள். அதன்பின் அந்தப் பையனை என் வீட்டில் வைத்திருக்க விரும்பாமல், வீட்டை விட்டுத் துரத்தி விட்டேன். அதன்பின் அவன் எங்கே போனான், என்ன ஆனான் என்று எனக்குத் தெரியாது. ‘ஊருக்கெல்லாம் சமஷ்டி உபநயனம் செய்து வைப்பதாய் பெருமை பேசுகிறாய். ஆனால், உன் சொந்தச் சகோதரி மகனை மறந்துவிட்டாய். நீ பெரிய தர்மவானா?’ என்றுதான் பெரியவர் இப்போது என்னை மறைமுகமாகக் கேட்டார். உடனடியாக அந்தப் பையனைத் தேடிக் கண்டுபிடித்து, நல்ல முறையில் வளர்த்துப் பெரியவனாக ஆக்க வேண்டியது என் பொறுப்பு!” என்றபடி தன் மனைவியுடன் கிளம்பிச் சென்றார் அந்தத் தொழிலதிபர்.




    Courtesy :   Facebook post  :   Mannargudi Sitaraman Srinivasan  
    Thanks to Mahaperiyava bhaktas for the  photos.

நானும் இந்த சாஸ்திரம், வேதம்ங்கிறதையெல்லாம் அப்படியே நம்பிப் போறேன்.








மஹாபெரியவா - (Sharing Message)

1957-59 சென்னை மாநகரின் இந்த அரை நூற்றாண்டு சரித்திரத்தில் ஒரு பொற்காலம். கலியுகத்தில் நம் ஊனக்கண்களுக்கும் காட்சி அருளும் அவதார மூர்த்தி – காஞ்சி முனிவர் – பெரியவாள் என்றிந்தப் பார் புகழும் தவசிரேஷ்டன் தடுத்தாட்கொள்ளும் தயையால் சென்னையில் முகாம் இட்டிருந்த புண்ணிய மாதங்கள். பிரதானமாக மயிலாப்பூர் ஸம்ஸ்க்ருதக் கல்லூரியில், அன்று இளவரசரான புதுப் பெரியவாள் ஸ்ரீ ஜயேந்திரருடன், தங்கியிருந்த அருளாளன் திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம், தொண்டையார்ப்பேட்டை, மாம்பலம் என்று மாநகரின் பல பகுதிகளிலும் தனது புனிதத் திருவடிகளைப் பதித்து, பண்டு தருமம் மிகுந்திருந்த சென்னையில் மீண்டும் தருமப் பயிர் தழைக்க அருள் மழை பெய்து மக்களை அனுக்ரஹித்தார்.

ஒரு நாள் அதிகாலையில் மாம்பலம் சிவா-விஷ்ணு ஆலயத்திலிருந்து ஸ்ரீ திரிபுரசுந்தரி அன்னையுடன் ஸ்ரீமருந்தீஸ்வரர் கோயில் கொண்டுள்ள திருவான்மியூருக்கு அண்ணல் பாதயாத்திரை புறப்பட்டிருந்தார். உடன் செல்லும் பாக்கியம் பெற்ற பக்தர் குழாமில் அடியேனும் இடம் பெற்றிருந்தேன். அன்று முதலமைச்சர் திரு பக்தவத்ஸலம் என்று நினைவு. காவல் துறையாளர் இரண்டு மூன்று பேரும் கூட நடந்தனர்.

சிறிது தூரம் சென்றதும் எதிர்திசையிலிருந்து வந்த ஒருவன் ஸ்ரீ பெரியவாளை நெருங்கினான். செருக்கு மிகுந்த நோக்கு. செருப்புகளைக் கழற்றாத பாதங்கள். அலட்சியமும் அவமரியாதையும் அன்வயமாகியிருந்தன அவனது தோற்றத்தில், தோரணையில்.

முனிபுங்கவர் மீது அவனது ஸ்பரிசம் படாது தடுக்க விரைந்த பக்தர்கள், கைகளால் அரண் கட்டினர். காவல் துறையாளரும் முன் வந்தனர். ஆனால் கருணாமூர்த்தி அவர்களை விலகச் சொல்லிவிட்டு கனிவோடு “உனக்கு என்ன வேண்டும்” என்று வினவினார்.

“எனக்கொண்ணும் வேண்டாம். சங்கராச்சாரியார் பெரியவர்ன்னு பேசிக்கிறாங்களே, அது நீங்கதானே?” என்று வினவினான்.

“அதிருக்கட்டும். உன்னோட பேரென்ன? இந்த விடியக்காலத்துலே எங்கே போயிண்டிருக்கே?” – சரணாகத வத்ஸலனின் பரிவான விசாரணை.

அவன் தன் பெயரைச் சொல்லிவிட்டு, “எனக்கு ஜோலியில்லையா? வேலைக்குப் போய்க்கினு இருக்கேன்” என்று அஸ்திரம் ஏவுவது போல் கூறினான். “நீங்கள் மடாதிபதிகள் சோம்பேறிகள். பயனுள்ள காரியம் ஏதும் செய்யாதவர்கள்” என்ற ஏளனம் – கண்டனம் – அவன் பதிலில் தொனித்தது.

“உனக்கு எங்கே வேலை?” தயாநிதியின் தொடர்ந்த விசாரணை.

“கிண்டியில்” என்று கூறியபின் “ஒண்ணு கேக்கறேன். இந்த இந்து மதத்தை யாரு உண்டாக்கினாங்க?” எனக் கேட்டான்; வினாவில் ஞானம் தேடும் விநயமோ அறிவு வேட்கையோ கடுகளவும் இல்லை.

ஸ்ரீபெரியவாளின் – ஞான மேருவின் – “தெரியாதப்பா” என்ற மறுமொழி ஏதோ வாதத்தில் வெற்றி கொண்ட இறுமாப்பை அவனுக்குத் தந்தது போலும்.

“தெரியாதுங்கிறீங்க; அப்புறம் சாத்திரம் அப்படிச் சொல்லுது, இப்படிச் சொல்லுது’ சிலைமேலே பாலை ஊத்து, நெருப்பிலே நெய்யை ஊத்துண்ணு சொல்றீங்களே? எப்படி, இதெல்லாம் நல்லதுக்குன்னு நம்பறது?” எனக் கணை தொடுத்தான்.

கொஞ்சமும் சலனமுறாமல் தயாபரன் “அதிருக்கட்டும், கிண்டிக்குப் போகணும்னியே, இந்த ரோடுல போனா கிண்டி வந்துடுமா?” என்று வீணை ஒலித் தண்குரலில் வினவினார்.

“அதானே நான் போய்ட்டிருக்கேன்” என்ற பதிலில் “இதென்ன அநாவசியக் கேள்வி” என்ற உதாசீனம்.

“ஆமா… இந்த ரோடு யாரு போட்டது?...” அந்தப் பாமரனின் இதய வீணையை மீட்ட முற்பட்டுவிட்டார் முனிபுங்கவர்.

“இது என்னோட பாட்டன், முப்பாட்டன், அவுங்களோட முப்பாட்டன் காலத்துலேருந்து இருக்கற ரோடு… இதை யார் போட்டிருந்தா என்ன? கிண்டிக்குப் போவுது; அம்புட்டுத்தானே வேணும்?”

“இது கிண்டிக்குப் போற ரோடுன்னு நிச்சயமாச் சொல்றியே”

“இதிலே என்னங்க சந்தேகம்? தினமுந்தான் போய்க்கினு இருக்கேனே… மேலாலும் உசரப் பாருங்க… எந்தெந்த சாலை எங்கே போவுதுன்னு கைகாட்டி போர்டு போட்டிருக்காங்களே சர்க்காரிலே”

மான் அன்பு வலையில் சிக்கிவிட்டது. ஆனால் இது சிறைப்படல் இல்லை; மீட்சி!

“நானும் உன்னைப் போலத்தாம்பா… இந்த ரோடு யாரு போட்டதுன்னு அலட்டிக்காம, மேலே இருக்கிற கைகாட்டி போர்டையும் நம்பி நீ போற மாதிரி, நான் இந்து மதம் யாரு உண்டாக்கியதுன்னு விசாரப்படாமே போறேன்… நீ இந்தக் கைகாட்டிய நம்பறே… அது கூட காத்துலே மழையிலே தெசை மாறலாம்; கீழே விழலாமே.. நானும் இந்த சாஸ்திரம், வேதம்ங்கிறதையெல்லாம் அப்படியே நம்பிப் போறேன். அதெல்லாம் என்னைவிட எவ்வளவோ பெரியவா, முப்பாட்டனில்ல ஆயிரம் ஆயிரம் வருஷங்களா நெலச்சிருக்கிறதை நம்பறேன்; நம்பச் சொல்றேன்” என்று பரிவு ததும்பும் குரலில் கூறிய தயாநிதி,
“சரி, உனக்கு ஜோலியிருக்கே…. என்னைப் போலயா?... ஜாக்ரதையாப் போய்ட்டு வாப்பா” என்று அபயக்கரம் உயர்த்தினார்.

அடுத்த வினாடி அவன் பாதரட்சைகளை உதறி விட்டு நெடுஞ்சாண்கிடையாக விழுந்து நமஸ்கரித்தான்.

“என்னை மன்னிச்சுடுங்க” என்று நாத்தழுதழுக்கக் கூறினான். கன்னங்களைக் கண்ணீர் நனைத்தது.

Those who came to scoff remained to pray (ஏளனம் செய்ய வந்தவர் பிரார்த்தித்து வணங்க அமர்ந்தனர்) என்ற ஆலிவர் கோல்ட் ஸ்மித்தின் (The village Preacher) (கிராம பூஜாரி) கவிதை வரிகள் நினைவுக்கு வந்தன.

அதன் பின் ஸ்ரீ பெரியவாளின் பல முகாம்களிலும் தரிசனத்துக்கு வந்தான் அந்தப் பரம பக்தன், ரஸவாதப் பரிணாமத்தால்!

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!













  Thanks to  FB :  Sundar Iyer   --  மஹாபெரியவா - (Sharing Message)

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

சங்கர பகவத்பாதாள் தோன்றிய நம்பூதிரிவம்சத்தில்







சங்கர பகவத்பாதாள் தோன்றிய நம்பூதிரிவம்சத்தில்
இன்றைக்கும் வைதீக ச்ரத்தை அடியோடு போய்விடாத
பெருமை இருக்கிறது. பலவித தர்மங்கள் தலைவிரித்தாடிய
சமயத்தில் வேத தர்மத்தை மீண்டும் ஸ்தாபிப்பதற்காகவே
அவதாரம் செய்ய நினைத்த பரமேஸ்வரன் இருப்பதற்குள் 
எங்கே வேத அத்யயனம் ,அனுஷ்டானமும் நிறைய இருக்கிறது
என்று தேடிப் பார்த்து கேரளத்தில் ,காலடியில் ஒரு நம்பூதிரி
குடும்பத்தில் அவதாரம் பண்ணினார் என்று சொல்லியிருக்கிறது.
அவர் காலத்தில் மலையாள மொழியே தோன்றியிருக்கவில்லை.

தமிழ் மொழிதான் அங்கும் இருந்தது. சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளின்
அத்யந்த ஸகாவான சேரன் பெருமான் நாயனார் காலத்தில் கூட
கேரளம் தமிழ் பேசின சீமையாகத்தான் இருந்திருக்கிறது. அவர்
தமிழில்தான் திருக்கைலாய உலா என்ற க்ரந்த்தை பாடியிருக்கிறார்.
அவர் மலையாள தேசத்திலுள்ள திருவஞ்சைக் களத்தில் இருந்து
கொண்டு ராஜ்ய பரிபாலனம் செய்தவர்.


'திவ்ய ப்ரபந்தத்தில்'பெருமாள் திருமொழி' என்ற பெயரிலுள்ள
பாசுரங்களைச் செய்த குலசேகர ஆழ்வாரும், திருவனந்தபுரத்திலிருந்து
ஆட்சி செய்தவர்தாம். அப்போதும் அங்கு தமிழ்தான் இருந்திருக்கிறது.
இதற்கெல்லாம் முந்தி, இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன் ஈஸ்வரனே
சங்கரராக அவதாரம் செய்தபோது, கேரளம் தமிழ் நாட்டுப் பகுதியில்
தான் இருந்திருக்கிறது . வேதம் ரொம்பவும் ஜீவனோடு இருந்தது
என்பதால் தான் அவர் அங்கு அவதரித்தார் என்பதிலிருந்து தமிழ்
தேசத்துக்கு வேதத்தில் விசேஷ பற்றுதல் இருந்தது தெரிகிறது.











பெரியவாளின் அருளுரை.

ஜய ஜய சங்கரா....

Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks for Adisankara bhaktas for the photos and also 
Mahaperiyava bhaktas for the scanned photos.

Friday, April 10, 2015

நான் தான் கஜானா ராமச்சந்திரன் என்ற திருடனுக்கு உடந்தையாக இருந்து, அவனைத் திருடச் சொன்னேன்",









அய்யர்வாள்! நான் தான் கஜானா ராமச்சந்திரன் என்ற திருடனுக்கு உடந்தையாக இருந்து, அவனைத் திருடச் சொன்னேன்",

(கருணையின் வடிவமே!)

ஏப்ரல் 29,,2014-தினமலர்.

ஒரு சமயம், காஞ்சி மகாபெரியவர், சிவகங்கை மாவட்டம் இளையாத்தங்குடியில் சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டிக்க முகாமிட்டிருந்தார்.

ஒருநாள் இரவில், தேவகோட்டையில் இருந்து, ஒரு பஸ் நிறைய மக்கள் அவ்வூருக்கு வந்தார்கள். ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாய் ஏகமாய் சத்தம் கேட்க,

பெரியவர் அங்கிருந்த கஜானா ராமச்சந்திர அய்யரை அழைத்து, ""வெளியே நிறைய பேர் வந்திருக்கிறார்கள் போல் தெரிகிறது. யாரென்று பார்த்து வா...'' என்றவர், அவரை நிறுத்தி, ""அவர்களெல்லாம் சாப்பிட்டு விட்டார்களா என்று விசாரித்து வா,'' என்றார்.
அவரும் விசாரித்து வந்தார்.

""சுவாமி! அவர்கள் தேவகோட்டையில் இருந்து வருகிறார்களாம். அவர்கள் வந்த பஸ், வழியில் ரிப்பேராகி விட்டதால், தாமதமாக வந்திருக்கிறார்கள். யாரும் சாப்பிடவில்லையாம்,'' என்றார்.

""ராமச்சந்திரா! வெளியே பூஜைக்கட்டில் மேலூர் மாமா படுத்திருப்பார். அவர் பக்கத்தில் கட்டுப்பெட்டி சாவி கிடக்கும். நீ சந்தடி செய்யாமல் அதை எடுத்துப்போய் பெட்டியைத் திறந்து, அதிலுள்ள பழங்கள் எல்லாவற்றையும் எடுத்துப் போய், அவர்களிடம் கொடு

நாளை அபிஷேகத்திற்காக தயிர், பால் வைத்திருப்பார். எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு போய், அவர்களை சாப்பிட வை. பிறகு, சந்தடி செய்யாமல், சாவியை இருந்த இடத்திலேயே வைத்து விடு,'' என்று சொல்லி விட்டு உறங்கச் சென்று விட்டார்.

மறுநாள் விடிந்தது. மேலூர் ராமச்சந்திர அய்யர் கட்டுப்பெட்டியை திறந்தார். உள்ளே பழம், தயிர், பால் எதுவும் இல்லை. அவருக்கு கோபம் வந்து விட்டது.

""எந்த திருட்டுப்பயலோ, ராத்திரி மறுசாவி போட்டு பெட்டியைத் திறந்து, பழங்களை எடுத்துப் போயிருக்கிறான்,'' என்று மிகவும் சத்தமாகக் கத்தினார்.

அப்போது, பக்கத்து ரூமில் தான் பெரியவர் இருந்தார். அவர் அங்கிருந்து வந்து, ""அய்யர்வாள்! நான் தான் கஜானா ராமச்சந்திரன் என்ற திருடனுக்கு உடந்தையாக இருந்து, அவனைத் திருடச் சொன்னேன்,'' என்றார்.

அய்யர் அலறாத குறை தான். ""பெரியவா! மன்னிச்சுடுங்கோ'' என்று அவரது பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார்.

பூஜைக்கான பொருள் என்றாலும், அவசரம் கருதி, அது மக்களின் பசி தீர்க்க உதவுமானால், அதற்கே முதலிடம் என்ற கொள்கையுடைய மகாசுவாமிகள், கருணாமூர்த்தியாக நம் கண்முன் இன்றும் காட்சி தருகிறார்.






thanks  :  ஏப்ரல் 29,,2014-தினமலர்.


Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

Thursday, April 9, 2015

உத்தராஞ்சல் மாநிலத்தில் பாதாள் புவனேஸ்வர் - நன்றி - சந்தானம் T ராமனாதன்


 சந்தானம் T ராமனாதன்  அவர்களின் -
உத்தராஞ்சல் மாநிலத்தின் அனுபவம் 
நன்றி -  Facebook








2007 ல் ஆதி கைலாஷ் செல்லும் வழியில், உத்தராஞ்சல் மாநிலத்தில் பாதாள் புவனேஸ்வர் என்று ஒரு இடத்திற்கு சென்றிருந்தோம். என்னால் மறக்கவே முடியாத அதிசயம் இது. .சரய நதியும், ராம்கங்கா நதியும் ஓடும் இந்த இடத்தில்தான் உலகிலேயே மிக மிக அதிசயமான, பல ரகசியங்களை தன்னுள் மறைத்து வைத்திருக்கும் பாதாள குகை இருக்கிறது. நம் புராணங்களில் சொல்லப்பட்ட அத்தனை சம்பவங்களும் தெய்வங்களும் இங்கே சுயம்புவாய் காட்சியளிக்கின்றன என்பதுதான் இதன் அதிசயம். உலகின் ஏழு பாதாள அதிசயங்களில் இதுவும் ஒன்று. அல்மோராவில் கங்கோலிஹட் என்ற இடத்திலிருந்து 14 km தொலைவில் உள்ளது.

நான்தான் இறங்குவதற்கு முன்னால் ஒரு போஸ்

இது காளமேகம்
திரேதா யுகத்தில்தான் இது முதன் முதலில் கண்டுடிக்கப்பட்டிருக்கிறது. அயோத்தியை ஆண்ட ரிதுபர்ணன் என்ற மன்னன் ஒரு நாள் ஒரு மானைத்துரத்திக் கொண்டு செல்ல, இந்த குகைக்கருகில் வந்ததும் மான் மறைந்து விட, மன்னன் அந்த குகையைக்கண்டு அதனுள் இறங்கிப் பார்த்திருக்கிறான். பூமிக்கடியில் ஆதிசேஷன் எழுப்பிய சுவர்க்கம் இது என அறிகிறான். அறிந்த ரகசியத்தை வெளியில் சொல்லாதே என எச்சரிக்கிறது ஆதிசேஷன். ஆனால் அவன் மனைவியிடம் சொல்ல, மரணம் அவனை கொண்டு செல்கிறது. அவன் மனைவி குகைக்கு வருகிறாள், அதற்குள் இறங்குகிறாள். அவளும் ரகசியம் அறிகிறாள்.
இறங்கும் வழி

திரேதா யுகத்திற்குப்பின், துவாபர யுகத்தில் பாண்டவர்கள் இதனுள் நுழைத்திருக்கிறார்கள். இதிலுள்ள ஒரு வழி மூலம்தான் அவர்கள் சுவர்க்க ரோகினிக்கு சென்றிருக்கிறார்கள். அதன் பின் கலியுகத்தில் ஆதிசங்கரர் இதனுள் இறங்கி மாதக்கணக்கில் இங்கே தவமிருந்திருக்கிறார். . அங்கே உள்ள சுயம்பு லிங்கங்களை (பிரும்மா, விஷ்ணு, சிவன்) பூஜித்து அவற்றிற்கு செப்புத்தகடு ஒன்றும் அணிவித்திருக்கிறார். அது இன்னமும் உள்ளது. இந்த லிங்கங்கள்தான் குகையின் கர்ப்பக்கிரஹ தெய்வங்களாக பூஜிக்கப்படுகிறது. இங்கிருந்துதான் ஒரு ரகசிய வழி மூலம் அவர் கயிலாயம் சென்றிருக்கிறார். 1941 ல் சுவாமி பிரணவானந்தர் இதை மீண்டும் கண்டறிந்து உள்ளே சென்று தரிசித்திருக்கிறார்.

ஆதிசங்கரர் பூஜித்த லிங்கங்கள்

அதன் பிறகு எழுபதுகளில் ராணுவ அதிகாரி ஜெனரல் டெயிலர் என்பவரின் கனவில் சத்திய சாயி பாபா தோன்றி அவருக்கு ஒரு பாதையைக் காட்டி மறைந்திருக்கிறார். அந்த அதிகாரிக்கு ஒன்றும் புரியவில்லை. பின்னர் அவர் தன பணி நிமித்தமாய் இந்த இடத்திற்கு வந்த போது இதை தான் ஏற்கனவே பார்த்திருக்கிறோம் என்ற உணர்வு ஏற்பட அவருக்கு தன் கனவும் நினைவிற்கு வந்திருக்கிறது. அவர் உடனே தேடித் தேடி இந்த குகையைக் கண்டு பிடித்திருக்கிறார். பின்னர்தான் இது மக்கள் சென்று வரும்படியான இடமாயிற்று. குகையைச்சுற்றி கோயில் போல அமைக்கப்பட்டிருக்கிறது.

இதனுள் அப்படி என்னதான் அதிசயங்கள் இருக்கின்றன? 

உண்மையிலேயே அதிசயங்கள்தான். பிரும்மா, விஷ்ணு, சிவன், பார்வதி, பஞ்ச பாண்டவர்கள், ஆதிசேஷன், கொய்யப்பட்ட பிரும்மனின் தலை மீது பால் சொரியும் காமதேனு (இந்த இடத்தில் பித்ரு தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷம்), தொங்கிக் கொண்டிருக்கும், காலபைரவனின் நாக்கு, அதிலிருந்து உமிழ் நீர் சொட்டிக் கொண்டிருக்கிறது. அதற்கு முன்னால் கபால மாலைகளோடு சிவனின் இருப்பு,கழுத்து திருப்பிப் பார்க்கும் அன்னப்பறவை, இந்த அன்னப்பறவை, நாகங்களிடமிருந்து தண்ணீரைக் காக்க பிரும்மாவால் நியமிக்கப்பட்டது. ஆனால் இது தன கடமைச் சரியாகச் செய்யாததால் பிரும்மா இதன் கழுத்தை திரும்பியிருக்குமாறு சபித்து விட்டாராம். ஆயிரம் கால்கள் கொண்ட ஐராவதம் அதன் முன் பகுதியில் அதன் தலையும், தும்பிக்கையும், பஞ்ச பாண்டவர்கள் அருகிலிருக்க, சொக்கட்டான் விளையாடும் சிவன் பார்வதி, சிவனின் கமண்டலம், சிவனின் ஜடை, அதிலிருந்து சொட்டிக் கொண்டிருக்கும் கங்கை நீர், கேதார்நாத் லிங்கம், பத்ரிநாதர், அமர்நாத் குகை, தலை வெட்டப்பட்ட கணபதி, உச்சியிலிருந்து அதன் மீது அமிர்த தாரை சொட்டும் அஷ்ட தள தாமரை, என அத்தனையும் இங்கே சுயம்புவாய் உருவாகியிருக்கிறது. மூன்று யுகங்களாய் இந்த அதிசயம் பூமிக்குள் இருக்கிறது.

ஆதிசேஷன்
பிரும்ம தீர்த்தம். அருகில் நந்தி
தலை வெட்டப்பட்ட கணேஷா மேலே அஷ்ட இதழ் தாமரை
கேதார், பத்ரி, அமர்நாத்
சிவனின் கமண்டலம்
பஞ்ச பாண்டவர்களுடன் சிவன் பார்வதி
ஐராவதத்தின் கால்கள்
ஐராவதத்தின் முகப் பகுதி
முகம் திரும்பியிருக்கும் அன்னப்பறவை
இவற்றை கற்பாறைகளில் ஏற்பட்ட தோற்றம் என நம்பவே முடியாது. மென்மையான சதை ரூபம் காண்பது போல் தத்ரூபமாய்த் தெரியும். கர்ப்பகிரகமாக பூஜிக்கப்படும் பிரும்மா விஷ்ணு, சிவன் மூவருமே லிங்க வடிவில் வெவ்வேறு வர்ணங்களுடன் ஒன்றிலிருந்து ஒன்று வித்தியாசப்பட்டு தெரிவது மிகவும் அதிசயம அதிலும், சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் மட்டும் மேலிருந்து நீர்த்தாரை சொட்டுகிறது. பிரும்மாவின் மீது சொட்டுவதில்லை. இந்த லிங்கங்களுக்கு நாங்கள் கொண்டு சென்ற மானசரோவர் தீர்த்தால் அபிஷேகித்து, வில்வம் சார்த்தி பூஜித்தோம்.

பகீரதன் கங்கையைக் கொண்டு வந்த கதையைசொல்வது போல் சிவனின் ஜடையிலிருந்து வடியும் கங்கை அதனடியில் பகீரதனின் உருவம் அதற்கருகில் சிறிய குளம் போல் பிரும்ம தீர்த்தம், அதனருகே உள்ள நந்தி, முப்பத்து முக்கோடி தேவ ரூபங்கள். என்று அத்தனையும் இயற்கையாய் உருவாகியிருக்கிறது. இந்திர லோகத்திலிருந்து கிருஷ்ணர் கொண்டு வந்த பாரிஜாத மரமும் இங்குள்ளது.

சிவனின் ஜடை

பாரிஜாத மரம்

ஓரிடத்தில் நான்கு யுகங்களைக் குறிக்கும் லிங்கங்கள் உள்ளன. இவற்றில் கலியைக் குறிக்கும் மற்றதை விட சற்று உயரமான விரல் அளவு லிங்கம் ஒன்றிருக்கிறது. இது மெல்ல வளர்ந்து கொண்டிருக்கிறதாம். இது எப்போது குகையின் உச்சியைத்தொடுகிறது அப்போது கலியுகம் முடிந்து விடுமாம். இதன் பினால் ராமேஸ்வரத்திற்கு ஒரு ரகசிய பாதை உள்ளதாக சொல்லப்பட்டிருக்கிறது. இது தவிர இந்த குகையிலிருந்து காசிக்கும், பூரிக்கும் கூட ரகசிய பாதைகள் உள்ளனவாம். ஆக மொத்தம் ஒரு மினியேச்சர் தெய்வ ரூபங்களைத் தன்னுள் கொண்டிருக்கும் பாதாள அதிசயம் இது. (புகைப்படங்களைப் பாருங்கள் நிச்சயம் உங்கள் விழிகள் விரியும்)

கலி லிங்கம்
இந்த பாதாள குகை பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் நூறடிகள் வரை உள்ளே இருக்கிறது. மேலிருந்து செங்குத்தாய் ஒரு பள்ளம், அதில் குறுகிய பாதை அதன் இரண்டு பக்கமும் நம் பிடிப்புக்காக கட்டப் பட்ட இரும்புச் சங்கிலிகள் இதனைப் பற்றிக்கொண்டு அமர்ந்த நிலையில்தான் நிதானமாக உள்ளே இறங்க வேண்டும். நம் காலுக்கு கீழே பாறைக் கற்களைக் கொண்டு ஒரு சரிவு அமைக்கப் பட்டிருக்கும். இதில் இறங்குவதே ஒரு த்ரில்லிங்கான அனுபவம் என்றுதான் சொல்ல வேண்டும்.

நூறடி இறங்கி விட்டோம் எனில் பாதை பிரியும் இடத்தில் நரசிம்ம மூர்த்தியின் பாதங்கள் பதிந்திருப்பதைக் காணலாம். பின்னர் விஸ்தாரமான பெரிய குகை. குளுமையோ குளுமை. உள்ளே ஜெனரேட்டர் உதவியோடு எரியும் மங்கிய மின் விளக்குகளின் ஒளியில் அந்த அதிசயங்களைப் பார்க்கும் போது மனசு சிலிர்க்கும், திரேதா யுகத்திலிருந்து இருக்கும் இந்த அதிசய குகையில், பாண்டவர்கள் கால் பதித்த, ஆதிசங்கரர் தவம் செய்த, புண்ணிய இடத்தில் நாமும் கால் பதித்திருக்கிறோம் என்ற சிலிர்ப்பு நம் கண்களில் ஜலப்பிரவாகத்தை வெளிப்படுத்தும்.

குகையின் தரைப்பகுதி முழுவதும் வளைந்து நெளிந்து தன் வயிற்றுப்பகுதியின் தடங்களோடு சிலந்தி வலையாய் பரவிச் செல்லும் ஆதிசேஷனின் உடற்பகுதி அதிசயத்தின் உச்சம். சர்ப்ப வேட்டையில் இறங்கியிருந்த ஜனமேயஜயனிடமிருந்து தப்பித்த ஆதிசேஷன் இங்கே வந்து மறைந்திருந்ததாகவும் ஒரு தகவல் உள்ளது. இந்த ஆதிசேஷனே இந்த பாதாலத்திளிருந்தபடி பூமியைத் தன தலையில் சுமப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதனுள் நான்கு சுரங்கப் பாதைகளுக்கான கதவுகள் உள்ளது. இந்த நான்கு கதவுகளைபற்றி ஸ்கந்த புராணத்தில் சொல்லப் பட்டுள்ளது. முதல் கதவு பாவப்பாதை. ராவண வதத்திற்க்குப்பின் இது மூடப்பட்டு விட்டது. அடுத்தது ரணப்பாதை (way to war) இதுவும் பாரதப் போருக்குப் பின் மூடப்பட்டு விட்டது. இப்போது இரண்டு பாதைதான் திறந்துள்ளது. ஒன்று தர்மப்பாதை. இது கலியுகத்தின் முடிவில் மூடப்படும். மற்றொன்று, காலபைரவரின் நாவிற்கு அடியில் இருக்கும் மோட்சப்பாதை. இதில் மனதை ஒருமுகப்படுத்தி இறை நம்பிக்கையோடு பயணித்தால் மோட்சம் நிச்சயம் என்கிறது ஸ்கந்தபுராணம். இந்தப் பாதை அடுத்த யுகமான சத்ய யுகத்தில் மூடப்பட்டு விடுமென ஸ்கந்த புராணத்தின் மானஸ்கந்தம் சொல்கிறது. இந்த குகைக்குள் இருக்கும் ஒரு சிறிய குகையில்தான் மார்க்கண்டேய மக்கரிஷி மார்க்கண்டேய புராணம் இயற்றியிருக்கிறார்.

காலபைரவரின் நாக்கு. பின்னால் மோட்சப் பாதை
எனக்கு இந்த குகையும் இந்த அதிசயங்களும் மற்றொரு சிந்தனையை ஏற்படுத்துகிறது. நம் மனம் கூட இப்படி ஒரு பாதாளத்தில் உள்ள இருண்ட குகைதானோ? அதனுள் பயணிக்க நாம் முயற்சித்திருக்கிறோமா? 

ஒருவேளை முயற்சித்தால் இப்படிப்பட்ட அதிசயங்கள் நமக்கு தரிசனம் கொடுக்க நம் மனக்குகையிலும் காத்திருக்குமோ?
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்,
வள்ளல் பிரானற்கு வாய் கோபுர வாசல்,
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே
என்று சும்மாவா சொன்னார் திருமூலர்?
உடம்பினை முன்னம் இழுக்கென்றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே யுறு பொருள் கண்டேன்
உடம்புலே உத்தமன் கோயில் கொண்டான் என்
றுடம்பினை யானிருந் தோம்புகின்றேனே
இதுவும் அவர் பாடியதுதான். உத்தமன் உள்ளேதான் இருக்கிறான். அங்கேயும் தேடிக் கண்டறிவோம.


















Facebookil kanda arumaiyanaa padivu  nandri  Santhanam  T Ramanathan


Thanks   Santhanam  T Ramanathan for the wonderful unbeleivable photos