Friday, April 10, 2015

நான் தான் கஜானா ராமச்சந்திரன் என்ற திருடனுக்கு உடந்தையாக இருந்து, அவனைத் திருடச் சொன்னேன்",









அய்யர்வாள்! நான் தான் கஜானா ராமச்சந்திரன் என்ற திருடனுக்கு உடந்தையாக இருந்து, அவனைத் திருடச் சொன்னேன்",

(கருணையின் வடிவமே!)

ஏப்ரல் 29,,2014-தினமலர்.

ஒரு சமயம், காஞ்சி மகாபெரியவர், சிவகங்கை மாவட்டம் இளையாத்தங்குடியில் சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டிக்க முகாமிட்டிருந்தார்.

ஒருநாள் இரவில், தேவகோட்டையில் இருந்து, ஒரு பஸ் நிறைய மக்கள் அவ்வூருக்கு வந்தார்கள். ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாய் ஏகமாய் சத்தம் கேட்க,

பெரியவர் அங்கிருந்த கஜானா ராமச்சந்திர அய்யரை அழைத்து, ""வெளியே நிறைய பேர் வந்திருக்கிறார்கள் போல் தெரிகிறது. யாரென்று பார்த்து வா...'' என்றவர், அவரை நிறுத்தி, ""அவர்களெல்லாம் சாப்பிட்டு விட்டார்களா என்று விசாரித்து வா,'' என்றார்.
அவரும் விசாரித்து வந்தார்.

""சுவாமி! அவர்கள் தேவகோட்டையில் இருந்து வருகிறார்களாம். அவர்கள் வந்த பஸ், வழியில் ரிப்பேராகி விட்டதால், தாமதமாக வந்திருக்கிறார்கள். யாரும் சாப்பிடவில்லையாம்,'' என்றார்.

""ராமச்சந்திரா! வெளியே பூஜைக்கட்டில் மேலூர் மாமா படுத்திருப்பார். அவர் பக்கத்தில் கட்டுப்பெட்டி சாவி கிடக்கும். நீ சந்தடி செய்யாமல் அதை எடுத்துப்போய் பெட்டியைத் திறந்து, அதிலுள்ள பழங்கள் எல்லாவற்றையும் எடுத்துப் போய், அவர்களிடம் கொடு

நாளை அபிஷேகத்திற்காக தயிர், பால் வைத்திருப்பார். எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு போய், அவர்களை சாப்பிட வை. பிறகு, சந்தடி செய்யாமல், சாவியை இருந்த இடத்திலேயே வைத்து விடு,'' என்று சொல்லி விட்டு உறங்கச் சென்று விட்டார்.

மறுநாள் விடிந்தது. மேலூர் ராமச்சந்திர அய்யர் கட்டுப்பெட்டியை திறந்தார். உள்ளே பழம், தயிர், பால் எதுவும் இல்லை. அவருக்கு கோபம் வந்து விட்டது.

""எந்த திருட்டுப்பயலோ, ராத்திரி மறுசாவி போட்டு பெட்டியைத் திறந்து, பழங்களை எடுத்துப் போயிருக்கிறான்,'' என்று மிகவும் சத்தமாகக் கத்தினார்.

அப்போது, பக்கத்து ரூமில் தான் பெரியவர் இருந்தார். அவர் அங்கிருந்து வந்து, ""அய்யர்வாள்! நான் தான் கஜானா ராமச்சந்திரன் என்ற திருடனுக்கு உடந்தையாக இருந்து, அவனைத் திருடச் சொன்னேன்,'' என்றார்.

அய்யர் அலறாத குறை தான். ""பெரியவா! மன்னிச்சுடுங்கோ'' என்று அவரது பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார்.

பூஜைக்கான பொருள் என்றாலும், அவசரம் கருதி, அது மக்களின் பசி தீர்க்க உதவுமானால், அதற்கே முதலிடம் என்ற கொள்கையுடைய மகாசுவாமிகள், கருணாமூர்த்தியாக நம் கண்முன் இன்றும் காட்சி தருகிறார்.






thanks  :  ஏப்ரல் 29,,2014-தினமலர்.


Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

No comments: