Monday, April 20, 2015

திருப்பதி பற்றிய அரிய தகவல்கள்!

              திருப்பதி பற்றிய அரிய தகவல்கள்!




  
திருப்பதி பற்றிய அரிய தகவல்கள்!

தெய்வச் சிலைகள் பொதுவாக கருங்கல்லில் செதுக்கப்பட்டிருக்கும். எங்காவது ஒரிடத்திலாவது சிற்பியின் உளி பட்ட இடம் தெரியும். ஆனால், இப்படி எவ்விதமான அடையாளத்தையும் வெங்கடாஜபதி சிலையில் காணமுடியாது. அது மட்டுமல்ல! சிலையில் வடிக்கப் பட்டுள்ள நெற்றிச் சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் பாலீஷ் போட்ட நகைபோல பளபளப்பாக மின்னுகின்றன.

* திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். இருந்தாலும், அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்யும் போதும், பெருமாளுக்கு வியர்த்துவிடும். பீதாம்பரத்தால் அந்த வியர்வையை ஒற்றி எடுப்பார்கள். ஏனெனில், ஏழுமலையான் சிலை எப்போதும் 110 டிகிரி பாரன்ஹுட் வெப்பத்திலேயே இருக்கும் இது ஒரு அதிசயம் தானே! ஒவ்வொரு வியாழக் கிழமையும், ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்வதற்கு முன்னதாக நகைகளைக் களைவர். அப்போது ஏழுமலையானின் ஆபரணங்கள் சூடாகக் கொதிப்பதை உணர்கின்றனர்.

* இங்குள்ள மடைப்பள்ளி மிகவும் பெரியது. இங்கு லட்டு, பொங்கல், தயிர்சாதம், புளிச்சாதம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், பாயாசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி ஆகியவை தினமும் தயாராகின்றன. இதில் லட்டு முதலிடம் பெற்று விளங்குகிறது.

* ஏழுமலையானுக்கு ஒருபுதிய மண்சட்டியிலேயே பிரசாதம் படைப்பர். தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்யமும், கர்ப்பகிரகத்திற்கு முன்னுள்ளகுலசேகரப்படியைத் தாண்டுவதில்லை. இந்த மண்சட்டியும், தயிர்சாதமும் பிரசாதமாக கிடைப்பதை வாழ்வில் மிகப்பெரிய பாக்கியமாகப் பக்தர்கள் கருதுகின்றனர்.

* பெருமாளுக்கு உடுப்பு மிகவும் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகிறது. ஒரு முழம் நீளமும், ஆறு கிலோ எடையும் கொண்ட பட்டுப்புடவை பீதாம்பரமே இவருக்குரிய ஆடையாகத் திகழ்கிறது. இதை பெருமாளுக்கு சாத்த அலுவலகத்தில் 12 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த ஆடைக்கு மேல்சாத்து வஸ்திரம் என்று பெயர். வெள்ளியன்று மட்டுமே இதை அணிவிக்க முடியும். பணம் செலுத்தியவர்கள் வஸ்திரம் சாத்த 3 வருடங்கள் காத்திருக்க வேண்டும்.


* உள்சாத்து வஸ்திரம் என்ற ஆடையையும் பெருமாளுக்கு அணிவிப்பர். இதற்குரிய கட்டணம் 20 ஆயிரம் ரூபாய். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சாத்துவதற்கு அனுமதிக்கிறார்கள். பணம் செலுத்தியபின் இதை அணிவிக்க 10 வருடங்கள் காத்திருக்கவேண்டும்.

* பக்தர்கள் சமர்ப்பிக்கும் வஸ்திரங்கள் தவிர, அரசாங்கம் சமர்ப்பிக்கும் வஸ்திரங்களை ஆண்டுக்கு இரண்டு முறை பெருமாளுக்கு அணிவிக்கின்றனர்.

* ஏழுமலையானின் அபிஷேகத்திற்கு எங்கிருந்து பொருட்கள் வருகிறது தெரியுமா? 

ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்தில் இருந்து கஸ்தூரி, சீனாவில் இருந்து புனுகு, பாரீசில் இருந்து வாசனைத் திரவியங்கள் வருகின்றன. ஒரு தங்கத் தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படும். 51 வட்டில் பால் அபிஷேகம் செய்தபின், கஸ்தூரியும், புனுகும் சாத்துவர்.தினமும் காலை 4.30- 5.30 மணிக்குள் அபிஷேகம் நடக்கும். அபிஷேகத்திற்கு ஆகும் செலவு ஒரு லட்சம். பணம் செலுத்தியவர்கள் 3 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும்.

* பெருமாளுக்குரிய ரோஜாப்பூக்கள் ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து விமானத்தில் கொண்டுவரப்படுகின்றன. ஒரு ரோஜாப்பூவின் விலை ரூ.80. பக்தர்களின் செலவிலேயே இந்தப் பூக்கள் வந்து சேர்கின்றன.

* சீனாவில் இருந்து கற்பூரம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், லவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப்பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன.

* ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய். இவருடைய நகைகளை வைத்துக் கொள்ள இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை.

* ஏழுமலையான் சாத்தியிருக்கும் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை கொண்டது. இதை 3 அர்ச்சகர்கள் சேர்ந்து தான் சாத்தமுடியும். சூரிய கடாரியின் எடை 5 கிலோ. ஒற்றைக்கல் நீலம் மட்டும் 100 கோடி மதிப்பு கொண்டது. உலகிலேயே இதைப்போன்ற நீலக்கல் வேறு கிடையாது.

* பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள் பெருமாளுக்கு காணிக்கைகளைச் செலுத்தியுள்ளனர். ராஜேந்திரச்சோழன், கிருஷ்ண தேவராயர், அச்சுதராயர் ஆகியோருடைய திருப்பணிகள் கல்வெட்டு மற்றும் செப்பேடுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.

* மராட்டிய மன்னர் ராகோஜி போன்ஸ்லே மிகப்பெரிய எமரால்ட் பச்சைக்கல்லை பெருமாளுக்கு காணிக்கையாக்கியுள்ளார். இப்பதக்கம் இவருடைய பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலில் பலதிருப்பணிகள் செய்த கிருஷ்ணதேவராயர் தனது மனைவியுடன் நிற்கும் சிலை கோயிலில் உள்ளது. கோயிலுக்குள் வரிசையில் செல்லும் போது இதைக் காணலாம்.


* அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்வதற்கான வெள்ளி வெங்கடாஜபதி விக்ரகம் 966ம் ஆண்டில் செய்யப்பட்டதாகும். பல்லவ மன்னன் சக்திவிடங்கனின் மனைவி காடவன் பெருந்தேவி இந்த விக்ரகத்திற்குரிய நகைகள் தந்துள்ளார்.

* வெள்ளிக்கிழமைகளிலும், மார்கழி மாதத்திலும் பெருமாளுக்கு வில்வார்ச்சனை செய்யப்படுகிறது.

* மகா சிவராத்திரியில் ÷க்ஷத்ரபாலிகா என்ற உற்சவம் நடைபெறும். அன்று உற்சவர் வைர விபூதி நெற்றிப்பட்டை அணிந்து திருவீதியுலா எழுந்தருள்வார். தாளப்பாக்கம் அன்னமய்யா ஏழுமலையானையே பரப்பிரம்மமாகவும், சிவாம்சமாகவும், சக்தி அம்சமாகவும் பாடிய பாடல்கள் சிறப்பானவை. 

* அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தன்னுடைய மூன்றாவது கண்ணைத் திறக்கிறார் என்றொரு ஐதீகம் உள்ளது.

* திருமலை திருப்பதி கோயில் ஸ்தலவிருட்சம் புளியமரம்.

* சாத்வீக கோலத்தில் இருந்தாலும் தெய்வீக கோலங்களில் ஆயுதம் இடம் பெற்றிருக்கும். ஆனால், திருமலையில் ஏழுமலையான் எவ்விதமான ஆயுதமும் பிடிக்காமல் நிராயுதபாணியாக சேவை சாதிக்கிறார்.

* ஆங்கிலேயர்களில் சர்தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன், லெவெல்லியன் என்ற வீரர் ஆகியோர் பெருமாளின் பக்தர்களாக இருந்ததோடு பல நேர்த்திக்கடன்களைச் செலுத்தியுள்ளனர். இதில் இன்று வரை பெருமாளுக்கு மன்றோ தளிகை என்றொரு ஒரு நிவேதனம் ஆங்கிலேயர் பெயரால் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

* திருப்பதி அலமேல்மங்கைக்குரிய ஆடைகத்வால் என்னும் ஊரில் பருத்தியில் தயாரிக்கப்படுகிறது. செஞ்சு இனத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். தாயாரின் திருமேனியில் படும் இந்த ஆடையை நெய்யும் போது மூன்றுவேளை குளிப்பதும், மாமிசம் உண்ணாமல் இருப்பதும் ஆகிய நடைமுறைகளைத் தவறாமல் பின்பற்றுகின்றனர்.

* ஏழுமலையான் அபிஷேக நீர் குழாய் மூலம் இங்குள்ள புஷ்கரணியிலேயே (கோயிலை ஒட்டிய தெப்பக்குளம்) மீண்டும் கலக்கிறது. ஏழுமலையானின் திருமேனியில் பட்டதால் அந்நீரின் புனிதத்தன்மையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

* 1180 கல்வெட்டுகள் இங்கு உள்ளன. இதில் 1130 கல்வெட்டுகள் தமிழ் மொழியிலும், 50 கல்வெட்டுகள் தெலுங்கு மற்றும் கன்னடமொழியிலும் அமைந்துள்ளன.




[இந்த தகவல்கள் திருமலை திருப்பதி கோயில் ஏடுகளில் இருந்து எடுக்கப்பட்டவை. தொகுப்பு: டாக்டர். பி. உமேஷ் சந்தர் பால்]



Courtesy :   Facebook post  :   Hariharan

Thanks for  Lord Venkateswara bhaktas for the beautiful photos and videos by channel 18  posted and edited by self.


கண்ணதாசனை மாற்றிய பெரியவர்

கண்ணதாசனை மாற்றிய பெரியவரும்








கண்ணதாசன் பெரியவர் மேல் இயற்றிய கவிதையும்.

"பார்த்த மாத்திரத்தில் பாவத்தை அலம்புகின்ற
 தீர்த்தப் பெருக்கு, திருவாசகத்தின் உட்கருத்து
 கூர்த்த மதியால் மெய்ஞானக் கருத்துணர்த்தும் முழுமூர்த்தம்
 கலிமொய்க்கும் இவ்வுலகைக் காக்கவந்த கண்கண்ட தெய்வம்
 எம்மதத்தோரும் சம்மதத்துடன் தம்மதத் தலைவனென
 தொழுதேத்தும் தெய்வக் கமலக் கழல் தொழுவோம் வாரீர்!"

 சாண்டோ சின்னப்ப தேவரும் கண்ணதாசனும் ஒரு படப்பிடிப்பு சம்பந்தமாக காரில் போய்க் கொண்டிருந்தபோது மிக மோசமான விபத்து ஏற்பட்டது. அதில் சின்னப்பா தேவருக்கு அவ்வளவாகக் காயம் இல்லை. ஆனால் கண்ணதாசனுக்கு படுகாயம் ஏற்பட்டு நினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் இருந்தார்.

 காஞ்சிப் பெரியவரிடம் மிகுந்த பக்தியும் மரியாதையும் கொண்ட தேவர் அவர்கள், சிவஸ்தானம் எனப்படும் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் பெரியவரைப் பார்த்து வணங்கி ‘விபத்து நேர்ந்து விட்டது’ என்று சொன்ன மாத்திரத்தில் ‘கண்ணதாசன் எப்படியிருக்கிறான்’ என்றும் பெரியவர் கேட்க, அதிர்ந்து போனார் தேவர். கண்கள் கலங்க வியப்பும் வருத்தமுமாய் “அவர் படுகாயத்துடன் நினைவில்லாமல் மருத்துவமனையில் இருக்கிறார்” என நா தழுதழுக்கக் கூறினார்.

 தேவரின் கவலையை உணர்ந்த பெரியவர், ‘சரி, கவலைப்படாதே. இந்த விபூதியைக் கொண்டுபோய், அவன் நெற்றியில் இட்டு, வாயிலும் சிறிதளவு போடு, மீதி இருப்பதை அவன் தலையணைக்குக் கீழ் வைத்துவிடு’ என்று தன் திருக்கரங்களால் விபூதி எடுத்து மடித்துத் தர, தேவர் விதிர் விதிர்த்து, பெரியவரை மறுத்துப் பேசவும் துணிவின்றி தயங்க, மீண்டும் பெரியவரின் கட்டளைக்கிணங்கி தயக்கத்தோடு கைநீட்டிவிபூதியைப் பெறுகிறார்.

 தேவரின் தயக்கத்திற்குக் காரணம், கண்ணதாசன் நாத்திகத்தில் தீவிர ஈடுபாடு கொண்டு, திராவிட கட்சிகளின் சார்பில் பிராமணர்களையும் சனாதன தர்மத்தையும் நாக்கில் நரம்பில்லாது போல் மேடைகளில் பேசி வந்த காலகட்டம் அது. விபத்து நடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு எதிரிலேயே நடந்த கூட்டத்தின் மேடையில் படுபயங்கரமாகப் பேசி மடாதிபதிகளை இழிவுபடுத்திப் பேசியிருந்தார். எனவே அவரிடம் போய் இந்த விபூதியை எப்படிக் கொடுப்பது என்பதுதான் தேவரின் பெரியத் தயக்கமாயிருந்தது.

 ஆனால் முக்காலமுணர்ந்த ஞானியாகிய பெரியவர், தேவரின் மனத்தயக்கத்தை உணர்ந்து ‘தயங்காமல் கொண்டுபோய் பூசு. சூரியனை சில சமயம் மேகம் மறைப்பது போல் நாத்திகமேகம் இதுவரை அவனை மறைத்திருந்தது. இனி அவன் சூரியனாகத் திகழ்வான். அவன் எப்பேர்ப்பட்ட பரம்பரையைச் சேர்ந்தவன் தெரியுமா? கோவில் திருப்பணி செய்வதற்கே பிறந்தவர்கள் போல் திகழ்ந்தவர்கள் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள். வரதராஜப் பெருமாள் கோவில் கோபுரத் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் கொள்ளுத் தாத்தா. ஏகாம்பரநாதர் கோவில் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் தாத்தா. காமாக்ஷி கோவில் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் தகப்பனார். இப்ப புரியறதா?’ என திருவாய் மலர்ந்தருளினார்.

 தேவர் மனந்தெளிந்தவராய் பெரியவரை வணங்கி விடைபெற்று, நேராக மருத்துவமனைக்குச் சென்றார். நினைவிழந்து படுத்திருந்த கண்ணதாசனின் நெற்றியில் விபூதியைப் பூசிவிட்டு சிறிதுவிபூதியை வாயிலும் இட்டு, மீதியை தலையணையின் கீழ் வைத்துவிட்டு வீடு திரும்பினார். அவர் சிந்தனையெல்லாம் கண்ணதாசன் நினைவு திரும்பி நடந்ததை அறிந்து என்ன சொல்வாரோ என்றே நினைத்தது.

 மறுநாள் தேவர் மருத்துவமனை சென்று கண்ணதாசனின் படுக்கையை சற்றே படபடக்கும் நெஞ்சோடு நெருங்கியபோது கண்ணதாசனுக்கு நினைவு திரும்பி கண் விழித்திருந்தார். தேவரைப் பார்த்தவுடன், ‘வாங்க, எத்தனை நாளா இப்படி படுக்கையில் இருக்கேன். கொஞ்சம் கண்ணாடியை எடுத்துக் கொடுங்களேன். என் முகத்தைப் பார்க்கணும்’ என்றார்.

 நேற்று இட்ட விபூதி இன்னமும் நெற்றியில் திகழ, தேவர் தயங்கியபடியே தந்த கண்ணாடியில் தன் முகம் கண்ட கண்ணதாசன் ‘இதென்ன விபூதி?’ என்று தேவரை ஏறிட்டுப் பார்க்க, வேறு வழியின்றி வந்தது வரட்டுமென தேவர், தான் பெரியவரைப் பார்த்ததையும், பெரியவர் ஆசீர்வாதம் செய்து விபூதிகொடுத்ததையும் சொல்ல, கண்ணதாசனின் விழிகளில் அருவியெனக் கொட்டியது கண்ணீர். திகைத்து நின்ற தேவரின் செவிகளில் தேனாகப் பாயந்தது கண்ணதாசனின் வார்த்தைகள், ‘எனக்கா? என்னிடமா இவ்வளவு கருணை? போனவாரம்தான் அவரை, ஐயோ’ என வாய்விட்டுப் புலம்பி அழுததோடு, தேவரிடம் ஒரு வேண்டுகோளையும் சமர்ப்பித்தார். ‘எனக்கு உடல்நலமாகி மருத்துவமனையிலிருந்து வெளியேறும் சமயம் நான் வீட்டிற்குச் செல்லமாட்டேன். இந்தப் பாவியிடம் கருணைவைத்த அந்த மகானிடம் முதலில் என்னை தயவுசெய்து அழைத்துச் செல்லுங்கள்’ என மனமுருகி வேண்டினார்.

 கண்ணதாசன் வேண்டியபடியே அந்த நல்ல சந்திப்பும், பாவமன்னிப்பும் நடந்தது. மாறியது மனம், நன்றியில் ஊறியது தினம், வீறிட்டு வெளிவந்தது ஒரு கவிதை. அக்கவிதையை எடுத்துக் கொண்டு, பெரியவரை நேரில் கண்டு வணங்கி, கவிதையைச் சமர்ப்பித்தார், கண்ணதாசன். அக்கவிதை இதோ :

 பார்த்த மாத்திரத்தில் பாவத்தை அலம்புகின்ற
 தீர்த்தப் பெருக்கு, திருவாசகத்தின் உட்கருத்து
 கூர்த்த மதியால் மெய்ஞானக் கருத்துணர்த்தும் முழுமூர்த்தம்
 கலிமொய்க்கும் இவ்வுலகைக் காக்கவந்த கண்கண்ட தெய்வம்
 எம்மதத்தோரும் சம்மதத்துடன் தம்மதத் தலைவனென
 தொழுதேத்தும் தெய்வக் கமலக் கழல் தொழுவோம் வாரீர்!

 கவிதை வரிகளைக் கண்ட பெரியவர், கண்ணதாசனைக் கனிவோடு நோக்கி, ‘அனந்த கோடி அற்புத லீலா சாகித்ய மாயமானுஷாய நமோ நமஹ, அர்த்தநாரி திருவண்ணாமலை சேஷாத்ரி மகானுக்கல்லவா இது பொருந்தும்’ என்று அருளாசிக் கூறி, ‘அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் நிர்மலப் பொருள் ஞானசூரியனாம், மதத்தின் பெருமையை எழுது’ என்று திருவாய் மலர்ந்தருள, அக்கணமே கண்ணதாசனின் மனதில் “அர்த்தமுள்ள இந்துமதம்” அழகாய் அரும்பி பலநாள் உழைப்பில் இதழ்விரித்து மணம் வீசியது






Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos edited by myself.
Thanks for Kannadasan photo posted in the internet.


Friday, April 17, 2015

"யார் ஸித்தர்?" மஹா பெரியவா

           
         "யார் ஸித்தர்?"









தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்

பிற்பகல் இரண்டு மணி,கடுமையான வெய்யில் நேரம்.
வங்காளத்தைச் சேர்ந்த ஒரு பெரியவர் வந்தார்.

விழுப்புரம் அருகில் வெங்கடாத்ரி அகரம் என்ற
கிராமத்தில்,1948 சாதுர்மாஸ்யம். பாஷ்ய பாடம்
நடந்ததால்,பெரியவாளை உடனே தரிசிக்க 
முடியவில்லை.

(ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் ஐம்பத்தெட்டாவது
பீடாதிபதியான ஸ்ரீ ஆத்மபோதேந்திர சரஸ்வதி 
ஸ்வாமிகளின் அதிஷ்டானம் வெங்கடாத்ரி அகரம்
அருகில் வடவம்பலத்தில் இருப்பதாக, ஸ்ரீமடத்தின்
ஆவணங்களிலிருந்து தெரியவந்தது. ஆனால்,சரியான
இடம் தெரியவில்லை. மகாப்பெரியவாளின் முயற்சியால்
அந்த அதிஷ்டானம் கண்டுபிடிக்கப்பட்டது. 17-01-1927ல்
அந்த இடம், முறையான வழிபாட்டுக்கு உரியதாக
மந்திரச் சடங்குகள் மூலம் துவக்கி வைக்கப்பட்டது.)

"பெரியவா எங்கே?" என்று ஹிந்தியில், கொதிக்கும்
குரலில் கேட்டார், வங்கத்துச் சிங்கம்.

"சாயங்காலம் தரிசனம் பண்ணலாம்" என்றார்,
மடத்துச் சிப்பந்தி.

வந்தவர், துர்வாசரின் அவதாரம்!

"என்னது? சாயங்காலமா?... என்னை வரச்சொல்லிவிட்டு,
அவர் வெளியே போய்விட்டால் என்ன அர்த்தம்?..
அவர் வருகிறபோது வரட்டும்,நான் ஊருக்குப் போகிறேன்"
என்று பயங்கரமாக உறுமிவிட்டு, அருகிலிருந்த
சேர்ந்தனூர் என்னும் ரயில்வே ஸ்டேஷனை நோக்கி
நடக்கத் தொடங்கினார்.

மடத்துப் பணியாளருக்குக் கோபம் வந்தது.

"என்ன மிரட்டுகிறீரா?..உம்மை யார் வரச்சொன்னது"
சாமியார் வேஷம், வேறே! தாடி,ஜடாமுடி...!
இத்தனை கோபம் கூடாது...."

அவர் சொல்லிக்கொண்டிரூக்கும் போதே, பாராக்காரன்
ஓடி வந்தான். 


"சாமி,அங்கே பாருங்க, கரும்புத் தோட்டத்திலே நம்ம
எசமான் ஓடிப் போறாங்க"

சிஷ்யர் பெரியவாளை நோக்கி ஓடினார்.

பெரியவாளும் வங்காளச் சாமியாரும், தனியாக
சந்தித்து ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள்.

பின்னர், பெரியவாள் சிஷ்யரை அருகில் அழைத்து,
வங்காளப் பரதேசிக்கு, சிற்றுண்டி வாங்கிக் கொடுத்து
ரயிலேற்றி விடச்சொன்னார்கள்.

சீடர் அவ்வாறே செய்துவிட்டுத் திரும்பினார்.

அவரைப் பார்த்ததும் பெரியவா சொன்னார்கள்.

"நான் காசியாத்திரை செய்துவிட்டு, வங்காளம்
மிதுனாப்பூர் வழியாக வந்தேன். அப்போது,இந்த ஸாது
சில தினங்கள் முகாமில் தங்கியிருந்தார். யோக புருஷர்;
ஸித்தர்.கோபத்தை மட்டும் ஜெயிக்க முடியவில்லை.

முகாமிலிருந்து விடை பெற்றுச் செல்லும்போது,
'மறுபடி தரிசனம் எப்போது கிடைக்கும்?' என்று கேட்டார்.
பதினைந்து வருஷம் கழித்துத் தென்னிந்தியாவில்
கிடைக்கும்- என்றேன்.ராமபிரான் வருகையை
எதிர்பார்த்து பரதன் நாள்களை எண்ணிக்கொண்டிருந்த
மாதிரி, இவரும் நாள்களை எண்ணிக்கொண்டு,
இன்றைக்கு இங்கே இத்தனை மணிக்கு வந்திருக்கிறார். 

இவர்களில் யார் ஸித்தர்?

ஸித்தர்களில் பெரியவர்-சிறியவர் என்ற பாகுபாடு உண்டோ?

பித்தர்கள், நாம்! என்ன தீர்மானிக்க?




                      

Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

"இன்னிக்கு- பாலா,பாதுகையா?


 "இன்னிக்கு- பாலா,பாதுகையா?







சொன்னவர்-என்.வெங்கட்டராமன்.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்

ஆனந்தத்தாண்டவபுரத்தில் முகாம் இருந்த வரையில்
ஸ்ரீ சந்த்ரமௌளீஸ்வரர் அபிஷேகத்துக்காகக் கொண்டு
வரப்படும் பாலைச் சேகரித்து, எடுத்துச் சென்று பூஜைக்
கட்டு அருகே வைப்பது என் வேலை. பெரியவாள் அந்தப்
பெரும் பாக்கியத்தை எனக்கு அளித்திருந்தார்.

ஒருநாள் காலை குளத்தில் படிக்கட்டில் உட்கார்ந்து
தண்ணீரில் பாதங்கள் நனைத்து 'விளையாடிக்
கொண்டிருந்தார்,பெரியவாள். சற்றுத் தொலைவில்
என் வயதொத்தப் பையன்கள். அப்போது ஒருவர்
பால் கொண்டு வந்து வைத்தார்.

'பால் எதுக்கு?'

'அபிஷேகத்துக்கு..'

'சரி...சரி..வை..'

சிறிது நேரம் கழித்து, ஸ்ரீ சுவாமிகள் எழுந்தார்.

சட்டென்று ஒரு பையன், பால் பாத்திரத்தைக் கையில்
எடுத்துக் கொண்டு விட்டான். எனக்கு ஆத்திரமாக
வந்தது. பாலை எடுத்துக்கொண்டு போவது என் உரிமை
அல்லவா? அதை,எப்படி இவன் தட்டிப் பறிக்கலாம்?.

மெல்லிய குரலில் சொன்னேன்; 'டேய்,பாலை எங்கிட்டக்
கொடுத்துடு. இல்லே... தொலைச்சுப்புடுவேன் !
ஆமா....கொடுடான்னா...'

அவன் கொடுக்காமல் படியேறிக் கொண்டிருந்தான்.

ஸ்ரீ சுவாமிகளுக்கு, பாதுகையில் ஏதோ குத்திற்று போலும்.
கழற்றிவிட்டு,என்னைத் தூக்கிக்கொண்டு வரச்சொன்னார்
தூக்கிக் கொண்டேன். என்றாலும்,பால் கைமாறிப்
போய்விட்டதே?- என்ற கோபம் அடங்கவில்லை.
'மடத்துக்கு வா..உதைப்பேன்...செருப்பால் அடிப்பேன்'
என்றெல்லாம்,அவனுக்கு மட்டும் கேட்கும்படியாக
பொறுமிக் கொண்டே வந்தேன்.

ஸ்ரீமடம் வந்ததும், பாதுகையைக் கீழே வைக்கும்படி
ஆக்ஞையாயிற்று.பெரியவாள், காலில் 
போட்டுக்கொண்டு உள்ளே போய்விட்டார்.

நான்,சொன்னபடி,அந்தப்பையனை வெளுத்துக்
கட்டி விட்டேன்.!.

அன்று சாயங்காலம். ஒரு வீட்டுத் திண்ணையில்
உட்கார்ந்து கொண்டார் பெரியவாள்.
பத்திருபது பேர் கூட்டம்.

"இன்னிக்கு- பாலா,பாதுகையா?-என்ற
தலைப்பில் பேச்சு என்றார்.

எல்லாருக்கும் ஆச்சரியமாக இருந்தது. பெரியவா
அவ்வப்போது சிற்றுரை நிகழ்த்துவார்தான்.
ஆனால், அதற்கெல்லாம் தலைப்பு கிடையாது.
ரத்தினம் போன்று தத்துவங்கள் பளிச்சென்று
தெறித்து விழும்.

நந்திக்கிராமத்தில்,எதற்கு பட்டாபிஷேகம்
தெரியுமோ?..பாதுகைக்கு!

சாதாரணமா. காலிலே போட்டுக்கிறதை செருப்புன்னு
சொல்லுவா. அதுதான் பாதரட்சை. அதையே
சந்யாசிகள் போட்டுண்டா, பாதுகை-ன்னு பேர்.

"பரதன், ஸ்ரீ ராமனோட பாதுகையை சிம்மாசனத்தில்
வைத்து அபிஷேகங்கள்-பாலாபிஷேகம்!-செய்தான்"

"அதனால், பால் ஒசத்தியா?இல்லே,
பாதுகை ஒசத்தியா?...

என்று சொல்லிவிட்டு, சட்டென்று, 'கோவிந்த நாம
சங்கீர்த்தனம்' என்று புண்டரீகம் போட்டு உரையை
முடித்து விட்டார்.






என் பொட்டில்,சம்மட்டியால் தட்டினாற்போல் 
இருந்தது.

எவ்வளவு பெரிய பாவி, நான். ரொம்ப ரொம்ப ஒசந்த
பாதுகையை எங்கிட்டக் கொடுத்து, எடுத்துண்டு
வரச் சொல்லியிருக்கா,பெரியவா. 

பாதுகையில் ஏதும் குத்தல்லே. எனக்கு அந்த 
பாக்கியத்தைக் கொடுக்கணும் என்பதற்காகவே,
அப்படி ஒரு நாடகம்.பைத்தியக்காரத்தனமாக
அந்தப் பையனைப் போய், தலைகால் புரியாமல் 
அடிச்சேனே...

எனக்குக் கிடைச்ச பாக்யத்தை என்னாலே புரிஞ்சுக்க
முடியாமல்,சுவாமி கண்ணை மறைச்சுட்டாரே...

இன்றைக்கும் கண்ணீர் துளிக்கத்தான் செய்கிறது.





                        




Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

"இங்கே யாராவது டமாரச் செவிட்டுக்காரர் இருக்கிறாரா,பார்.."

"இங்கே யாராவது டமாரச் செவிட்டுக்காரர் இருக்கிறாரா,பார்.."
                


'தர்ஷன்'. இதழிலிருந்து.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

சந்நியாசிகளுக்கு என்று சில விசேஷ தர்மானுஷ்டானங்கள்
இருக்கின்றன. அதிலும் பீடாதிபதியாக வீற்றிருக்கும்
துறவிக்குக் கடுமையான கட்டுப்பாடுகள்.

கால் நூற்றாண்டுக்கு முன்னால் காஞ்சிபுரம் ஸ்ரீமடத்தில்
ஒரு காலை வேளை.

அன்றைக்கு அடியார் கூட்டம் அவ்வளவாக இல்லை.

மகாப் பெரியவாள் தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தபோது
அலங்காரம் செய்யப்படாத அம்பாள் போல ஒரு சுமங்கலி
வந்தார். நேரே பெரியவாளிடம் சென்று நமஸ்கரித்தார்.
எழுந்தவர் கண்களில் குபுகுபு வென்று நீர் மல்கியது.

சொந்த விவகாரம் - சிக்கல் - பிரச்னை பெரியவாளிடம்
தனிமையில் பேசி வழிகாட்டுதலை எதிர்நோக்கி நிற்கிறார்.

கண்கள் கெஞ்சுகின்றன - ;என்மீது தங்கள் அருட்பார்வை
படட்டுமே!' என்று உதடுகள் துடிக்கின்றன.
'நான் சொல்வதைக் கேட்க மாட்டீர்களா?' என்று.

அருளரசர் அந்த அம்மையார் சொல்வதைக் கேட்கவே
விரும்பினார்.

'ஒரு பெண்ணிடம் தனியாகப் பேசக்கூடாது'
என்று விதி தடுக்கிறதே?.






அம்மையார் இடத்தை விட்டு நகராமல் கண்ணீர் பெருக்கிக்
கொண்டிருந்தார். அவர் அங்கிருந்து நகர்ந்தால்தான்
காத்துக்கொண்டிருக்கும் மற்ற அடியார்கள் பெரியவா
அருகில் செல்ல முடியும்.

இந்த இக்கட்டான சூழ்நிலை எத்தனை நேரம்தான் நீடிப்பது?

விரல் சொடுக்கில், ஓர் அணுக்கத் தொண்டரை
பெரியவா அழைத்தார்கள்.

"இங்கே யாராவது டமாரச் செவிட்டுக்காரர் இருக்கிறாரா,பார்.."

தொண்டர் அதிருஷ்டசாலி! சில விநாடிகளிலேயே
ஒரு செவிடரைக் கண்டுபிடித்து விட்டார்.

"ஒரு காரியம் செய்.அந்த அம்மாளுடன் அவன் வரும்போது
கையைத் தட்டி அவர் பெயரைச் சொல்லிக் கூப்பிடு.அவர்
திரும்பிப் பார்க்கிறாரா? இல்லையா?-என்பதிலிருந்தே அவர் 
நிஜமான செவிடர்தானா என்பதைப் புரிந்து கொள்ளலாம்.."

(பெரியவாள் சொல்லிக் கொடுத்த இந்தத் தந்திரத்தில்
ஒரு புதைபொருளும் இருக்கிறது)

தொண்டர் ஏதோ ஓர் அலுப்பில், காது கேட்கக்கூடிய
ஒருவரையே, "பெரியவா முன்னாடி நீ செவிடன் மாதிரி
நில்லு.....போதும்" என்று சொல்லி அழைத்துக்கொண்டு
வந்துவிட்டால், குடும்ப ரகசியங்களைப் பேச விரும்பும்
அம்மணிக்கு சங்கடமாகப் போய் விடக்கூடும். எனவே,
செவிட்டுத்தனத்தை டெஸ்ட் செய்வதாக ஒரு யோஜனை.

டமாரச் செவிடர் பக்கத்தில் நிற்க தன் மனத்திலிருந்த
ஆதங்களையெல்லாம் கொட்டித் தீர்த்தார் அம்மையார்.




பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த கருணாமூர்த்தி
பிரசாதம் கொடுத்து, பெருமைப்படுத்தி அனுப்பிற்று.
அம்மையாரின் கண்களில் நீர்....ஆமாம்.ஆனந்தக் கண்ணீர்!
பிறை சூடி அல்லவா,அவருக்குப் பதில் கூறியிருக்கிறது.

அம்மையார் பிரசாதம் பெற்றுக் கொண்டு புறப்பட்டதும்
செவிடரிடம் ஒரு ஜாடை; 'நீங்களும் போகலாம்'

துறவு நெறி காக்கப்பட்ட அதே சமயத்தில்,
ஒரு சுமங்கலிக்கும் அருள்பாலித்தாகி விட்டது.













Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.