Tuesday, May 5, 2015

"மரக்கிளை உச்சில தேனெடுக்கிறப்போ, எடுப்பவரை தேனீக்கள் கொட்டுவதுண்டு

"மரக்கிளை உச்சில தேனெடுக்கிறப்போ, எடுப்பவரை தேனீக்கள் கொட்டுவதுண்டு. ஆனா, தேன் கிடைக்கிற ஆசையில அதை தாங்கிப்போம்"(பந்தா' பாகவதர்)












ஜூன் 11,2014,தினமலர்.

காஞ்சிப்பெரியவர் வைகாசி மாத அனுஷ நட்சத்திரத்தில் அவதரித்தார். அவரது அவதார நாளை ஒட்டி, அவர் நிகழ்த்திய நகைச்சுவை சம்பவம் ஒன்றை அறிவோமா!

கும்பகோணம் சிவாலயம் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள காஞ்சிப்பெரியவர் வந்திருந்தார். கும்பாபிஷேகம் முடிந்த கையோடு, மற்ற சிவத்தலங்களுக்குச் சென்று விட்டு மாலையில் மடத்திற்கு திரும்பினார். அந்த சமயத்தில் மடத்தில் பாகவதர் ஒருவர் ராமாயண உபன்யாசம் செய்து வந்தார்.

வாட்டசாட்டமான தோற்றமும், சிவப்பு நிறமும் கொண்ட பாகவதர், தனது அந்தஸ்தை பறை சாற்றிக் கொள்ளும் விதத்தில் வைரக்கடுக்கண், பத்து விரலிலும் தங்க மோதிரம், கழுத்தில் தொடங்கி வயிறு வரை அடுக்கடுக்காய் தங்கச் சங்கிலிகள், நான்கு விரல் கட்டை ஜரிகையுடன் பட்டு வேஷ்டி, அங்க வஸ்திரம், இடுப்பில் பச்சைத் துண்டு, சிரித்தால் தெரியும் தங்கப்பல், வெற்றிலை போட்டுச் சிவந்த வாய் என படாடோபமாக இருந்தார்

. போதாக்குறைக்கு தான் பேசும் போது கை தட்ட பத்து "ஜால்ராக்களையும்' அழைத்து வந்திருந்தார்

பெரியவரும் உபன்யாசம் கேட்க வருகிறார் என்பதை அறிந்த பக்தர்கள் திரளாக கூடினர். பெரியவர் அமர்ந்திருக்க, பாகவதர் உபன்யாசத்தை தொடங்கினார். அன்றைய தினம் அனுமன் சஞ்சீவி மலையை இலங்கைக்கு கொண்டு வந்த விதத்தை விவரித்தார். ஜால்ராக்கள் தேவையில்லாத இடத்தில் கூட கை தட்டினர். அந்தளவு அவர் ஒரு புகழ் விரும்பி. 

பேச்சின் இடையே அவ்வப்போது, "ம்ஹும்...ம்ஹும்...' என்று பெருமூச்சுவிட்டபடி, முக்கி முனங்கினார் பாகவதர். பேச்சைக் 
கேட்டவர்களுக்கு இது மிகவும் சங்கடமாக இருந்தது. உபன்யாசம் முடியவும், பெரியவரை அருளுரை வழங்கும்படி விழாக்குழுவினர் கேட்டுக் கொள்ள, "பெரியவர் என்ன சொல்லப் போகிறார் என கேட்க பக்தர்கள் காத்திருந்தனர். ஏன்... பாகவதரும் கூடத் தான்!

பெரியவர் ஆசியுரை வழங்கும் போது, பாகவதரின் உபன்யாசம் பற்றியும் பேசினார். 

""பாகவதர் ஆஞ்சநேயரின் பலம் பற்றி நமக்கெல்லாம் எடுத்துச் சொன்னார். சந்தோஷம் தான்.... ஒண்டி ஆளா சஞ்சீவி பர்வதத்தை 
தூக்கின போது கூட அவர் இப்படி முக்கி முனங்கினாரோ தெரியல.... ஆனா, பாகவதர் வரிக்கு வரி முக்கி முனங்கியது தான் ஏன்னே புரியலை! ஒருவேளை அவர் போட்டிருக்கிற வைர, தங்க நகைகளின் பாரத்தை சுமக்க முடியாமல் தான் இப்படி முக்கி முனங்கினாரோ என்னவோ....'' என்று நகைச்சுவையுடன் சொல்ல பாகவதர் தலை குனிந்து கொண்டார். 

இதைக் கண்ட பெரியவர், ""மரக்கிளை உச்சில தேனெடுக்கிறப்போ, எடுப்பவரை தேனீக்கள் கொட்டுவதுண்டு. ஆனா, தேன் கிடைக்கிற ஆசையில அதை தாங்கிப்போம். அது மாதிரி, பாகவதரின் உபன்யாசத்தைக் கேட்கிறப்போ, இந்த சின்ன குறைபாட்டையும் நாமும் பெரிசா எடுத்துக்க வேண்டியதில்லை,'' என்று அவரது சொற்பொழிவு நன்றாக இருந்தது பற்றியும் சொல்லி முடித்தார்.







நன்றி : தினமலர்.
Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.


"கட்டெறும்பிடமும் கருணை"









     "கட்டெறும்பிடமும் கருணை"

பிப்ரவரி 05,2014,தினமலர்.

சந்நியாசியாக இருப்பவர் தினமும் கடைபிடிக்க வேண்டிய அனுஷ்டானங்கள் பல உண்டு. அவற்றை நெறி பிறழாமல் முறையாக பின்பற்றியவர் காஞ்சிப்பெரியவர். குறிப்பாக சந்நியாசிக்கு உரியது ஜீவகாருண்யம். அதாவது எந்த உயிருக்கும் துன்பம் செய்யக் கூடாது. இதை பெரியவர் தன் குறிக்கோளாகக் கொண்டிருந்தார்

காஞ்சிப்பெரியவர் தினமும் 21 முறை கைகால்களைச் சுத்தம் செய்து, ஜபம் செய்வார். ஒருநாள், மடத்தின் பின்புறம் உள்ள கிணற்றில் நீர் இறைத்து கை, கால்களைச் சுத்தம் செய்ய வந்தார். நீரில், கட்டெறும்பு ஒன்று மிதப்பதைக் கண்டார். உடனே தன் சிஷ்யர் சிம்சன் வைத்தாவை அழைத்து, ஒரு குச்சியினால் அதை எடுத்து தரையில் போடச் சொன்னார். அப்போது கட்டெறும்பு இறந்து விட்டது.

கிணற்றங்கரைக்குச் சென்று குளித்து விட்டு, கை,கால்களைச் சுத்தம் செய்த பின், ஜபம் செய்யத் தொடங்கினார். அதைக் கண்ட வைத்தா பெரியவரிடம், ""பெரியவா! ஏன் இப்போது ஜபம் செய்கிறீர்கள்?'' என்று கேட்டார். 

அதற்கு பெரியவர், ""டேய்! இந்த கட்டெறும்பு முக்தி அடைந்து விட்டது. அது எவ்வளவு நேரம் தண்ணீரில் தத்தளித்ததோ தெரியாது. அதற்கு மோட்சம் கிடைக்க வேண்டாமா? அதற்காக, ஸ்ரீமந்நாராயணனை நோக்கி ஜபம் செய்தேன். உலக ஜீவராசிகள் அனைத்தும் மோட்சம் பெற வேண்டும் என்ற எண்ணம் நமக்கு வர வேண்டும்,'' என்றார். எறும்பை அடக்கம் செய்யும்படியும் கேட்டுக் கொண்டார்.

இப்படி ஒரு எளிய ஜீவராசியிடம் கூட அன்பு காட்டிய காஞ்சிப்பெரியவரின் கருணையை என்னவென்று சொல்வது!





 




நன்றி : தினமலர்.

Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

வந்தாச்சு . நாளைக்கு மயிலாப்பூர் சித்திரகுள தெரு மடத்துல போய் போட்டுடுங்கோ..."










வந்தாச்சு . நாளைக்கு மயிலாப்பூர் சித்திரகுள
தெரு மடத்துல போய் போட்டுடுங்கோ..."

(நெஞ்சம் மறப்பதில்லை)

எஸ்.ராமசுப்பிரமணியன்

ஏப்ரல் 02,2014,தினமலர்



அது, 1965ம் ஆண்டு! சென்னை திருவல்லிக்கேணி ரங்கநாதன் தெருவில் வசித்துக் கொண்டிருந்தோம். நான், இந்து உயர்நிலைப்
பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். முழு ஆண்டுத்தேர்வு நடந்து கொண்டிருந்தது. அன்று ஞாயிற்றுக் கிழமை. மறுநாள் மதியம், "சயின்ஸ்' பரீட்சை. படிக்காமல் பிள்ளைகளோடு பம்பரம் விளையாடிக் கொண்டிருந்தேன்

வெளியே எங்கேயோ போயிருந்த அப்பா, திரும்பி வந்து கொண்டிருப்பதைக் கண்டதும் ஆட்டத்திலிருந்து அம்பேல் ஆகி, மின்னலாய் வீட்டுக்குள் நுழைந்து, விஞ்ஞான புத்தகத்தை பிரித்து அமர்ந்தேன். உள்ளே நுழைந்த அப்பா, "டேய் கிளம்புடா...'என்றார்.

என் வயிற்றில் பந்தாய் பயம் உருண்டது. 

அப்போதெல்லாம் அப்பாவுடனோ, அம்மாவுடனோ வெளியே செல்ல வேண்டுமென்றால், கதிகலங்கும். நடத்தித்தான் அழைத்து செல்வர்.
காரணம்: அப்பா செல்வாக்கோடு வீட்டில், "பெட்டி நிறைய பணம் வைத்துக் கொண்டு புழங்கியிருந்த போது நான் பிறந்திருக்கவில்லை. நான் பிறந்த பின், வீட்டில் பெட்டியே இருக்கவில்லை. 

சிந்தாதிரிப்பேட்டையில் இருந்தபோது, எழும்பூருக்கு கூட டாக்சியில் செல்லும் வழக்கமுடைய அப்பா, திருவல்லிக்கேணியில் இருந்து அடையாறுக்கும், மாம்பலத்திற்கும் கூட நடந்தே சென்று திரும்புவது உண்டு. அந்த நேரத்தில் பஸ் பயணம் என்பது, எங்களுக்கு பிரமிப்பூட்டும் விஷயம்
.
சாதாரண சாயாக்கடை வைத்து படிப்படியாய் முன்னேறி, ஸ்டார் ஓட்டல் வைத்தவர்கள் வரலாற்றை வாசித்து இருக்கிறேன். ஒன்றன் பின், ஒன்பது ஓட்டல்கள் வைத்தும் உருப்படாமல் ஓட்டாண்டியான, அப்பாவின் வரலாற்றை அம்மா சொல்லிக் கேட்டு இருக்கிறேன். அப்பாவின் ஓட்டல்களில், காசு கொடுத்து சாப்பிட்டு போனவர்களை விட, ஓசியில் சாப்பிட்டு போனவர்களே அதிகம்.

அப்பா, "டேய் கிளம்புடா...'என்றதும் புத்தகத்திலிருந்து பார்வையைத் திருப்பி, "எங்கே?' என்று தைரியமாக கேட்டுவிட்டேன். ஆனாலும், உதறலெடுத்துக் கொண்டுதான் இருந்தது. அப்பா என்னை உக்கிரப்பார்வை பார்த்தார். "போற எடம் தெரியலேன்னா வரமாட்டியோ?' என்று கோபமாகக் கேட்டார். அவரது பார்வையின் தகிப்பை தாங்க முடியாமல், "இல்லை... பரீட்சை... 
படிக்கணும்...'என்று இழுத்தேன். "நீ பரீட்சைக்கு படிச்சுண்டிருந்த லட்சணத்தை பார்த்துண்டுதானே வந்தேன். கிளம்புடான்னா...' என்று ஒரு அதட்டல் போட்டார்.

பேசாமல் சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்பினேன். நாற்பத்தைந்து நிமிட நடையில் நாங்கள் எழும்பூர் ஹால்ஸ் சாலையை எட்டி இருந்தோம். பேபி ஆஸ்பிடலுக்கு எதிரிலிருந்த, "மினர்வா டுடோரியல்ஸ்' வளாகத்துக்குள் நுழைந்த போதுதான், காஞ்சி மாமுனிவர், பெரியவர், பரமாச்சாரியர், ஜகத்குரு ஸ்ரீசந்திரகேகர சரஸ்வதி சுவாமிகள், அங்கு முகாமிட்டிருப்பது எனக்குத் தெரிய வந்தது.

என் உள்ளத்தில் உற்சாகம் பீறிட்டு பிரவகிக்க ஆரம்பித்தது. உற்சாகத்திற்கு காரணம் பெரியவாளை தரிசித்தால், அவரிடம், ஆசி பெற்றுக் கொள்வதோடு, அங்கேயே சாப்பாடும் சாப்பிட்டு விட்டுச் செல்லலாம். ஓட்டல் நடத்தி, வந்தவன் போனவனுக்கெல்லாம் ஓசியிலேயே சாப்பாடு போட்டு அனுப்பிய அப்பா , எனக்கு ஒருவேளை சாப்பாட்டையாவது திருப்தியாய் சாப்பிட வைப்போம் என்று, வியர்க்க விறுவிறுக்க, வெயிலில் நடத்தி அழைத்துச் சென்றதை இப்போது நினைத்தாலும் மனசு கனத்துப்போகிறது.

அப்பா தோளிலிருந்த துண்டை எடுத்துக் இடுப்புக்குக் கொடுத்தார். நானும் சட்டையை அவிழ்த்து இடுப்பில் சுற்றிக் கொண்டேன். 
அப்பாவும், நானும் சுவாமிகள் அருள் பாலித்துக்கொண்டிருந்த அறைக்குச் சென்று, தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினோம்.

பரமாச்சாரியார் அப்பாவை பார்த்தார். அடியேனையும் பார்த்தார். கண்களை மூடிக்கொண்டு, ஒரு நிமிடம் தியானித்தார்.
சன்னிதானத்தின் முன் கைக்கட்டி நின்றிருந்த போதிலும், சமையலறையிலிருந்து புறப்பட்டு காற்றில் கலந்து வீசிக் கொண்டிருந்த நறுமணம், என் நாசியை தாக்கி, வசீகரித்து அழைத்துக் கொண்டிருந்தது.

பெரியவாள் கண்களை திறந்து அப்பாவைப் பார்த்தார்."பிள்ளையாண்டனுக்கு இன்னும் பிரம்மோபதேசம் செய்யலியா?' என்று கேட்டார்.

"இன்னும் வேளை வரவில்லை...' என்றார் அப்பா தயக்கத்தோடு!

"வந்தாச்சு . நாளைக்கு மயிலாப்பூர் சித்திரகுள தெருமடத்துல போய் போட்டுடுங்கோ...' என்று திருவாய் திறந்து உத்தரவிட்டார். அப்பா என்னை அழைத்துக்கொண்டு, அடுத்த அறையிலிருந்த ஸ்ரீமடத்தின் மேனேஜரை அணுகினார்.

எனக்கு "உபநயனம் (பூணூல்) செய்து வைப்பது குறித்து அப்பா ஐந்தாண்டுதிட்டமே தயாரித்து வைத்திருந்தார். அப்பா இருந்த நிலையில், அவரது பிளானை ராத்திரி கனவில் மட்டுமே நிறைவேற்றி வைக்கமுடியும்! ஆனாலும், அப்பா, மேனேஜரிடம், தன் ஆதங்கத்தையும், பெரியவர்களின் ஆசியை ஏற்று, மறுநாள் பிரம்மோபதேசம் செய்து, தன் தன்மானம் தடுப்பதையும் எடுத்துரைத்தார். கூட நாளை நான் பரீட்சை எழுத வேண்டியிருப்பதையும் கூறினார். "பரீட்சை எப்போ?' என்று கேட்டார் 

மேனேஜர் என்னிடம். நான் மத்தியானம் இரண்டு மணிக்கு என்றேன், பெரியவா சொன்னா, அதுல விஷயம் இருக்கும். பையனைப் பரீட்சை எழுத வைக்க வேண்டியது என் பொறுப்பு. நீங்க வீணா விவாதம் பண்ணிண்டு இருக்காம, சாயரட்சை குடும்பத்தோட மடத்துக்கு வந்து சேர்ந்துடுங்கோ, என்று கண்டிப்பாக கூறிவிட்டார். அதற்கு மேல், அவரிடமும் எதுவும் பேச முடியவில்லை.

மறுநாள் திங்கட்கிழமை. அப்பா அம்மா நான் ஆகிய மூன்றே பேர்களோடு, நான்காம் பேருக்குத் தெரியாமல், மயிலாப்பூர் சித்திரைக் குளத்தெரு, சங்கர மடத்தில் பரமாச்சாரியாரின் அருளோடும், சகல வைதீக சடங்குகளோடும், எனக்கு பிரம்மோபதேசம் நடந்து முடிந்தது. மதியம் நான், பரீட்சைக்கு எழுத பள்ளிக்கூடம் போக மடத்திலிருந்து வாகனம் ஏற்பாடு செய்து தந்தனர்.

பரீட்சை எழுதி திரும்பி வந்த என்னையும், என்னோடு உபநயனம் நடந்த ஐந்து பேரையும், "புரசைவாக்கம் தர்மபிரகாஷ்' திருமண மண்டபத்தில் முகாமிட்டிருந்த பரமாச்சாரியாரிடம் அழைத்துச் சென்றனர்.

உடன் வந்திருந்த ஸ்ரீமடத்து சாஸ்திரிகள், "அபிவாதயே...' என்று துவங்கும் நமஸ்கார மந்திரம் சொல்லித்தர, நாங்கள் அறுவரும் அதைத் திருப்பிச் சொல்லி, சுவாமிகளை நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினோம்.

மந்திரத்தின் கடைசி வாரிசுகளான, "ராமசுப்ரமணிய சர்மா அஸ்மீபோஹோ' என்பதைச் சொல்லிவிட்டு, ஆறு பேருக்கும் நடுநாயகமாக நின்றிருந்த நான், எனக்கு மிகச் சரியாக எதிரிலிருந்த பரமாச்சாரியாரின் பாதங்களைத் தொட்டு வணங்கிவிட்டேன்.

பாதங்களில் ஸ்பரிசம் பட்டதும், பரமாச்சாரியாரின் தேகம் சட்டென்று சிலிர்த்தது. வணங்கி எழுந்த என் தலையில், "நறுக்கென்று ஒரு குட்டு விழுந்தது. நிமிர்ந்து பார்த்தேன்.......அப்பா! அப்பா என்னை குட்டியதை சுவாமிகள் பார்த்துவிட்டார். "குழந்தையை வையாதீங்கோ, தெரியாம தொட்டுடுத்து...' என்றபடி என்னை அழைத்து அருகே அமர்த்தி குட்டுப்பட்ட இடத்தில், தன் பட்டுக்கரங்களால் தொட்டுத் தடவி ஆசிர்வதித்து வழியனுப்பிவைத்தார். அடுத்த பதினைந்தாவது மாதம், அப்பா செத்துப்போனார். அப்பாவை தகனம் செய்துவிட்டு திரும்பிய அன்று, அம்மா என்னை அருகே அழைத்தார். என் மார்பில் தவழ்ந்து கொண்டிருந்த பூணூலை தொட்டுப் பார்த்தார். "உனக்கு பிரம்மோபதேசம் ' நடந்ததுக்கு மொதநாள் பெரியாவளைப் பார்க்க போய் இருந்தியே... அங்கே என்ன நடந்ததுன்னு சொல்லு...' என்றார். நான் நடந்த நிகழ்ச்சிகளை அப்படியே சொன்னேன்.

அப்பாவின் அத்தியாயம் அஸ்தமிக்கப் போறதுன்னு உனக்கும், எனக்கும் தாண்டா தெரியலை. பராமாச்சாரியரோட ஞானதிருஷ்டியில், ஒண்ணேகால் வருஷத்துக்கு முந்தியே தெரிஞ்சிருக்குடா...' என்று சொல்லி, அழ ஆரம்பித்தார்

நான் புரியாமல், அம்மாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். அம்மா அழுகையை நிறுத்திவிட்டு தொடர்ந்து சொன்னார்...

"வந்தாச்சு... வேளை வந்தாச்சுன்னு சொன்னார் இல்லையா? அதுக்கு என்ன அர்த்தம்ன்னு தெரியுமா? அப்பாவுக்கு போக வேண்டிய நேரம் வந்தாச்சு. உனக்கு கர்மம் செய்ய வேண்டிய வேளை வந்தாச்சுன்னு அர்த்தம்டா. அன்னிக்கு மட்டும் பெரியவா பிடிவாதமா உனக்கு, "பிரம்மோபதேசம்' செய்து வெக்கலேன்னா, உனக்கு உபநயனம் முறையா நடக்காமயே போயிருக்கும். இன்னிக்கு உங்கப்பாவை நீ தகனம் செய்றதுக்கு முன்னால சுடுகாட்டுலேயே, "காட்டுப்பூணல்' போட்டு வெச்சிருப்பா. காலத்துக்கும், உன் உடம்புல அந்த காட்டுப் பூணல் தான் ஊஞ்சலாடிண்டு இருந்திருக்கும்...' என்று அம்மா விவரமாக விளக்கிய போது, மெய்சிலிர்த்தது எனக்கு. நடமாடும் தெய்வமாய் இருந்து, அருளாசி வழங்கிக் கொண்டிருந்த பரமாச்சாரியாரின் ஞான திருஷ்டியை, இப்போது நினைத்துப் பார்த்தாலும் புல்லரிக்கிறது மனது!

எஸ்.ராமசுப்பிரமணியன்











Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.
ன்றி  : தினமலர்

திருப்பாவை – திருவெம்பாவை -- மகா பெரியவா







திருப்பாவை – திருவெம்பாவை                     மகா பெரியவா


மார்கழி மாதம் பிறந்து விட்டால் போதும் – தமிழ்நாட்டிலுள்ள எல்லாக் கோவில்களின் கோபுரங்களிலிருந்தும் இசைமாரி பொழிய ஆரம்பித்து விடும் – விடியற்காலை நாலு மணியிலிருந்தே ! சிவன் கோவிலாக இருந்தால், திருவெம்பாவையும் திருபள்ளிஎழுச்சியும்; பெருமாள் கோவிலாக இருந்தால், திருப்பாவை. இது தவிர, திருப்பாவை – திருவெம்பாவை மாநாடுகள்; வைணப் புலவர்கள் காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு, ஊர் ஊராகச் சென்று சொற்பொழியாற்றுவார்கள். பள்ளிக்கூடங்களில், பாவப் பாடல் போட்டி – பரிசுகள் !

இத்தனைக் கோலாகலம் எப்போது, யாரால் ஆரம்பிக்கப்பட்டது ? தலைக்காவேரியில்,நீர்த்திவலைகலாகக் தோன்றும் காவேரி, பறந்து விரிந்து வெள்ளமாகப் பெருகி அகண்டகாவேரியாக மாறிப் பிரமிக்க வைக்கிறது. அப்படித்தான், பாவைகள் பப்ளிக் ஆனதும், யாரோ சில சைவர்களும் வைணவர்களும் தனித்தனியாக முணுமுணுத்துக் கொண்டிருந்த பாவைகள், பார் எங்கும் பரவி, விசுவரூபம் எடுத்துவிட்டன.

1949, மகாசுவாமிகள் திருவிடமருதூரில் தங்கியிருந்தார்கள். மகாலிங்கஸ்வாமி கோவிலில், செட்டியார் வகுப்பைச் சேர்ந்த ஓர் அம்மையார் கையில் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு நாள்தோறும் பாடி வருவதைப் பெரியவா கவனித்துவிட்டர்கள். ‘ அந்த ஆச்சி என்ன பாடிக்கொண்டிருக்கா தெரியுமோ ?’ உடன் வந்துக்கொண்டிருந்த பக்தர் ராமமூர்த்தியையும் கைங்கர்யபரர் கண்ணனையும் பார்த்துக் கேட்டார்கள். பெரியவா. ஒரே குரலில், ‘தெரியாது’ என்று பதில் வந்தது. ‘அந்த ஆச்சி அம்மாள், திருவெம்பாவை படிச்சிண்டிருக்கா – நல்ல ராகத்தோட..’ இரண்டு நிமிஷ நடை. ‘இந்தப் பாடல்களை எல்லோரும் பாட வேண்டும் என்று பிரசாரம் செய்தால், யாரவது பாடுவார்களா ?.. ‘ஒருவரும் பாட மாட்டார்கள். இது, யாருக்குத் தெரியும் ?..’ பெரியவாள் சிந்தனையில் ஆழ்ந்தார்கள். அவர்கள் மனத்திரையில் மணிவாசகரும் ஆண்டாளும் காட்சி தந்தார்கள் போலும் ! அற்புதமான பாடல்கள், அறைக்குள்ளேயே கிடக்கின்றன, அரங்கத்துக்கு வந்தால் லோகோபகாரமாக இருக்குமே ?..

‘ராமமூர்த்தி.. திருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு நடத்தணும்; ஏற்பாடு செய் ..’ அவ்வாறே ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழ்நாட்டின் முன்னணிப் பாடகர்கள், சொற்பொழிவாளர்கள் கலந்துகொண்டார்கள், ஏகப்பட்ட விளம்பரம் !

திருவெம்பாவை – திருப்பள்ளிஎழுச்சி – திருப்பாவை புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் அச்சிடப்பட்டு இலவசமாக விநியோகிக்கப்பட்டன. பாவைப் பாடல்களின் பண் நயமும் இலக்கிய நயமும் அறிஞர்களால் விளக்கி மொழியப்பட்டன. அவற்றின் பக்தி ரசத்தைச் சுவைத்து மயங்காதவரே இல்லை. பாவைப் பாடல் இசைத்தட்டுக்கள் அமோகமாக விற்பனை ஆயின. மார்கழி மாதம் வந்தது. பெரியவா, வெறும் உபதேசியார் அல்லர். உபதேசங்களை நத்திக் காட்டுபவர்கள். ‘மார்கழி விடியற்காலையில் பாவைப் பாடல்களைப் பாட வேண்டும் ‘ என்று சொல்லிவிட்டால் மட்டும் போதுமா ? ‘பிரகலாதன்’ என்று ஒரு யானை ஸ்ரீமடத்தில் இருந்தது. ராமமூர்த்தியையும் கண்ணனையும் அதன் மேல் உட்கார்ந்துகொண்டு, கையில் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில், புத்தகத்தைப் பார்த்துப் பாவைப் பாடல்களைப் பாடிக்கொண்டு, திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோவிலின் நான்கு வீதிகளிலும் பவனி வரச் செய்தார்கள்.

அப்புறம் கேட்பானேன் !

தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் பாவை வெள்ளம் பாய்ந்தது; பக்திப் பயிர் வளர்ந்தது; நாயன்மார் – ஆழ்வார் பக்கம் மக்கள் பார்வை திரும்பியது. தமிழ் பக்தி இலக்கியத்துக்கு அடித்தது யோகம் ! ஓரிரு ஆண்டுகள் சென்றன. ராமமூர்த்தியையும் கண்ணனையும் அழைத்தார்கள், பெரியவாள். ‘ஞாபகம் இருக்கா ? — திருவெம்பாவை யாருக்குத் தெரியும் ? அதை யாரும் பாடமாட்டா – ன்னு சொன்னேளே ? — இப்போ யாரவது பாடராளா ?…’ இது, பெரியவாள் கொடுத்த குட்டு இல்லை; அன்புடன் வழங்கிய ஷொட்டு !









Courtesy : Facebook : Halasya Sundaram Iyer
Thanks to Mahaperiyava Bhaktas for the scanned pictures.

Scanned photos of Mahaperiyava and Mahans


For the scanned photos of Mahaperiyava  - Kanchi paramacharya , Sringeri acharyas, Ramana Bhagavan , and other mahans pls. click to this link.

I have edited many pictures and also got some rare pictures of Mahaperiyava  - PAramacharya- Kanchi Mahaswami from kanchi mutt websites and their respective videos.


Pls. see to them at

https://plus.google.com/u/0/photos/105940625170738334348/albums/5194977976602255473

யாருக்கு அதிகச் சம்பளம் -- காஞ்சி மகா பெரியவர்


         யாருக்கு அதிகச் சம்பளம்?  
        ( காஞ்சி மகா பெரியவர்)




 ========================================

ஒருமுறை காஞ்சிப் பெரியவர் எண்ணாயிரம் என்ற ஊரைப் பற்றிக் கேட்டார். அது விழுப்புரத்தில் இருந்து 20-25 கி.மீ. தூரத்தில் உள்ளது. 
காளமேகப் புலவரின் சொந்த ஊர் என்று சொல்லப்படுவது. புகழ்பெற்ற விஷ்ணு ஸ்தலம். ஒரு காலத்தில் மிகப்பெரிய பல்கலைக்கழகமாக இருந்திருக்கிறது. நிறைய சாஸ்திரங்களை எல்லாம் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். பெரியவர் அது பற்றி நிறைய விஷயங்களை என்னிடம் சொன்னார். எந்தெந்த சாஸ்திரங்கள் எல்லாம் வேதத்தில் இருந்தது என்றெல்லாம் சொன்னார். அதை எழுதிக்கொள்ளக் கூட முடியவில்லை. அவற்றில் பல இப்போது இல்லை. என்னுடைய முன்னோடி டி.எஸ். ராமன் என்று ஒருவர் இருந்தார். அவர்தான் அங்கே கல்வெட்டுகளைப் படித்துப் பதிந்தார். அவற்றைப் பின்னால் வெளியிட்டோம். அங்கே கல்வெட்டில் ஆசிரியர்களுக்கு எவ்வளவு சம்பளம், மாணவர்களுக்கு எவ்வளவு சம்பளம் என்றெல்லாம் இருக்கிறது. அந்தக் கல்வெட்டு இன்றும் உள்ளது.

அந்தக் கல்வெட்டைப் பார்த்த பிறகு ஒருநாள் பெரியவரைச் சந்தித்தேன். பெரியவர், “யார் அப்போ முக்கியமான ஆசிரியர் என்று தெரிய வந்ததா? அப்போ எந்தப் பாடம் ரொம்ப முக்கியமானதா இருந்ததுன்னு தெரியுமா?” என்று கேட்டார். “யாருக்கு எவ்ளோ கொடுத்தார்கள் என்று குறித்துக் கொண்டுவா, தெரியும்.” என்றார்.

அப்படிச் செய்து பார்த்தபோது, வியாகரண பண்டிதருக்கு (இலக்கண ஆசிரியருக்கு) மிக அதிக ஊதியம். ஒரு பட்சத்துக்கு ஒரு பவுன். கூடவே சில கலம் நெல். இலக்கணம் சொல்லிக் கொடுப்பதும், படிப்பதும் கஷ்டம். அதை உயர்வாக மதித்ததால் அதற்கு அதிக ஊதியம். இப்படியே சம்பளம் படிப்படியாக ஒவ்வொரு பிரிவிற்கேற்ப குறைந்து கொண்டே வருகிறது. குறைவான சம்பளம் வேதம், வேதாந்தம் சொல்லிக் கொடுப்பவருக்குத்தான்.

பெரியவர் அதைக் கேட்டுவிட்டு, “சரிதான். வேதம் சொல்லிக் கொடுப்பவர்களை என்னை மாதிரி நினைத்துக் கொண்டு விட்டார்கள் போலிருக்கிறது” என்று சொல்லிச் சிரித்தார்.







Courtesy - Facebook : Krishnamoorthi Balsubramanian
Thanks for Mahaperiyava bhaktas for the scanned photos

லோகத்தில் மனசுக்கு ரொம்பவும் ஆனந்தமாகவும் சாந்தமாகவும் இருக்கப்பட்ட பல விஷயங்களுக்கு,














நல்ல ஸங்கீதம் அதுவும் குறிப்பாக நம்முடைய ஸங்கீதத்துக்கே எடுத்த வீணையோடு கானம் என்றால் அது ஈசுவரனின் பாதத்துக்குத் கொண்டு சேர்ப்பதற்காகவே இருக்கும்"





(மோக்ஷத்துக்கு வழிகாட்டி!)

இந்த வார கல்கி.

லோகத்தில் மனசுக்கு ரொம்பவும் ஆனந்தமாகவும் சாந்தமாகவும் இருக்கப்பட்ட பல விஷயங்களுக்கு, அப்பர் ஸ்வாமிகள் ஒரு லிஸ்ட் கொடுக்கிறார். 

இந்திரியங்களுக்கு அகப்படுகிற சுகங்கள் போல இருந்தாலும், நிரந்தரமான, தெய்வீகமான ஆனந்தத்தைத் தருகிற வஸ்துக்களைச் சொல்கிறார். 

அந்த வஸ்துக்கள் என்ன? 

                       

முதலில், துளிக்கூட தோஷமே இல்லாத வீணா கானம்; அப் புறம், பூரண சந்திரனின் பால் போன்ற நிலா; தென்றல் காற்று; வஸந்த காலத்தின் மலர்ச்சி; வண்டுகள் ரீங்காரம் செய்துகொண்டிருக்கிற தாமரைத் தடாகம்.

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறைப் பொகையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே."

இந்திரியங்களால் பெறுகிற இன்பங்களை ஈசுவர சரணார விந்த இன்பத்துக்கு உபமானமாக அடுக்கும்போது, ‘மாசில் வீணை’ என்று சங்கீதத்துக்கே முதலிடம் தருகிறார்.




நல்ல ஸங்கீதம் அதுவும் குறிப்பாக நம்முடைய ஸங்கீதத்துக்கே எடுத்த வீணையோடு கானம் என்றால் அது ஈசுவரனின் பாதத்துக்குத் கொண்டு சேர்ப்பதற்காகவே இருக்கும். நம் பூர்வீகர்கள் இசையை ஈசுவரனின் சரணங்களிலேயே ஸமர்ப் பணம் பண்ணினார்கள். 

அந்த இசை அவர்களையும், அதைக் கேட்கிறவர்களையும் சேர்த்து, ஈசுவர சரணாரவிந்தங்களில் லயிக்கச் செய்தது. தர்ம சாஸ்திரம் தந்த மகரிஷி யாக்ஞவல் கியரும் ‘சுஸ்வரமாக வீணையை மீட்டிக் கொண்டு, சுருதி சுத்தத்தோடு, லயம் தவறாமல் நாதோபாஸனை செய்துவிட்டால் போதும் தியானம் வேண்டாம்; யோகம் வேண்டாம்; தபஸ் வேண்டாம்; பூஜை வேண்டாம். கஷ்டமான சாதனைகளே வேண்டாம் 

இதுவே மோக்ஷத்துக்கு வழிகாட்டிவிடும்’ என்கிறார்



  






Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.