Tuesday, May 5, 2015

"மரக்கிளை உச்சில தேனெடுக்கிறப்போ, எடுப்பவரை தேனீக்கள் கொட்டுவதுண்டு

"மரக்கிளை உச்சில தேனெடுக்கிறப்போ, எடுப்பவரை தேனீக்கள் கொட்டுவதுண்டு. ஆனா, தேன் கிடைக்கிற ஆசையில அதை தாங்கிப்போம்"(பந்தா' பாகவதர்)












ஜூன் 11,2014,தினமலர்.

காஞ்சிப்பெரியவர் வைகாசி மாத அனுஷ நட்சத்திரத்தில் அவதரித்தார். அவரது அவதார நாளை ஒட்டி, அவர் நிகழ்த்திய நகைச்சுவை சம்பவம் ஒன்றை அறிவோமா!

கும்பகோணம் சிவாலயம் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள காஞ்சிப்பெரியவர் வந்திருந்தார். கும்பாபிஷேகம் முடிந்த கையோடு, மற்ற சிவத்தலங்களுக்குச் சென்று விட்டு மாலையில் மடத்திற்கு திரும்பினார். அந்த சமயத்தில் மடத்தில் பாகவதர் ஒருவர் ராமாயண உபன்யாசம் செய்து வந்தார்.

வாட்டசாட்டமான தோற்றமும், சிவப்பு நிறமும் கொண்ட பாகவதர், தனது அந்தஸ்தை பறை சாற்றிக் கொள்ளும் விதத்தில் வைரக்கடுக்கண், பத்து விரலிலும் தங்க மோதிரம், கழுத்தில் தொடங்கி வயிறு வரை அடுக்கடுக்காய் தங்கச் சங்கிலிகள், நான்கு விரல் கட்டை ஜரிகையுடன் பட்டு வேஷ்டி, அங்க வஸ்திரம், இடுப்பில் பச்சைத் துண்டு, சிரித்தால் தெரியும் தங்கப்பல், வெற்றிலை போட்டுச் சிவந்த வாய் என படாடோபமாக இருந்தார்

. போதாக்குறைக்கு தான் பேசும் போது கை தட்ட பத்து "ஜால்ராக்களையும்' அழைத்து வந்திருந்தார்

பெரியவரும் உபன்யாசம் கேட்க வருகிறார் என்பதை அறிந்த பக்தர்கள் திரளாக கூடினர். பெரியவர் அமர்ந்திருக்க, பாகவதர் உபன்யாசத்தை தொடங்கினார். அன்றைய தினம் அனுமன் சஞ்சீவி மலையை இலங்கைக்கு கொண்டு வந்த விதத்தை விவரித்தார். ஜால்ராக்கள் தேவையில்லாத இடத்தில் கூட கை தட்டினர். அந்தளவு அவர் ஒரு புகழ் விரும்பி. 

பேச்சின் இடையே அவ்வப்போது, "ம்ஹும்...ம்ஹும்...' என்று பெருமூச்சுவிட்டபடி, முக்கி முனங்கினார் பாகவதர். பேச்சைக் 
கேட்டவர்களுக்கு இது மிகவும் சங்கடமாக இருந்தது. உபன்யாசம் முடியவும், பெரியவரை அருளுரை வழங்கும்படி விழாக்குழுவினர் கேட்டுக் கொள்ள, "பெரியவர் என்ன சொல்லப் போகிறார் என கேட்க பக்தர்கள் காத்திருந்தனர். ஏன்... பாகவதரும் கூடத் தான்!

பெரியவர் ஆசியுரை வழங்கும் போது, பாகவதரின் உபன்யாசம் பற்றியும் பேசினார். 

""பாகவதர் ஆஞ்சநேயரின் பலம் பற்றி நமக்கெல்லாம் எடுத்துச் சொன்னார். சந்தோஷம் தான்.... ஒண்டி ஆளா சஞ்சீவி பர்வதத்தை 
தூக்கின போது கூட அவர் இப்படி முக்கி முனங்கினாரோ தெரியல.... ஆனா, பாகவதர் வரிக்கு வரி முக்கி முனங்கியது தான் ஏன்னே புரியலை! ஒருவேளை அவர் போட்டிருக்கிற வைர, தங்க நகைகளின் பாரத்தை சுமக்க முடியாமல் தான் இப்படி முக்கி முனங்கினாரோ என்னவோ....'' என்று நகைச்சுவையுடன் சொல்ல பாகவதர் தலை குனிந்து கொண்டார். 

இதைக் கண்ட பெரியவர், ""மரக்கிளை உச்சில தேனெடுக்கிறப்போ, எடுப்பவரை தேனீக்கள் கொட்டுவதுண்டு. ஆனா, தேன் கிடைக்கிற ஆசையில அதை தாங்கிப்போம். அது மாதிரி, பாகவதரின் உபன்யாசத்தைக் கேட்கிறப்போ, இந்த சின்ன குறைபாட்டையும் நாமும் பெரிசா எடுத்துக்க வேண்டியதில்லை,'' என்று அவரது சொற்பொழிவு நன்றாக இருந்தது பற்றியும் சொல்லி முடித்தார்.







நன்றி : தினமலர்.
Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.


No comments: