Monday, February 9, 2015

காஞ்சி மஹானை சந்தித்த ஸ்ரீ ஞானானந்தகிரி ஸ்வாமிகள்



காஞ்சி மஹானை சந்தித்த ஸ்ரீ ஞானானந்தகிரி ஸ்வாமிகள்


மஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது. ஆனால் அவர்களை வழிபடுபவர்களின் மனப்பக்குவத்தில் தான் வித்தியாசம் ஏற்படுகிறது. ஒரு குருநாதரை ஏற்று கொண்டு மற்றவரை வெறுக்காமல், மஹானுக்கு மஹான் வித்தியாசம் என்ற நிலை மேற்கொள்ளாமல் அனைவரும் சமம் என்று வணங்கவேண்டும் .
ஒரு சமயம் தபோவனத்தில் பகல் வேளையில் குருநாதர் (ஸ்ரீ ஞானானந்தகிரி ஸ்வாமிகள்) முன்னிலையில் அமர்ந்து பாடி கொண்டிருந்தோம். திடீரென்று எழுந்த ஸ்வாமிகள் உள்ளே சென்று பின் வெகு நேரமாகியும் வெளி வரவில்லை. நாங்கள் தொடர்ந்து பாடிகொண்டிருந்தோம். சுமார் 2 மணி நேரம் கழித்து அப்போது தான் குளித்துவிட்டு வந்தது போன்ற தோற்றத்துடன் வெளியே வந்தார். வந்தவுடன் சொன்னார் "அங்கே இளையாத்தங்குடியில் ஆச்சார்யாள் பெரிய பூஜை பண்றாங்க. அதுக்கு ஸ்வாமி யை கூப்பிட்டு இருந்தாங்க. போய் வர நேரம் ஆகிவிட்டது".
பலருக்கு அது ஸ்வாமியின் பல ஆச்சரிய லீலைகளில் ஒன்று என தோன்றினாலும் ஒரு சிலருக்கு மட்டும் சுவாமியின் வார்த்தைகளில் சந்தேகம் வந்தது. சிறிது நேரத்திற்கேல்லாம் பஜனை முடிந்தது. சந்தேகப்பட்ட நபர்கள் ஊர் திரும்பி செல்ல உத்தரவு வேண்டி நின்றனர். ஸ்வாமி அவர்களை "இருந்து விட்டு நாளை போகலாம்" என்று கூற அவர்களும் ஸ்வாமியின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு தங்கிவிட்டனர்.
மறுநாள் காலையில் தினசரி வழிபாட்டுக்கு ஒரு புதிய தம்பதியர் வந்தனர். ஸ்வாமி அவர்களை பார்த்து "நாம் எங்கிருந்து வருகிறது" என்று கேட்க அவர்கள் " இளையாத்தங்குடியிலிருந்து வருகிறோம்" என்றனர். அதற்க்கு ஸ்வாமி "அப்படியா! அங்கு என்ன விசேஷம் " என்று கேட்க அவர்கள் சொன்னார்கள் " நேற்று மஹா பெரியவர்கள் விசேஷ பூஜை பண்ணினார்கள். நைவேத்யம் செய்யும் சமயம் ஒரு ஆடு வந்தது. பெரியவாள் அந்த நைவேத்தியத்தை அதனிடம் காண்பிக்க அந்த ஆடு சிலவற்றை சாப்பிட்டவுடன் பெரியவாள் தீபாரதனை பண்ணினார்கள். பிறகு அந்த ஆடு அங்கிருந்து போய் விட்டது. அப்போது பெரியவாள் "இன்றைய பூஜைக்கு தபோவனம் பெரியவாளை கூப்பிட்டுருந்தேன். அவர்கள் தான் இப்போது வந்து சென்றார்க்ள்" என்று சொன்னவுடன் நாங்கள் ஊருக்கு கிளம்பும் சமயம் அவரிடம் தபோவனம் பெரியவாள் யார் ஸ்வாமி என்று கேட்க அவர் தங்களை பற்றி சொல்லி அவசியம் தரிசித்து வரவும் என்று ஆசிர்வதித்து அனுப்பினார் என்றனர்.

உடன் இருந்த அந்த சந்தேகப்பட்ட நபர்கள் நால்வரும் வெட்கி தலை குனிந்தனர்.
------

Courtesy :  Facebook

Saturday, February 7, 2015

"நீ பாக்காட்டா என்ன? நான் ஒன்னைப் பாக்கறேன்." --மகா பெரியவா








"நீ பாக்காட்டா என்ன? நான் ஒன்னைப் பாக்கறேன்."
(மஹான்களின் திருஷ்டி பிரபாவம்!)
உத்தமமான குருவானவர், தன் சிஷ்யர்களை மட்டுமில்லை, சாமான்யமாக அவர்களுடைய திருஷ்டியில் படும், வஸ்துக்கள் அனைத்தையும் தன் பார்வையால் கடாக்ஷிப்பது. அந்த கடாக்ஷத்தை உள்வாங்கிக் கொள்ளும் பக்குவம் நமக்கு இருக்கிறதோ இல்லையோ, அந்த கடாக்ஷமே தன் வேலையை செய்ய ஆரம்பித்து விடும். மீன், தன் குஞ்சுகளை பார்வையாலேயே ரக்ஷிப்பது போன்றது மஹான்களின் திருஷ்டி
.
அதனால்தான் நம்... குழந்தைகளை மஹான்களின் சன்னிதானத்திற்கு அழைத்துப் போவது. அக்குழந்தைகளுக்கு மஹான்கள் யாரென்று கூட புரிந்து கொள்ளும் பக்குவம் இருக்கிறதோ இல்லையோ, அவர்களின் மேல் சூழ்ந்துள்ள தோஷங்களை நிவர்த்திக்கும் சக்தி அந்த திருஷ்டிக்கு உண்டு.
காஞ்சி மகாபெரியவாளிடம் ஆழ்ந்த பக்தி கொண்ட ஒரு பெண் இருந்தாள். அவளுடைய புருஷனுக்கோ, கடவுள், மஹான்கள், கோவில் என்று எதிலுமே நம்பிக்கை இல்லை. அதிலும் மஹான்கள் எல்லோருமே நம்மை போல் சாதாரண மனிதர்கள்தான்! என்ற ஒரு பேதைமை உண்டு.
ஒருமுறை அந்த அம்மாவின் வற்புறுத்தலின் பேரில் பெரியவாளை தரிசனம் பண்ண ஒப்புக் கொண்டார். ஆனால் அவர் போட்ட நிபந்தனை "நா அங்க வருவேன். pant shirt தான் போட்டுப்பேன். பஞ்சகச்சம் விபூதி எதுவும் கெடையாது. அவரை நமஸ்காரம் பண்ண மாட்டேன். உனக்காக வரேன் ஆனா,அவரைப் பாக்க மாட்டேன். தள்ளிதான் நிப்பேன்." பாவம் அந்த அம்மா ஒத்துக் கொண்டாள். போனார்கள். அவர் காலில் போட்டிருந்த ஷூவைக் கூட கழற்றவில்லை. அந்த அம்மா மானசீகமா பெரியவாளிடம் பிரார்த்தனை பண்ணினாள் கணவருக்கு நல்ல புத்தி வேண்டி. நம்ம பெரியவா சாக்ஷாத் தாயாரில்லையா?
"நீ பாக்காட்டா என்ன? நான் ஒன்னைப் பாக்கறேன்." என்று சொல்லுவதுபோல், மேனாவுக்குள் இருந்து லேசாக எட்டி அந்த மனுஷனைப் பார்த்தார். அவ்வளவுதான்!
கொஞ்ச நாள் கழித்து கணவர் "வாயேன்...போய் மடத்ல ஸ்வாமியை பார்த்துட்டு வருவோம்."
சாதாரண வேஷ்டி, ஷர்ட், லேசான விபூதி கீற்று! கொஞ்சநாள் கழித்து, பஞ்சகச்சம், குடுமி வைத்துக் கொள்ள ஆரம்பித்து, நாட்கள் செல்ல செல்ல, அந்த அம்மாவை விட பெரியவா மேல் பித்தாகிப் போனார். வேலையை விட்டார். பெரியவா படத்தை வைத்துக் கொண்டு சதா பஜனை, தியானம் என்று பரம பக்தராக மாறிவிட்டார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால்......
.
பெரியவா அன்று ஒரே ஒரு தடவை அவரை கடாக்ஷித்ததுதான்! அப்புறம் ஒரு வார்த்தை பேசக் கூட இல்லை!
மஹான்களின் திருஷ்டி பிரபாவம்!

Courtesy : facebook

நரகாசுரனைப் போற்ற வேண்டும் என்று உணரவைத்த பெரியவாளும்




"நரகாசுரனைப் போற்ற வேண்டும் என்று உணரவைத்த பெரியவாளும் பரபிரம்மஸ்வரூபமே"

(“காஞ்சி பரமாச்சார்யாளின் தீபாவளி பற்றிய அருள் வாக்கு திரு. ரா. கணபதி)

"ரா.கணபதி. சிவபெருமான் மீது பெரும் பக்தி கொண்டவர். சிவராத்திரி தினத்தில் (2012)சிவநாமம் கூறியபடி அவர் உயிர் பிரிந்தது ஆச்சரியம் என்றனர் உடன் இருந்த அன்பர்கள்.அவரைப் போற்றும் விதமாக வரும் சிவராத்திரி ஃபிப்ரவரி 17 வரை பெரியவா கட்டுரைகள் பழசு,புதுசு தினம் இரண்டு போஸ்டாகும்"

சொன்னவர்-தேதியூர் V.J. ராமன்

“காஞ்சி பரமாச்சார்யாளின் தீபாவளி பற்றிய அருள் வாக்கு ஒன்றை திரு. ரா. கணபதி அவர்கள் அற்புதமாக விவரித்துள்ளார்கள். இதைப் புரிந்துகொண்டால் பகவான் தன்னை உணர இரண்டை எப்படிப் பயன்படுத்திக்கொண்டுள்ளார் என்பது உங்களுக்குப் புரியும்.”

“தீபாவளி சமயம். எனக்கு என்னமோ பகீரதனை விட, நரகாசுரனே உயர்ந்தவன். ரொம்ப பிடிச்சிருக்கு அவனை என்று ஆரம்பித்தார் பரமாச்சார்யாள்.”

கூடியிருந்த அனைவருக்கும் பெரியவா என்ன சொல்லப் போறா என்பதில் ஆர்வம் கூடியது. பகீரதனையும் நரகாசுரனையும் compare பண்ணிப் பேசப் போறாங்கறது மட்டும் புரிந்தது.

“பகீரதன் பெரிய தபஸ்வி. அவன் பட்ட கஷ்டங்கள் எடுத்துக்கொண்ட சிரத்தையால்தான் கங்கை நம் பாரதத்துக்குக் கிடைத்தது. ஆனால் நரகாசுரனோ பெரிய கொடுமைகள் மாபாதகங்கள் பலவும் செய்தவன். என்னடா. இப்பேர்ப் பட்ட பாபியை நான் உசந்தவன்னு சொல்றேன்னு பார்க்கிறேளா.”

“தபஸ், பித்ரு பக்தி, சிரத்தை இதுக்கெல்லாம் பகீரதனைப் போற்ற வேண்டும். ஆனாலும் Comparitiveஆ அந்த அசுரன் லோகம் பூராவும் சந்தோஷமா தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடனும்னு வரம் வாங்கித் தரும் அளவுக்கு அந்திம காலத்திலே அடிபோட சேஞ்ச் ஆனதுக்கு அவனை ஜாஸ்தி கொண்டாடனும் இல்லையா. ஒன்றின்னு எடுத்துண்டா இருவரையும் compare பண்ண முடியாது.”

பெரியவா என்ன சொல்ல வரா என்று எவருக்குமே கொஞ்ச நாழி புரியலே..

“உத்தேசித்துப் பண்ணினாலும் உத்தேசிக்காமல் பண்ணினாலும் பண்ணியவருக்கு நன்றி சொல்றதுதான் நம் பண்பாடு. இல்லையா. . . அப்படிப் பார்த்தா நரகாசுரனுக்குத்தான் அதிகமா நாம் நன்றி சொல்லணும். கடன் பட்டா திருப்பிக் கொடுக்கணும். இல்லாட்டா சட்டப்படி குற்றம். தானதர்மம் பண்றது அப்படி இல்லே. பண்ணிணா புண்யம். பண்ணாட்டா பாவம் ஆகாது. குற்றம்னு யாரும் கேஸ் போட முடியாது. அதே மாதிரிதான் பகீரதனுக்கு நன்றி சொன்னா புண்யம், சொல்லாட்டா குத்தம் இல்லே. அது Optional ஆனால் நரகாசுரனுக்கு நன்றி சொல்ல வேண்டியது Obligatary. அவசியம்.”

“பகீரதன் கங்கையை பாரதத்தில் ஓடவிட்டது உபகாரம்தான். ஆனால் அவன் அனைத்து ஜனங்களையும் உத்தேசித்துக் கொண்டு வரலே. பாதாள லோகத்திலே பலவருஷமா கிடந்த தன்னோட பித்ருக்களுக்குச் சொர்க்கம் கிடைக்கவே கொண்டு வந்தான். இதைத் தன்னலம்னுகூடச் சொல்லலாம். பகீரதன் செஞ்சது incidental, intentional இல்லே.”

“ஆனால், நரகாசுரனோ ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவோட சுதர்ஸன சக்ரத்தாலே கழுத்து அறுபட்டு ப்ராணன் போற சமயத்திலேகூடத் தன்னோட க்ஷேமத்தையோ தன்னுடைய பந்துக்கள், பித்ருக்கள் க்ஷேமத்தையோ நினைக்காமல் லோக க்ஷேமத்துக்காகத் தன்னோட இறந்த நாளை என்னென்னிக்கும் கங்கையோட ஸாந்நித்யம் எல்லாத் தீர்த்தத்திலேயும் பூர்ணிமா கிடைச்சு, ஜனங்களோட அனைத்துப் பாவங்களும் பூர்ணமா போகணும்னு ப்ரார்த்தனை செய்து வரன் பெற்றான். அன்னிக்கு ஸ்னானம் பண்ற எந்த ஜலமானாலும் அதிலே கங்கை ஆவிர் பவித்துவிடுகிறாள். கங்கா ஸ்னானம் ஆகி ஆனந்தமா பண்டிகைக் கொண்டாடும் எல்லோருமே மோக்ஷம் பெற வேண்டும் என்று வரம் பெற்றான். ஆனால் தனக்கு மோக்ஷம் வேணும்னோ அல்லது ஒசத்தியான வேறு ஜென்மம் வேணும்னோ கேட்கவே இல்லை.”

“பகீரதன் கொண்டுவந்த கங்கையை நாம் வடதேசம் தேடிச் சென்றுதான் ஸ்னானம் பண்ண வேண்டும். ஆனா நரகாசுரனோ லோக க்ஷேமத்துக்காகத் தீபாவளியன்று எல்லார் வீட்டிலுமே கங்கை ப்ரவாஹிக்க வேண்டும். அந்த நாளில் எல்லா ஜலமும் கங்கையாக ஆகி எல்லா ஜனங்களும் புண்யத்தைப் பெற வேண்டும் என்று ப்ரார்த்தித்தானே அவன் உசத்தியா! அல்லது பகீரதன் உசத்தியா! ஆக நாம் நரகாசுரனுக்குத்தான் அதிகம் நன்றி செலுத்த வேண்டும். தீபாவளி அன்று அவனை ஜாஸ்தியா பூஷிச்சு ஸ்தோத்ரம் பண்ணனும்.” சொல்லி முடித்தார் பரமாச்சார்யாள்.

“இப்படி ஒரு தபஸ்வியையும் ஒரு அரக்கனையும் ஆக இரண்டு எதிர்மறை நோக்கம் கொண்டவர்களை பெரியவா compare பண்ணியதன் விளக்கத்தில் இருந்து நீங்கள் என்ன புரிந்துகொண்டீர்கள்.”

ஒன்றும் சொல்லத் தெரியாமல் விழித்தார்கள் இருவரும். எப்படி கங்கை யமுனை இந்த இரண்டு நதிகளும் சங்கமிக்கும் இடத்தில் கண்ணுக்குத் தெரியாமல் சரஸ்வதியும் திரிவேணி சங்கமமாகப் பிரவாஹித்து இருப்பதுபோல இப்படிப்பட்ட விளக்கங்கள் பகவானால் மட்டுமே சொல்ல இயலும் என்பதைப் புரியவைத்துள்ளாரே அந்த பிரத்யஷ பரமேச்வர ஸ்வரூபம். இரண்டைப் புரியவைக்க மூன்றாவது ஒரு சக்தி தேவைபடுகிறதல்லவா. அந்த தைவ சக்தியை அங்கு கூடியிருந்தவர்கள் பரமாச்சார்யாள் மூலம் உணர்ந்தார்கள். பரவசமடைந்தார்கள் இல்லையா. அந்தக் கண்ணுக்குத் தெரியாத ஆனந்தம்தான் இந்த இரண்டின் விசேஷம்.

கிருஷ்ணசாமிக்கு இன்னும் சந்தேகம் தீரவில்லை. “பெரியவா மாறுபட்ட இரண்டு பேரை compare பண்ணினது புரிந்தது. நீங்கள் சொன்ன மூன்றாவது ஒன்று புரியவில்லையே.”

“கிருஷ்ணசாமி. பகவான் எல்லாமே இரண்டாகப் படைத்ததன் நோக்கம் அதன் மூலம் மூன்றாவது ஒன்றை நீங்கள் உணர வேண்டும் என்பதே.”

கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்களேன். . .

“இப்போ உங்களுக்கு இரண்டு கைகளைக் கொடுத்திருக்கான் ஆண்டவன். இரண்டு கைகளையும் சேர்த்துத் தட்டுங்கள். சப்தம் வருகிறதா. உங்கள் பேரன் பட்டாஸையும் வத்திக்குச்சியையும் இணைக்கும்போது வெடிசப்தம் கேட்கிறதா. இந்த சப்தம் உங்களால் உணர முடிகிறதே தவிர அதை உங்களால் படம்போட்டுக் காட்ட முடியுமா. இன்னும் விளக்கமாச் சொல்றேன். தீபாவளிக்கு உங்காத்து மாமி ஸ்வீட் பண்ணி இருக்காளா.”

“ம். . . பண்ணி இருக்கா. ரவா லாடு. . .”

“சரி. ரவா லாடு இருக்கு. அதை எடுத்து உங்கள் வாயில் போடும்போதுதானே இனிப்பு என்ற உணர்ச்சியை. சந்தோஷத்தை நீங்கள் பெறுகின்றீர்கள். அந்த இனிப்பு என்கிற சுவையான ஆனந்தத்தை உணர முடிகின்றதே ஒழிய உங்களால் என்ன என்று காட்ட இயலுமா. தீபாவளி வரப்போகின்றது என்று ஒரு மாதம் முன்பே எல்லோரும் ஆனந்தப்படுரோமே . எல்லோர் மனதிலும் ஒரு குதூகலம் நிலவுகிறதே. அந்த ஆனந்தத்தை உணர்வுபூர்வமாகத்தானே உணர முடிகிறது. . .”

“கங்கையைப் பகீரதன் கொண்டுவந்தாலும் அதை பரிபூர்ணமாக அனுபவிக்கச் செய்து அதன் மூலம் புண்ணியம் என்ற கண்ணுக்குத் தெரியாத ஒன்றை உங்களுக்குப் பெற்றுத் தந்துள்ளானே நரகாசுரன். தீபாவளி அன்று நாம் எல்லோருமே அனைத்துப் பாபங்களையும் போக்கி, புண்ணிய ஆத்மாக்களாக ஆகிவிடுகின்றோம் என்பதை பாரதம் பூராவும் அன்று நிலவும் ஆனந்தம், மகிழ்ச்சி நமக்கு உணர்த்துகின்றதே. இந்த ஆனந்தத்தையும் புண்யத்தையும் பெற்றுத் தந்த அந்த நரகாசுரனைப் போற்ற வேண்டும் என்று உணரவைத்த பெரியவாளும் பரபிரம்மஸ்வரூபமே. சாக்ஷாத் பரமேச்வரனான அவரை ஆத்மார்த்தமாக அனுபவித்தவர்களுக்கே ஆனந்தம் என்றால் என்ன என்று புரியும்.


Courtesy  Varagooran Narayanan - Facebook

சௌந்தர்ய லஹரி சொல்கிறோம்,--------- மகா பெரியவா





சௌந்தர்ய லஹரி சொல்கிறோம், அபிராமி அந்தாதி சொல்கிறோம் என்று பல பெண்கள். என்னிடம் வந்து ஆசிர்வாதம் கேட்கிறார்கள்.
நல்ல காரியம்தான் ஆசிர்வாதம் பண்ணுகிறேன். ஆனால் இதையெல்லாம் விட அதிகமாக அம்பாளுடைய ப்ரீதியை சம்பாதித்துக் கொள்ள வேண்டுமானால் இவர்கள் வரதட்சனை, வைரத்தோடு, சீர்செனத்தி என்ற கண்டிஷன் இல்லாமல் கல்யாணங்களுக்கு மனப்பூர்வமாக சம்மதித்தால் தான் முடியும்.
தங்கள் மாதிரியான பெண்கள் வயது வந்ததும் கல்யாணமாகாமல் நிற்பது, அதனால் மன விகாரப்படுவது, மானபங்கப்படுவது, அப்புறம் மான உணர்ச்சியும் மரத்துப் போய் விடுவது என்றிப்படி ஆகியிருக்கிற நிலைமையை மாற்றுவதற்கு முன் வந்தால் இவர்களிடத்தில் அம்பாளும் மனசு தானாக இரங்குவாள்.'
"நாங்கள் கேட்காமல் பெண் வீட்டுக்காரர்களாகவே இத்தனைக் கொடுக்கிறோம் என்று சுயேச்சையாக வந்ததால் வாங்கிக் கொண்டோம்' என்று சொல்வது கூட தப்பு. ஏனென்றால், ஒருத்தர் பண்ணுவதிலிருந்து இன்னொருத்தர் என்று இது செயின் மாதிரி போய்க் கொண்டிருக்கிற வழக்கம். கட்டாயப்படுத்தாமல் ஒருத்தர் வரதட்சணை கொடுத்தாலும் இதனால் அவர்தம் பிள்ளைக்கும் கல்யாணம் பண்ணும் போது, வரதட்சணை எதிர்பார்க்கத்தான் செய்வர். அதனால் அவர்களாகவே கொடுத்தாலும் கூட வேண்டாம் என்று சொல்கிற உயர்ந்த மனோபாவம் வேண்டும்.
காஞ்சி மகா சுவாமிகள் அருளுரையிலிருந்து..
---------------------
courtesy : facebook  for article and  thanks to periyava bhaktas for photos

நமது கலாசாரத்திற்கு நெருக்கடி - மகா பெரியவா






தெய்வவாக்கு 25
நமது கலாசாரத்திற்கு நெருக்கடி - 2
நாம் சுயராஜ்யம் பெற்ற பிறகு, நம்முடைய வாழ்க்கை முறைகள் பெரிதும் மாறுதலடைந்து விட்டன. நமது சன்மார்க்க வாழ்க்கையில் இதற்கு முந்தி இல்லாத அளவுக்குக் கறை படிந்து வருகிறது. நம்முடைய பாரம்பரிய வாழ்க்கையைப் பற்றி முந்தியெல்லாம் நாம் பெருமைப் பட்டுக் கொண்டிருந்தோம். ஆனால் இப்பொழுது அது பழைய கதையாகிவிட்டது. நம்முடைய கலாசார பரம்பரைக்கும் வாழ்க்கையின் லட்சியங்களுக்கும் விடை கொடுத்து விட்டோம். லௌகீகபரமான அனுகூலங்களை உடைய அதாவது பணம், பதவி, அதிகாரம் ஆகியவைகளையுடைய வேண்டுமென்ற மோகத்தில் பாரமார்த்திக சம்பந்தமான விஷயங்களில் அலட்சிய மனப்பான்மை காட்டுகிறோம். சீலந்தான் பெரிதெனக் கருதவேண்டியதற்குப் பதில் இன்ப நுகர்ச்சியில் ஈடுபடுகிறோம். மத சம்பந்தமான விஷயங்களில் பலர் அசிரத்தை உடையவர்களாயிருக்கிறார்கள். அல்லது கடவுளை ஏற்கவோ மறுக்கவோ முடியாதென்ற கொள்கையுடையவர்களாயிருக்கிறார்கள். நம்மிலே அநேகர் ஏதோ ஒரு பிரதிப் பிரயோஜனத்தைக் கருதி மத சம்பந்தமான சடங்குகளைச் செய்கிறார்கள்.
நமது முன்னோர்களைக் காட்டிலும் நாம் மிகவும் நாகரீகமுடையவர்களென்று பெருமைப்பட்டுக் கொள்கிறோம். நமது வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறதென்று சொல்லி சந்தோஷப்படுகிறோம். இந்த தரத்தை எப்படி கணிக்கிறோமென்றால், ஆகாய விமானங்கள், மோட்டார் வாகனங்கள், டெலிபோன், நைலான் துணிகள், டெலிவிஷன் இப்படி நவீனமானவற்றைக் கொண்டு கணிக்கிறோம். எளிய வாழ்க்கை முறையினால் ஏற்படக் கூடிய நன்மைகளை நாம் மறந்தே விட்டோம். யந்திரம் போல் நடத்துகிற வாழ்க்கையின் விளைவாக, உண்மையான வாழ்க்கையினால் ஏற்படக் கூடிய சந்தோஷத்தைத் துறந்துவிட்டோம். நம்மிலே ஏழைகள் கூட பணக்காரர்களைப் பார்த்து பொறாமை கொள்கிறார்கள். அவர்களுடைய பழக்க வழக்கங்களை பின்பற்றப் பார்க்கிறார்கள். நமது வாழ்க்கையில் எளிமைக்குப் பதில் பகட்டே முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. பணக்காரர்கள் ஆடம்பர வாழ்க்கை நடத்துவதன் மூலமாகவும், தங்கள் செல்வச் செழுமையை வெளிப்படையாகக் காட்டிக் கொள்வதன் மூலமாகவும் ஏழைகளுக்குக் கெட்ட வழியைக் காட்டுகிறவர்களாயிருக்கிறார்கள்.

----------------


Thanks : Facebook  & mahaperiyava bhaktas for photos.

மகாபெரியவா தீர்ப்பு - ஒரு பழைய கடன் விவகாரம்.





மகாபெரியவா தீர்ப்பு - ஒரு பழைய கடன் விவகாரம்.
இதைப் பற்றி ஒரு தரம் படித்தது ஞாபகம் வருகிறது. அதை இப்போது சொல்கிறேன்.
இந்த சம்பவம் சுமார் எழுபது- எண்பது வர்ஷங்களுக்கு முன் நடந்தது என்று கூட வைத்துக்கொள்ளலாம். .
பெரியவாளிடம் அளவற்ற பக்தி கொண்ட ஒரு முதியவர், காலகதி அடையும் தறுவாயில் தன் மகனை அழைத்து சில விஷயங்களை சொல்லும் போது, தான் ஒருவரிடம் நூறு ரூபாய் கடன் வாங்கியதாகவும், அதை அவன் திருப்பித் தரவேண்டும் என்று சொல்லிவிட்டு இறந்தார். அப்போது மகனுக்கே 62 வயது.
கிராமத்தில் கர்ணம் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். சம்பளமோ 15 ரூபாய்தான். அப்பாவின் கடைசி வாக்கை காப்பாற்ற கஷ்டப்பட்டு மூன்று வருஷங்களில் எப்படியோ 100 ரூபாய் சேர்த்தார். இதில் வேடிக்கை என்னவென்றால், அப்பாவுக்கு கடன் குடுத்தவர் யாரென்றே அந்த வயதான மகனுக்கும் தெரியாது! சேமித்த பணத்தை யாரிடம் கொடுப்பது? இந்த கவலை அவர் மனதை அரித்தது. ஏன் எப்படி செய்தால் என்ன என்று பொட்டில் அடித்தாற்போல ஒரு எண்ணம் தோன்றியது.
மஹாபெரியவா - அவர் தானே நம்மைப் போன்ற திக்கற்றவருக்கு துணையாக நிற்கும் தெய்வம். ஓடினார் பெரியவாளிடம்! விவரத்தை சொன்னார்.
“மடத்ல ஒரு நாள் தங்கு”
பெரியவா உத்தரவு அவரை அந்த இரவு அங்கே தங்க வைத்தது. மறுநாள் காலை பெரியவா அவரிடம் “இங்கேர்ந்து நேரா…………நீ ஆலத்தம்பாடி கிராமத்துக்கு போ! அங்க இருக்கும் அக்ரஹாரத்ல கடைசியா இருக்கும் வீட்ல இருக்கறவர்கிட்டதான் ஒங்கப்பா கடன் வாங்கினார்”.
ஆலத்தம்பாடி அக்ரஹாரத்தில் பெரியவா சொன்ன வீட்டுக்கு சென்றால்……ஆச்சர்யம்! அந்த வீட்டுப் பெரியவர் (கடன் கொடுத்தவர் ) ஏற்கனவே சில வருஷங்களுக்கு முன்னால் காலகதி அடைந்துவிட்டார்.
அவருடைய மகனிடம் விஷயத்தை சொன்னதும், அவருக்கு ஒரே வியப்பு!
“எங்கப்பாவும் செத்துப் போகும்போது சில விஷயங்கள்லாம் சொன்னார்……..ஆனா, உங்கப்பாவுக்கு குடுத்த கடன் பத்தின விஷயத்தை சொல்லவேயில்லையே! அதுனால, இந்த பணத்தை நான் வாங்கிக்க மாட்டேன்”
திட்டவட்டமாக சொல்லிவிட்டார். கடன் பட்டவர் மகன் கடன் கொடுத்தவர் மகனை அழைத்துக் கொண்டு பெரியவாளிடம் வந்தார். ரெண்டுபக்கத்து ஞாயத்தை கேட்ட பெரியவா முகத்தில் புன்னகை.
“இங்கதான் தர்மம் இருக்கு. இன்னொர்த்தர் சாமானை வாங்கறப்போ…….நமக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும். ஆனா, அதை திருப்பித் தரணும்னா……யோசிப்போம்! அதுனால, கடன் வாங்கின பாவத்துக்கு பரிகாரமே இல்லை. இங்க, ஒங்க ரெண்டு பேரோட விவகாரம் எப்டி? வாங்கினவர் திருப்பித் தரணும்..ன்னு நெனைக்கிறார்……..குடுத்தவரோட பிள்ளையோ, அப்பா தங்கிட்ட அதைப் பத்தி சொல்லாததால, வாங்கிக்க மாட்டேங்கறார்……ஆனா, தர்மம் ஒங்களுக்கு தெரியாது இல்லியா? அடுத்தவா பொருளுக்கு ஆசைப்படாதவன் தர்மத்தை காப்பாத்தறான். நான் ஒரு தீர்ப்பு சொல்றேன் கேக்கறேளா ரெண்டுபேரும்.
ரெண்டு பேரும் காமாக்ஷி கோவிலுக்கு போய், இந்த பணத்தை அங்க உண்டியல்ல போட்டுடுங்கோ! அது அவளோட பணம்” ஆசீர்வாதம் பண்ணினார்.

----------------------------------

--

courtesy : Facebook  and photos mahaperiyava bhaktas

இனிமே சங்கரனாவது,கிங்கரனாவது"என்று பெரும்குரல் எடுத்து, சிரிக்க ஆரம்பித்தது அந்த பரப்பிரம்மம்






எங்கேனும் வெளியூர்களில் முகாமிட்டிருந்தால் அப்போது பயணிக்கமாட்டார்.அப்படி ஒரு அனுஷதினத்துக்கு முதல் நாள் மாலை.....
பழங்கள்.கல்கண்டு வாங்கப் போனவருக்கு ஒரு சின்ன அதிர்ச்சி.ஒரு கடையும் காணவில்லை இவரின் முகத்தைப் பார்த்த கீரை வியாபாரி" என்ன சாமீ பையும் கையுமா கடைக்குப் பொறப்படறயா..மெட்ராஸ்ல ஏதோ அரசியல் பிரச்னையாம்.ஒரு கட்சிக்காரங்க கூட்டமாக திரண்டு வந்து எல்லாக் கடைகளையும் மூடச் சொல்லி உத்தரவு போட்டுட்டு போறாங்க. "அட ஈஸ்வரா வெளியூருக்கு பஸ்ஸெல்லாம் போறதோ!" என்று ஒரு கேள்வி போட்டார். கடைகளயே பூட்ட வெச்சவங்க பஸ்ஸுகளை போக விடுவாங்களா.. பிறகு மனைவியிடம் "என்ன ஜானகி இப்படி ஆயிடுத்து? நாளைய அனுஷத்திற்கு காஞ்சிபுரம் போக முடியமானு தெரியலயே..ஏன் இந்த சோதனை? என்று கலங்கியவர் மகா ஸ்வாமிகளை மனதுக்குள் நினைத்துப் பிரார்த்தித்துக் கொண்டார். ப்ராப்தம் இருந்தா அங்கே இருப்போம் என்று சொல்லிவிட்டு வாசலில் இரு பக்கத்தையும் பார்வையால் துழாவிக் கொண்டிருந்தார். வாசலில் நின்று கொண்டிருந்த சதாசிவத்தின் அருகே வெள்ளை நிற அம்பாஸடர் கார் ஒன்று வேகமாக வந்து நின்றது.. பஞ்சகச்சம் அணிந்து தும்பைப்பூ மாதிரியான வெள்ளை நிறத்தில் சட்டையுடன் விபூதி தரித்த ஒருவர்காரிலிருந்து கீழே இறங்கினார்.இறங்கியதைப் பார்த்ததும் சதாசிவ தம்பதிகளுக்கு ஒன்றும் புரியவில்லை. "சார் நமஸ்காரம்...எம்பேரு சங்கரன்.உள்ளே இருக்கிறதுஎன் மனைவி.தஞ்சாவூர்லேருந்து வந்திண்டிருக்கோம். மனைவிக்கு திடீர்னு தலைவலி.அவளுக்கு நல்ல டிகிரி காபி சாப்பிட்டா சரியாயிடும். இன்னிக்குன்னு பார்த்தா ஓட்டல் எதுவும் இல்லை.உங்களுக்கு சிரமம் இல்லேன்னா இரண்டு பேருக்கும் ஸ்ட்ராங்கா காபி போட்டு கொடுக்க முடியுமா?
"தாராளமா..உள்ளே வாங்கோ.காபி என்ன..டிபன் பண்ணணும்னா கூட பண்ணித் தர்றேன்" என்று கனிவாகச் சொன்னார். மணக்கும் காபியைக் குடித்து விட்டு வாயார வாழ்த்தினார்கள் அப்போது சதாசிவம்,"இப்போது எதுவரைக்கும் பயணப் பட்டுண்டுண்டிருக்கேள்?" ஒருவேளை சென்னை என்று சொன்னால் தொற்றிக்கொண்டு போகலாமே என்ற ஒரு நப்பாசை. "நான் காஞ்சிபுரத்துல பெரியவாளைத் தரிசிக்கப் போயிண்டிருக்கேன்.ஆறு மாசம் ஆஸ்திரேலியாவில் இருந்துவிட்டு போனவாரம்தான் தஞ்சாவூர் வந்தேன். நாளைக்கு அனுஷமா இருக்கு.நீங்களும் வரேளா? என்று அழைப்பு விடுத்தபோது சதாசிவம் தம்பதிகளுக்குஅடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நள்ளிரவு வேளையில் கார் வந்து நிற்பதைப் பார்த்து ஓடோடி வந்தார் மடத்து வாட்ச்மேன். சங்கரன் உடனே அவர்களைப் பார்த்து "உங்களை மடத்து வாசலில் இறக்கி விடுவதற்காகத்தான் இங்கே வந்தேன். நண்பர் பக்கத்துல இருக்கார். அவா கிரஹத்துல தங்கிட்டு நாளைக்குக் காத்தால உங்களை வந்து பார்க்கிறேன். என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் சங்கரன். காலை மடத்துக்கு அருகே உள்ள கடைகளில் வாங்கிய பழங்கள்,கல்கண்டு,புஷ்பங்கள் போன்றவற்றை ஒரு மூங்கில் தட்டில் எடுத்துக்கொண்டு பஞ்சகச்சம் மற்றும் மடிசார் உடையுடன் பெரியவா தரிசனத்துக்காக காத்துக் கொண்டிருந்தனர் சதாசிவம் தம்பதிகள். சங்கரனை இடை இடையே தேடினார் நன்றி சொல்ல வேண்டும் என்ற அவாவில். ஸ்ரீமடத்தின் உதவியாளர் ஒருவர், சதாசிவத்தின் தோளைத் தொட்டு,"மாமா...கூப்பிட்டுண்டே இருக்கேன்..அப்படி யாரைத் தேடறேள்? பெரியவா உங்களைக் கூப்பிடறா....வாங்கோ,.எம்பின்னால்" என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று நடந்தார். பின் தொடர்ந்தனர் தம்பதிகள் ."வாப்பா சதாசிவம்..கும்பகோணத்துல உனக்கு பழம் ஏதும் கிடைக்கலையோ? அதான் மடத்து வாசல்லயே வாங்கிண்டு வந்திருக்கே போலிருக்கு" என்று கேட்டபோது ஆடித்தான் போனார் சதாசிவம்."ஆமாம் பெரியவா.. அங்கே ஏதோ பிரச்னை.கடைகளும் இல்லை..பஸ்ஸும் இல்லை..." "அதான் சொகுசா ஒரு கார்ல நன்னா தூங்கிண்டே மடத்துக்கு வந்து சேர்ந்துட்டியே...அப்புறம் என்ன...இந்தா" என்று பிரசாதத்தை நீட்டவும் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் பிரசாதத்தை வாங்கிக்கொண்டு கண்களில் ஒற்றிக் கொண்டார்.பிறகு "சங்கரன்னு ஒருத்தர்..அவர்தான் தன்னோட கார்ல என்னைக் கூட்டிண்டு வந்து நேத்து ராத்திரி இறக்கி விட்டுட்டுப் போனார்.அவருக்குத்தான் நன்றி சொல்லணும்"என்றார் குழைவாக."மடத்துக்கு வரணும்னு நினைச்சே...வந்துட்டே......இனிமே சங்கரனாவது,கிங்கரனாவது"என்று பெரும்குரல் எடுத்து, சிரிக்க ஆரம்பித்தது அந்த பரப்பிரம்மம். சதாசிவத்துக்கு ஏதோ புரிவது போல் இருந்தது.ஆனால் புரியாதது மாதிரியும் இருந்தது. "பஸ் எல்லாம் ஓட ஆரம்பிச்சுடத்து...மடத்துல போஜனம் பண்ணிட்டு,ஜாக்கிரதையா ஊர் போயிட்டு வா"என்று ஆசிர்வதித்தார் பெரியவா.
நடந்து முடிந்த காட்சிகளின் பிரமிப்பில் இருந்து மீள முடியாமல் வெளியே வந்த சதாசிவம்,நேற்று நள்ளிரவு தான் மடத்து வாசலில் இறங்கியபோது பணியில் இருந்த வாட்ச்மேனைக் கண்டு அருகில் அழைத்து ""ஏம்ப்பா..நேத்து ராத்திரி பன்னிரண்டு மணிக்கு ஒரு வெள்ளை அம்பாஸடர் கார்ல நான் மடத்து வாசல்ல இறங்கினபோது ஒரு பெரியவர் வண்டி ஓட்டிண்டு வந்தாரே ...அவர் திரும்ப இன்னிக்கு வந்தாரா?" என்று கேட்டார்.
"என்ன சாமீ.....நேத்து ராத்திரியா? எனக்கு டூட்டியே இல்லியே சாமீ...கலையில்தானே நான் வந்திருக்கேன்" சதாசிவம் மீண்டும் அதிர்ந்தார்,"இல்லேப்பா....நேத்து ராத்திரி உன்னைப் பார்த்தேனே....இதே இடத்து வாசல்ல..." என்றார்.புருவம் உயர்த்தி, "என்ன சாமீ நீங்க...சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்றீங்க.. நேத்திக்கு ராத்திரி செக்யூரிட்டி டூட்டிக்கு ஆளே இங்கு இல்ல சாமீ" என்று சொல்லிவிட்டுப் போனார். சதாசிவத்தின் கண்களில் ஜலம் தளும்பியது. "அப்படி என்றால் ...நேற்று இரவு என்னையும் என் மனைவியையும் கும்பகோணத்தில் இருந்து இங்கே கூட்டிக்கொண்டு வந்த சங்கரன் யார்?" என்று மனம் நெகிழ்ந்து அரற்றினார்.சர்வமும் உணர்ந்த சங்கரனாக அவருக்கு மகா பெரியவா ஒரு விநாடி காட்சி தந்து மறைந்தார், "பெரியவா,,," என்று பெரும் குரலெடுத்து அழைத்து அந்த மடத்தின் வாசலில் ....மண் தரையில்..... பெரியவா இருக்கும் திசையை நோக்கி சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார் சதாசிவம் கூடவே அவரது மனைவியும்..
----------------------------

courtesy :  facebook  : Mannargudi Sitaramansrinivasan
courtesy : mahaperiyava bhaktas photos