Monday, February 9, 2015

காஞ்சி மஹானை சந்தித்த ஸ்ரீ ஞானானந்தகிரி ஸ்வாமிகள்



காஞ்சி மஹானை சந்தித்த ஸ்ரீ ஞானானந்தகிரி ஸ்வாமிகள்


மஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது. ஆனால் அவர்களை வழிபடுபவர்களின் மனப்பக்குவத்தில் தான் வித்தியாசம் ஏற்படுகிறது. ஒரு குருநாதரை ஏற்று கொண்டு மற்றவரை வெறுக்காமல், மஹானுக்கு மஹான் வித்தியாசம் என்ற நிலை மேற்கொள்ளாமல் அனைவரும் சமம் என்று வணங்கவேண்டும் .
ஒரு சமயம் தபோவனத்தில் பகல் வேளையில் குருநாதர் (ஸ்ரீ ஞானானந்தகிரி ஸ்வாமிகள்) முன்னிலையில் அமர்ந்து பாடி கொண்டிருந்தோம். திடீரென்று எழுந்த ஸ்வாமிகள் உள்ளே சென்று பின் வெகு நேரமாகியும் வெளி வரவில்லை. நாங்கள் தொடர்ந்து பாடிகொண்டிருந்தோம். சுமார் 2 மணி நேரம் கழித்து அப்போது தான் குளித்துவிட்டு வந்தது போன்ற தோற்றத்துடன் வெளியே வந்தார். வந்தவுடன் சொன்னார் "அங்கே இளையாத்தங்குடியில் ஆச்சார்யாள் பெரிய பூஜை பண்றாங்க. அதுக்கு ஸ்வாமி யை கூப்பிட்டு இருந்தாங்க. போய் வர நேரம் ஆகிவிட்டது".
பலருக்கு அது ஸ்வாமியின் பல ஆச்சரிய லீலைகளில் ஒன்று என தோன்றினாலும் ஒரு சிலருக்கு மட்டும் சுவாமியின் வார்த்தைகளில் சந்தேகம் வந்தது. சிறிது நேரத்திற்கேல்லாம் பஜனை முடிந்தது. சந்தேகப்பட்ட நபர்கள் ஊர் திரும்பி செல்ல உத்தரவு வேண்டி நின்றனர். ஸ்வாமி அவர்களை "இருந்து விட்டு நாளை போகலாம்" என்று கூற அவர்களும் ஸ்வாமியின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு தங்கிவிட்டனர்.
மறுநாள் காலையில் தினசரி வழிபாட்டுக்கு ஒரு புதிய தம்பதியர் வந்தனர். ஸ்வாமி அவர்களை பார்த்து "நாம் எங்கிருந்து வருகிறது" என்று கேட்க அவர்கள் " இளையாத்தங்குடியிலிருந்து வருகிறோம்" என்றனர். அதற்க்கு ஸ்வாமி "அப்படியா! அங்கு என்ன விசேஷம் " என்று கேட்க அவர்கள் சொன்னார்கள் " நேற்று மஹா பெரியவர்கள் விசேஷ பூஜை பண்ணினார்கள். நைவேத்யம் செய்யும் சமயம் ஒரு ஆடு வந்தது. பெரியவாள் அந்த நைவேத்தியத்தை அதனிடம் காண்பிக்க அந்த ஆடு சிலவற்றை சாப்பிட்டவுடன் பெரியவாள் தீபாரதனை பண்ணினார்கள். பிறகு அந்த ஆடு அங்கிருந்து போய் விட்டது. அப்போது பெரியவாள் "இன்றைய பூஜைக்கு தபோவனம் பெரியவாளை கூப்பிட்டுருந்தேன். அவர்கள் தான் இப்போது வந்து சென்றார்க்ள்" என்று சொன்னவுடன் நாங்கள் ஊருக்கு கிளம்பும் சமயம் அவரிடம் தபோவனம் பெரியவாள் யார் ஸ்வாமி என்று கேட்க அவர் தங்களை பற்றி சொல்லி அவசியம் தரிசித்து வரவும் என்று ஆசிர்வதித்து அனுப்பினார் என்றனர்.

உடன் இருந்த அந்த சந்தேகப்பட்ட நபர்கள் நால்வரும் வெட்கி தலை குனிந்தனர்.
------

Courtesy :  Facebook

No comments: