Saturday, February 7, 2015

நமது கலாசாரத்திற்கு நெருக்கடி - மகா பெரியவா






தெய்வவாக்கு 25
நமது கலாசாரத்திற்கு நெருக்கடி - 2
நாம் சுயராஜ்யம் பெற்ற பிறகு, நம்முடைய வாழ்க்கை முறைகள் பெரிதும் மாறுதலடைந்து விட்டன. நமது சன்மார்க்க வாழ்க்கையில் இதற்கு முந்தி இல்லாத அளவுக்குக் கறை படிந்து வருகிறது. நம்முடைய பாரம்பரிய வாழ்க்கையைப் பற்றி முந்தியெல்லாம் நாம் பெருமைப் பட்டுக் கொண்டிருந்தோம். ஆனால் இப்பொழுது அது பழைய கதையாகிவிட்டது. நம்முடைய கலாசார பரம்பரைக்கும் வாழ்க்கையின் லட்சியங்களுக்கும் விடை கொடுத்து விட்டோம். லௌகீகபரமான அனுகூலங்களை உடைய அதாவது பணம், பதவி, அதிகாரம் ஆகியவைகளையுடைய வேண்டுமென்ற மோகத்தில் பாரமார்த்திக சம்பந்தமான விஷயங்களில் அலட்சிய மனப்பான்மை காட்டுகிறோம். சீலந்தான் பெரிதெனக் கருதவேண்டியதற்குப் பதில் இன்ப நுகர்ச்சியில் ஈடுபடுகிறோம். மத சம்பந்தமான விஷயங்களில் பலர் அசிரத்தை உடையவர்களாயிருக்கிறார்கள். அல்லது கடவுளை ஏற்கவோ மறுக்கவோ முடியாதென்ற கொள்கையுடையவர்களாயிருக்கிறார்கள். நம்மிலே அநேகர் ஏதோ ஒரு பிரதிப் பிரயோஜனத்தைக் கருதி மத சம்பந்தமான சடங்குகளைச் செய்கிறார்கள்.
நமது முன்னோர்களைக் காட்டிலும் நாம் மிகவும் நாகரீகமுடையவர்களென்று பெருமைப்பட்டுக் கொள்கிறோம். நமது வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறதென்று சொல்லி சந்தோஷப்படுகிறோம். இந்த தரத்தை எப்படி கணிக்கிறோமென்றால், ஆகாய விமானங்கள், மோட்டார் வாகனங்கள், டெலிபோன், நைலான் துணிகள், டெலிவிஷன் இப்படி நவீனமானவற்றைக் கொண்டு கணிக்கிறோம். எளிய வாழ்க்கை முறையினால் ஏற்படக் கூடிய நன்மைகளை நாம் மறந்தே விட்டோம். யந்திரம் போல் நடத்துகிற வாழ்க்கையின் விளைவாக, உண்மையான வாழ்க்கையினால் ஏற்படக் கூடிய சந்தோஷத்தைத் துறந்துவிட்டோம். நம்மிலே ஏழைகள் கூட பணக்காரர்களைப் பார்த்து பொறாமை கொள்கிறார்கள். அவர்களுடைய பழக்க வழக்கங்களை பின்பற்றப் பார்க்கிறார்கள். நமது வாழ்க்கையில் எளிமைக்குப் பதில் பகட்டே முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. பணக்காரர்கள் ஆடம்பர வாழ்க்கை நடத்துவதன் மூலமாகவும், தங்கள் செல்வச் செழுமையை வெளிப்படையாகக் காட்டிக் கொள்வதன் மூலமாகவும் ஏழைகளுக்குக் கெட்ட வழியைக் காட்டுகிறவர்களாயிருக்கிறார்கள்.

----------------


Thanks : Facebook  & mahaperiyava bhaktas for photos.

No comments: