வைகுண்டத்தில் ஸ்வாமி இருக்கிறார், ஹ்ருதயத்தில் இருக்கிறார், கோயிலிலிருக்கிறார் - என்றெல்லாம் நமது பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள். கோயிலில் இருக்கிறார் என்பதால் அங்கு நமஸ்காரம் செய்கிறோம்.
ஹ்ருதயத்தில் இருக்கிறார் என்பதால், சிவபூஜை செய்கிறவர்கள் முதலில் தங்கள் ஹ்ருதயத்தில் ஈச்வரனுக்கு உபசாரம் செய்துவிட்டு, அங்கிருந்து அவரை மூர்த்தியில் ஆவாஹனம் செய்து, பிறகு மூர்த்தி பூஜை செய்வது வழக்கம். வைகுண்டத்தில் இருக்கிறார் என்பதுபோல் கைலாஸத்தில் இருக்கிறார் என்றும், பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
வைகுண்டம் என்பது பரமபதம். தத் விஷ்ணோ; பரமம் பதம் என்று, வேதம் சொல்லியிருக்கிறது. யாராவது காலமாகி விட்டால் ‘பரமபதத்திற்கு ஏறிவிட்டார்’ என்று வைஷ்ணவர்கள் சொல்வார்கள். அதற்கு வைகுண்டத்துக்கு எழுந்தருளி விட்டார் என்று அர்த்தம். வைகுண்டத்தில் இருக்கிறார் என்று சொல்லும் ஸ்வாமியைப் ‘புருஷோத்தமன்’ என்று சொல்வதுண்டு.
‘புருஷோத்தமன்’ என்ற வார்த்தைக்குப் ‘பெரும் ஆள்’ என்று அர்த்தம். ஆகையால் ‘பெருமாள்’ என்கிறார்கள். புருஷோத்தமன் என்ற சொல்லில் ‘உத்’ என்பதற்குப் ‘பெரியவர்’ என்பது அர்த்தம். ‘உத்தமர்’ என்றால் ‘மிகப் பெரியவர்’ என்பது பொருள்; புருஷ உத்தமன் அல்லது உத்தமபுருஷன் பெருமாள். வைஷ்ணவர்கள்தான் ஸ்வாமியைப் பெருமாள் என்கிறார்கள்.
மற்றவர்கள் ஸ்வாமி என்றே சொல்லுகிறார்கள்; ஸ்வாமி என்ற வார்த்தையில் ‘ஸ்வம்’ என்பதற்கு ‘ஸொத்து’ என்பது அர்த்தம், உடைமை என்று இலக்கணமாகச் சொல்லலாம். ஸ்வம் உடையவர் ஸ்வாமி. அதாவது ஸொத்தை உடையவர். ஸொத்து எது? நாம்தான். ‘என் ஸ்வாமி’ என்றால், ‘என்னை ஸொத்தாக உடையவர்’ என்று அர்த்தம்.
- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
நன்றி : ஒரு பழைய கல்கி (அருள்வாக்கு)
Courtesy : Facebook post : Varagooran Narayanan
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.