Thursday, May 14, 2015

"பக்தர்களின் கஷ்டமும் பரிஹாரங்களும்"





"பக்தர்களின் கஷ்டமும் பரிஹாரங்களும்"
(லோக கருணை)




சொன்னவர்-டாக்டர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள்.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்

தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் பெரும்பாலும் தம்
குறைகளையும் கஷ்டங்களையும் திருப்பித் திருப்பி
சொல்லிவிட்டு, 'பெரியவாள் அனுக்ரஹம் பண்ண
வேண்டும்' என்று வேண்டும் காட்சி ஸர்வஸாதாரணம்.
பெரியவாளை தரிசித்து விட்டு ஒன்றும் வேண்டாமல்
செல்பவர்கள் மிக மிக அரிது. 

இந்நிலையில் தினசரி விடியற்காலம் விசுவரூப
தர்சனத்திலிருந்து தொடங்கி, தொடர்ந்து பல மணி
நேரம் பக்தர் கூட்டம் அலைமோதித் தம் கஷ்ட 
நஷ்டங்களை பல முறை (வலம் வந்து வந்து)
கூறினாலும் கூட நிகரற்ற பொறுமையுடன்
அதைக் கேட்டு தன் திவ்ய கரத்தை உயர்த்தி அபயம்
கூறும் அருளை யார்தான் விளக்க முடியும்?

ஒரு பாட்டி காஞ்சி மடத்தில் ஒரு சமயம் தன் குடும்ப
சச்சரவு பற்றி திரும்பத் திரும்பக் கூறினார்.
அந்த செய்திகளைப் பெரியவாளின் செவியில்
விழும்படி கூறும் ஒரு சிப்பந்தி, சற்றுக் கடிந்து 
கொண்டு உரத்த குரலில் 'பாட்டி உங்களுக்கு வேறு 
வேலையில்லை?எத்தனை தடவை திருப்பி திருப்பி
கூறுவது? என்றார்.

ஸ்ரீபெரியவாள்,"ஏண்டா! யாரது? ஏன் கத்தரே?"

"யாரோ பாட்டி, சொன்னதையே திருப்பித் திருப்பி 
கூறுகிறாள்."

"என்ன சொல்றா, என் காதில் விழவில்லையே
மறுபடி ஒரு முறை நீ கேட்டுச் சொல்லு" என்றதும்
பாட்டிக்கு எத்தனை ஆனந்தம்!

சில நேரத்தில் கஷ்ட பரிஹாரங்கள் கூறுவார்கள்.
பக்தர்களின் நிதிநிலையைக் கேட்டு, அதற்கு
ஏற்றபடி கோவில்,குளம்,தானதர்மம் செய்யுமாறு
உத்திரவாகும். அதில் ஒரு நிகழ்ச்சி.

வணிகத்துறை பிரமுகர் ஒருவர் காஞ்சிபுரம் வந்து
மஹாஸ்வாமிகளைத் தரிசித்துக் கூறினார்.

எனக்கு பல நாட்களாக பிஸினஸ் மந்தம்.
பல கவலைகள். ராத்திரி படுத்தா தூக்கம் வரவில்லை
மன உளச்சலை தாங்க முடியவில்லை. பெரியவாள்
அருள் தேவை.

ஸ்ரீபெரியவாள், "நீ ஒரு கார்யம் பண்ணுவாயோ?"

"காத்துக் கொண்டிருக்கேன்"

"பௌர்ணமி அன்று இரவு உன்னால் முடிந்த மட்டில்
ஆகாசத்தில் பூர்ண சந்திரனைப் பார்த்துண்டே,
ஸ்ரீ காமாக்ஷி அம்பாளை சந்திரமண்டலத்தில்
இருப்பதாக தியானம் பண்ணு.ஸகல கவலையும் விலகும்."








Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.



No comments: