“D for Devi, தேவின்னா என்ன தெரியுமா? ஒரே ஸ்வாமியே பல விதமா வருவார்.
எழுத்துக்களை அறியும்போதே மதத்திலும் இலக்கியத்திலும் பிடிமானம் ஏற்படுத்தித் தர ஜகத்குருவின் சுவையான பாடம்."
ரா.கணபதி
மேனா எனப்படும் பல்லக்கு ஸ்ரீபெரியவாளுக்குச் ‘சென்றால் ஊர்தியாம்; இருந்தால் சிங்காசனமாம்; புணையாம்’ (உறங்கப் பாயாம்)! ‘இருந்த திருக்கோல’த்தில் மேனாவுக்குள்ளிருந்து அவர் ராஜ்யபாரம் நடத்துவார். அப்படி ஒரு நாள்.
பக்கத்தில் ஒரு பெண் குழந்தை வந்து நின்றது.
“பேர் என்ன?” என்று விசாரித்தார் பெருமான்.
“தீபா” என்று கீச்சுக்குரலில் குட்டி கூறிற்று.
பெரியவாளுக்கு அது சரியாகக் காது கேட்கவில்லை. குழந்தையிடம், “நீ சொன்னது எனக்குக் கேக்கலியே! பலமாச் சொல்லும்மா”! என்றார்.
அது அழுத்தந்திருத்தமாக, “D for Donkey, E for Egg, இன்னொரு E for Elephant, P for People, A for Ant” என்றது.
பெரியவாள் மெய்யாலுமே அதில் வியப்படைந்தாலும் அவ்வியப்பை ஆயிரமாகப் பெருக்கி அபிநயித்து, “பேஷ், பேஷ், மஹா கெட்டிக்காரியா இருக்கியே! பொளந்து தள்றியே!” என்று குட்டியைச் சிலாகித்தார்.
அதற்கு ஏக மகிழ்ச்சி.
சின்னஞ் சிறிசிடம் பென்னம் பெரியவர் தொடர்ந்தார்: “நீ நன்னாதான் சொன்னே, ஆனா ஒம் பேரோட ‘டாங்கி’யையும் ‘எக்’கையும் சேக்கறதுக்குப் பதிலா நான் இன்னூரு தினுஸா சொல்லித் தரட்டுமா? ரொம்ப ஒஸ்த்தியானவாளோட சேத்துச் சொல்லித் தரேன். நீ D-e-e-p-aன்னு அஞ்சு எழுத்துல சொன்ன பேருக்கே இன்னுங் கொஞ்சம் ஈஸியா D-i-p-aன்னு நாலு எழுத்துலயும் ஸ்பெல்லிங் சொல்லலாம். அப்படி வெச்சுக்கலாம்.
“D for Devi, தேவின்னா என்ன தெரியுமா? ஒரே ஸ்வாமியே பல விதமா வருவார். அம்மாஸ்வாமியா அவர் ரொம்ப அன்போட வரச்சே தேவின்னு பேரு. அம்மன் கோவில்னு கோவில்லே பாத்திருக்கியோ?”
“பாத்திருக்கேன்”.
“அங்கே இருக்கிற அம்மன் தான் தேவி. எங்கே சொல்லு, D for Devi”.
“D for Devi”.
”பேஷ்! அப்புறம் நீ ரெண்டு E சொன்னதுக்குப் பதிலா ஒரே I. I for Ilango. இ-ள-ங்-கோ. சொல்லு”.
“இளங்கோ அப்படின்னா?”
“இளங்கோ-ங்கிறவர்தான் தமிழ்லயே ரொம்ப ஒஸ்த்தியான பொயட்ரி கதை எழுதினவர். கண்ணகி-ன்னு ஒரு அம்மாவைப் பத்தி பொயட்ரியாவே ஸ்டோரி சொன்னவர். அந்த ஸ்டோரி ரொம்ப நன்னா இருக்கும். எனக்கு இப்ப சொல்றதுக்கு டயம் இல்லே. அப்பாவைப் பொஸ்தகம் வாங்கித் தரச் சொல்லு. I for Ilango”.
“I for Ilango”
”அப்புறம் P for Prahlada – ப்ரஹ்லாதன்…”
“தெரியும், தெரியும். பக்தியா இருந்த boy. அவனுக்காக Godஏ சிங்கம் மாதிரி வந்து அவனுக்கு enemy-யா இருந்த father-ஐ kill பண்ணினார்”.
“பேஷ், பேஷ், நன்னா தெரிஞ்சு வெச்சுண்டிருக்கியே! கடைசியா, A for Anjaneya. ஆஞ்ஜநேயர் தெரியுமா?”
”ஊஹூம்”.
“ஹநுமார்?”
”தெரியும். Monkey-God”.
“அவரே தான். அவருக்கே தான் ஆஞ்ஜநேயர்னு பேரு. சொல்லு”.
“ஆஞ்ஜநேயர். A for Anjaneya.”.
“கரெக்டா சொல்லிட்டே! இந்தாம்மா!” என்று பாலகியிடம் கற்கண்டை வீசினார் அருளாளர்.
“D for Devi, I for Ilango” என்று சொல்லியவாறு துள்ளி ஓடினாள் சூட்டிகைச் சிறுமி.
எழுத்துக்களை அறியும்போதே மதத்திலும் இலக்கியத்திலும் பிடிமானம் ஏற்படுத்தித் தர ஜகத்குருவின் சுவையான பாடம்.
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!
Courtesy : Facebook post : Varagooran Narayanan
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.