Wednesday, June 17, 2015

""நரசிம்மா! கல்கத்தாவில் ஒரு வேத பாடசாலை நிறுவ விரும்புகிறேன்"".


""நரசிம்மா! கல்கத்தாவில் ஒரு வேத பாடசாலை நிறுவ விரும்புகிறேன்"". 








1960ல், காஞ்சி மகாபெரியவர் கல்கத்தாவில் (கோல்கட்டா) முகாமிட்டிருந்தார். தினமும் ஆயிரக்கணக்கான வங்காளி பக்தர்கள், பெரியவரைத் தரிசனம் செய்து சென்றனர். அங்கு வசித்த நரசிம்மன் என்ற பக்தர், பெரியவரின் தீவிர பக்தர். 

ஒருநாள், தனது வழக்கமான பூஜைகளை முடித்த பெரியவர், பக்தர்களுக்கு தரிசனம் தர தயாரானார். அங்கிருந்த நரசிம்மனை அழைத்து, ""நரசிம்மா! கல்கத்தாவில் ஒரு வேத பாடசாலை நிறுவ விரும்புகிறேன். அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். வேதாந்த மாணவர்கள் படிக்க, தங்க எல்லா ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். இந்தப் பணிக்கு நீயே பொறுப்பேற்க வேண்டும், ஏற்றுக் கொள்வாயா?'' என்று கேட்டார்
.
நரசிம்மன் பெரியவரின் உத்தரவை அப்படியே சிரமேற்கொள்வதாக <தெரிவித்தார்.

இதன்பிறகு, பாடசாலை அமைப்பதற்குரிய பல இடங்களைப் பார்த்தனர். ஒரு குறிப்பிட்ட இடம், நரசிம்மனுக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் பிடித்திருந்தது. ஒரு வங்காள தம்பதிக்கு சொந்தமான இடம் அது. நரசிம்மன், தனது நண்பர் ஒருவருடன் அவர்களது வீட்டுக்குச் சென்றார். வேதபாடசாலை நிறுவ, அந்த இடம் வேண்டும்என அவர்கள் அந்த தம்பதியிடம் கேட்டனர்
.
பெரியவரின் உத்தரவுப்படி நிறுவப்படும் வேத பாடசாலை என்பதால், அந்த தம்பதிக்கு மிக்க மகிழ்ச்சி. இடத்தைத் தருவதாக உறுதியளித்து விட்டனர். பத்திரம் பதிவதற்காக, ஒரு குறிப்பிட்ட நாளில், அவர்களை வரச் சொன்னார்கள்.

அவர்கள் சொன்ன நாளில், நண்பர்கள் இருவரும் வங்காள தம்பதி வீட்டுக்குச் சென்றனர். ஆனால், திடீரென அவர்கள், தற்போது தங்களால் அந்த இடத்தைத் தர முடியாது என மறுத்து விட்டனர். நண்பர்கள் இருவரும், அவர்களது முந்தைய வாக்குறுதியை நினைவுபடுத்தினர். ஆனால், அவர்கள் வருந்தும் வகையில் சிலவார்த்தைகளையும் சொல்லி, வெளியே அனுப்பி கதவையும் தாழிட்டு விட்டனர்.

ஆனாலும், நண்பர்கள் மேலும் சிலமுறை அந்த தம்பதியரை அணுகினர். ஆனால், காரியம் நடக்கவில்லை. இதற்குள் காஞ்சிக்கு சென்று விட்ட பெரியவரைச் சந்தித்து, இடம் கிடைக்கவில்லை என்று சொல்ல எண்ணி, மறுநாள் காலை 7 மணிக்கு சென்னை விமானத்தில் கிளம்ப திட்டமிட்டனர். அப்போது, பெரியவர் சென்னை சமஸ்கிருத கல்லூரியில் முகாமிட்டிருந்தார். அவரைச் சந்தித்து விபரத்தைச் சொன்னார்கள்.

அதைக் கேட்டுக்கொண்ட பெரியவர், ""நீங்கள் மாலை 5 மணி விமானத்திற்கு உடனே கல்கத்தா புறப்படுங்கள். நாளை காலை அந்த வீட்டிற்குச் செல்லுங்கள். அங்கு போய் வந்த பிறகு, என்ன நடந்ததென்று சொல்லுங்கள்,'' என்றார்.

அவர்களும் அன்றே கல்கத்தா பறந்தனர்

மறுநாள் காலையில் மகாபெரியவரை மனக்கண்ணால் தரிசித்து விட்டு, அந்த வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டினர்.

என்ன ஆச்சரியம்!

அந்த தம்பதிகள் இவர்களை வரவேற்று நமஸ்கரித்தனர்

""நேற்று இரவு எங்கள் இருவர் கனவிலும் காளி தோன்றினாள். வேதபாட சாலைக்கே இடம் கொடுக்க வேண்டும் என்று சொன்னாள். அந்த இடத்தை நாங்கள் உங்களுக்கே தருகிறோம்,'' என்று கண்ணீர் மல்கக் கூறினர்.

நரசிம்மன் நண்பர்களுக்கு மிகுந்த ஆச்சரியம்!

""உன் வீட்டுக் கதவைத் திற, வங்காளிகளின் உயிர் மூச்சான காளி உள்ளே வருவாள். உங்களுக்கும் அருள்வாள், உலகத்திற்கும் நன்மை செய்வாள்,'' என்று மகாபெரியவர் மூலமாக அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதோ!'' என்று நெகிழ்ந்து போனார்கள்.


நவராத்திரி துவங்க உள்ள இந்த சமயத்தில், மகாபெரியவரின் இந்த அரிய அற்புதத்தை அறிந்து கொண்ட நாம் மகா பாக்கியசாலிகள்! நிஜம் தானே!


சி.வெங்கடேஸ்வரன்


நன்றி-தினமலர் செப்டம்பர்
Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

No comments: