Wednesday, June 17, 2015

ஏன் சார் நீங்க கோவிந்தபுரம் போகணுமா?"


ஏன் சார் நீங்க கோவிந்தபுரம் போகணுமா?"
இன்று பெரியவா ஜெயந்தி 12-06-2014
ஸ்பெஷல் போஸ்ட்=1

(கட்டுரையாளர்;ரா.வேங்கடசாமி}







சேலத்தில் இருக்கிறது மகா பெரியவா கிரஹம் (இல்லம்). இந்த கிரஹத்தின் மாடியில் வசித்து வருகிறார் ராஜகோபால் என்பவர்.
கும்பகோணம் அருகில் இருக்கும் கோவிந்தபுரத்தையும் மகாபெரியவாளையும் சம்பந்தப்படுத்தி சுவாரஸ்யமான அனுபவம் ஒன்றைச் சொன்னார்.

ஒரு முறை தம்பதிசமேதராக காஞ்சி மகானின் தரிசனத்துக்கு சென்றிருந்தார் ராஜகோபால். அப்போது யதேச்சையாக பெரியவா ராஜகோபாலிடம் கேட்டாராம்: "ஏண்டா, நீ கோவிந்தபுரம் (காஞ்சி மடத்தின் 59-வது பீடாதிபதி ஸ்ரீபோதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் இங்குதான் ஸித்தியடைந்தார்!) போயிருக்கியோ?"

'இன்னும் போகலை' என்றார் ராஜகோபால்.

புன்சிரிப்பு தவழ மகான் சொன்னார் : "ஒரு தடவை அந்த ஊருக்குப் போயிட்டு வா… புரியும்!' 'அந்த ஊர் எங்கே இருக்கிறது?' என்றெல்லாம் கேட்காமல் நிறுத்திக் கொண்டார் அந்த பக்தர்.

இது நடந்த சில வருடங்களுக்குப் பிறகுதான் சேலத்தில் 'பெரியவா கிரஹம்' ஸ்தாபிதமானது. காஞ்சி சங்கரமடத்தில் வருடாவருடம் மகா பெரியவா ஜெயந்தி (வைகாசி மாதம் அனுஷ நட்சத்திரம்) விமரிசையாக நடக்கும். அதேபோல் சேலம் பெரியவா கிரஹத்திலும் அதே தினம் பெரியவா ஜெயந்தி விழா நடக்கும். அன்றைய தினத்தில் சுமங்கலிகளுக்குப் புடவை தானம் அளிப்பது வழக்கம். இந்த புடவைகள் தஞ்சை மாவட்டம் குத்தாலத்தில் குறிப்பிட்ட ஒரு குடும்பத்தாரால் தயார் செய்யப்படுபவை. அந்த வருடம் , ராஜகோபாலின் மனைவி வழி உறவினரான ஒரு டாக்டர் (அமெரிக்காவில் இருக்கிறார்). சேலைகளை வாங்கிக் கொடுக்கும் செலவை தான் ஏற்றுக்கொள்வதாக சொல்லி இருந்தார். எனவே ராஜகோபால் தன் மனைவியுடன் குத்தாலம் சென்று புடவைகளை ஆர்டர் கொடுத்த பின், மெயின் ரோடு வந்தார்.

சேலம் திரும்புவதற்கு எந்த பக்கம் பயணம் செய்வது என்கிற குழப்பத்துடன் கணவனும் மனைவியும் பிற்பகல் நேரத்தில் பஸ் ஸ்டாப்பில் விழித்தனர். வயிற்றுப் பசி வேறு ஒரு பக்கம் அவர்களை அழுத்தியது. அப்போது ஒரு கார் வேகமாக வந்து அவர்கள் முன் பிரேக் போட்டு நின்றது.

டிரைவர் அவர்களிடம் கேட்கிறார்: "ஏன் சார் நீங்க கோவிந்தபுரம் போகணுமா?"
                          


'சட்' டென்று உறைத்தது ராஜகோபாலுக்கு. என்றோ ஒரு நாள் மகாபெரியவா இவரிடம் கேட்ட கேள்வியல்லவா இது? டிரைவரை மேலும் கீழும் பார்த்துவிட்டு "ஆமாம்" என்றார். ஒருவித பிரமிப்புடன்.

"வண்டியில் ஏறுங்கள். கொண்டுபோய் விடுகிறேன்" என்றார் டிரைவர்.

இருவரும் வண்டியில் ஏறினர். சிறிது நேரப் பயணத்துக்குப் பிறகு கார் கோவிந்தபுரம் சாலையில் போய் நின்றது. "இங்கேருந்து கொஞ்ச தூரம் நடந்தா கோயில் வரும்! தரிசனம் பண்ணிட்டுக் கிளம்புங்க" என்று சொன்ன அந்த டிரைவர் ராஜகோபால் கொடுத்த வாடகைப் பணத்தையும் வாங்கிக் கொள்ளாமல் புறப்பட்டுப் போய்விட்டார்.

கோவிந்தபுரத்தை அடைந்த தம்பதி கோயிலுக்குள் நுழையும் முன்னரே ஓர் அந்தணர் அவர்களைப் பார்த்து, "வாருங்கள் … வாருங்கள். உங்களுக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறோம். முதலில் சாப்பாடு. பிறகுதான் எல்லாம்!" என்று இருவரையும் கையைப் பிடித்து இழுக்காத குறையாக அவர் அழைத்துச் சென்ற இடம் போஜன சாலை! இரண்டே இலைகளைத் தவிர எஞ்சியிருந்த இலைகள் முன்னால் அடியவர்கள் சாப்பிடுவதற்காக அமர்ந்திருந்தனர்.

சாப்பிட்டு முடிந்த பின் கோயிலையும் அதிஷ்டானத்தையும் பார்த்துவிட்டுத்தான் தம்பதி சேலம் திரும்பினர்.

கார் சவாரி, சாப்பாடு, உபசரிப்பு எல்லாமே பெரியவா ஏற்பாடுதானோ? தன் பக்தர்களுக்கு எந்த குறையையும் அந்த மகான் வைத்ததே இல்லை!!

கலியுக தெய்வம், கற்பகவிருட்சம், காஞ்சி மாமுனி மகாபெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் தெய்வாம்சங்களை எத்தனையோ விதங்களில் ஆராதித்து எவ்வளவோ படைப்புகள் வந்துகொண்டு இருக்கின்றன. அவற்றையெல்லாம் பக்த மகாஜனங்கள் அள்ளி அள்ளிப் பருகி பரவசம் அடைந்து கொண்டே இருக்கிறார்கள்.மகா பெரியவரின் கண்வீச்சு ஒரே ஒரு தடவை தங்கள் மீது படிந்தாலே மோட்சம் கிட்டிவிட்டதாக ஆத்ம திருப்தி அடைந்தவர்கள் அநேகம் அநேகம். அப்படியிருக்க, அந்த பகவானே நேரடியாக வேடிக்கையும் வியப்புமாக, அன்பும் ஆசியுமாக அந்த பக்தர்களிடம் திருவிளையாடல் நடத்தினால் அதற்கு எவ்வளவு கொடுத்து வைத்திருக்கவேண்டும்! அந்த அற்புத திருவிளையாடல்களைப் படித்து ரசிப்பதில்தான் எத்தனை சுகமிருக்கிறது!




தமிழ் எழுத்தாளர்களில் மூத்த தலைமுறையைச் சேர்ந்தவரும், அபாரமான நல் அனுபவங்களைப் பெற்றவருமான ரா.வேங்கடசாமி, காஞ்சி மகா ஸ்வாமிகளுடன் தங்களுக்கு நேர்ந்த சிலிர்ப்பான அனுபவங்களை பக்தர்களிடம் கேட்டுத் தொகுத்து அதை 'காஞ்சி மகானின் கருணை நிழலில்…' என்ற தலைப்பில் சக்தி விகடனில் தொடராக எழுதியபோது, அது பெரும் வரவேற்பைப் பெற்றது.








Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

"பக்தர்களின் மனக்குறையை தீர்த்த சங்கரன் !"





"பக்தர்களின் மனக்குறையை தீர்த்த சங்கரன் !"

மகாபெரியவாளின் அத்யந்த பக்தர்களில் கிருஷ்ணமூர்த்தி கனபாடிகளும் ஒருவர் வேதங்களை நன்கு கற்றுணர்ந்தவர் மகானின் அருகில் சற்று எட்ட அமர்ந்து வேதபாராயணம் செய்து கொண்டு இருப்பவர் இப்போது அவருக்கு வயது என்பத்தைந்துக்கு மேல் இருக்கலாம்

பலவருடங்களுக்கு முன்னாள் மகானின் அருகே அமர்ந்து சாமவேதத்தை பாராயணம் செய்து கொண்டு இருந்தார் மகான் வழக்கம் போல் பக்தர்களுக்கு ஆசியும் பிரசாதமும் வழங்கிக் கொண்டு இருந்த நேரம். பக்தர்களின் வரிசை மெதுவாக நகர்ந்தது, அப்போது ஒரு பக்தர் கையில் ஒரு சிறிய பையுடன் வரிசையில் நின்று கொண்டு இருந்தார் அவரது முறை வந்தபோது மகானிடம் ஆசிபெற்று பிரசாதத்தை வாங்கிக் கொண்டு அவர் நகர முயற்சித்த போது பெரியவரின் குரல் அவரை நிறுத்தியது 

"எனக்கு கொடுக்கணும்னு கொண்டுவந்ததை கொடுக்காம போறியே "

பக்தர் திடுக்கிட்டு நின்றார். அவரது கையில் இருந்த பையில் நெல்லிக்கனிகள் அவரது தோட்டத்தில் விளைந்த முதல் கனிகள் அவை மகானுக்கு கொடுக்கவே அவர் கொண்டு வந்தார்.

"இங்கே நிறைய ஆரஞ்சு, ஆப்பிள், மாதுளை, திராட்சைன்னு பல பழங்கள் கொண்டு வந்து தரா நான் சாதாரண நெல்லிக்கனியை பகவானுக்கு தர்றதா அதனாலே தான் கொண்டு வந்ததை எடுத்துண்டு போறேன் ...".






ஒரு மூங்கில் தட்டை காண்பித்து "நீ கொண்டு வந்ததை எடுத்துவை" என்று மகான் உத்தரவிட பக்தர் தன் பையில் இருந்த நெல்லிக்கனிகளை எடுத்து தட்டில் பக்தியோடு வைத்தார்.

கிருஷ்ணமூர்த்தி கனபாடிகளுக்கு ஒரே வியப்பு பக்தர் நெல்லிக்கநிதான் கொண்டுவந்திருக்கிறார் என்று மகானுக்கு எப்படித் தெரியும்?

அன்று துவாதசி மகான் அக்கனியை விரும்பி ஏற்றுக் கொண்டதன் காரணம் இப்போது கனபாடிகளுக்கு புரிந்தது .





ஆதிசங்கரருக்கு ஒரு நெல்லிக்கனியைக் கொடுத்தபோது அவர் வாயிலிருந்து அப்போதே கனகதாரா ஸ்தோத்திரம் கிளம்பியது இப்போது இவ்வளவு கனிகளை மகானுக்கு சமர்பித்த அந்த பக்தர் எந்த அளவுக்கு உணர்ந்திருப்பார் என்று கனபாடிகள் வியந்தார்.

அண்மையில், மகான் நெல்லிக்கனி பெற்ற விவரத்தை கிருஷ்ணமூர்த்தி கனபாடிகள், சேலம் பெரியவாகிரகத்தைச் சேர்ந்த ராஜகோபாலிடம் சொன்னார். துவாதசியன்று நெல்லிக்கனியை உண்பது எவ்வளவு விசேடமானது என்பதை மகான் புரிய வைத்திருக்கிறார்.

இந்த நெல்லிக்கனி விஷயத்தில் மகான் இன்னொரு அற்புதத்தையும் சேலத்திலேயே நிகழ்த்தியிருக்கிறார். இங்கே பெரியவா கிரகத்தில் மகாபெரியவாளின் முதல் ஆராதனை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது .




இதர பூஜை புனஸ்காரங்கள் அன்னதானம் போன்றவை சாஸ்திரப்படி நடக்க மிகவும் விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. முதல் ஆராதனை என்பதால் யாரிடமும் எள்ளளவும் சுணக்கம் தென்படவில்லை.

அன்னதானம் செய்யும் போது பெரியவாளுக்கு மிகவும் பிடித்தமான நெல்லிக்காய் ஊறுகாய், நெல்லிக்காய் பச்சடி போன்றவை வழங்க வேண்டும் என்று தீர்மானித்து , நெல்லிக்கனியை தேடி சேலம் முழுதும் அலைந்தார்கள் ஆனால் முதல் நாளும் ஜெயந்தி அன்றும் எவ்வளவு தேடியும் யாருக்கும் கிடைக்கவில்லை. மிகவும் மனகிலேசம் அடைந்த ராஜகோபாலன் எல்லாம் பரிபூரணமாக இருக்க இந்த நெல்லிக்கனி விஷயத்தில் குறை ஏற்பட்டுவிட்டதே என்ற எண்னம் மேலோங்கியது. அதை அப்படியே விட்டு விட வேண்டியதுதான் என்று அநேகர் சாந்தமடைந்து விட்டனர்

பூஜைகள் ஆரம்பமாகி வேதியர்கள் அமர்ந்து முறைப்படி எல்லாமே நடைபெற்றுக் கொண்டிருந்தது

ஹால் நிறையக் கூட்டம்

அந்த நேரத்தில் பெரியவா கிரகத்தின் வாயிலில் ஒரு நபர் வந்து நின்றார் 





அவரது கையில் ஒரு பை 

நான் "ராஜகோபால் மாமாவை பார்க்கவேண்டும்" என்றார் வந்தவர் 

"அவர் பூஜை செய்யும் வேதியர்களுக்கு உதவிக்கொண்டிருக்கிறார் இப்போது அவர் இங்கு வர முடியாது" இந்த பதிலைக் கேட்டு வந்தவர் சற்று தயங்கினார் 

"சரி இந்த பையை அவரிடம் கொடுத்துவிடுங்கள்" என்று தன் கையில் இருந்த பையை கொடுத்தார்

"யார் தந்ததாகச் சொல்வது?"

"சங்கரன்" என்று சொல்லுங்கள், பையைக் கொடுத்தவர் விறு விறு என்று வந்தவழியே சென்றுவிட்டார் 

அவர் கொடுத்த பையில் நிறைய நெல்லிக்கனிகள் இருந்தன அங்கே இருந்தவர்கள் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. 

இதில் முக்கியமான விஷயம் அந்த சங்கரன் யார் என்றே இன்றுவரை ராஜகோபாலுக்குத் தெரியாது 

பக்தர்களின் மனக்குறையை மகான் எவ்வாறு பூர்த்தி செய்கிறார் என்பதற்கு இதைவிட சான்று தேவையா?


இன்று பெரியவா ஜெயந்தி 12-06-2014






Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

“D for Devi, தேவின்னா என்ன தெரியுமா? ஒரே ஸ்வாமியே பல விதமா வருவார்.


“D for Devi, தேவின்னா என்ன தெரியுமா? ஒரே ஸ்வாமியே பல விதமா வருவார்.

 




எழுத்துக்களை அறியும்போதே மதத்திலும் இலக்கியத்திலும் பிடிமானம் ஏற்படுத்தித் தர ஜகத்குருவின் சுவையான பாடம்."

ரா.கணபதி 

மேனா எனப்படும் பல்லக்கு ஸ்ரீபெரியவாளுக்குச் ‘சென்றால் ஊர்தியாம்; இருந்தால் சிங்காசனமாம்; புணையாம்’ (உறங்கப் பாயாம்)! ‘இருந்த திருக்கோல’த்தில் மேனாவுக்குள்ளிருந்து அவர் ராஜ்யபாரம் நடத்துவார். அப்படி ஒரு நாள்.

பக்கத்தில் ஒரு பெண் குழந்தை வந்து நின்றது.

“பேர் என்ன?” என்று விசாரித்தார் பெருமான்.

“தீபா” என்று கீச்சுக்குரலில் குட்டி கூறிற்று.

பெரியவாளுக்கு அது சரியாகக் காது கேட்கவில்லை. குழந்தையிடம், “நீ சொன்னது எனக்குக் கேக்கலியே! பலமாச் சொல்லும்மா”! என்றார்.

அது அழுத்தந்திருத்தமாக, “D for Donkey, E for Egg, இன்னொரு E for Elephant, P for People, A for Ant” என்றது.

பெரியவாள் மெய்யாலுமே அதில் வியப்படைந்தாலும் அவ்வியப்பை ஆயிரமாகப் பெருக்கி அபிநயித்து, “பேஷ், பேஷ், மஹா கெட்டிக்காரியா இருக்கியே! பொளந்து தள்றியே!” என்று குட்டியைச் சிலாகித்தார்.

அதற்கு ஏக மகிழ்ச்சி.



சின்னஞ் சிறிசிடம் பென்னம் பெரியவர் தொடர்ந்தார்: “நீ நன்னாதான் சொன்னே, ஆனா ஒம் பேரோட ‘டாங்கி’யையும் ‘எக்’கையும் சேக்கறதுக்குப் பதிலா நான் இன்னூரு தினுஸா சொல்லித் தரட்டுமா? ரொம்ப ஒஸ்த்தியானவாளோட சேத்துச் சொல்லித் தரேன். நீ D-e-e-p-aன்னு அஞ்சு எழுத்துல சொன்ன பேருக்கே இன்னுங் கொஞ்சம் ஈஸியா D-i-p-aன்னு நாலு எழுத்துலயும் ஸ்பெல்லிங் சொல்லலாம். அப்படி வெச்சுக்கலாம்.

“D for Devi, தேவின்னா என்ன தெரியுமா? ஒரே ஸ்வாமியே பல விதமா வருவார். அம்மாஸ்வாமியா அவர் ரொம்ப அன்போட வரச்சே தேவின்னு பேரு. அம்மன் கோவில்னு கோவில்லே பாத்திருக்கியோ?”

“பாத்திருக்கேன்”.

“அங்கே இருக்கிற அம்மன் தான் தேவி. எங்கே சொல்லு, D for Devi”.

“D for Devi”.

”பேஷ்! அப்புறம் நீ ரெண்டு E சொன்னதுக்குப் பதிலா ஒரே I. I for Ilango. இ-ள-ங்-கோ. சொல்லு”.

“இளங்கோ அப்படின்னா?”

“இளங்கோ-ங்கிறவர்தான் தமிழ்லயே ரொம்ப ஒஸ்த்தியான பொயட்ரி கதை எழுதினவர். கண்ணகி-ன்னு ஒரு அம்மாவைப் பத்தி பொயட்ரியாவே ஸ்டோரி சொன்னவர். அந்த ஸ்டோரி ரொம்ப நன்னா இருக்கும். எனக்கு இப்ப சொல்றதுக்கு டயம் இல்லே. அப்பாவைப் பொஸ்தகம் வாங்கித் தரச் சொல்லு. I for Ilango”.

“I for Ilango”

”அப்புறம் P for Prahlada – ப்ரஹ்லாதன்…”

“தெரியும், தெரியும். பக்தியா இருந்த boy. அவனுக்காக Godஏ சிங்கம் மாதிரி வந்து அவனுக்கு enemy-யா இருந்த father-ஐ kill பண்ணினார்”.

“பேஷ், பேஷ், நன்னா தெரிஞ்சு வெச்சுண்டிருக்கியே! கடைசியா, A for Anjaneya. ஆஞ்ஜநேயர் தெரியுமா?”

”ஊஹூம்”.

“ஹநுமார்?”

”தெரியும். Monkey-God”.

“அவரே தான். அவருக்கே தான் ஆஞ்ஜநேயர்னு பேரு. சொல்லு”.

“ஆஞ்ஜநேயர். A for Anjaneya.”.

“கரெக்டா சொல்லிட்டே! இந்தாம்மா!” என்று பாலகியிடம் கற்கண்டை வீசினார் அருளாளர்.

“D for Devi, I for Ilango” என்று சொல்லியவாறு துள்ளி ஓடினாள் சூட்டிகைச் சிறுமி.

எழுத்துக்களை அறியும்போதே மதத்திலும் இலக்கியத்திலும் பிடிமானம் ஏற்படுத்தித் தர ஜகத்குருவின் சுவையான பாடம்.

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!








Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

சபரிமலை சீஸனில் ஸ்ரீ மடத்துக்கு வர ஆரம்பித்தார்கள். பெரியவா முன்னால் சரண கோஷம் செய்து


 சபரிமலை சீஸனில் ஸ்ரீ மடத்துக்கு வர 

ஆரம்பித்தார்கள். பெரியவா முன்னால் சரண 


கோஷம் செய்து 









சாமியே சரணம் ஐயப்பா....

சபரிமலை பக்தர்கள் இரண்டு பேருந்துகளில் வந்தார்கள். அவர்களிடம் ''எந்தெந்த ஊர்களுக்குப் போனீர்கள், இன்னும் எந்தெந்தெ ஸ்தலங்களுக்குப் போகப் போகிறீர்கள் ''என்று பெரியவா கேட்டார்.

தாங்கள் சென்ற ஊர்களைச் சொல்லிவிட்டு,கேரளாவில்
வைக்கம்,குருவாயூர், சோற்றாணிக்கரை ஆகிய
க்ஷேத்ரங்களுக்கும் போகப்போவதாக சொன்னார்கள்.
போகிற வழியில் , திருச்சி மாத்ருபூதேஸ்வரர் ,
திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி ,ஸ்ரீரங்கம்
ரங்கனாதர், மதுரை மீனாக்ஷி, திருப்பரங்குன்றம்
முருகன், நெல்லையப்பர். குற்றாலம் குற்றால
நாதர் ஆகிய எல்லாக் கோவில்களுக்கும்
செல்லுமாறு பணித்தார்கள்.

ஆனால் அன்பர்கள் எல்லாருக்கும் இப்படிப்
போவதற்கு சாத்தியப் படவில்லை.

ஒரு பேருந்து அவர் சொன்ன வழியில் சென்றது.
மற்றது அவர்கள் ஏற்கெனவே தீட்டியிருந்த
திட்டப்படி சென்றது.

பத்து தினங்கள் கழிந்து செய்தி வந்தது;
பெரியவா சொன்ன வழியில் சென்ற பஸ்
எந்தவித பாதிப்பும் இல்லாமல் சௌகர்யமாக
திரும்பி வந்தது. மற்ற பஸ் நடுவில் விபத்தில்
சிக்கி சிலர் படு காயமடைந்தும் மற்ற சிலர்
சிவலோக ப்ராப்தி அடைந்ததாகவும் தெரிந்தது.
சபரிமலைக்கும் போகாமல் பயணம்
முடிந்தது

உயிர் தப்பிய கோஷ்டி வருடம் தோறும் சபரிமலை
சீஸனில் ஸ்ரீ மடத்துக்கு வர ஆரம்பித்தார்கள்.
பெரியவா முன்னால் சரண கோஷம் செய்து
வந்தனம் செய்வதை வழக்கமாகக் கொண்டார்கள்.
நீண்ட் சரண கோஷம் முடியும் வரை த்யான பரராக
பெரியவா கண்மூடி ஆத்மானந்தத்தில் மூழ்குவார்கள்.
ஜய ஜய சங்கரா....


நன்றி..கோதண்டராம சர்மாவின் தரிசன அனுபவங்கள்.





Courtesy :  Facebook  :   Saraswathi Thyagarajan 
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

""நரசிம்மா! கல்கத்தாவில் ஒரு வேத பாடசாலை நிறுவ விரும்புகிறேன்"".


""நரசிம்மா! கல்கத்தாவில் ஒரு வேத பாடசாலை நிறுவ விரும்புகிறேன்"". 








1960ல், காஞ்சி மகாபெரியவர் கல்கத்தாவில் (கோல்கட்டா) முகாமிட்டிருந்தார். தினமும் ஆயிரக்கணக்கான வங்காளி பக்தர்கள், பெரியவரைத் தரிசனம் செய்து சென்றனர். அங்கு வசித்த நரசிம்மன் என்ற பக்தர், பெரியவரின் தீவிர பக்தர். 

ஒருநாள், தனது வழக்கமான பூஜைகளை முடித்த பெரியவர், பக்தர்களுக்கு தரிசனம் தர தயாரானார். அங்கிருந்த நரசிம்மனை அழைத்து, ""நரசிம்மா! கல்கத்தாவில் ஒரு வேத பாடசாலை நிறுவ விரும்புகிறேன். அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். வேதாந்த மாணவர்கள் படிக்க, தங்க எல்லா ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். இந்தப் பணிக்கு நீயே பொறுப்பேற்க வேண்டும், ஏற்றுக் கொள்வாயா?'' என்று கேட்டார்
.
நரசிம்மன் பெரியவரின் உத்தரவை அப்படியே சிரமேற்கொள்வதாக <தெரிவித்தார்.

இதன்பிறகு, பாடசாலை அமைப்பதற்குரிய பல இடங்களைப் பார்த்தனர். ஒரு குறிப்பிட்ட இடம், நரசிம்மனுக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் பிடித்திருந்தது. ஒரு வங்காள தம்பதிக்கு சொந்தமான இடம் அது. நரசிம்மன், தனது நண்பர் ஒருவருடன் அவர்களது வீட்டுக்குச் சென்றார். வேதபாடசாலை நிறுவ, அந்த இடம் வேண்டும்என அவர்கள் அந்த தம்பதியிடம் கேட்டனர்
.
பெரியவரின் உத்தரவுப்படி நிறுவப்படும் வேத பாடசாலை என்பதால், அந்த தம்பதிக்கு மிக்க மகிழ்ச்சி. இடத்தைத் தருவதாக உறுதியளித்து விட்டனர். பத்திரம் பதிவதற்காக, ஒரு குறிப்பிட்ட நாளில், அவர்களை வரச் சொன்னார்கள்.

அவர்கள் சொன்ன நாளில், நண்பர்கள் இருவரும் வங்காள தம்பதி வீட்டுக்குச் சென்றனர். ஆனால், திடீரென அவர்கள், தற்போது தங்களால் அந்த இடத்தைத் தர முடியாது என மறுத்து விட்டனர். நண்பர்கள் இருவரும், அவர்களது முந்தைய வாக்குறுதியை நினைவுபடுத்தினர். ஆனால், அவர்கள் வருந்தும் வகையில் சிலவார்த்தைகளையும் சொல்லி, வெளியே அனுப்பி கதவையும் தாழிட்டு விட்டனர்.

ஆனாலும், நண்பர்கள் மேலும் சிலமுறை அந்த தம்பதியரை அணுகினர். ஆனால், காரியம் நடக்கவில்லை. இதற்குள் காஞ்சிக்கு சென்று விட்ட பெரியவரைச் சந்தித்து, இடம் கிடைக்கவில்லை என்று சொல்ல எண்ணி, மறுநாள் காலை 7 மணிக்கு சென்னை விமானத்தில் கிளம்ப திட்டமிட்டனர். அப்போது, பெரியவர் சென்னை சமஸ்கிருத கல்லூரியில் முகாமிட்டிருந்தார். அவரைச் சந்தித்து விபரத்தைச் சொன்னார்கள்.

அதைக் கேட்டுக்கொண்ட பெரியவர், ""நீங்கள் மாலை 5 மணி விமானத்திற்கு உடனே கல்கத்தா புறப்படுங்கள். நாளை காலை அந்த வீட்டிற்குச் செல்லுங்கள். அங்கு போய் வந்த பிறகு, என்ன நடந்ததென்று சொல்லுங்கள்,'' என்றார்.

அவர்களும் அன்றே கல்கத்தா பறந்தனர்

மறுநாள் காலையில் மகாபெரியவரை மனக்கண்ணால் தரிசித்து விட்டு, அந்த வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டினர்.

என்ன ஆச்சரியம்!

அந்த தம்பதிகள் இவர்களை வரவேற்று நமஸ்கரித்தனர்

""நேற்று இரவு எங்கள் இருவர் கனவிலும் காளி தோன்றினாள். வேதபாட சாலைக்கே இடம் கொடுக்க வேண்டும் என்று சொன்னாள். அந்த இடத்தை நாங்கள் உங்களுக்கே தருகிறோம்,'' என்று கண்ணீர் மல்கக் கூறினர்.

நரசிம்மன் நண்பர்களுக்கு மிகுந்த ஆச்சரியம்!

""உன் வீட்டுக் கதவைத் திற, வங்காளிகளின் உயிர் மூச்சான காளி உள்ளே வருவாள். உங்களுக்கும் அருள்வாள், உலகத்திற்கும் நன்மை செய்வாள்,'' என்று மகாபெரியவர் மூலமாக அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதோ!'' என்று நெகிழ்ந்து போனார்கள்.


நவராத்திரி துவங்க உள்ள இந்த சமயத்தில், மகாபெரியவரின் இந்த அரிய அற்புதத்தை அறிந்து கொண்ட நாம் மகா பாக்கியசாலிகள்! நிஜம் தானே!


சி.வெங்கடேஸ்வரன்


நன்றி-தினமலர் செப்டம்பர்
Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

Saturday, June 6, 2015

சைதாப்பேட்டை அருள்மிகு காரணீஸ்வரர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் (07/06/2015)-Saidapet Sri Karaneeswarar koil kumbabisekam -07-06-2015 @10 AM


சைதாப்பேட்டை அருள்மிகு காரணீஸ்வரர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் (07/06/2015)

சென்னையில் சிறந்து விளங்கும் சிவத்தலங்களில் சைதாப்பேட்டை அருள்மிகு சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் திருக்கோயிலும் ஒன்றாகும்.

எதிர்வரும் 07.06.2015 (ஞாயிற்றுக்கிழமை) அன்று 
நேரம் : காலை 08.35 மணிக்குமேல் 10.05க்குள்
மஹா கும்பாபிஷேக வைபவம் சுமார் 19 ஆண்டுகளுக்கு பின்னர் கோலாகலமாக நடைபெறவுள்ளது.

இறை அடியார்கள் அனைவரும் கும்பாபிஷேக நிகழ்வுகளில் கலந்து கொண்டு எம்பெருமானின் இஷ்ட சித்திகளைப்பெற்றேகும் வண்ணம் வேண்டிக்கொள்கின்றோம்.

ஸ்தல வரலாறு....

எந்தக் காரணத்திற்காகவும் இந்த ஈசனை வந்து வணங்கினால் அந்தக் காரணம் எல்லாம் கனிவாக நிறைவேறும். அதனாலேயே இந்த ஈஸ்வரன், காரணீஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். அம்பிகை சொர்ணாம்பிகை. தூண்களிலும், சுவர்களிலும் காரணீஸ்வரர் கருவறை மேல் விதானத்திலும் அநேக மீன் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருப்பதை வைத்து இக்கோயில் பாண்டிய மன்னர்களால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்கலாம்.

கமிகா ஆகமப்படி இக்கோயிலில் பூஜைகள் நடைபெறுகின்றன. பிரம்மோற்சவ விழாவின் போது எட்டாம் நாள் அன்று நடத்தப்படும் திருஞான சம்பந்தர் ஞானப்பால் அருந்திய நிகழ்ச்சி பக்தர்களைப் பரவசப்படுத்தும். குறிப்பாக கருவுற்றிருக்கும் தாய்மார்கள் அக்காட்சியைக் காண்பதால் பிறக்கும் குழந்தை கல்வி, அறிவு, ஒழுக்கங்களில் சிறந்து விளங்கும் என்று நம்புகிறார்கள்.

தென்னாடு உடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!!



-------------------------------------------------------------------------------------------------------------
Maha Kumbabisekam of Sri Karaneeswara koil  saidapet will take place on 07.06.2015 at 10 AM .

In the evening  Thirukalyana will take place and  Sri Somasankadar will give darshan