Wednesday, June 17, 2015

ஏன் சார் நீங்க கோவிந்தபுரம் போகணுமா?"


ஏன் சார் நீங்க கோவிந்தபுரம் போகணுமா?"
இன்று பெரியவா ஜெயந்தி 12-06-2014
ஸ்பெஷல் போஸ்ட்=1

(கட்டுரையாளர்;ரா.வேங்கடசாமி}







சேலத்தில் இருக்கிறது மகா பெரியவா கிரஹம் (இல்லம்). இந்த கிரஹத்தின் மாடியில் வசித்து வருகிறார் ராஜகோபால் என்பவர்.
கும்பகோணம் அருகில் இருக்கும் கோவிந்தபுரத்தையும் மகாபெரியவாளையும் சம்பந்தப்படுத்தி சுவாரஸ்யமான அனுபவம் ஒன்றைச் சொன்னார்.

ஒரு முறை தம்பதிசமேதராக காஞ்சி மகானின் தரிசனத்துக்கு சென்றிருந்தார் ராஜகோபால். அப்போது யதேச்சையாக பெரியவா ராஜகோபாலிடம் கேட்டாராம்: "ஏண்டா, நீ கோவிந்தபுரம் (காஞ்சி மடத்தின் 59-வது பீடாதிபதி ஸ்ரீபோதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் இங்குதான் ஸித்தியடைந்தார்!) போயிருக்கியோ?"

'இன்னும் போகலை' என்றார் ராஜகோபால்.

புன்சிரிப்பு தவழ மகான் சொன்னார் : "ஒரு தடவை அந்த ஊருக்குப் போயிட்டு வா… புரியும்!' 'அந்த ஊர் எங்கே இருக்கிறது?' என்றெல்லாம் கேட்காமல் நிறுத்திக் கொண்டார் அந்த பக்தர்.

இது நடந்த சில வருடங்களுக்குப் பிறகுதான் சேலத்தில் 'பெரியவா கிரஹம்' ஸ்தாபிதமானது. காஞ்சி சங்கரமடத்தில் வருடாவருடம் மகா பெரியவா ஜெயந்தி (வைகாசி மாதம் அனுஷ நட்சத்திரம்) விமரிசையாக நடக்கும். அதேபோல் சேலம் பெரியவா கிரஹத்திலும் அதே தினம் பெரியவா ஜெயந்தி விழா நடக்கும். அன்றைய தினத்தில் சுமங்கலிகளுக்குப் புடவை தானம் அளிப்பது வழக்கம். இந்த புடவைகள் தஞ்சை மாவட்டம் குத்தாலத்தில் குறிப்பிட்ட ஒரு குடும்பத்தாரால் தயார் செய்யப்படுபவை. அந்த வருடம் , ராஜகோபாலின் மனைவி வழி உறவினரான ஒரு டாக்டர் (அமெரிக்காவில் இருக்கிறார்). சேலைகளை வாங்கிக் கொடுக்கும் செலவை தான் ஏற்றுக்கொள்வதாக சொல்லி இருந்தார். எனவே ராஜகோபால் தன் மனைவியுடன் குத்தாலம் சென்று புடவைகளை ஆர்டர் கொடுத்த பின், மெயின் ரோடு வந்தார்.

சேலம் திரும்புவதற்கு எந்த பக்கம் பயணம் செய்வது என்கிற குழப்பத்துடன் கணவனும் மனைவியும் பிற்பகல் நேரத்தில் பஸ் ஸ்டாப்பில் விழித்தனர். வயிற்றுப் பசி வேறு ஒரு பக்கம் அவர்களை அழுத்தியது. அப்போது ஒரு கார் வேகமாக வந்து அவர்கள் முன் பிரேக் போட்டு நின்றது.

டிரைவர் அவர்களிடம் கேட்கிறார்: "ஏன் சார் நீங்க கோவிந்தபுரம் போகணுமா?"
                          


'சட்' டென்று உறைத்தது ராஜகோபாலுக்கு. என்றோ ஒரு நாள் மகாபெரியவா இவரிடம் கேட்ட கேள்வியல்லவா இது? டிரைவரை மேலும் கீழும் பார்த்துவிட்டு "ஆமாம்" என்றார். ஒருவித பிரமிப்புடன்.

"வண்டியில் ஏறுங்கள். கொண்டுபோய் விடுகிறேன்" என்றார் டிரைவர்.

இருவரும் வண்டியில் ஏறினர். சிறிது நேரப் பயணத்துக்குப் பிறகு கார் கோவிந்தபுரம் சாலையில் போய் நின்றது. "இங்கேருந்து கொஞ்ச தூரம் நடந்தா கோயில் வரும்! தரிசனம் பண்ணிட்டுக் கிளம்புங்க" என்று சொன்ன அந்த டிரைவர் ராஜகோபால் கொடுத்த வாடகைப் பணத்தையும் வாங்கிக் கொள்ளாமல் புறப்பட்டுப் போய்விட்டார்.

கோவிந்தபுரத்தை அடைந்த தம்பதி கோயிலுக்குள் நுழையும் முன்னரே ஓர் அந்தணர் அவர்களைப் பார்த்து, "வாருங்கள் … வாருங்கள். உங்களுக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறோம். முதலில் சாப்பாடு. பிறகுதான் எல்லாம்!" என்று இருவரையும் கையைப் பிடித்து இழுக்காத குறையாக அவர் அழைத்துச் சென்ற இடம் போஜன சாலை! இரண்டே இலைகளைத் தவிர எஞ்சியிருந்த இலைகள் முன்னால் அடியவர்கள் சாப்பிடுவதற்காக அமர்ந்திருந்தனர்.

சாப்பிட்டு முடிந்த பின் கோயிலையும் அதிஷ்டானத்தையும் பார்த்துவிட்டுத்தான் தம்பதி சேலம் திரும்பினர்.

கார் சவாரி, சாப்பாடு, உபசரிப்பு எல்லாமே பெரியவா ஏற்பாடுதானோ? தன் பக்தர்களுக்கு எந்த குறையையும் அந்த மகான் வைத்ததே இல்லை!!

கலியுக தெய்வம், கற்பகவிருட்சம், காஞ்சி மாமுனி மகாபெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் தெய்வாம்சங்களை எத்தனையோ விதங்களில் ஆராதித்து எவ்வளவோ படைப்புகள் வந்துகொண்டு இருக்கின்றன. அவற்றையெல்லாம் பக்த மகாஜனங்கள் அள்ளி அள்ளிப் பருகி பரவசம் அடைந்து கொண்டே இருக்கிறார்கள்.மகா பெரியவரின் கண்வீச்சு ஒரே ஒரு தடவை தங்கள் மீது படிந்தாலே மோட்சம் கிட்டிவிட்டதாக ஆத்ம திருப்தி அடைந்தவர்கள் அநேகம் அநேகம். அப்படியிருக்க, அந்த பகவானே நேரடியாக வேடிக்கையும் வியப்புமாக, அன்பும் ஆசியுமாக அந்த பக்தர்களிடம் திருவிளையாடல் நடத்தினால் அதற்கு எவ்வளவு கொடுத்து வைத்திருக்கவேண்டும்! அந்த அற்புத திருவிளையாடல்களைப் படித்து ரசிப்பதில்தான் எத்தனை சுகமிருக்கிறது!




தமிழ் எழுத்தாளர்களில் மூத்த தலைமுறையைச் சேர்ந்தவரும், அபாரமான நல் அனுபவங்களைப் பெற்றவருமான ரா.வேங்கடசாமி, காஞ்சி மகா ஸ்வாமிகளுடன் தங்களுக்கு நேர்ந்த சிலிர்ப்பான அனுபவங்களை பக்தர்களிடம் கேட்டுத் தொகுத்து அதை 'காஞ்சி மகானின் கருணை நிழலில்…' என்ற தலைப்பில் சக்தி விகடனில் தொடராக எழுதியபோது, அது பெரும் வரவேற்பைப் பெற்றது.








Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

No comments: