Friday, April 17, 2015

"இங்கே யாராவது டமாரச் செவிட்டுக்காரர் இருக்கிறாரா,பார்.."

"இங்கே யாராவது டமாரச் செவிட்டுக்காரர் இருக்கிறாரா,பார்.."
                


'தர்ஷன்'. இதழிலிருந்து.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

சந்நியாசிகளுக்கு என்று சில விசேஷ தர்மானுஷ்டானங்கள்
இருக்கின்றன. அதிலும் பீடாதிபதியாக வீற்றிருக்கும்
துறவிக்குக் கடுமையான கட்டுப்பாடுகள்.

கால் நூற்றாண்டுக்கு முன்னால் காஞ்சிபுரம் ஸ்ரீமடத்தில்
ஒரு காலை வேளை.

அன்றைக்கு அடியார் கூட்டம் அவ்வளவாக இல்லை.

மகாப் பெரியவாள் தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தபோது
அலங்காரம் செய்யப்படாத அம்பாள் போல ஒரு சுமங்கலி
வந்தார். நேரே பெரியவாளிடம் சென்று நமஸ்கரித்தார்.
எழுந்தவர் கண்களில் குபுகுபு வென்று நீர் மல்கியது.

சொந்த விவகாரம் - சிக்கல் - பிரச்னை பெரியவாளிடம்
தனிமையில் பேசி வழிகாட்டுதலை எதிர்நோக்கி நிற்கிறார்.

கண்கள் கெஞ்சுகின்றன - ;என்மீது தங்கள் அருட்பார்வை
படட்டுமே!' என்று உதடுகள் துடிக்கின்றன.
'நான் சொல்வதைக் கேட்க மாட்டீர்களா?' என்று.

அருளரசர் அந்த அம்மையார் சொல்வதைக் கேட்கவே
விரும்பினார்.

'ஒரு பெண்ணிடம் தனியாகப் பேசக்கூடாது'
என்று விதி தடுக்கிறதே?.






அம்மையார் இடத்தை விட்டு நகராமல் கண்ணீர் பெருக்கிக்
கொண்டிருந்தார். அவர் அங்கிருந்து நகர்ந்தால்தான்
காத்துக்கொண்டிருக்கும் மற்ற அடியார்கள் பெரியவா
அருகில் செல்ல முடியும்.

இந்த இக்கட்டான சூழ்நிலை எத்தனை நேரம்தான் நீடிப்பது?

விரல் சொடுக்கில், ஓர் அணுக்கத் தொண்டரை
பெரியவா அழைத்தார்கள்.

"இங்கே யாராவது டமாரச் செவிட்டுக்காரர் இருக்கிறாரா,பார்.."

தொண்டர் அதிருஷ்டசாலி! சில விநாடிகளிலேயே
ஒரு செவிடரைக் கண்டுபிடித்து விட்டார்.

"ஒரு காரியம் செய்.அந்த அம்மாளுடன் அவன் வரும்போது
கையைத் தட்டி அவர் பெயரைச் சொல்லிக் கூப்பிடு.அவர்
திரும்பிப் பார்க்கிறாரா? இல்லையா?-என்பதிலிருந்தே அவர் 
நிஜமான செவிடர்தானா என்பதைப் புரிந்து கொள்ளலாம்.."

(பெரியவாள் சொல்லிக் கொடுத்த இந்தத் தந்திரத்தில்
ஒரு புதைபொருளும் இருக்கிறது)

தொண்டர் ஏதோ ஓர் அலுப்பில், காது கேட்கக்கூடிய
ஒருவரையே, "பெரியவா முன்னாடி நீ செவிடன் மாதிரி
நில்லு.....போதும்" என்று சொல்லி அழைத்துக்கொண்டு
வந்துவிட்டால், குடும்ப ரகசியங்களைப் பேச விரும்பும்
அம்மணிக்கு சங்கடமாகப் போய் விடக்கூடும். எனவே,
செவிட்டுத்தனத்தை டெஸ்ட் செய்வதாக ஒரு யோஜனை.

டமாரச் செவிடர் பக்கத்தில் நிற்க தன் மனத்திலிருந்த
ஆதங்களையெல்லாம் கொட்டித் தீர்த்தார் அம்மையார்.




பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த கருணாமூர்த்தி
பிரசாதம் கொடுத்து, பெருமைப்படுத்தி அனுப்பிற்று.
அம்மையாரின் கண்களில் நீர்....ஆமாம்.ஆனந்தக் கண்ணீர்!
பிறை சூடி அல்லவா,அவருக்குப் பதில் கூறியிருக்கிறது.

அம்மையார் பிரசாதம் பெற்றுக் கொண்டு புறப்பட்டதும்
செவிடரிடம் ஒரு ஜாடை; 'நீங்களும் போகலாம்'

துறவு நெறி காக்கப்பட்ட அதே சமயத்தில்,
ஒரு சுமங்கலிக்கும் அருள்பாலித்தாகி விட்டது.













Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

"பெரியவா பண்ணின வேடிக்கையும்ஆச்சர்யமும்"














"பெரியவா பண்ணின வேடிக்கையும்ஆச்சர்யமும்"

சொன்னவர்-ஸ்ரீ மடம் பாலு.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
மறு தட்டச்சு-வரகூரான் நாராயணன்

அகண்டகாவேரிப் பகுதியில் பெரியவா
சஞ்சரித்துக் கொண்டிருந்தார்கள்.

ஒரு நாள், முகாம் செய்திருந்த இடத்துக்கு
அருகிலிருந்த தென்னந்தோப்புக்குப் போனார்கள்.
தோப்பு மரங்களில் நூற்றுக்கணக்கான
காகங்கள் இருந்தன.

உடன் வந்திருந்த ஒரு பையனைப் பார்த்து,
"இந்தக் காக்கைகளையெல்லாம்
கத்தச் சொல்லட்டுமா?" என்றார்கள் பெரியவா.

பையனுக்கு என்ன பதில் சொல்வதென்று
புரியவில்லை.

"இதோ,பார்..."என்று சொல்லிவிட்டு,காகத்தைப்
போலவே, கா....கா.....என்று கத்தினார்கள்,பெரியவா.

எல்லாக் காகங்களும் கோரஸாக எதிரொலி கொடுத்தன.

பெரியவா சொன்னார்கள்; 'காகங்கள் கத்துகின்றன.
நிறைய விருந்தாளிகள் வருவார்கள் என்று சூசகம்.
நிறைய சாப்பாடு தயார் பண்ணச் சொல்லு...'

'நிறைய சமைத்தால், எல்லாம் வேஸ்டாகிப் போகும்.
சாப்பிடுவதற்கு மனிதர்கள் எங்கே?'
என்று சிஷ்யர்கள் சங்கடப்பட்டார்கள்.


பக்கத்து, ஏதோ ஊரில், காங்கிரஸ் கட்சியின் கூட்டமாம்.
அந்தக் கூட்டத்துக்கு வந்தவர்கள், பெரியவா அருகில்
இருப்பது தெரிந்ததும் தரிசனத்துக்கு வந்து விட்டார்கள்.

எல்லாரையும் சாப்பிட்டு விட்டுப் போகும்படி
பெரியவா பணித்தார்கள்.

கடைசியில், ஒரு பிடி சோறு மிஞ்சவில்லை!



Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

"நரிக்குறவனுக்கு கனாவில் ஆசி!" -- மாஹாபெரியவா

       "நரிக்குறவனுக்கு கனாவில் ஆசி!"














சொன்னவர்-ராதா ராமமூர்த்தி.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்




விழுப்புரம் பக்கம் ஏதோ ஒரு கிராமம். அங்கு
நரிக்குறவர் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவன் குடும்பத்தில்
மிகவும் துன்பப்பட்டு மனம் வெறுத்து தற்கொலை செய்து
கொள்ள நினைத்து அந்த ஊர் ரயில்வே ஸ்டேஷனில் வந்து
ஒரு ஒரமாகப் படுத்து விட்டான். அடுத்து வரும் ரயிலில்
தண்டவாளத்தில் விழவேண்டும் என்பது அவன் எண்ணம்.

படுத்தவன் தூங்கிவிட்டான். அப்போது அவனுக்கு ஒரு கனவு
போல் ஒரு தோற்றம். யாரோ ஒரு சாமியார் தோன்றி
"நீ சாக வேண்டாம்.என்னை வந்து பாரு; நான் உனக்கு
அமைதியைக் கொடுப்பேன்"-என்று சொல்ல திடுக்கென்று
விழித்துக் கொண்டான். அவன் உடலெல்லாம் ஒரு
புத்துணர்ச்சி.

எந்த சாமியார் கனவில் வந்தாரோ அவரைத் தேட வேண்டும்
என்று தோன்றிவிட்டது.உடனே தன் கையில் பல நாளாய்
போட்டிருந்த ஒரு தங்க மோதிரத்தை விற்று காசாக்கிக் 
கொண்டு ஒவ்வொரு ஊராக அலைந்து திரிந்து எத்தனையோ 
சாமியார்களைப் பார்த்தும், கனவில் வந்தவர் இல்லை
என்று மீண்டும்,மீண்டும் அலைந்து வாடினான்.

அந்த சமயம் மஹாபெரியவா வேலூர் பக்கத்திலிருந்த
'ஏகாம்பர குப்பம்' என்ற ஊரில் முகாம். அலைந்து திரிந்த
அந்த நரிக்குறவன், ஒரு மாலைப் பொழுதில் பந்தலில்
தற்செயலாக ஸ்ரீ பெரியவாளைப் பார்த்துவிட்டான்.

"ஓ சாமி! இந்த சாமி தான்! என்னை வரச்சொன்னியே!
வெளிலே வா!" என்று கத்த ஆரம்பித்தான்.

ஸ்ரீ பெரியவா ராஜம்மாள் அம்மாவைக் கூப்பிட்டு,
"அந்த ஆளை விசாரித்து ஆகாரம் ஏதாவது கொடு.
நாளை காலை நான் அவனைப் பார்க்கிறேன் என்றார்.

ராஜம்மாள் அந்த நரிக்குறவனிடம் சென்று,
"நீ யாரப்பா? உனக்கு சாப்பாடு தரேன். உன்னை
காலையிலே சாமி பார்த்து பேசுவாங்க!" என்று
விவரம் கேட்க,





              
"ஆமா! தாயி என் இரண்டு பெண்டாட்டி கூடவும்
சண்டை.மூணாவது ஒரு பொண்ணைக் கட்டிக்கிட்டேன்.
அவ எனக்கு விஷம் கலந்து சாப்பாடு வைத்ததைப்
பார்த்துவிட்டேன்.மனது ஒடிஞ்சு போய் செத்துப்போக
இருந்தேன். அப்போ இந்த சாமியார் கனாவிலே வந்து
என்னை வந்து பாருன்னு சொன்னாரு" என்றான்.

மறுநாள் காலையில் பெரியவா வெளியில் வந்தார்.
அவன், "சாமி! உன்னைப் பாத்தா எங்க தாய் மாதிரி
இருக்கு. நான் குப்பையை கூட்டிக்கிட்டு உங்கூடவே
இருக்கேன்" என்று கதறி விட்டானாம்.

பெரியவா " நீ ஒழுங்கா ஊருக்குப் போ. இனிமே
உன் வீட்டிலே உன்னை மரியாதையாக நடத்துவாங்க.
உனக்கு என்ன கஷ்டம் வந்தாலும் என்னை நெனச்சுக்கோ.
எல்லாம் சரியாப்போகும்" என்று சொல்லி அவனுக்கு
பழங்கள் கொடுத்தார்கள்.அங்கு இருந்தவர்களிடம்
பணம் வசூல் பண்ணி அவனிடம் கொடுத்து
அனுப்பி வைத்தார்களாம்.

(இந்த சம்பவம் புதுக்கோட்டை ராஜம்மாள் எனக்கு
சொன்னது.இந்தச் சம்பவம் நடந்தபோது
திருச்சி சுபலக்ஷ்மி, திருச்சி தர்மாம்பாள் மற்றும் சிலர்
கூட இருந்திருக்கிறார்கள்-'ராதா ராமமூர்த்தி')







Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

"கபட சந்யாஸி யார் " - ஸ்ரீ மகாப் பெரியவாளிடம் பொழுது போக்குகளும் நிறைய உண்டு.









கபட சந்யாஸி"
"பெரியவா கேட்ட காளிதாஸன் கதை"

சொன்னவர்-ராமகிருஷ்ண தீக்ஷிதர்
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஸ்ரீ மகாப் பெரியவாளிடம் பொழுது போக்குகளும்
நிறைய உண்டு.

ஒரு தடவை சென்னை திருமங்கலத்திலிருந்து
அம்பத்தூருக்கு சென்று கொண்டிருந்தோம்.
வழக்கப்படி, ஸ்ரீ பெரியவாள், மூன்று சக்கர
சைக்கிளைத் தொட்டுக்கொண்டே நடந்து வந்து
கொண்டிருந்தார். நாங்கள் ஏழெட்டுப் பேர்கள்,
உடன் சென்று கொண்டிருந்தோம்.

"நீலகண்டா, நீ கபட ஸந்யாஸியைப்
பார்த்திருக்கியா?"

"இல்லே"

"நாகராஜா....நீ"

"இல்லே.."

ஸ்ரீ பெரியவாள் என்னைப் பார்த்து, " நீ கபட சந்யாஸியைப்
பற்றிக் கேட்டிருக்கியா?" என்று கேட்டார்.

"கேட்டிருக்கேன்...ராவணன்,அர்ஜுனன்..." என்றேன்.

"அவ்வளவு தானா?"

நான் தயங்கியபடியே, "காளிதாஸன்..." என்றேன்.

"காளிதாஸனா?..அவன் எப்போ கபட சந்யாஸி ஆனான்?.."

"பெரியவாளுக்குத் தெரியும்..பெரியவா சொன்னா,
நாங்க கேட்டுண்டே..நடப்போம்.

"இல்லை..நீயே சொல்லு.."

போஜராஜன் சபையில் ஆஸ்தான வித்வானாக இருந்த
காளிதாஸன், ஒரு நாள், சற்று மரியாதைக்குறைவான
சொல்லைக் கேட்டதும், சபையிலிருந்து வெளியேறி
கால் போன போக்கில் நடக்கத் தொடங்கினான்.

போஜனுக்கு, காளிதாஸன் இல்லாமல் பொழுது
போகவில்லை. அவனை எப்படிக் கண்டு பிடிப்பது?

ஒரு செய்யுளின்,முதல் இரண்டு அடிகளை எழுதிப்
பூர்த்தி செய்பவருக்குப் பரிசு கிடைக்கும் என்ற
முரசறைவித்தான்.

ஒரு தாசியின் வீட்டிலிருந்த காளிதாஸன், பரிசு பற்றி
எதுவும் அறிந்திராவிட்டாலும், செய்யுளைப் பூர்த்தி
செய்தான்.போஜனிடம் அந்த வரிகளைக் காட்டினாள் தாசி.
பின்னர்,அவளிடமிருந்து விபரங்கள்பெற்று,மாறுவேஷத்தில்
போஜன் புறப்பட்டுச் சென்றான். ஒரு மரத்தடியில் ஒரு
சந்யாஸியைப் பார்த்தபோது, 'இவர் காளிதாஸனோ'
என்ற சந்தேகம் வந்தது.

பரஸ்பரம் பேச்சு ஆரம்பமாயிற்று.

துறவி, மாறுவேஷத்திலிருந்த போஜனைப் பார்த்து
"நீங்கள் யார்?" என்று கேட்டார்.

"நான்,போஜனிடம் அடைப்பக்காரனாக இருந்தேன்.
அவர் இறந்ததும், எனக்கு இருக்கப் பிடிக்கவில்லை.
வெளியே வந்து விட்டேன்..."

"ஆ!.... என் போஜன் இறந்துவிட்டானா?"
என்று வருந்தி சரம சுலோகம் பாடியதும்,
வேஷக்காரன் கீழே விழுந்து உயிர் விட்டான்.

அவன்தான் போஜன் என்பது சந்தேகமில்லாமல்
தெரிந்துவிடவே, அம்பாளைக் குறித்து,மனமுருகி
சியாமளா தண்டகம் பாடி, "இதோ,போஜன்
எழுந்துவிட்டான்!" என்ற பொருள்பட
இன்னொரு சுலோகம் பாடினான்.

உண்மையாகவே,போஜன் உயிர் பெற்று எழுந்தான்.

இந்தக் கதையை விளக்கமாகச் சொன்னேன்.
கடைசியில் "இந்த சந்தர்ப்பத்தில் தான் காளிதாஸன்,
சந்யாஸியாகக் கபட நாடகம் ஆடினான்..." என்றேன்.

பெரியவாள்,"ரொம்ப சுவாரஸ்யமா இருந்தது.
நடந்து வந்த களைப்பே தெரியல்லே!" என்றார்.

அம்பத்தூர் வந்துவிட்டது.






Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

Thursday, April 16, 2015

வருஷம் போனா என்ன? வயசும் ஆனா என்ன? மகாபெரியவரின் கருணைக்கும், ஞாபகசக்திக்கும் ஈடு இணையே இல்லை


வருஷம் போனா என்ன? வயசும் ஆனா என்ன?



"வயது கூடக் கூட ஞாபகசக்தி குறையுதே' என்பவர்கள் பலர். ஆனால், காஞ்சி மகா பெரியவரின் ஞாபகசக்திக்கு அளவே இல்லை.
1928... மேட்டூர் அருகேயுள்ள நெருஞ்சிப்பேட்டை கிராமத்தில் மகாபெரியவர் முகாமிட்டு இருந்தார். பக்தர்கள் அவர் முன்னால் அமர்ந்திருந்தனர். அப்போது எங்கிருந்தோ "கோவிந்த கோவிந்த...' என்ற கோஷம் காற்றில் மிதந்து வந்தது. ""இந்த சப்தம் எங்கிருந்து வருகிறது?'' எனக்கேட்டார் பெரியவர்.

 

""பக்கத்தில் பாலமலைன்னு ஒரு இடம்... அதன் உச்சியில் சித்தேஸ்வரர் கோயில் இருக்கு! அங்கு ஏறும் பக்தர்கள் தான் இப்படி கோஷமிடுவார்கள்,'' என்றார் ஒருவர்.

""சிவன் கோயிலில் கோவிந்த கோஷமா.. ஆச்சரியமா இருக்கே! நானும் அந்தக் கோயிலுக்கு போகணும்!'' என்றார் பெரியவர்.

""அந்த மலையில் ஏற வேண்டுமானால் 12 மைல் (18 கி.மீ.,) நடக்கணும். வழித்துணைக்கு ஆள் வேணும்,'' என்ற ஒரு பக்தர், அங்கு வழிகாட்டியாக இருந்த பெருமாள் கவுண்டர் என்பவரை அழைத்து வந்தார்.

கவுண்டருக்கு அப்போது 25 வயதிருக்கும்.கவுண்டர் வழிகாட்ட பெரியவர் ஆர்வமாக மலையேறி சித்தேஸ்வரரை தரிசித்தார்.

""நீங்க வேணுமானா பாருங்க! இந்த சித்தேஸ்வரருக்கு ஒருத்தர் தன் சொந்தச் செலவில் கோயில் கட்டுவார். இது நடக்கும்,'' என்று தன்னுடன் வந்த பக்தர்களிடம் சொன்னார் பெரியவர்.

ஆனால், ஆண்டுகள் வேகமாக ஓடி விட்டது. 62 ஆண்டுகள் சென்ற பின் 1990ல் சேட் ஒருவர் சித்தேஸ்வரரைத் தரிசிக்க வந்தார். அவரே கோயில் கட்டி கும்பாபிஷேகமும் செய்து வைத்தார்.

மேட்டூர் அணைக்கு வந்த பெரியவர், ""அடியிலே பொக்கிஷம்' என்று சொன்னார்.

அங்கிருந்தவர்களுக்கு அதன் அர்த்தம் புரியவில்லை. அதற்கான விளக்கமும் யாரும் கேட்கவில்லை. 70 வருடங்கள் கழித்து, அணையில் சில பணிகளுக்காக பள்ளம் தோண்டப்பட்டது. உள்ளிருந்து அனுமன், ராமன், சீதா சிலைகள் கிடைத்தன. அப்போது தான் பெரியவர் சொன்னதன் அர்த்தம் ஊர் மக்களுக்கு புரிந்தது. சிலைகளை ஒரு மினிலாரியில் ஏற்றி காஞ்சிபுரத்துக்கு கொண்டு வந்தனர்.

அவற்றை பார்வையிட்ட பெரியவரிடம், ""இந்தச் சிலைகளைக் கொண்டு நாங்கள் கோயில் கட்ட தங்கள் ஆசிர்வாதம் வேண்டும்,'' என்றனர். "விரைவில் நடக்கும்' என ஆசிர்வதித்த பெரியவர், ""அது சரி...உங்க ஊருக்கு நான் 1928ல் வந்த போது, எனக்கு வழிகாட்டினாரே பெருமாள் கவுண்டர்...அவர் சவுகரியமா இருக்காரா!'' என்று கேட்டார்.

வந்தவர்கள் சிலிர்த்துப் போனார்கள். நேற்று பார்த்த ஒருவரையே மறந்து விடும் இந்தக் காலத்தில், 70 வருடம் கழிந்தும் தன்னோடு வந்த வழிகாட்டியை பற்றி விசாரித்தது அவர்களுக்கு ஆச்சரியமளித்தது.
""அவருக்கு 95 வயசாச்சு! இன்னும் நல்லாஇருக்கார்,'' என்று அவர்கள் சொல்லவே, ஒரு தாம்பாளத்தில் புதுவஸ்திரங்கள் வைத்து, இதை அவரிடம் கொடுத்துடுங்கோ! நான் ரொம்ப விசாரிச்சேன்னு சொல்லுங்கோ'' என்றார் பெரியவர்.

மகாபெரியவரின் கருணைக்கும், ஞாபகசக்திக்கும் ஈடு இணையே இல்லை






நன்றி தினமலர் ஏப்ரல் 14,2015,

Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

Wednesday, April 15, 2015

குத்து விளக்கு பூஜை -- சைதாபேட்டை அருள்மிகு திருபுரசுன்தரி உடனயா ஸ்ரீ சௌந்தரீஸ்வரர் திருகோவிலில்


குத்து விளக்கு பூஜை


சென்னை - சைதாபேட்டையில்  அமைதியாக ஆன்மிக  ஒலியை பரபிவரும் அருள்மிகு திருபுரசுன்தரி உடனயா ஸ்ரீ சௌந்தரீஸ்வரர்  திருகோவிலில்  - குத்து விளக்கு பூஜை - தமிழ் வருட பிறப்பனா நேற்று 14-04-2015  சிறப்பாகவும்  அமைதியாகவும் இறை அருளாலும்  காஞ்சி  பரமச்சார்ய மற்றும் புது பெரியவா , பாலா பெரியவா  அருளொடும்  சிறப்பாக நடந்தேறியது 






















                                        



Monday, April 13, 2015

"உலகில் உள்ள எல்லாப் பிராணிகளும், எனக்குக் குருக்கள்- என்ற பொருளில், நான் ஜகத்குரு"


"உலகில் உள்ள எல்லாப் பிராணிகளும், 

எனக்குக் குருக்கள்- என்ற பொருளில்,

 நான்  ஜகத்குரு"



"நீங்கள் தான் ஜகத்குரு" 

(மூக்கறுபட்ட வடநாட்டுப் பண்டிதர்கள்)

சொன்னவர்; ப்ரும்மஸ்ரீ ராமகிருஷ்ண தீக்ஷிதர்,காஞ்சிபுரம்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.


1933ம் வருஷம் காசி யாத்திரையின் போது நடந்த நிகழ்ச்சி.
பனாரஸ் ஹிந்து யூனிவர்ஸிடிக்கு, ஒரு மாலைப்போதில்
ஸ்ரீ பெரியவாள் 'விசிட்'.
பெரியவாள் போனபோது, மண்டக்குளத்தூர் பிரம்மஸ்ரீ சின்னசாமி சாஸ்திரிகள், பாடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

அப்பைய தீட்சிதர் எழுதிய 'விதிரஸாயனம்' என்ற மீமாம்ஸாசாஸ்திரம். ஸ்ரீ தீட்சிதரின் நடையழகில் ஸ்ரீ பெரியவாள்சொக்கிப் போனார்.உடன் வந்திருந்த 'ஆத்ம வித்யா பூஷணம்'இஞ்சிக்கொல்லை பிரும்மஸ்ரீ ஜகதீஸ்வர சாஸ்திரிகளிடம்சொல்லிச் சொல்லி சந்தோஷப்பட்டார். 
(பின்னர்தான்,அப்பைய தீட்சிதரின் எல்லாக் கிரந்தங்களையும் ஸ்ரீ பெரியவாள் படித்தார்.)
காசி மன்னர் அரண்மனையில், பெரியவாளுக்கு வரவேற்பு. 
நகரத்தின் முக்கியப்பிரமுகர்கள்வந்திருந்தார்கள்.ஏராளமான
பண்டிதர்கள்.

அவர்கள் மனத்தில் ஓர் இளக்காரம்; இனம் புரியாத அசூயை.
'இவர் என்ன ஜகத்குரு என்று பட்டம் போட்டுக்கொள்வது?...
ரெண்டு கேள்வி கேட்டு, மடக்கி விடலாம் !...'

பெரியவாள் வந்து அமர்ந்ததும், ஒரு பண்டிதர், ஆவேசமாகக்
கேட்டார், "அது யார், ஜகத்குரு?"

"நான் தான் !..." என்றார், பெரியவாள்.

"ஓஹோ?..நீங்க ஜகத்துக்கே குருவோ?"

"இல்லை. ஜகதாம் குரு: ந (நான் ஜகத்துக்கெல்லாம் குரு-
என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை)
ஜகதிபத்யமானா: ஸர்வே மம குரவ:"
(உலகில் உள்ள எல்லாப் பிராணிகளும், எனக்குக் குருக்கள்-
என்ற பொருளில், நான் ஜகத்குரு)

வடநாட்டுப் பண்டிதர்கள் திகைத்துப் போனார்கள்.

இவ்வளவு அருமையான, எளிமையான விளக்கத்தை
அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

பெரியவாள், அந்தப் பெரிய அறையின் சுவர்களின்
மேற்பகுதியில், புறாக்களுக்காக அமைக்கப்பட்டிரூந்த
சிறு சிறு பொந்துகளில் கட்டப்பட்டிருந்த குருவிக்
கூடுகளைப் பார்த்தார்.

பண்டதர்களிடம் காட்டி, "கிமிதம்"? (இது என்ன?)
என்று கேட்டார்.

"நீட:" (கூடு)

"கேன நிர்மிதம்?" (யாரால் கட்டப்பட்டது?)

"சடகே.." (குருவிகள்)

"கை-கால் இல்லாத குருவிகள் கூடு கட்டுகின்றன. நமக்குக் கை-கால் உண்டு. என்றாலும்,பறவைகள் மாதிரி கூடு கட்ட முடியவில்லை. குருவிகளிடம்
ஒரு கிரியா சக்தி இருக்கிறது. அது,என்னிடம் இல்லை.

அதனால், குருவி, என்னுடைய குரு..." என்று சொல்லி,
கன்னத்தில் போட்டுக் கொண்டு கைகூப்பி வணங்கினார்.

இதை நேரில் கண்ட வடநாட்டுப் பண்டிதர்கள்
பிரமித்துப் போய்விட்டார்கள். "நீங்கள் தான் ஜகத்குரு"
என்று மனமாரப் போற்றிப் பணிந்தார்கள்.

பெரியவாள் காசியில் இருந்த கடைசி நாள் வரை,
அவர்கள் எல்லாரும் தினமும் முகாமுக்கு வந்து
நமஸ்காரம் செய்து கொண்டிருந்தார்கள்












Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.