Thursday, April 16, 2015

வருஷம் போனா என்ன? வயசும் ஆனா என்ன? மகாபெரியவரின் கருணைக்கும், ஞாபகசக்திக்கும் ஈடு இணையே இல்லை


வருஷம் போனா என்ன? வயசும் ஆனா என்ன?



"வயது கூடக் கூட ஞாபகசக்தி குறையுதே' என்பவர்கள் பலர். ஆனால், காஞ்சி மகா பெரியவரின் ஞாபகசக்திக்கு அளவே இல்லை.
1928... மேட்டூர் அருகேயுள்ள நெருஞ்சிப்பேட்டை கிராமத்தில் மகாபெரியவர் முகாமிட்டு இருந்தார். பக்தர்கள் அவர் முன்னால் அமர்ந்திருந்தனர். அப்போது எங்கிருந்தோ "கோவிந்த கோவிந்த...' என்ற கோஷம் காற்றில் மிதந்து வந்தது. ""இந்த சப்தம் எங்கிருந்து வருகிறது?'' எனக்கேட்டார் பெரியவர்.

 

""பக்கத்தில் பாலமலைன்னு ஒரு இடம்... அதன் உச்சியில் சித்தேஸ்வரர் கோயில் இருக்கு! அங்கு ஏறும் பக்தர்கள் தான் இப்படி கோஷமிடுவார்கள்,'' என்றார் ஒருவர்.

""சிவன் கோயிலில் கோவிந்த கோஷமா.. ஆச்சரியமா இருக்கே! நானும் அந்தக் கோயிலுக்கு போகணும்!'' என்றார் பெரியவர்.

""அந்த மலையில் ஏற வேண்டுமானால் 12 மைல் (18 கி.மீ.,) நடக்கணும். வழித்துணைக்கு ஆள் வேணும்,'' என்ற ஒரு பக்தர், அங்கு வழிகாட்டியாக இருந்த பெருமாள் கவுண்டர் என்பவரை அழைத்து வந்தார்.

கவுண்டருக்கு அப்போது 25 வயதிருக்கும்.கவுண்டர் வழிகாட்ட பெரியவர் ஆர்வமாக மலையேறி சித்தேஸ்வரரை தரிசித்தார்.

""நீங்க வேணுமானா பாருங்க! இந்த சித்தேஸ்வரருக்கு ஒருத்தர் தன் சொந்தச் செலவில் கோயில் கட்டுவார். இது நடக்கும்,'' என்று தன்னுடன் வந்த பக்தர்களிடம் சொன்னார் பெரியவர்.

ஆனால், ஆண்டுகள் வேகமாக ஓடி விட்டது. 62 ஆண்டுகள் சென்ற பின் 1990ல் சேட் ஒருவர் சித்தேஸ்வரரைத் தரிசிக்க வந்தார். அவரே கோயில் கட்டி கும்பாபிஷேகமும் செய்து வைத்தார்.

மேட்டூர் அணைக்கு வந்த பெரியவர், ""அடியிலே பொக்கிஷம்' என்று சொன்னார்.

அங்கிருந்தவர்களுக்கு அதன் அர்த்தம் புரியவில்லை. அதற்கான விளக்கமும் யாரும் கேட்கவில்லை. 70 வருடங்கள் கழித்து, அணையில் சில பணிகளுக்காக பள்ளம் தோண்டப்பட்டது. உள்ளிருந்து அனுமன், ராமன், சீதா சிலைகள் கிடைத்தன. அப்போது தான் பெரியவர் சொன்னதன் அர்த்தம் ஊர் மக்களுக்கு புரிந்தது. சிலைகளை ஒரு மினிலாரியில் ஏற்றி காஞ்சிபுரத்துக்கு கொண்டு வந்தனர்.

அவற்றை பார்வையிட்ட பெரியவரிடம், ""இந்தச் சிலைகளைக் கொண்டு நாங்கள் கோயில் கட்ட தங்கள் ஆசிர்வாதம் வேண்டும்,'' என்றனர். "விரைவில் நடக்கும்' என ஆசிர்வதித்த பெரியவர், ""அது சரி...உங்க ஊருக்கு நான் 1928ல் வந்த போது, எனக்கு வழிகாட்டினாரே பெருமாள் கவுண்டர்...அவர் சவுகரியமா இருக்காரா!'' என்று கேட்டார்.

வந்தவர்கள் சிலிர்த்துப் போனார்கள். நேற்று பார்த்த ஒருவரையே மறந்து விடும் இந்தக் காலத்தில், 70 வருடம் கழிந்தும் தன்னோடு வந்த வழிகாட்டியை பற்றி விசாரித்தது அவர்களுக்கு ஆச்சரியமளித்தது.
""அவருக்கு 95 வயசாச்சு! இன்னும் நல்லாஇருக்கார்,'' என்று அவர்கள் சொல்லவே, ஒரு தாம்பாளத்தில் புதுவஸ்திரங்கள் வைத்து, இதை அவரிடம் கொடுத்துடுங்கோ! நான் ரொம்ப விசாரிச்சேன்னு சொல்லுங்கோ'' என்றார் பெரியவர்.

மகாபெரியவரின் கருணைக்கும், ஞாபகசக்திக்கும் ஈடு இணையே இல்லை






நன்றி தினமலர் ஏப்ரல் 14,2015,

Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

No comments: