Friday, April 17, 2015

"நரிக்குறவனுக்கு கனாவில் ஆசி!" -- மாஹாபெரியவா

       "நரிக்குறவனுக்கு கனாவில் ஆசி!"














சொன்னவர்-ராதா ராமமூர்த்தி.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்




விழுப்புரம் பக்கம் ஏதோ ஒரு கிராமம். அங்கு
நரிக்குறவர் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவன் குடும்பத்தில்
மிகவும் துன்பப்பட்டு மனம் வெறுத்து தற்கொலை செய்து
கொள்ள நினைத்து அந்த ஊர் ரயில்வே ஸ்டேஷனில் வந்து
ஒரு ஒரமாகப் படுத்து விட்டான். அடுத்து வரும் ரயிலில்
தண்டவாளத்தில் விழவேண்டும் என்பது அவன் எண்ணம்.

படுத்தவன் தூங்கிவிட்டான். அப்போது அவனுக்கு ஒரு கனவு
போல் ஒரு தோற்றம். யாரோ ஒரு சாமியார் தோன்றி
"நீ சாக வேண்டாம்.என்னை வந்து பாரு; நான் உனக்கு
அமைதியைக் கொடுப்பேன்"-என்று சொல்ல திடுக்கென்று
விழித்துக் கொண்டான். அவன் உடலெல்லாம் ஒரு
புத்துணர்ச்சி.

எந்த சாமியார் கனவில் வந்தாரோ அவரைத் தேட வேண்டும்
என்று தோன்றிவிட்டது.உடனே தன் கையில் பல நாளாய்
போட்டிருந்த ஒரு தங்க மோதிரத்தை விற்று காசாக்கிக் 
கொண்டு ஒவ்வொரு ஊராக அலைந்து திரிந்து எத்தனையோ 
சாமியார்களைப் பார்த்தும், கனவில் வந்தவர் இல்லை
என்று மீண்டும்,மீண்டும் அலைந்து வாடினான்.

அந்த சமயம் மஹாபெரியவா வேலூர் பக்கத்திலிருந்த
'ஏகாம்பர குப்பம்' என்ற ஊரில் முகாம். அலைந்து திரிந்த
அந்த நரிக்குறவன், ஒரு மாலைப் பொழுதில் பந்தலில்
தற்செயலாக ஸ்ரீ பெரியவாளைப் பார்த்துவிட்டான்.

"ஓ சாமி! இந்த சாமி தான்! என்னை வரச்சொன்னியே!
வெளிலே வா!" என்று கத்த ஆரம்பித்தான்.

ஸ்ரீ பெரியவா ராஜம்மாள் அம்மாவைக் கூப்பிட்டு,
"அந்த ஆளை விசாரித்து ஆகாரம் ஏதாவது கொடு.
நாளை காலை நான் அவனைப் பார்க்கிறேன் என்றார்.

ராஜம்மாள் அந்த நரிக்குறவனிடம் சென்று,
"நீ யாரப்பா? உனக்கு சாப்பாடு தரேன். உன்னை
காலையிலே சாமி பார்த்து பேசுவாங்க!" என்று
விவரம் கேட்க,





              
"ஆமா! தாயி என் இரண்டு பெண்டாட்டி கூடவும்
சண்டை.மூணாவது ஒரு பொண்ணைக் கட்டிக்கிட்டேன்.
அவ எனக்கு விஷம் கலந்து சாப்பாடு வைத்ததைப்
பார்த்துவிட்டேன்.மனது ஒடிஞ்சு போய் செத்துப்போக
இருந்தேன். அப்போ இந்த சாமியார் கனாவிலே வந்து
என்னை வந்து பாருன்னு சொன்னாரு" என்றான்.

மறுநாள் காலையில் பெரியவா வெளியில் வந்தார்.
அவன், "சாமி! உன்னைப் பாத்தா எங்க தாய் மாதிரி
இருக்கு. நான் குப்பையை கூட்டிக்கிட்டு உங்கூடவே
இருக்கேன்" என்று கதறி விட்டானாம்.

பெரியவா " நீ ஒழுங்கா ஊருக்குப் போ. இனிமே
உன் வீட்டிலே உன்னை மரியாதையாக நடத்துவாங்க.
உனக்கு என்ன கஷ்டம் வந்தாலும் என்னை நெனச்சுக்கோ.
எல்லாம் சரியாப்போகும்" என்று சொல்லி அவனுக்கு
பழங்கள் கொடுத்தார்கள்.அங்கு இருந்தவர்களிடம்
பணம் வசூல் பண்ணி அவனிடம் கொடுத்து
அனுப்பி வைத்தார்களாம்.

(இந்த சம்பவம் புதுக்கோட்டை ராஜம்மாள் எனக்கு
சொன்னது.இந்தச் சம்பவம் நடந்தபோது
திருச்சி சுபலக்ஷ்மி, திருச்சி தர்மாம்பாள் மற்றும் சிலர்
கூட இருந்திருக்கிறார்கள்-'ராதா ராமமூர்த்தி')







Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

No comments: