Friday, April 17, 2015

"யார் ஸித்தர்?" மஹா பெரியவா

           
         "யார் ஸித்தர்?"









தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்

பிற்பகல் இரண்டு மணி,கடுமையான வெய்யில் நேரம்.
வங்காளத்தைச் சேர்ந்த ஒரு பெரியவர் வந்தார்.

விழுப்புரம் அருகில் வெங்கடாத்ரி அகரம் என்ற
கிராமத்தில்,1948 சாதுர்மாஸ்யம். பாஷ்ய பாடம்
நடந்ததால்,பெரியவாளை உடனே தரிசிக்க 
முடியவில்லை.

(ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் ஐம்பத்தெட்டாவது
பீடாதிபதியான ஸ்ரீ ஆத்மபோதேந்திர சரஸ்வதி 
ஸ்வாமிகளின் அதிஷ்டானம் வெங்கடாத்ரி அகரம்
அருகில் வடவம்பலத்தில் இருப்பதாக, ஸ்ரீமடத்தின்
ஆவணங்களிலிருந்து தெரியவந்தது. ஆனால்,சரியான
இடம் தெரியவில்லை. மகாப்பெரியவாளின் முயற்சியால்
அந்த அதிஷ்டானம் கண்டுபிடிக்கப்பட்டது. 17-01-1927ல்
அந்த இடம், முறையான வழிபாட்டுக்கு உரியதாக
மந்திரச் சடங்குகள் மூலம் துவக்கி வைக்கப்பட்டது.)

"பெரியவா எங்கே?" என்று ஹிந்தியில், கொதிக்கும்
குரலில் கேட்டார், வங்கத்துச் சிங்கம்.

"சாயங்காலம் தரிசனம் பண்ணலாம்" என்றார்,
மடத்துச் சிப்பந்தி.

வந்தவர், துர்வாசரின் அவதாரம்!

"என்னது? சாயங்காலமா?... என்னை வரச்சொல்லிவிட்டு,
அவர் வெளியே போய்விட்டால் என்ன அர்த்தம்?..
அவர் வருகிறபோது வரட்டும்,நான் ஊருக்குப் போகிறேன்"
என்று பயங்கரமாக உறுமிவிட்டு, அருகிலிருந்த
சேர்ந்தனூர் என்னும் ரயில்வே ஸ்டேஷனை நோக்கி
நடக்கத் தொடங்கினார்.

மடத்துப் பணியாளருக்குக் கோபம் வந்தது.

"என்ன மிரட்டுகிறீரா?..உம்மை யார் வரச்சொன்னது"
சாமியார் வேஷம், வேறே! தாடி,ஜடாமுடி...!
இத்தனை கோபம் கூடாது...."

அவர் சொல்லிக்கொண்டிரூக்கும் போதே, பாராக்காரன்
ஓடி வந்தான். 


"சாமி,அங்கே பாருங்க, கரும்புத் தோட்டத்திலே நம்ம
எசமான் ஓடிப் போறாங்க"

சிஷ்யர் பெரியவாளை நோக்கி ஓடினார்.

பெரியவாளும் வங்காளச் சாமியாரும், தனியாக
சந்தித்து ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள்.

பின்னர், பெரியவாள் சிஷ்யரை அருகில் அழைத்து,
வங்காளப் பரதேசிக்கு, சிற்றுண்டி வாங்கிக் கொடுத்து
ரயிலேற்றி விடச்சொன்னார்கள்.

சீடர் அவ்வாறே செய்துவிட்டுத் திரும்பினார்.

அவரைப் பார்த்ததும் பெரியவா சொன்னார்கள்.

"நான் காசியாத்திரை செய்துவிட்டு, வங்காளம்
மிதுனாப்பூர் வழியாக வந்தேன். அப்போது,இந்த ஸாது
சில தினங்கள் முகாமில் தங்கியிருந்தார். யோக புருஷர்;
ஸித்தர்.கோபத்தை மட்டும் ஜெயிக்க முடியவில்லை.

முகாமிலிருந்து விடை பெற்றுச் செல்லும்போது,
'மறுபடி தரிசனம் எப்போது கிடைக்கும்?' என்று கேட்டார்.
பதினைந்து வருஷம் கழித்துத் தென்னிந்தியாவில்
கிடைக்கும்- என்றேன்.ராமபிரான் வருகையை
எதிர்பார்த்து பரதன் நாள்களை எண்ணிக்கொண்டிருந்த
மாதிரி, இவரும் நாள்களை எண்ணிக்கொண்டு,
இன்றைக்கு இங்கே இத்தனை மணிக்கு வந்திருக்கிறார். 

இவர்களில் யார் ஸித்தர்?

ஸித்தர்களில் பெரியவர்-சிறியவர் என்ற பாகுபாடு உண்டோ?

பித்தர்கள், நாம்! என்ன தீர்மானிக்க?




                      

Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

"இன்னிக்கு- பாலா,பாதுகையா?


 "இன்னிக்கு- பாலா,பாதுகையா?







சொன்னவர்-என்.வெங்கட்டராமன்.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்

ஆனந்தத்தாண்டவபுரத்தில் முகாம் இருந்த வரையில்
ஸ்ரீ சந்த்ரமௌளீஸ்வரர் அபிஷேகத்துக்காகக் கொண்டு
வரப்படும் பாலைச் சேகரித்து, எடுத்துச் சென்று பூஜைக்
கட்டு அருகே வைப்பது என் வேலை. பெரியவாள் அந்தப்
பெரும் பாக்கியத்தை எனக்கு அளித்திருந்தார்.

ஒருநாள் காலை குளத்தில் படிக்கட்டில் உட்கார்ந்து
தண்ணீரில் பாதங்கள் நனைத்து 'விளையாடிக்
கொண்டிருந்தார்,பெரியவாள். சற்றுத் தொலைவில்
என் வயதொத்தப் பையன்கள். அப்போது ஒருவர்
பால் கொண்டு வந்து வைத்தார்.

'பால் எதுக்கு?'

'அபிஷேகத்துக்கு..'

'சரி...சரி..வை..'

சிறிது நேரம் கழித்து, ஸ்ரீ சுவாமிகள் எழுந்தார்.

சட்டென்று ஒரு பையன், பால் பாத்திரத்தைக் கையில்
எடுத்துக் கொண்டு விட்டான். எனக்கு ஆத்திரமாக
வந்தது. பாலை எடுத்துக்கொண்டு போவது என் உரிமை
அல்லவா? அதை,எப்படி இவன் தட்டிப் பறிக்கலாம்?.

மெல்லிய குரலில் சொன்னேன்; 'டேய்,பாலை எங்கிட்டக்
கொடுத்துடு. இல்லே... தொலைச்சுப்புடுவேன் !
ஆமா....கொடுடான்னா...'

அவன் கொடுக்காமல் படியேறிக் கொண்டிருந்தான்.

ஸ்ரீ சுவாமிகளுக்கு, பாதுகையில் ஏதோ குத்திற்று போலும்.
கழற்றிவிட்டு,என்னைத் தூக்கிக்கொண்டு வரச்சொன்னார்
தூக்கிக் கொண்டேன். என்றாலும்,பால் கைமாறிப்
போய்விட்டதே?- என்ற கோபம் அடங்கவில்லை.
'மடத்துக்கு வா..உதைப்பேன்...செருப்பால் அடிப்பேன்'
என்றெல்லாம்,அவனுக்கு மட்டும் கேட்கும்படியாக
பொறுமிக் கொண்டே வந்தேன்.

ஸ்ரீமடம் வந்ததும், பாதுகையைக் கீழே வைக்கும்படி
ஆக்ஞையாயிற்று.பெரியவாள், காலில் 
போட்டுக்கொண்டு உள்ளே போய்விட்டார்.

நான்,சொன்னபடி,அந்தப்பையனை வெளுத்துக்
கட்டி விட்டேன்.!.

அன்று சாயங்காலம். ஒரு வீட்டுத் திண்ணையில்
உட்கார்ந்து கொண்டார் பெரியவாள்.
பத்திருபது பேர் கூட்டம்.

"இன்னிக்கு- பாலா,பாதுகையா?-என்ற
தலைப்பில் பேச்சு என்றார்.

எல்லாருக்கும் ஆச்சரியமாக இருந்தது. பெரியவா
அவ்வப்போது சிற்றுரை நிகழ்த்துவார்தான்.
ஆனால், அதற்கெல்லாம் தலைப்பு கிடையாது.
ரத்தினம் போன்று தத்துவங்கள் பளிச்சென்று
தெறித்து விழும்.

நந்திக்கிராமத்தில்,எதற்கு பட்டாபிஷேகம்
தெரியுமோ?..பாதுகைக்கு!

சாதாரணமா. காலிலே போட்டுக்கிறதை செருப்புன்னு
சொல்லுவா. அதுதான் பாதரட்சை. அதையே
சந்யாசிகள் போட்டுண்டா, பாதுகை-ன்னு பேர்.

"பரதன், ஸ்ரீ ராமனோட பாதுகையை சிம்மாசனத்தில்
வைத்து அபிஷேகங்கள்-பாலாபிஷேகம்!-செய்தான்"

"அதனால், பால் ஒசத்தியா?இல்லே,
பாதுகை ஒசத்தியா?...

என்று சொல்லிவிட்டு, சட்டென்று, 'கோவிந்த நாம
சங்கீர்த்தனம்' என்று புண்டரீகம் போட்டு உரையை
முடித்து விட்டார்.






என் பொட்டில்,சம்மட்டியால் தட்டினாற்போல் 
இருந்தது.

எவ்வளவு பெரிய பாவி, நான். ரொம்ப ரொம்ப ஒசந்த
பாதுகையை எங்கிட்டக் கொடுத்து, எடுத்துண்டு
வரச் சொல்லியிருக்கா,பெரியவா. 

பாதுகையில் ஏதும் குத்தல்லே. எனக்கு அந்த 
பாக்கியத்தைக் கொடுக்கணும் என்பதற்காகவே,
அப்படி ஒரு நாடகம்.பைத்தியக்காரத்தனமாக
அந்தப் பையனைப் போய், தலைகால் புரியாமல் 
அடிச்சேனே...

எனக்குக் கிடைச்ச பாக்யத்தை என்னாலே புரிஞ்சுக்க
முடியாமல்,சுவாமி கண்ணை மறைச்சுட்டாரே...

இன்றைக்கும் கண்ணீர் துளிக்கத்தான் செய்கிறது.





                        




Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

"இங்கே யாராவது டமாரச் செவிட்டுக்காரர் இருக்கிறாரா,பார்.."

"இங்கே யாராவது டமாரச் செவிட்டுக்காரர் இருக்கிறாரா,பார்.."
                


'தர்ஷன்'. இதழிலிருந்து.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

சந்நியாசிகளுக்கு என்று சில விசேஷ தர்மானுஷ்டானங்கள்
இருக்கின்றன. அதிலும் பீடாதிபதியாக வீற்றிருக்கும்
துறவிக்குக் கடுமையான கட்டுப்பாடுகள்.

கால் நூற்றாண்டுக்கு முன்னால் காஞ்சிபுரம் ஸ்ரீமடத்தில்
ஒரு காலை வேளை.

அன்றைக்கு அடியார் கூட்டம் அவ்வளவாக இல்லை.

மகாப் பெரியவாள் தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தபோது
அலங்காரம் செய்யப்படாத அம்பாள் போல ஒரு சுமங்கலி
வந்தார். நேரே பெரியவாளிடம் சென்று நமஸ்கரித்தார்.
எழுந்தவர் கண்களில் குபுகுபு வென்று நீர் மல்கியது.

சொந்த விவகாரம் - சிக்கல் - பிரச்னை பெரியவாளிடம்
தனிமையில் பேசி வழிகாட்டுதலை எதிர்நோக்கி நிற்கிறார்.

கண்கள் கெஞ்சுகின்றன - ;என்மீது தங்கள் அருட்பார்வை
படட்டுமே!' என்று உதடுகள் துடிக்கின்றன.
'நான் சொல்வதைக் கேட்க மாட்டீர்களா?' என்று.

அருளரசர் அந்த அம்மையார் சொல்வதைக் கேட்கவே
விரும்பினார்.

'ஒரு பெண்ணிடம் தனியாகப் பேசக்கூடாது'
என்று விதி தடுக்கிறதே?.






அம்மையார் இடத்தை விட்டு நகராமல் கண்ணீர் பெருக்கிக்
கொண்டிருந்தார். அவர் அங்கிருந்து நகர்ந்தால்தான்
காத்துக்கொண்டிருக்கும் மற்ற அடியார்கள் பெரியவா
அருகில் செல்ல முடியும்.

இந்த இக்கட்டான சூழ்நிலை எத்தனை நேரம்தான் நீடிப்பது?

விரல் சொடுக்கில், ஓர் அணுக்கத் தொண்டரை
பெரியவா அழைத்தார்கள்.

"இங்கே யாராவது டமாரச் செவிட்டுக்காரர் இருக்கிறாரா,பார்.."

தொண்டர் அதிருஷ்டசாலி! சில விநாடிகளிலேயே
ஒரு செவிடரைக் கண்டுபிடித்து விட்டார்.

"ஒரு காரியம் செய்.அந்த அம்மாளுடன் அவன் வரும்போது
கையைத் தட்டி அவர் பெயரைச் சொல்லிக் கூப்பிடு.அவர்
திரும்பிப் பார்க்கிறாரா? இல்லையா?-என்பதிலிருந்தே அவர் 
நிஜமான செவிடர்தானா என்பதைப் புரிந்து கொள்ளலாம்.."

(பெரியவாள் சொல்லிக் கொடுத்த இந்தத் தந்திரத்தில்
ஒரு புதைபொருளும் இருக்கிறது)

தொண்டர் ஏதோ ஓர் அலுப்பில், காது கேட்கக்கூடிய
ஒருவரையே, "பெரியவா முன்னாடி நீ செவிடன் மாதிரி
நில்லு.....போதும்" என்று சொல்லி அழைத்துக்கொண்டு
வந்துவிட்டால், குடும்ப ரகசியங்களைப் பேச விரும்பும்
அம்மணிக்கு சங்கடமாகப் போய் விடக்கூடும். எனவே,
செவிட்டுத்தனத்தை டெஸ்ட் செய்வதாக ஒரு யோஜனை.

டமாரச் செவிடர் பக்கத்தில் நிற்க தன் மனத்திலிருந்த
ஆதங்களையெல்லாம் கொட்டித் தீர்த்தார் அம்மையார்.




பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த கருணாமூர்த்தி
பிரசாதம் கொடுத்து, பெருமைப்படுத்தி அனுப்பிற்று.
அம்மையாரின் கண்களில் நீர்....ஆமாம்.ஆனந்தக் கண்ணீர்!
பிறை சூடி அல்லவா,அவருக்குப் பதில் கூறியிருக்கிறது.

அம்மையார் பிரசாதம் பெற்றுக் கொண்டு புறப்பட்டதும்
செவிடரிடம் ஒரு ஜாடை; 'நீங்களும் போகலாம்'

துறவு நெறி காக்கப்பட்ட அதே சமயத்தில்,
ஒரு சுமங்கலிக்கும் அருள்பாலித்தாகி விட்டது.













Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

"பெரியவா பண்ணின வேடிக்கையும்ஆச்சர்யமும்"














"பெரியவா பண்ணின வேடிக்கையும்ஆச்சர்யமும்"

சொன்னவர்-ஸ்ரீ மடம் பாலு.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
மறு தட்டச்சு-வரகூரான் நாராயணன்

அகண்டகாவேரிப் பகுதியில் பெரியவா
சஞ்சரித்துக் கொண்டிருந்தார்கள்.

ஒரு நாள், முகாம் செய்திருந்த இடத்துக்கு
அருகிலிருந்த தென்னந்தோப்புக்குப் போனார்கள்.
தோப்பு மரங்களில் நூற்றுக்கணக்கான
காகங்கள் இருந்தன.

உடன் வந்திருந்த ஒரு பையனைப் பார்த்து,
"இந்தக் காக்கைகளையெல்லாம்
கத்தச் சொல்லட்டுமா?" என்றார்கள் பெரியவா.

பையனுக்கு என்ன பதில் சொல்வதென்று
புரியவில்லை.

"இதோ,பார்..."என்று சொல்லிவிட்டு,காகத்தைப்
போலவே, கா....கா.....என்று கத்தினார்கள்,பெரியவா.

எல்லாக் காகங்களும் கோரஸாக எதிரொலி கொடுத்தன.

பெரியவா சொன்னார்கள்; 'காகங்கள் கத்துகின்றன.
நிறைய விருந்தாளிகள் வருவார்கள் என்று சூசகம்.
நிறைய சாப்பாடு தயார் பண்ணச் சொல்லு...'

'நிறைய சமைத்தால், எல்லாம் வேஸ்டாகிப் போகும்.
சாப்பிடுவதற்கு மனிதர்கள் எங்கே?'
என்று சிஷ்யர்கள் சங்கடப்பட்டார்கள்.


பக்கத்து, ஏதோ ஊரில், காங்கிரஸ் கட்சியின் கூட்டமாம்.
அந்தக் கூட்டத்துக்கு வந்தவர்கள், பெரியவா அருகில்
இருப்பது தெரிந்ததும் தரிசனத்துக்கு வந்து விட்டார்கள்.

எல்லாரையும் சாப்பிட்டு விட்டுப் போகும்படி
பெரியவா பணித்தார்கள்.

கடைசியில், ஒரு பிடி சோறு மிஞ்சவில்லை!



Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

"நரிக்குறவனுக்கு கனாவில் ஆசி!" -- மாஹாபெரியவா

       "நரிக்குறவனுக்கு கனாவில் ஆசி!"














சொன்னவர்-ராதா ராமமூர்த்தி.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்




விழுப்புரம் பக்கம் ஏதோ ஒரு கிராமம். அங்கு
நரிக்குறவர் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவன் குடும்பத்தில்
மிகவும் துன்பப்பட்டு மனம் வெறுத்து தற்கொலை செய்து
கொள்ள நினைத்து அந்த ஊர் ரயில்வே ஸ்டேஷனில் வந்து
ஒரு ஒரமாகப் படுத்து விட்டான். அடுத்து வரும் ரயிலில்
தண்டவாளத்தில் விழவேண்டும் என்பது அவன் எண்ணம்.

படுத்தவன் தூங்கிவிட்டான். அப்போது அவனுக்கு ஒரு கனவு
போல் ஒரு தோற்றம். யாரோ ஒரு சாமியார் தோன்றி
"நீ சாக வேண்டாம்.என்னை வந்து பாரு; நான் உனக்கு
அமைதியைக் கொடுப்பேன்"-என்று சொல்ல திடுக்கென்று
விழித்துக் கொண்டான். அவன் உடலெல்லாம் ஒரு
புத்துணர்ச்சி.

எந்த சாமியார் கனவில் வந்தாரோ அவரைத் தேட வேண்டும்
என்று தோன்றிவிட்டது.உடனே தன் கையில் பல நாளாய்
போட்டிருந்த ஒரு தங்க மோதிரத்தை விற்று காசாக்கிக் 
கொண்டு ஒவ்வொரு ஊராக அலைந்து திரிந்து எத்தனையோ 
சாமியார்களைப் பார்த்தும், கனவில் வந்தவர் இல்லை
என்று மீண்டும்,மீண்டும் அலைந்து வாடினான்.

அந்த சமயம் மஹாபெரியவா வேலூர் பக்கத்திலிருந்த
'ஏகாம்பர குப்பம்' என்ற ஊரில் முகாம். அலைந்து திரிந்த
அந்த நரிக்குறவன், ஒரு மாலைப் பொழுதில் பந்தலில்
தற்செயலாக ஸ்ரீ பெரியவாளைப் பார்த்துவிட்டான்.

"ஓ சாமி! இந்த சாமி தான்! என்னை வரச்சொன்னியே!
வெளிலே வா!" என்று கத்த ஆரம்பித்தான்.

ஸ்ரீ பெரியவா ராஜம்மாள் அம்மாவைக் கூப்பிட்டு,
"அந்த ஆளை விசாரித்து ஆகாரம் ஏதாவது கொடு.
நாளை காலை நான் அவனைப் பார்க்கிறேன் என்றார்.

ராஜம்மாள் அந்த நரிக்குறவனிடம் சென்று,
"நீ யாரப்பா? உனக்கு சாப்பாடு தரேன். உன்னை
காலையிலே சாமி பார்த்து பேசுவாங்க!" என்று
விவரம் கேட்க,





              
"ஆமா! தாயி என் இரண்டு பெண்டாட்டி கூடவும்
சண்டை.மூணாவது ஒரு பொண்ணைக் கட்டிக்கிட்டேன்.
அவ எனக்கு விஷம் கலந்து சாப்பாடு வைத்ததைப்
பார்த்துவிட்டேன்.மனது ஒடிஞ்சு போய் செத்துப்போக
இருந்தேன். அப்போ இந்த சாமியார் கனாவிலே வந்து
என்னை வந்து பாருன்னு சொன்னாரு" என்றான்.

மறுநாள் காலையில் பெரியவா வெளியில் வந்தார்.
அவன், "சாமி! உன்னைப் பாத்தா எங்க தாய் மாதிரி
இருக்கு. நான் குப்பையை கூட்டிக்கிட்டு உங்கூடவே
இருக்கேன்" என்று கதறி விட்டானாம்.

பெரியவா " நீ ஒழுங்கா ஊருக்குப் போ. இனிமே
உன் வீட்டிலே உன்னை மரியாதையாக நடத்துவாங்க.
உனக்கு என்ன கஷ்டம் வந்தாலும் என்னை நெனச்சுக்கோ.
எல்லாம் சரியாப்போகும்" என்று சொல்லி அவனுக்கு
பழங்கள் கொடுத்தார்கள்.அங்கு இருந்தவர்களிடம்
பணம் வசூல் பண்ணி அவனிடம் கொடுத்து
அனுப்பி வைத்தார்களாம்.

(இந்த சம்பவம் புதுக்கோட்டை ராஜம்மாள் எனக்கு
சொன்னது.இந்தச் சம்பவம் நடந்தபோது
திருச்சி சுபலக்ஷ்மி, திருச்சி தர்மாம்பாள் மற்றும் சிலர்
கூட இருந்திருக்கிறார்கள்-'ராதா ராமமூர்த்தி')







Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

"கபட சந்யாஸி யார் " - ஸ்ரீ மகாப் பெரியவாளிடம் பொழுது போக்குகளும் நிறைய உண்டு.









கபட சந்யாஸி"
"பெரியவா கேட்ட காளிதாஸன் கதை"

சொன்னவர்-ராமகிருஷ்ண தீக்ஷிதர்
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஸ்ரீ மகாப் பெரியவாளிடம் பொழுது போக்குகளும்
நிறைய உண்டு.

ஒரு தடவை சென்னை திருமங்கலத்திலிருந்து
அம்பத்தூருக்கு சென்று கொண்டிருந்தோம்.
வழக்கப்படி, ஸ்ரீ பெரியவாள், மூன்று சக்கர
சைக்கிளைத் தொட்டுக்கொண்டே நடந்து வந்து
கொண்டிருந்தார். நாங்கள் ஏழெட்டுப் பேர்கள்,
உடன் சென்று கொண்டிருந்தோம்.

"நீலகண்டா, நீ கபட ஸந்யாஸியைப்
பார்த்திருக்கியா?"

"இல்லே"

"நாகராஜா....நீ"

"இல்லே.."

ஸ்ரீ பெரியவாள் என்னைப் பார்த்து, " நீ கபட சந்யாஸியைப்
பற்றிக் கேட்டிருக்கியா?" என்று கேட்டார்.

"கேட்டிருக்கேன்...ராவணன்,அர்ஜுனன்..." என்றேன்.

"அவ்வளவு தானா?"

நான் தயங்கியபடியே, "காளிதாஸன்..." என்றேன்.

"காளிதாஸனா?..அவன் எப்போ கபட சந்யாஸி ஆனான்?.."

"பெரியவாளுக்குத் தெரியும்..பெரியவா சொன்னா,
நாங்க கேட்டுண்டே..நடப்போம்.

"இல்லை..நீயே சொல்லு.."

போஜராஜன் சபையில் ஆஸ்தான வித்வானாக இருந்த
காளிதாஸன், ஒரு நாள், சற்று மரியாதைக்குறைவான
சொல்லைக் கேட்டதும், சபையிலிருந்து வெளியேறி
கால் போன போக்கில் நடக்கத் தொடங்கினான்.

போஜனுக்கு, காளிதாஸன் இல்லாமல் பொழுது
போகவில்லை. அவனை எப்படிக் கண்டு பிடிப்பது?

ஒரு செய்யுளின்,முதல் இரண்டு அடிகளை எழுதிப்
பூர்த்தி செய்பவருக்குப் பரிசு கிடைக்கும் என்ற
முரசறைவித்தான்.

ஒரு தாசியின் வீட்டிலிருந்த காளிதாஸன், பரிசு பற்றி
எதுவும் அறிந்திராவிட்டாலும், செய்யுளைப் பூர்த்தி
செய்தான்.போஜனிடம் அந்த வரிகளைக் காட்டினாள் தாசி.
பின்னர்,அவளிடமிருந்து விபரங்கள்பெற்று,மாறுவேஷத்தில்
போஜன் புறப்பட்டுச் சென்றான். ஒரு மரத்தடியில் ஒரு
சந்யாஸியைப் பார்த்தபோது, 'இவர் காளிதாஸனோ'
என்ற சந்தேகம் வந்தது.

பரஸ்பரம் பேச்சு ஆரம்பமாயிற்று.

துறவி, மாறுவேஷத்திலிருந்த போஜனைப் பார்த்து
"நீங்கள் யார்?" என்று கேட்டார்.

"நான்,போஜனிடம் அடைப்பக்காரனாக இருந்தேன்.
அவர் இறந்ததும், எனக்கு இருக்கப் பிடிக்கவில்லை.
வெளியே வந்து விட்டேன்..."

"ஆ!.... என் போஜன் இறந்துவிட்டானா?"
என்று வருந்தி சரம சுலோகம் பாடியதும்,
வேஷக்காரன் கீழே விழுந்து உயிர் விட்டான்.

அவன்தான் போஜன் என்பது சந்தேகமில்லாமல்
தெரிந்துவிடவே, அம்பாளைக் குறித்து,மனமுருகி
சியாமளா தண்டகம் பாடி, "இதோ,போஜன்
எழுந்துவிட்டான்!" என்ற பொருள்பட
இன்னொரு சுலோகம் பாடினான்.

உண்மையாகவே,போஜன் உயிர் பெற்று எழுந்தான்.

இந்தக் கதையை விளக்கமாகச் சொன்னேன்.
கடைசியில் "இந்த சந்தர்ப்பத்தில் தான் காளிதாஸன்,
சந்யாஸியாகக் கபட நாடகம் ஆடினான்..." என்றேன்.

பெரியவாள்,"ரொம்ப சுவாரஸ்யமா இருந்தது.
நடந்து வந்த களைப்பே தெரியல்லே!" என்றார்.

அம்பத்தூர் வந்துவிட்டது.






Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.