Thursday, April 23, 2015

ஐந்தறிவு ஜீவனுக்கும் ஸ்ரீபரமாச்சார்யாளின் கருணாகடாக்ஷம்.

             ஐந்தறிவு ஜீவனுக்கும் 
ஸ்ரீபரமாச்சார்யாளின் கருணாகடாக்ஷம்.






ஜெகத்குரு ஸ்ரீபரமாச்சார்யாளின் கருணைக்கு கட்டியம் கூறும் வகையில் இன்று காலையில் ஒரு முதியவர் கூறிய நிகழ்வினையே இங்கு பகிர்கின்றேன்.
இந்த நிகழ்வு 1927ம் ஆண்டுகளில் நடைபெற்றிருக்கலாம் என்று கூறி ஆரம்பித்தார் அவர். அந்த சமயத்தில் மடத்தின் முகாமுடன் நாய் ஒன்று வந்துகொண்டிருந்தது. அசுத்தங்களைத் தொடாத அந்த ஐந்தறிவு ஜீவன், மடம் முகாம் செய்யும் இடங்களிலெல்லாம் தங்கி, இரவில் மடத்தில் கால்நடைகளையும் சாமான்களையும் திருடர்கள் எடுத்துப் போகாமல் பாதுகாத்து வரும். அந்த ஜீவன் மடத்திலிருந்து போடப்படும் அன்னத்தை உட்கொள்ளுமே தவிர, வேறு யாராவது கொடுக்கும் எவ்வித உணவையும் அது உட்கொண்டதில்லையாம். அதனால் ஸ்வாமிகள் ஒவ்வொரு நாளும் மாலையில் "நாய்க்கு ஆகாரம் கொடுத்தாகிவிட்டதா? என்று கேட்பார்கள். ஸ்வாமிகள் பல்லக்கில் ஆரோகணம் செய்து கொண்டு, ஒரு ஊரிலிருந்து மற்றோர் ஊருக்குப் போகும்போது இந்த நாய் பல்லக்கின் கேழேயே போய்க்கொண்டிருக்கும். நடுவில் ஏதாவது ஓர் ஊரில் பக்தர்களுக்கு சேவை அளிக்கப் பல்லக்கு நிறுத்தப்பட்டால் இந்த நாய் வெகு தூரத்தில் போய் நின்று விடும். சில சமயம் சாலைகளில் நடந்து செல்லும் மடத்தின் யானையின் நான்கு கால்களின் நடுவே அது சென்று கொண்டேயிருக்கும். மடத்தின் காவல்காரர்கள் சற்று அயர்ந்திருந்தால் அது மடத்தில் காவல் காக்கும். மடத்திலிருந்து வழக்கமாக அன்னமிடுகிறவர்கள் ஒரு நாள் அன்னமிட மறந்துவிட்டால் அது அன்று பட்டினி தான் கிடக்கும். ஒரு சமயம் ஸ்வாமிகளை விட்டுப் பிரிய நேர்ந்த அந்த நாய் மீண்டும் ஸ்வாமிகளின் முகாமுக்கு ஓடிவந்துவிட்டது. அன்று முதல் அது உயிர் வாழ்ந்தவரை ஸ்வாமிகளை தரிசிக்காமல் ஆகாரம் உட்கொண்டதில்லையாம்.
ஜீவிதம் என்னவாக இருந்தாலும் ஜீவன் ஒன்று தான் என்பர். அது ஐந்தறிவு படைத்ததானாலும் சரி; ஆறறிவு படைத்ததானாலும் சரி; ஐயனின் கருணை ஜீவனுக்குத் தானே!
ஹே, பரமேஸ்வர சங்கரா! இருக்கும் வரையிலும் இருக்கட்டுமே நின் ஸ்மரணம் என்னிலும்!
"நெஞ்சமதில் நின்ற காஞ்சித் தெய்வநாயகன் தினம்
நெஞ்சமதில் ஆராதனை பெரும்தேவன் என்றும்
நினைத்ததும் என் மனத்தில் உதயமாவார் அவர்
நிலைபெற்ற நாயகர் என் காஞ்சிநாதர்
என் மனத்தில் என்றும் வீற்றிருப்பார்"





Courtesy :   Facebook post  : Krishnamoorthi Balasubramanian

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

"பரமேஸ்வரன் நானே"


                   "பரமேஸ்வரன் நானே"








சொன்னவர்-ராதா ராமமூர்த்தி.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்

சதாராவில் வஸந்த நவராத்திரி சமயம்.
புதுக்கோட்டையிலிருந்து நாங்கள் ஸுவாஸினி
பிக்ஷைக்காக சென்று அங்கு ஒரு வாரம்
தங்கியிருந்து வந்தோம்.

நாங்கள் பெரியவாளுக்கு விதவிதமான
மாலைகள்,கிரீடங்கள் தயாரித்து சமர்ப்பிப்போம்.

ஒருநாள் மாலைப்பொழுது, நாங்கள் பத்துப்பேர்
அமர்ந்து இருந்தோம். ஸ்ரீ பெரியவா அப்போது
வெளியில் வந்தார்கள்.நாங்கள் வந்தனம் செய்தோம்.
ராஜம் அம்மாள் ஒரு நாகாபரண கிரீடத்தை
சமர்ப்பித்தாள். அது வெட்டி வேரில் சந்தன மணி
வைத்து நாகக்குடை போல் மிக அழகாக 
அமைந்திருந்த கிரீடம்.

பெரியவா அந்தக் கிரீடத்தை வாங்கி அருகில்
இருந்த சிவலிங்கத்துக்கு சார்த்தச் சொல்லி
பக்கத்தில் இருந்த சிஷ்யரிடம் கொடுத்தார்.

உடனே, அவசரமாக, ராஜம்மாள் "இதை பெரியவா
போட்டுக்கணும்!: என்று பிரார்த்தித்தாள்.

பெரியவாள், சிவலிங்கத்தை சுட்டிக்காட்டி
"நான் வேறு, இவர் வேறு இல்லை
நான்தான் இவர்,இவர்தான் நான்"
என்று சொல்லிவிட்டு ஒரு சிரிப்புச் சிரித்தார்.

அப்போது மின்னல் போல் ஓர் ஒளி. அங்கு இருந்த
எங்கள் கண்களுக்குத் தெரிந்தது.என்ன பாக்யம்!
நாங்கள் சிலிர்த்துப் போய் வாய் அடைத்து
உட்கார்ந்து விட்டோம்.











Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

"நானே நாராயணன்"



                                 "நானே நாராயணன்"




                 


சொன்னவர்-ராதா ராமமூர்த்தி.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்


என் பெண் ஜனா ஒரு 'ஐஸ்வர்ய கோலம்'
தயாரித்திருந்தாள்.கண்ணாடித் துண்டுகளை
ஒட்டி கலர் செய்து நடுவில் மஹாலக்ஷ்மி வைத்து
கண்ணாடி போட்ட கோலப் படம் அது.அதைப்
பெரியவாளிடம் சமர்ப்பித்தோம்.

அதை எடுத்துப் பார்த்து ரஸித்து விட்டு,
"இது மகாலக்ஷ்மி. மகாலக்ஷ்மியை நான் எங்கு
வைத்துக் கொள்ள வேண்டும்? மார்பில் தான்
இருக்கணும்" என்று சொல்லி அந்தப் படத்தை தன்
மார்பில் வைத்துக் கொண்டு சுற்றிச் சுற்றிப் பார்த்து
எல்லாருக்கும் அனுக்ரஹம் செய்தார்.

"நாராயணன் அம்சமும் நானே!" என்று பெரியவா
உணர்த்துகிறார் என்று, இதிலிருந்து நாங்கள்
புரிந்து கொண்டோம்.

திருச்சியை சேர்ந்த சுபலக்ஷ்மி அம்மாள் சொன்னாள்;
"பெரியவா! இன்று சோமவார அமாவாசை.
அரச பிரதக்ஷணம் செய்யணும் என்ற நினைவே
இல்லாமல் நான் காஞ்சிபுரம் புறப்பட்டு வந்து விட்டேன்"
என்று, ஒரு முறை வருத்தம் தொனிக்கப் பெரியவாளிடம்
சொன்னாளாம்.

பட்டென்று பதில் வந்தது; "அதனாலென்ன?
என்னை 108 முறை பிரதக்ஷணம் செய்துவிடு..
அதுவே போதும்.

பெரியவா நாராயணன் மட்டுமில்லே;
அசுவத்த நாராயணனும் கூட.!





Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

காலத்தைக் கடந்தவர் காஞ்சி மஹா பெரியவர்

  காலத்தைக் கடந்தவர் காஞ்சி மஹா பெரியவர்




                   



வைகாசி மாதம் உச்சிப் போது கத்ரி முடிந்தும் வெயில் உக்ரம் தணியவில்லை.

அப்போது லால்குடிக்கு அருகில், நீண்ட நாட்களுக்கு முன்பு ஸ்வாமிகள்முகாமிட்டிருந்த நேரம். தெருவில் நடமாட்டமே இல்லை.
பறவைகள் கூட ஒடுங்கி இங்கொன்றும் அங்கொன்றுமாய்ப் பறந்தன. தலைச் சுமை விற்பனையாளர்கள் வெயிலுக்குப் பயந்து ஒதுங்கி விட்டனர். கானல் நீர் தரைக்கு மேல் அழகாக அசைவது தெரிந்தது.

அத்தகைய வெயிலில், ஸ்ரீ காஞ்சி காமகோடி ஆசாரிய ஸ்வாமிகள் தெருவில் விறுவிறுவென்று நடந்து சென்ற அரிய காட்சியை வெகு சிலர் தான் பார்த்திருக்க முடியும் ! நிலவொளியில் நடப்பது போல் ஸ்வாமிகள் மட்டும் அந்தக் கடும் கோடையில், தன்னந் தனியாக பாதரட்சை அணிந்து, கையில் தண்டமுடன் வேகமாக நடந்து சென்றார். அவருடன் வேறு யாரும் வரவில்லை. ஸ்வாமிகள் மட்டும் அப்படிப் போவது வழக்கமில்லை; மிக அபூர்வம்!

பின்னால் பத்தடி தள்ளி நாதசுரக்காரர் கையில் நாதசுரத்துடன் ஓடோடியும் வந்தார். அவருக்குப் பின்னால் தவுல்காரர்; ஸ்வாமிகளுக்குக் குடை பிடிப்பதற்காக ஒருவர் பட்டுக் குடையுடன் ஓடோடி வந்தார். மடத்து சிப்பந்திகள் கையில் வெள்ளிப் பாத்திரங்களுடன் அரக்க பறக்க ஓடி வந்தனர். இவர்கள் எல்லோரும் வெகு வேகமாக ஓடி வந்து, ஸ்வாமிகளுக்கு முன்னால் சென்றனர். தீ மிதிப்பது போல் பதை பதைக்கிற அந்த வெயிலில் ஸ்வாமிகள் வேகமாக நடந்து போனதும், பின்னால் பரிவாரங்கள் ஓடிவந்து கலந்து கொண்டதுமான அந்த நிகழ்ச்சியை யாரோ ஓரிருவர் தான் கண்டிருக்க முடியும்.

அந்தக் காட்சியானது முதலையிடம் சிக்கிக்கொண்ட யானையரசன், 'ஆதிமூலமே' என்று கதறியவுடன், மறுகணமே ஸ்ரீமந்நாராயணன் வைகுண்டத்திலிருந்து தன் பரிவாரங்களெல்லாம் தொடர ஓடி வந்த மட்டற்ற காருண்யத்தை பார்த்தவர்களுக்கு நினைவூட்டியது.

ஸ்வாமிகளைத் தொடர்ந்து கடைசியாகச் சென்றவர்களிடம் விசாரித்த போது அவர் கூறிய விவரம்:

ஒரு பக்தர் வீட்டுக்கு 12 மணிக்கு ஸ்வாமிகள் பிக்ஷைக்கு வருவதாக ஏற்றுக் கொண்டிருந்தார்கள். மடத்திலே பூஜைகள் எல்லாம் முடிவதற்கு 11 :30 மணி ஆகி விட்டது. தர்சனத்திற்கு வந்த மக்கள் கூட்டம் கலையவில்லை. அவர்களை சமாளிப்பதே பணியாளர்களுக்கு சரியாக இருந்தது. மணி 11 : 50 ஆகியும் மடத்தின் பணியாளர்கள் புறப்படுவதாகக் காணவில்லை. ஸ்வாமிகளுக்கோ பக்தனை காத்திருக்க வைக்க மனம் இல்லை. யாரையும் எதிர் பாராமல் அந்த அன்பர் வீட்டுக்கு தாமே புறப்பட்டு விட்டார்கள்.

குறிப்பிட்ட நேரத்துக்கு எதையும் செய்யத் தெரியாத அல்லது செய்யும் பழக்கமில்லாதவர்கள் நாம்! நேரத்தையும் காலத்தையும் கடந்த ஸ்வாமிகளோ, குறிப்பிட்ட தருணத்தில் தாம் ஏற்றுக் கொண்ட கடமையை ஆற்றுவதில் தீவிர கவனமுடையவர்கள் என்பது மட்டுமல்ல....

ஸ்வாமிகளைப் போன்ற யதீஸ்வரர்களுக்கு உரிய நேரத்தில் பிக்ஷாவந்தனம் செய்வது மிகப் பெரும் புண்ணியம். அதே சமயத்தில் காலந் தாழ்த்தி அவர்களுக்கு பிக்ஷாவந்தனம் செய்விப்பது பலமடங்கு பாவமாகும்.

தமது பக்தர், அந்த அபசாரத்துக்கு ஆளாக ஸ்வாமிகள் தாமே காரணமாக இருந்துவிடக் கூடாது என்று கருணையுடன் கருதி இருக்கலாம் 

அல்லவா ?

பரமாச்சாரியார் காலத்தைக் கடந்தவர்;
ஆனால் காருண்யத்தைக் கடந்தவர் அல்லவே !
சரணாகதி அடைந்தோர்க்கு அருள் மழை பொழிந்த மஹாமுனிவர் தாள் பணிவோம்






Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

குரு பக்தி........கண்ணீர் வழிந்தது.....


               குரு பக்தி........கண்ணீர் வழிந்தது.....









ஸ்ரீஆதிசங்கர பகவத் பாதாள் சீடகளுக்கு
பாஷ்ய பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் ஸ்ரீ சங்கரரின் தாயார் 
சிவலோக ப்ராப்தி அடைந்த சமாசாரம் 
அவருக்கு ஞான த்ருஷ்டியில் தெரிந்தது. 
அவர் கண்களிலிருந்து தாமாகவே கண்ணீர்
சொரிந்தது. கண்ணீர் தாரை தானாகவே
வழிந்ததாகச் சொல்வார்கள். 

அதுபோல் ஸ்ரீ பெரியவாளுக்கு பைங்கனாடு
ப்ரும்மஸ்ரீ கணபதி ஸாஸ்த்ரிகள் சிறு வயதில் 
பாடம் சொல்லிக் கொடுத்திருக்கிறார். ஒரு
சந்தர்ப்பத்தில் ஸாஸ்த்ரிகள்விண்ணுலகம் ஏகிய
செய்தி ஸ்ரீமடத்துக்குத் தெரிய வந்தது. அதைக்
கேட்டதும் பெரியவா கண்களிலிருந்து தாரையாக
கண்ணீர் வழிந்தது. 

ஸ்ரீபெரியவாளுக்கு பண்டிதர்களிடம் அசாத்யமான
ப்ரியம் இருந்ததுடன் , தன் குருவிடம் அளவில்லாத 
பக்தி இருந்தது தான் அதன் காரணம். அதனால்தான்
சன்னியாசிகள் எந்த நிலையிலும் உணர்ச்சி வசப்படக்
கூடாது என்ற விதியை அந்த ஒரு சில நொடிகள் ஒதுக்கி
வைத்தார் போலும்.


ஸ்ரீபெரியவாளை ஈன்றெடுத்த அன்னை மறைந்தபோது
கூட நீராடல், சில மணித்துளிகள் மௌனம், உபவாசம்
நிகழ்ந்ததே அன்றி கண்ணீர் தோன்றவில்லை!

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கரா














Courtesy :   Facebook post  :   Saraswathi Thyagarajan
Thanks to Adi Sankara  and  Mahaperiyava bhaktas for the scanned photos.

Wednesday, April 22, 2015

ஆஸ்திகனைக் காப்பாற்றிய நாஸ்திகன்











    ஆஸ்திகனைக் காப்பாற்றிய நாஸ்திகன்



கட்டுரையாளர்;எஸ்.கணேச சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

இது ஒரு மறு பதிவு.

ஒரு பக்தனைப் பெரியவா ஆந்திரா போய் வரச்சொன்னார்.

ரயிலில் அவருடைய பெட்டியில் அவர் அருகே ஒரு பிரபல
நாஸ்திகன்.! அவரைப் பார்த்ததும் பக்தனுக்கு வயிற்றில் புளியைக்கரைத்தது.அது ஒரு முதல்வகுப்பு கூபே. அவர்கள் இரண்டேபேர்தான் இருந்தனர். பக்த சாஸ்திரிகள் பயந்து நடுங்கினார்.

"தன்னந்தனியாக ஒரு நாஸ்திகனிடம் மாட்டிக் கொண்டோமே!
என்ன செய்து விடுவானோ?" என்று நெஞ்சு 'திக்திக்'என்று
அடித்துக் கொண்டது. டிக்கெட் சரிபார்ப்பவர் வந்தால்
இருப்பிடத்தை மாற்றிக்கொண்டு விடலாமே என்று வழி
பார்த்திருந்தார். இரவு ஆனதும் தூங்க முடியாமல் தவித்தார்.

நாஸ்திகத் தலைவருக்கு சாஸ்திரிகள் பயப்படுவது புரிந்து விட்டது.

"ஐயரே! உட்காருங்கள்,எதற்காக பயப்படுகிறீர்கள்? வேறு
பெட்டிக்குப் போய்விடலாமென்றுதானே எண்ணம்? 

பயப்படாமல்பேசாமல்...தூங்குங்கள்.நான் எதுவும் செய்ய மாட்டேன். நீர்எங்கேயும் போக வேண்டாம். ஒண்ணு தெரியுமா? நாம் போறவழியில் ஒரிடத்தில் பெரிய கலாட்டா நடந்து கொண்டிருக்கிறது.

அதைத் தாண்டித்தான் நமது வண்டி போகணும். நீர் வேற
எங்கேயாவது இடம் மாற்றிக்கொண்டு சென்றால்,அடி,உதை,
கல்லடி என்று அகப்பட்டுக் கொள்வீர்.இங்கேயே இருங்கள்.
எனக்காக இந்தப் பெட்டியருகில் போலீஸ் பாதுகாப்பு
ஏற்பாடெல்லாம் செய்யப்பட்டிருக்கு. பேசாமல் என்னோடு
வந்தால் சௌகரியமாக ஊர் போய்ச் சேரலாம். பாவம்!பார்த்தால்
நல்லவராகத் தெரிகிறது.உங்கள் நன்மைக்குத்தான் சொல்கிறேன்!"என்று நிலைமையை விளக்கினார். 

சாஸ்திரிகளுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.

"என்னடா இது !மேடையில்ஏறினால்,பாம்பையும்,
பார்ப்பானையும் கண்டால் முதலில் பார்ப்பானை அடி என்று சொல்பவர்.எனக்கு அடி விழக்கூடாதென்று தன்னுடைய பாதுகாப்பில் அழைத்துச்செல்கிறாரே!" என்று காதுகளை நம்ப முடியாமல் திணறினார்.

ஒருவரை நெருங்கிப் பழகினால்தான் நம்மால் புரிந்து கொள்ள முடியும்.எல்லோரிடமும் நல்ல குணம்,கெட்ட குணம் என்று இரண்டும்இருக்கின்றன.எவரையும் வெறுக்கக் கூடாது என்று நினைக்கிறார்.

அதற்கு மேல் அதிசயம் என்னவென்றால், நாஸ்திகர் பெரியவாளைமிகவும் போற்றிய வண்ணம் பேசிக்கொண்டே வந்ததுதான்.

விடியற்காலை இறங்க வேண்டிய ஸ்டேஷன் வந்தது.நாஸ்திகர்
சாஸ்திரிகளை எழுப்பி, அவர் பெட்டியை இறக்கிக் கீழே
வைப்பதிலும் உதவிசெய்து, "பெரியவாளுக்கு என் நமஸ்காரத்தைசொல்லுங்கள்!" என்று இரு கை கூப்பி வழியனுப்பி வைத்தார்.

இதுதான் பெரியவா மகிமை.அவரும் எல்லாரிடமும் ஒரே விதமான பிரியத்துடன்தானே இருந்தார். தன் பக்தன் கலாட்டாவில்மாட்டிக் கொள்ளாமல் பயணம் செய்ய பெரியவாளே செய்த ஏற்பாடோ இது என்று கூடத் தோன்றுகிறது.






                           



Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

Monday, April 20, 2015

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தை 58வது பீடாதிபதியாக அலங்கரித்த ஸ்ரீமத் ஆத்ம போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஸித்தி அடைந்த அதிஷ்டானம் எங்கிருக்கிறது?


   அலகிலா விளையாட்டுடையான்


                      




1927ஆம் வருடம் காசியாத்திரை செய்து கொண்டிருந்த நடமாடும் தெய்வம் தென் ஆற்காடு ஜில்லாவில் பண்ருட்டி பக்கம் தென்பெண்ணைக் கரையில் உள்ள 'வடவாம்பலம்' என்ற கிராமத்தை அடைந்தார். அங்கு வந்தது முதல் கிராமவாசிகள், அக்கம் பக்கம் உள்ள முதியவர்கள் என்று பலரிடமும் 'இந்தகிராமத்தில் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தை 58வது பீடாதிபதியாக அலங்கரித்த ஸ்ரீமத் ஆத்ம போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஸித்தி அடைந்த அதிஷ்டானம் எங்கிருக்கிறது? ஸ்ரீமடம் ஆவணம் இங்கு தான் இருப்பதாக சொல்கிறது. ஆனால் இப்போது அந்த இடம் இருந்ததற்கான சுவடே தெரியவில்லையே உங்களில் எவருக்கேனும் தெரியுமா, கேள்விப்பட்டது உண்டோ' என பலவிதத்திலும் விசாரித்ததில் பயன் ஏதும் கிட்டவில்லை.

இந்த நிலையில் அந்த புனித ஸமாதி இடத்தை எப்படியும் கண்டுபிடிப்பது என்ற ஸங்கல்பம் கொண்டது போல் அவ்விடத்தில் உள்ள வயல்கள், தோப்புகள் என பலவற்றையும் தானே நடந்து சென்று சோதிக்க ஆரம்பித்தார். ஒருநாள் காலையில் ஒரு வாழைத்தோப்பில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்து அந்த இடத்தை தோண்டிப்பார்க்க உத்தரவிட்டார். ஆனால் உடன் வந்த கிராம மக்கள் அங்கு சமாதி இருக்க வாய்ப்பில்லை என்று கூற, இருப்பினும் தான் சொல்லும் இடத்தை தோண்டி பார்க்கும்படி பணிக்க, மடத்தில் உள்ள குமாரமங்கலம் சாம்பமூர்த்தி என்பவர் மண்வெட்டி கொண்டு பெரியவர் காட்டிய இடத்தில் தோட ஆரம்பித்தார். 10, 15 அடி தோண்டிய உடன் ஒரு அதிசயம் தென்பட்டது.


என்னவெனில் மண்வெட்டி பூமியில் ஒரு கபாலத்தில் தட்டுப்பட்டு அப்படியே நின்றது. உடனே தோண்டிக் கொண்டிருந்தசாம்பமூர்த்தி அவர்கள் 'நிறுத்து, நிறுத்து...சதாசிவம் சதாசிவம்' என கத்திக் கொண்டு மூர்ச்சையாய் கீழே விழுந்தார். பெரியவர் இதுவே ஸமாதி ஸ்தலம் என்று கூறிவிட்டு உடனே முறைப்படி ஸமாதி அதிஷ்டானம் கட்ட ஏற்பாடு செய்யும்படி உத்தரவிட்டார். கூடியிருந்த அனைவரும் அதிர்ச்சியில் சிலையாக நின்றனர். எப்படி சர்வ சகஜமாக நேராக குறிப்பிட்ட இடத்திற்கு வந்து அடையாளம் காட்ட முடிந்தது என வியந்தனர். த்ரிகால ஞானிக்கு இவையெல்லாம் பெரியதா! மயக்கம் தெளிந்த சாம்பமூர்த்தி அவர்கள் சொன்ன விவரம் மேலும் வியப்பூட்டியது. பெரியவாள் சொன்ன இடத்தில் தோண்ட ஆரம்பித்த உடனேயே அந்த பள்ளத்தில் சிறிய சன்னியாசி உருவம் தென்பட்டதாம். பள்ளம் ஆழமாக ஆழமாக அந்த உருவமும் பெரியதாய் வளர்ந்து ஆகாயத்திற்கும் பூமிக்குமாய் காஷாயம், தண்டம், கமண்டலம்,விபூதி, ருத்ராக்ஷம் இவைகளுடன் கோடி சூர்ய ப்ரகாசத்துடன் நின்றதாம். அவர் முன் பல வேத வித்துக்கள் உபநிஷத் பாராயணம் செய்து கொண்டிருக்க திடீரென அம்மஹான் முன்னால் இருந்த வேதியர்களிடம் 'நிறுத்து நிறுத்து...சதாசிவம் சதாசிவம்' என்று சொன்னாராம். தானும் அதையே சொல்லி நினைவிழந்ததாகக் கூறினார். கி.பி.1638ல் ஸித்தியான அந்த மஹானின் ஸ்மாதி ஸ்தலத்தை 289 வருடம் கழித்து நடமாடும் தெய்வம் சுட்டிக் காட்டினார் என்றால் என்னே அவரது ஞானதிருஷ்டி...






இதில் மேலும் குறிப்பிடவேண்டிய செய்தி யாதெனில் 289 வருடம் முன் ஸித்தி அடைந்து அவரை புதைத்த இடத்தில் தோண்டியபோது அவர் விஸ்வரூப தரிசனம் தந்து அருள்பாலித்தார் என்றால் அந்த மஹான் எப்படிப்பட்ட தபஸ்வியாக இருக்கவேண்டும்! இது தான் காமகோடி பீட குருமணிகளின் மஹிமை. இந்த ஆத்மபோதேந்திர ஸ்வாமிகள் தான் உலகம் அறிந்த நாம சித்தாந்தம் செய்த கோவிந்தபுரம் ஸ்ரீமத்பகவன் நாம போதேந்திர ஸ்வாமிகளின் குருநாதர் என்பது குறிப்பிடத்தக்கது. இடமும் தெரியாமல் வழிபாடும் இல்லாதிருந்த ஒரு மஹானின் அதிஷ்டானம் பெரியவாள் அருட்பார்வையால் செப்பனிடப்பட்டு நித்திய வழிபாடுகளுடன் அருள் பாலிக்கிறது என்பது இன்னும் சிறப்பு.

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர. காஞ்சி சங்கர காமகோடி சங்கர.








Courtesy : தட்டச்சு: ஹாலாஸ்ய சுந்தரம் ஐயர்
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

Namaskaram

Narayanan .R

Narayanan Ramaswamy