Monday, April 20, 2015

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தை 58வது பீடாதிபதியாக அலங்கரித்த ஸ்ரீமத் ஆத்ம போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஸித்தி அடைந்த அதிஷ்டானம் எங்கிருக்கிறது?


   அலகிலா விளையாட்டுடையான்


                      




1927ஆம் வருடம் காசியாத்திரை செய்து கொண்டிருந்த நடமாடும் தெய்வம் தென் ஆற்காடு ஜில்லாவில் பண்ருட்டி பக்கம் தென்பெண்ணைக் கரையில் உள்ள 'வடவாம்பலம்' என்ற கிராமத்தை அடைந்தார். அங்கு வந்தது முதல் கிராமவாசிகள், அக்கம் பக்கம் உள்ள முதியவர்கள் என்று பலரிடமும் 'இந்தகிராமத்தில் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தை 58வது பீடாதிபதியாக அலங்கரித்த ஸ்ரீமத் ஆத்ம போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஸித்தி அடைந்த அதிஷ்டானம் எங்கிருக்கிறது? ஸ்ரீமடம் ஆவணம் இங்கு தான் இருப்பதாக சொல்கிறது. ஆனால் இப்போது அந்த இடம் இருந்ததற்கான சுவடே தெரியவில்லையே உங்களில் எவருக்கேனும் தெரியுமா, கேள்விப்பட்டது உண்டோ' என பலவிதத்திலும் விசாரித்ததில் பயன் ஏதும் கிட்டவில்லை.

இந்த நிலையில் அந்த புனித ஸமாதி இடத்தை எப்படியும் கண்டுபிடிப்பது என்ற ஸங்கல்பம் கொண்டது போல் அவ்விடத்தில் உள்ள வயல்கள், தோப்புகள் என பலவற்றையும் தானே நடந்து சென்று சோதிக்க ஆரம்பித்தார். ஒருநாள் காலையில் ஒரு வாழைத்தோப்பில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்து அந்த இடத்தை தோண்டிப்பார்க்க உத்தரவிட்டார். ஆனால் உடன் வந்த கிராம மக்கள் அங்கு சமாதி இருக்க வாய்ப்பில்லை என்று கூற, இருப்பினும் தான் சொல்லும் இடத்தை தோண்டி பார்க்கும்படி பணிக்க, மடத்தில் உள்ள குமாரமங்கலம் சாம்பமூர்த்தி என்பவர் மண்வெட்டி கொண்டு பெரியவர் காட்டிய இடத்தில் தோட ஆரம்பித்தார். 10, 15 அடி தோண்டிய உடன் ஒரு அதிசயம் தென்பட்டது.


என்னவெனில் மண்வெட்டி பூமியில் ஒரு கபாலத்தில் தட்டுப்பட்டு அப்படியே நின்றது. உடனே தோண்டிக் கொண்டிருந்தசாம்பமூர்த்தி அவர்கள் 'நிறுத்து, நிறுத்து...சதாசிவம் சதாசிவம்' என கத்திக் கொண்டு மூர்ச்சையாய் கீழே விழுந்தார். பெரியவர் இதுவே ஸமாதி ஸ்தலம் என்று கூறிவிட்டு உடனே முறைப்படி ஸமாதி அதிஷ்டானம் கட்ட ஏற்பாடு செய்யும்படி உத்தரவிட்டார். கூடியிருந்த அனைவரும் அதிர்ச்சியில் சிலையாக நின்றனர். எப்படி சர்வ சகஜமாக நேராக குறிப்பிட்ட இடத்திற்கு வந்து அடையாளம் காட்ட முடிந்தது என வியந்தனர். த்ரிகால ஞானிக்கு இவையெல்லாம் பெரியதா! மயக்கம் தெளிந்த சாம்பமூர்த்தி அவர்கள் சொன்ன விவரம் மேலும் வியப்பூட்டியது. பெரியவாள் சொன்ன இடத்தில் தோண்ட ஆரம்பித்த உடனேயே அந்த பள்ளத்தில் சிறிய சன்னியாசி உருவம் தென்பட்டதாம். பள்ளம் ஆழமாக ஆழமாக அந்த உருவமும் பெரியதாய் வளர்ந்து ஆகாயத்திற்கும் பூமிக்குமாய் காஷாயம், தண்டம், கமண்டலம்,விபூதி, ருத்ராக்ஷம் இவைகளுடன் கோடி சூர்ய ப்ரகாசத்துடன் நின்றதாம். அவர் முன் பல வேத வித்துக்கள் உபநிஷத் பாராயணம் செய்து கொண்டிருக்க திடீரென அம்மஹான் முன்னால் இருந்த வேதியர்களிடம் 'நிறுத்து நிறுத்து...சதாசிவம் சதாசிவம்' என்று சொன்னாராம். தானும் அதையே சொல்லி நினைவிழந்ததாகக் கூறினார். கி.பி.1638ல் ஸித்தியான அந்த மஹானின் ஸ்மாதி ஸ்தலத்தை 289 வருடம் கழித்து நடமாடும் தெய்வம் சுட்டிக் காட்டினார் என்றால் என்னே அவரது ஞானதிருஷ்டி...






இதில் மேலும் குறிப்பிடவேண்டிய செய்தி யாதெனில் 289 வருடம் முன் ஸித்தி அடைந்து அவரை புதைத்த இடத்தில் தோண்டியபோது அவர் விஸ்வரூப தரிசனம் தந்து அருள்பாலித்தார் என்றால் அந்த மஹான் எப்படிப்பட்ட தபஸ்வியாக இருக்கவேண்டும்! இது தான் காமகோடி பீட குருமணிகளின் மஹிமை. இந்த ஆத்மபோதேந்திர ஸ்வாமிகள் தான் உலகம் அறிந்த நாம சித்தாந்தம் செய்த கோவிந்தபுரம் ஸ்ரீமத்பகவன் நாம போதேந்திர ஸ்வாமிகளின் குருநாதர் என்பது குறிப்பிடத்தக்கது. இடமும் தெரியாமல் வழிபாடும் இல்லாதிருந்த ஒரு மஹானின் அதிஷ்டானம் பெரியவாள் அருட்பார்வையால் செப்பனிடப்பட்டு நித்திய வழிபாடுகளுடன் அருள் பாலிக்கிறது என்பது இன்னும் சிறப்பு.

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர. காஞ்சி சங்கர காமகோடி சங்கர.








Courtesy : தட்டச்சு: ஹாலாஸ்ய சுந்தரம் ஐயர்
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

Namaskaram

Narayanan .R

Narayanan Ramaswamy

No comments: