Wednesday, April 22, 2015

ஆஸ்திகனைக் காப்பாற்றிய நாஸ்திகன்











    ஆஸ்திகனைக் காப்பாற்றிய நாஸ்திகன்



கட்டுரையாளர்;எஸ்.கணேச சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

இது ஒரு மறு பதிவு.

ஒரு பக்தனைப் பெரியவா ஆந்திரா போய் வரச்சொன்னார்.

ரயிலில் அவருடைய பெட்டியில் அவர் அருகே ஒரு பிரபல
நாஸ்திகன்.! அவரைப் பார்த்ததும் பக்தனுக்கு வயிற்றில் புளியைக்கரைத்தது.அது ஒரு முதல்வகுப்பு கூபே. அவர்கள் இரண்டேபேர்தான் இருந்தனர். பக்த சாஸ்திரிகள் பயந்து நடுங்கினார்.

"தன்னந்தனியாக ஒரு நாஸ்திகனிடம் மாட்டிக் கொண்டோமே!
என்ன செய்து விடுவானோ?" என்று நெஞ்சு 'திக்திக்'என்று
அடித்துக் கொண்டது. டிக்கெட் சரிபார்ப்பவர் வந்தால்
இருப்பிடத்தை மாற்றிக்கொண்டு விடலாமே என்று வழி
பார்த்திருந்தார். இரவு ஆனதும் தூங்க முடியாமல் தவித்தார்.

நாஸ்திகத் தலைவருக்கு சாஸ்திரிகள் பயப்படுவது புரிந்து விட்டது.

"ஐயரே! உட்காருங்கள்,எதற்காக பயப்படுகிறீர்கள்? வேறு
பெட்டிக்குப் போய்விடலாமென்றுதானே எண்ணம்? 

பயப்படாமல்பேசாமல்...தூங்குங்கள்.நான் எதுவும் செய்ய மாட்டேன். நீர்எங்கேயும் போக வேண்டாம். ஒண்ணு தெரியுமா? நாம் போறவழியில் ஒரிடத்தில் பெரிய கலாட்டா நடந்து கொண்டிருக்கிறது.

அதைத் தாண்டித்தான் நமது வண்டி போகணும். நீர் வேற
எங்கேயாவது இடம் மாற்றிக்கொண்டு சென்றால்,அடி,உதை,
கல்லடி என்று அகப்பட்டுக் கொள்வீர்.இங்கேயே இருங்கள்.
எனக்காக இந்தப் பெட்டியருகில் போலீஸ் பாதுகாப்பு
ஏற்பாடெல்லாம் செய்யப்பட்டிருக்கு. பேசாமல் என்னோடு
வந்தால் சௌகரியமாக ஊர் போய்ச் சேரலாம். பாவம்!பார்த்தால்
நல்லவராகத் தெரிகிறது.உங்கள் நன்மைக்குத்தான் சொல்கிறேன்!"என்று நிலைமையை விளக்கினார். 

சாஸ்திரிகளுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.

"என்னடா இது !மேடையில்ஏறினால்,பாம்பையும்,
பார்ப்பானையும் கண்டால் முதலில் பார்ப்பானை அடி என்று சொல்பவர்.எனக்கு அடி விழக்கூடாதென்று தன்னுடைய பாதுகாப்பில் அழைத்துச்செல்கிறாரே!" என்று காதுகளை நம்ப முடியாமல் திணறினார்.

ஒருவரை நெருங்கிப் பழகினால்தான் நம்மால் புரிந்து கொள்ள முடியும்.எல்லோரிடமும் நல்ல குணம்,கெட்ட குணம் என்று இரண்டும்இருக்கின்றன.எவரையும் வெறுக்கக் கூடாது என்று நினைக்கிறார்.

அதற்கு மேல் அதிசயம் என்னவென்றால், நாஸ்திகர் பெரியவாளைமிகவும் போற்றிய வண்ணம் பேசிக்கொண்டே வந்ததுதான்.

விடியற்காலை இறங்க வேண்டிய ஸ்டேஷன் வந்தது.நாஸ்திகர்
சாஸ்திரிகளை எழுப்பி, அவர் பெட்டியை இறக்கிக் கீழே
வைப்பதிலும் உதவிசெய்து, "பெரியவாளுக்கு என் நமஸ்காரத்தைசொல்லுங்கள்!" என்று இரு கை கூப்பி வழியனுப்பி வைத்தார்.

இதுதான் பெரியவா மகிமை.அவரும் எல்லாரிடமும் ஒரே விதமான பிரியத்துடன்தானே இருந்தார். தன் பக்தன் கலாட்டாவில்மாட்டிக் கொள்ளாமல் பயணம் செய்ய பெரியவாளே செய்த ஏற்பாடோ இது என்று கூடத் தோன்றுகிறது.






                           



Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

No comments: