ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்
பச்சைப் பட்டு பாவாடை
சின்னப் பெண் குழந்தை ஒருத்திக்கு அவ ஆசைப்பட்டுக் கேட்ட ஒரு பொருளைத் தந்த சம்பவம் நெகிழ்ச்சியானது.
ஒரு சமயம் பரமாச்சார்யார், காஞ்சி மடத்துல சந்திரமௌலீஸ்வர பூஜை செய்துகொண்டு இருந்தார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேல அந்த பூஜை நடக்கும். நடுவுல எதுக்கா
கவும் நிறுத்த மாட்டார். ஆராதனை நடத்தறப்ப பேசவும் மாட்டார். மகா பெரியவர் பூஜை பண்றதை தரிசிக்க வந்த கூட்டம் கூடம் முழுக்க நிரம்பி வழிஞ்சுது.
வழக்கப்படியான ஆராதனைகளை செய்து கொண்டு இருந்தார் மகா பெரியவர். பார்க்க வந்திருந்த பக்தர் கூட்டத்துல ஒரு பாட்டி தன்னோட பேத்தி கூட தொலைவில் ஒரு மூலையில உட்கார்ந்து இருந்தாங்க. பெரியவா பூஜை பண்றதை பார்த்துக்கிட்டு இருந்த சமயத்துல அந்தப் பாட்டிதன் பேத்தி கிட்ட ஏதோ சொல்றதும், அந்தக் குழந்தை, "ஊஹூம்!, முடியாது... இப்பவே!"ன்னு சொல்லி அடம் பிடிக்கறதுமாக இருந்ததை எல்லாரும் பார்த்தாங்க.
குழந்தை வீட்டுக்குப் போகத்தான் அடம் பிடிக்குது. பாட்டிசமாதானப்படுத்தறாங்கன்னு எல்லாரும் நினைச்சாங்க. ஆனா, கொஞ்ச நேரத்துல அந்தக் குழந்தை, "அதோ அந்தப் பொண்ணு கட்டிண்டு இருக்கற மாதிரி எனக்கும் பச்சைப் பட்டுப் பாவாடை வேணும்..!"னு கேட்டு அழறது எல்லாருக்கும் சத்தமாகவே கேட்டுச்சு.
பாட்டி எவ்வளவு சமாதானப்படுத்திப் பார்த்தும் குழந்தை அடம் பிடிக்கறதை நிறுத்தவே இல்லை. எல்லாரும் தலையைத் திருப்பித் திருப்பிப் பார்க்கிறார்கள். குழந்தை சமாதானம் ஆகிற மாதிரியும் தெரியலை. எந்தக் குழந்தையோட பட்டுப் பாவாடையைப் பார்த்து அப்படிக் கேட்குதுன்னும் புரியலை.
அந்த சமயத்துல யாருமே எதிர்பார்க்காத ஒரு விஷயத்தைப் பண்ணினார் மகா பெரியவர்.
செய்துகிட்டு இருந்த பூஜையை நிறுத்தி விட்டு, அந்தப் பாட்டியை சைகையால கிட்ட கூப்பிட்டார்.
எல்லாரும் இப்போ அந்தப் பாட்டியையும் பேத்தியையுமே பார்த்தாங்க. பூஜைக்கு இடைஞ்சல் பண்றத்துக்காக கண்டிக்கப் போறார், வெளியில போகச் சொல்லப் போறார், இப்படி ஆளுக்கு ஒரு மாதிரி நினைக்கத் தொடங்கினாங்க.
பாட்டி கூச்சத்தோட நெளிஞ்சுகிட்டே பெரியவா முன்னால வந்தாங்க. அன்போட அவர்களைப் பார்த்த பெரியவர், ஆசீர்வாதம் செய்யற மாதிரி கையாலே ஜாடை காண்பிச்சார்.
அதுக்கப்புறம் மடத்து சிப்பந்தி ஒருத்தரை ஜாடையால கூப்பிட்டு, குழந்தை கேட்கிற மாதிரி ஒரு பாவாடையைக் கொண்டு வரும்படி ஜாடையாலேயே சொன்னார்.
இப்போ மாதிரி, ரெடிமேடா பட்டுப் பாவாடை எல்லாம் கிடைக்காத காலகட்டம் அது. அதுலயும் கண்டிப்பா அஹிம்சா பட்டு தான் உபயோகப்படுத்தணும்கறது பெரியவாளோட கட்டளை. இப்படிப்பட்ட சமயத்துல எங்கே இருந்து அப்படி ஒரு பட்டுப் பாவடையை வாங்கிட்டு வர்றதுன்னு குழம்பினார் மடத்து சிப்பந்தி.
ஆனா, சொல்லி வைச்ச மாதிரி, மடத்துக்குப் பக்கத்துல இருந்த கடையிலேயே அந்தக் குழந்தைக்கே அளவு எடுத்துத் தைச்சு வைச்ச மாதிரி பச்சைக் கலர்ல ஒரு பட்டுப் பாவாடை கிடைச்சுது.
வாங்கிட்டு வந்து தந்ததும், அந்தப் பாவாடையை குழந்தைக்கு கட்டிவிடும்படி ஜாடையாவே சொன்ன பெரியவர், அவளை அப்படியே மணையில் உட்கார வைச்சு கன்யா பூஜை பண்ண ஆரம்பிச்சுட்டார்.
எல்லாருக்கும் ஆச்சரியம். பாட்டிக்கு நெகிழ்ச்சி. குழந்தைக்கு பச்சைப்பட்டுப்பாவாடை கிடைச்ச சந்தோஷம். இப்படி எல்லாமும் சேர்ந்து அன்றைய பூஜை ஆனந்தமா நிறைவடைஞ்சது.
இது நடந்து ஒரு மாதத்துக்கு அப்புறம் மடத்துக்கு அழுதுகிட்டே வந்தாங்க அந்தப் பாட்டி. தன்னோட பேத்தி இறந்துட்டதா சொன்னாங்க.
மகா பெரியவர் கொஞ்சமும் சலனம் இல்லாம, அந்தப் பாட்டியைப் பார்த்தார். "அன்னிக்கு நான் சந்திரமௌலீஸ்வர பூஜை பண்ணினபோது, பச்சைப் பட்டுப் பாவாடை கட்டிண்டு இருந்த இன்னொரு குழந்தை இருக்கறதா உன் பேத்தி சொன்னாளே நினைவிருக்கா ? மற்ற யாருக்குமே அப்படி ஒரு குழந்தை இருந்ததாகவே தெரியாதபோது, அவமட்டும் எப்படிப் பார்த்தா ?" என்று கேட்டார்.
திருதிருன்னு விழிச்சாங்க பாட்டி. சுத்தி இருந்த எல்லாரும், பெரியவர் ஏதோ சொல்லப் போறார்னு ஆச்சர்யமா பார்த்தாங்க.
"நான் பூஜை செய்தப்ப, அம்பிகை பாலா வந்து என் மடியில உட்கார்ந்து தானும் சேர்ந்து சிவனுக்கு அர்ச்சனை செய்தா. அவளைத்தான் உன் பேத்தி பார்த்திருக்கா. பாலாம்பிகை கட்டிக்கிட்டு இருந்த மாதிரியே தனக்கும் பாவாடை வேணும்னு கேட்டிருக்கா.
தெய்வத்தையே நேரடியா தரிசனம் பண்ணின உன் பேத்தி மகா புண்ணியம் பண்ணினவ. அவ நேரடியா மோட்சத்துக்கே போயிட்டா...! அதனால கவலையேபடாதேம்மா...!"
அமைதியாகச் சொன்னார் மகா பெரியவர். அம்பிகையே அவர் பூஜை செய்யும்போது நேரில் வருகிறாள். குழந்தையாக அவர் மடியிலேயே அமர்ந்து தானும் சிவ பூஜை செய்கிறாள் என்றால், அவர் எத்துணை பெரிய மகான்!
Jaya Jaya Shankara, Hara Hara Shankara !
Jaya Jaya Shankara, Hara Hara Shankara !
Thanks to Periva Forum
Courtesy : Facebook post : Varagooran Narayanan
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.
No comments:
Post a Comment