Thursday, March 5, 2015

எழுத்தாளர் ஜெயகாந்தன் -"எண்ணியது உண்மைதான்.ஆனால் பெரியவர்கள் முன்னால் நின்ற போது எதுவுமே பேசத் தோன்றவில்லை!"









சொன்னவர்-மணியன்-எழுத்தாளர்.
தொகுத்தவர்-எஸ்.லட்சுமிசுப்ரமணியம்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

எழுத்தாளர் ஜெயகாந்தன் எனது இனிய நண்பர்.
சில விஷயங்களில் எங்களுக்குள் கருத்து
வேறுபாடு இருந்தாலும்,மனம் விட்டுப் பேசிக்
கொள்வதில் எங்கள் இருவருக்குமே ஓர்
அலாதியான திருப்தி கிடைப்பதுண்டு.

பேசிக்கொண்டே இருந்தபோது அன்று,
"காஞ்சிபுரத்துக்குப் போய் பெரியவர்களைப்
பார்க்கணுமே?" என்றார். திடீரென்று அவர் அப்படிச்
சொன்னது எனக்கு வியப்பாக இருந்தது.
காரணத்தைக் கேட்டேன்.

"கனவிலே அவர் வந்தார். நேரிலே அவரைப் பார்த்து
சில சந்தேகங்களைப் பற்றிக் கேட்கணும் என்று ஓர்
ஆசை!" என்றார் ஜெயகாந்தன். அவரை நான் 
காஞ்சிபுரத்துக்கு அழைத்துக்கொண்டு போனேன்.

எஸ்.வி.சுப்பையாவின் தோட்டத்தில் சிறு குடிலில்
அமைதியாகத் தங்கி இருந்தார் பரமாச்சாரிய
சுவாமிகள்.பிரமுகர்களும் பக்தர்களும் பலர்
வந்திருந்தார்கள். அப்போது கோகர்ணம்-கஜகர்ணம்
இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை விளக்கிக்
கொண்டிருந்தார்கள். அந்தப் பேச்சின் எளிமையில்
மயங்கி நின்றார் ஜெயகாந்தன்.

எதுவுமே பேசவில்லை.தரிசனம் அப்படியே முடிந்தது.

வெளியே வந்ததும் அவரிடம் "என்ன ஆயிற்று?
ஏன் இப்படி?" என்று கேட்டேன். "ஏதோ கேட்க வேண்டும்
என்று சொன்னீர்களே?" என்றும் ஞாபகப்படுத்தினேன்.

அவர் ஒரு கணம் யோசித்துவிட்டு,
"எண்ணியது உண்மைதான்.ஆனால் பெரியவர்கள்
முன்னால் நின்ற போது எதுவுமே பேசத் தோன்றவில்லை!"
என்று கூறிவிட்டுச் சிரித்துக் கொண்டார்.

மற்றொரு முறை தரிசனத்துக்குப் போயிருந்தபோது
மகா சுவாமிகள் தனிக்குடிலில்,கிணற்றின் அருகே
மௌனமாக அமர்ந்திருந்தார்கள்.அவரைப் பார்க்க
கிறிஸ்துவ கன்னிமார்கள் கிணற்றின் மறுபுறம்
மண்டியிட்டபடி முணுமுணுத்தது தெரிந்தது.

தரிசனம் முடிந்து அவர்கள் வெளியே வந்தபோது
அவர்களிடம் கேட்டேன்.

"நாங்கள் விரும்பியதை மௌனமாகக் கேட்டுக்
கொண்டிருந்தோம். அவ்வளவிற்கும் அவர் பதில்
சொல்லிக் கொண்டிருந்தார்கள்!" என்றார்கள்.

நான் பிரமித்துப் போனேன். மௌனத்திலும் விளக்கம்
தந்து, தட்சிணாமூர்த்தியாக நின்ற முனிவரின் 
பெருமையை எண்ணி வியந்து போனேன்.












Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

THANKS FOR JAYAKANTHAN PHOTOS POSTED BY HIS FOLLOWER

No comments: