Tuesday, May 19, 2015

யோக புருஷர்; ஸித்தர்.கோபத்தை மட்டும் ஜெயிக்க முடியவில்லை.


யோக புருஷர்;ஸித்தர்.கோபத்தை மட்டும் ஜெயிக்க முடியவில்லை.

யார் ஸித்தர்?"

தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்








பிற்பகல் இரண்டு மணி,கடுமையான வெய்யில் நேரம்.
வங்காளத்தைச் சேர்ந்த ஒரு பெரியவர் வந்தார்.

விழுப்புரம் அருகில் வெங்கடாத்ரி அகரம் என்ற
கிராமத்தில்,1948 சாதுர்மாஸ்யம். பாஷ்ய பாடம்
நடந்ததால்,பெரியவாளை உடனே தரிசிக்க 
முடியவில்லை.

(ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் ஐம்பத்தெட்டாவது
பீடாதிபதியான ஸ்ரீ ஆத்மபோதேந்திர சரஸ்வதி 
ஸ்வாமிகளின் அதிஷ்டானம் வெங்கடாத்ரி அகரம்
அருகில் வடவம்பலத்தில் இருப்பதாக, ஸ்ரீமடத்தின்
ஆவணங்களிலிருந்து தெரியவந்தது. ஆனால்,சரியான
இடம் தெரியவில்லை. மகாப்பெரியவாளின் முயற்சியால்
அந்த அதிஷ்டானம் கண்டுபிடிக்கப்பட்டது. 17-01-1927ல்
அந்த இடம், முறையான வழிபாட்டுக்கு உரியதாக
மந்திரச் சடங்குகள் மூலம் துவக்கி வைக்கப்பட்டது.)

"பெரியவா எங்கே?" என்று ஹிந்தியில், கொதிக்கும்
குரலில் கேட்டார், வங்கத்துச் சிங்கம்.

"சாயங்காலம் தரிசனம் பண்ணலாம்" என்றார்,
மடத்துச் சிப்பந்தி.

வந்தவர், துர்வாசரின் அவதாரம்!

"என்னது? சாயங்காலமா?... என்னை வரச்சொல்லிவிட்டு,
அவர் வெளியே போய்விட்டால் என்ன அர்த்தம்?..
அவர் வருகிறபோது வரட்டும்,நான் ஊருக்குப் போகிறேன்"
என்று பயங்கரமாக உறுமிவிட்டு, அருகிலிருந்த
சேர்ந்தனூர் என்னும் ரயில்வே ஸ்டேஷனை நோக்கி
நடக்கத் தொடங்கினார்.

மடத்துப் பணியாளருக்குக் கோபம் வந்தது.

"என்ன மிரட்டுகிறீரா?..உம்மை யார் வரச்சொன்னது"
சாமியார் வேஷம், வேறே! தாடி,ஜடாமுடி...!
இத்தனை கோபம் கூடாது...."

அவர் சொல்லிக்கொண்டிரூக்கும் போதே, பாராக்காரன்
ஓடி வந்தான். 

"சாமி,அங்கே பாருங்க, கரும்புத் தோட்டத்திலே நம்ம
எசமான் ஓடிப் போறாங்க"

சிஷ்யர் பெரியவாளை நோக்கி ஓடினார்.

பெரியவாளும் வங்காளச் சாமியாரும், தனியாக
சந்தித்து ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள்.

பின்னர், பெரியவாள் சிஷ்யரை அருகில் அழைத்து,
வங்காளப் பரதேசிக்கு, சிற்றுண்டி வாங்கிக் கொடுத்து
ரயிலேற்றி விடச்சொன்னார்கள்.

சீடர் அவ்வாறே செய்துவிட்டுத் திரும்பினார்.

அவரைப் பார்த்ததும் பெரியவா சொன்னார்கள்.

"நான் காசியாத்திரை செய்துவிட்டு, வங்காளம்
மிதுனாப்பூர் வழியாக வந்தேன். அப்போது,இந்த ஸாது
சில தினங்கள் முகாமில் தங்கியிருந்தார். யோக புருஷர்;
ஸித்தர்.கோபத்தை மட்டும் ஜெயிக்க முடியவில்லை.

முகாமிலிருந்து விடை பெற்றுச் செல்லும்போது,
'மறுபடி தரிசனம் எப்போது கிடைக்கும்?' என்று கேட்டார்.
பதினைந்து வருஷம் கழித்துத் தென்னிந்தியாவில்
கிடைக்கும்- என்றேன்.ராமபிரான் வருகையை
எதிர்பார்த்து பரதன் நாள்களை எண்ணிக்கொண்டிருந்த
மாதிரி, இவரும் நாள்களை எண்ணிக்கொண்டு,
இன்றைக்கு இங்கே இத்தனை மணிக்கு வந்திருக்கிறார். 

இவர்களில் யார் ஸித்தர்?

ஸித்தர்களில் பெரியவர்-சிறியவர் என்ற பாகுபாடு உண்டோ?

பித்தர்கள், நாம்! என்ன தீர்மானிக்க?













Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

No comments: