மஹா பெரியவா என்கிற வார்த்தையே
பிராண வாயு.
மஹா பெரியவா என்கிற வார்த்தையே பிராண வாயு. மூச்சுக்காற்று. சகல துக்க நிவாரணி. சர்வ ரோக நிவாரணி. சர்வ பாபநாசினி. இன்னும் என்ன சொல்ல? கோடானு கோடி சம்பவங்களில் ஒன்று அடி மனதை தொட்டு விட்டது. அதை உங்களுக்கும் பரிமாறி அந்த வார்த்தைக்கப்பால் பட்ட சுகானுபவம் நீங்களும் பெற எனக்கு ஆசை. எங்கிருந்தோ எனக்கு வந்ததை சற்று செப்பனிட்டு அளிக்கிறேன்.
டாக்டர் சிவசங்கர் அமெரிக்காவே தஞ்சம் பிறந்த தமிழகமோ தாய் நாடு இந்தியாவோ ஒரு உபயோகமற்ற, உருப்ப டாத சாக்கடை, இந்தியர்கள் திருத்த முடியாத காட்டுமிராண்டிகள் தன்னைத்தவிர என்ற அமெரிக்க- தா(க் )க- இந்தியர். இந்தியாவுக்கு மனத்தில் விருப்பமில்லாமல் மனைவியின் தொண தொணப்பு தாங்காமல் வந்து கொண்டிருக்கிறார்.
போயிங் விமானத்தின் ஜன்னல் வழியாக சென்னையின் தென்னை மரங்கள் மெல்ல அணுகிக் கொண்டிருக்க, கட்டடங்கள் கான்க்ரீட் கொம்புகள்போல முளைத்தன. நுரை மீசை வைத்திருந்த கடலலைகளின் அருகே வெண்மணல் பாக்கி இருந்தது.
“சரியா இருபது வருஷம் ஆச்சு இந்த மெட்ராசை விட்டு”
“நிறைய மாறுதல் இருக்கும்” என்றாள் பாகீரதி.
“கடல் மட்டும்தான் மாறலை !”பாகீரதி தன் கைப்பெட்டியைத் திறந்து, சின்னச் சின்ன பல வர்ணக் குப்பிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துத் திறந்து கவிழ்த்து கிடைத்த ரோஜா நிறக்குழம்பை எடுத்து முகத்தில் தேய்த்துக் கொண்டு தன் வயசைப் பத்து நிமிஷம் குறைத்துக் கொண்டாள். விமானத்தில் குப்பென்ற வாசனை சூழ்ந்தது.
“சங்கராச்சாரியாரைப் பார்க்கப் போறதுக்கு மேக் அப்பா ?”
“மேக் அப் இல்லை வெய்யில் தாங்காது என் ஸ்கின்.”
“மே ஐ ஹேவ் யுர் அட்டென்ஷன் ப்ளீஸ்…!” என்று மண்டை மேல் இருந்த ஸ்பீக்கர் கமறியது. அதற்கப்புறம் புரியவில்லை.
“உலகத்திலேயே மோசமான ஏர்லைன்னு வருஷா வருஷம் இந்தியன் ஏர்லைன்சுக்குத்தான் பரிசு தரணும்.”பாகீரதியின் ஆழ்ந்த மௌனத்தைத் தொடர்ந்து, “உலகத்திலேயே மோசமானதொரு ஏர்போர்ட் பாம்பே” என்றார்.பாகீ அவரைக் கடைக் கண்ணால் பார்த்து, “உங்க இந்தியா தூஷணையை ஆரம்பிச்சுட்டீங்களா ?”
“உண்மையைத்தானே சொல்றேன். இந்த நாடு உருப்படுமா சொல்லு. ஏர்போர்ட்டில் குடிக்க ஒரு வாய் தண்ணி கிடையாது. உட்கார ஒரு நாற்காலிகிடையாது. அமெரிக்கால Confirm பண்ண டிக்கெட் இங்க மெசேஜ் வரலைங்கிறான். ப்ளேன் மூணு மணி நேரம் லேட்டு. எதுக்காக இந்த நாட்டுக்குஏரோப்ளேன் ?”பாகீரதி பேசாமல் இருந்தாள். இந்த மாதிரி கேள்விகளுக்கெல்லாம் பதில் சொன்னால் இன்னும் பெரிசாக வாக்குவாதம் வளரும்.
“காஞ்சீபுரத்தில் ஓட்டல் ஏதாவது உண்டா இல்லை வயக்காட்டு பக்கம் ஒதுங்கலாமா ?”பேசவில்லை.
“அலுமினிய சொம்போட ?”பேசவில்லை.விமானம் தரை தொட்டு ஒரு தடவை குதித்தது.
“என்ன மோசமான லாண்டிங் !”விமானம் ஊர்ந்தது.
“உனக்கு வேணும்னா அவரைத் தரிசனம் பண்ணிக்கோ. எதுக்காக என்னை இழுக்கறே !”
“நீங்களும் பார்க்கணும்.”
“எதுக்கு நான் ? எனக்குத்தான் இதில் எல்லாம் நம்பிக்கை கிடையாதே. நான் ஒரு ஃபிசிக்ஸ் ஆசாமி — அக்னாஸ்டிக் !”பாகீ இந்தப் பேச்சைத் தொடர விருப்பமின்றி,
“இன்னிக்கு என்ன கிழமை ?” என்றாள்.
“இந்தியாவுக்கு வந்து இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்துக்குக் காத்திருந்து கிழமையே மறந்து போச்சு….”
“எத்தனை நேரம்?இவங்களுக்கெல்லாம் எதுக்கு ஏரோ பிரிட்ஜ்?”பிரயாணிகள் இறங்க அவசரப்பட்டு முன் வாசலில் நெருக்கினார்கள்.
“மூணு மணி நேரம் உட்கார்ந்திருந்தாங்க. மூணு நிமிஷம் கதவு திறக்கப் பொறுமை இல்லை ........ இந்தியன்ஸ்!”
“நீங்க இந்தியன் இல்லையா ?” என்று கேட்க விருப்பமின்றி பாகீ பேச்சை மாற்றினாள்.
“நீங்க முதல்ல அமெரிக்கா புறப்படறப்ப எத்தனை டாலர் வச்சிருந்தீங்க ?”
“ரெண்டு டாலர்! ஜஸ்ட் டூ டாலர்ஸ் !”அது அவருடைய செல்ல ‘டாபிக்.’ எத்தனை தடவை சொல்லியிருக்கிறார் !
“கென்னடில வந்து இறங்கறேன், டெலிபோன் செய்யக் காசு இல்லை. ‘கலெக்ட் கால்’ னா என்னன்னே தெரியாது. அப்ப அங்க ஒரு….”அவர் வாழ்க்கையில் முன்னேறிய கதையை 27வது தடவை கேட்கத் தயாரானாள்.சீட்டிலேயே உட்கார்ந்திருந்து, எல்லோரும் இறங்கியதுமே அவர்கள் வெளியே வந்து பாலம் கடக்கும் போது, உஷ்ணம் அவர்களைத் தாக்கி, ஐம்பதுஅடி அவர்களுடனேயே கூட வந்து ‘ஏசி’க்குக் கொண்டு வந்துவிட்டது.
‘எஸ்கலேட்டர் அவுட் ஆப் ஆர்டர் ‘ என்று போர்டைப் பார்த்து சிவசங்கரன் நக்கலாகச் சிரித்தார்.
“இருக்கிற ஏழை ஜனங்களுக்கு உணவும் உடையும் கொடுத்து, பாப்புலேஷனை கண்ட்ரோல் பண்ணா போதும். மத்த எதுவும் வேண்டாம்இந்தியாவுக்கு. சாட்டிலைட் எதுக்கு ? எதுக்காக மிசைல் ப்ரோக்ராம் ?” என்று மூன்று வரியில் இந்தியாவுக்கு விமோசனம் சொன்னார்.பாகீ மௌனமாகவே வந்தாள். அமெரிக்காவில் இருந்தால் விவாதித்திருப்பாள்…. ‘நாமெல்லாம் இதைச் சொல்வது ரொம்பச் சுலபம், நடைமுறைதான் கஷ்டம்’ என்று.இங்கே பாகீரதி அவருடன் எந்த விதத்திலும் வாதாட விரும்பவில்லை, காஞ்சிபுரம் போய்ச் சேரும் வரையாவது!கீழே ஹாலில் இறங்கினதும் கைவண்டி எடுத்துக் கொண்டார். அதன் சக்கரங்கள் சண்டி பண்ண, “சேச்சே ! ஒரு கைவண்டி சரியா பண்றாங்களாபாரு இந்தியாவிலே …”கன்வேயரில் சுயம்வர ராஜகுமாரி போல் ஊர்ந்து வந்து கொண்டிருந்த அவர்கள் பெட்டியை, ஒரு சிப்பந்தி அதன் பாகேஜ் சீட்டைத் தப்பாகப் படித்து,எடுத்து வைத்துக் கொள்ள, சிவசங்கரன் “எக்ஸ்க்யூஸ்மி, எக்ஸ்க்யூஸ்மி” என்று ஓடிப் போய் அவன் கையைப் பிடித்துத் தடுக்க, அந்தச் சிப்பந்தி. “பொட்டி உன்னுதுன்னா சொல்லு – மேல கை போடாதே ! நீ கை வச்சா நான் கை வைக்க எத்தினி நேரமாகும் ? நீ சீமான்னா உங்க ஊரோட வச்சுக்க— இந்தப் பேட்டைல நான் சீமான் “ என்றான்.
“வாட் வாட் ?”அவர் திரும்பிய போது முகம் சிவந்திருந்தது. கைகள் உதர ஸார்பிட்ரேட் மாத்திரை எடுத்து அடக்கிக் கொண்டார்.
“ஃபூல்ஸ் ! ஃபிலிஸ்டைன்ஸ்…” பாகீரதியின் மேல் பாய்ந்தார்.
“எல்லாம் உன்னால தான். எதுக்காக என்னை இந்த மாதிரி அவமானப்படுத்தறே? நான்தான் இந்தியா வர மாட்டேன்; பிரின்ஸ்டன்லயே இருக்கேன்;எனக்குப் பிடிக்காது இதெல்லாம்னு சொன்னேனில்லையா? எதுக்காக என்னை டார்ச்சர் பண்றே ? நான் எதுக்காக மெட்ராஸ் ஏர்போர்ட்டில ஒருபொறுக்கி கிட்ட கெட்ட வார்த்தை கேட்கணும் ?”
“டேய் ...... யார்ரா பொறுக்கி! ஒரு உதை விட்டன்னா அரை டிராயர்லாம் ரத்தம் ஆயிரும் !”
“நீங்க வாங்க; அவனோட என்ன ?”பாகீரதி அவசரமாக வெளியே வந்தாள்.இந்த உச்ச சமயங்களில் பேசவே கூடாது.வராந்தாவுக்கு வந்தார்கள். வாசலில் கார் காத்திருக்கும் என்று சொன்னார்கள். யார் என்று தெரியவில்லை. அவரவர் அவரவர் கார்களில்ஆரோகணித்துக் கதவு சாத்திக் கொண்டு புறப்பட்டுச் செல்ல, சற்று நேரத்தில் வராந்தா காலியாகி விட்டது.
“ஆட்டோ போலாங்களா ? செவண்டி ருப்பீஸ் கொடுத்துருங்க. எங்க மைலாப்பூர் தானே !”
“நான் எங்கே போனா உனக்கென்ன ?”
“அவனோட பேச வேண்டாம்.”
“சும்மனாங்காட்டியும் கேட்டேன். கோவிச்சுக்கிறியேம்மா !”அப்போது ஒரு டிரைவர் வந்து, “நீங்க டாக்டர் சிவராமனா ?”
“டாக்டர் சிவசங்கர்.”
“காஞ்சி பார்ட்டி நீங்கதானே ?ப்ரதிபா டிராவல்சிலே வண்டி கேட்டிருந்தீங்களே !”
“ஆமாம்.”
“இருங்க வண்டி வந்திருக்குது.”
“நான் சிவராமன் இல்லைப்பா.”
“சரி சிவசங்கர். வாங்க! உங்களுக்குத்தான் வண்டி.”பாகீரதிக்கு அந்த டாக்ஸி டிரைவரைப் பிடித்திருந்தது. பெட்டியை எடுத்து வைத்துக் கதவை மரியாதையாகத் திறந்து, மூடி, ஓடிப் போய் சீட்டில்அமர்ந்தான்.
“ஒரு பேரை ஒழுங்காக் கொடுக்கத் தெரியலை; என்ன ட்ராவல் எஜெண்டுப்பா !”
“அது சில சமயங்கள்ள தப்பாயிருதுங்க, டெலெக்ஸ்ல….”
“எது சரியாய் இருக்கு உங்க நாட்டில ?”
“டிரைவர் உங்க பேரு என்ன ?”
“பால்ராஜு...ங்கம்மா. ஏசி போட்டுரலாங்களா…? காசட் போட்டுரலாங்களா…?” காசட்டைச் செருகினான்.
“கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் காதல் என்று அர்த்தம்….”
“எனக்குக் காதல் வேண்டாம்ப்பா !”கார் கிளம்பி நெடுஞ்சாலையில் சேர்ந்து கொண்டது.
“பக்தி பாட்டு போடட்டுங்களா ?”
“எதுவும் வேண்டாம்ப்பா, ஆளை விடு!”
“பூந்தமல்லி பக்கம் திரும்பியதும், “பால் ராஜ், மெதுவாப் போங்க, அவசரமே இல்லை.”
“நீங்க பெரியவரைத் தரிசனம் பண்ண வேண்டாமா இன்னைக்கு ? போயிரலாங்க ரெண்டு அவர்ல.”
“நாளைக்கு மெதுவா தரிசனம் பண்ணிக்கறம்பா. எனக்கு அவசரம் இல்லை. நான் பார்க்கலைன்னாக்கூட பரவால்லை. இந்த அம்மாதான்…இதுக்காகவே அமெரிக்காவிலிருந்து வந்திருக்குது !”
“அப்படீங்களா ? சந்தோசங்க. மனித தெய்வம் சார் பெரியவரு. இதுவரைக்கும் எம்பத்தொன்பது முறை தரிசனம் பண்ணிட்டேங்க! இன்னம்பதினொன்று பண்ணா நூறாயிடும் — அவருக்கு நூறு வயசு ஆனாப்பல….”
“பால்ராஜ் நீங்க கிறிஸ்டியன்தானே ?
“ஆமாங்க அதனாலே என்ன சார் ?”
“Funny !” என்றார் சிவசங்கர்.
“எங்க வீட்டுல அவருதாங்க தெய்வம். அவரு என்ன சொல்றாரு ? நீ சர்ச்சுக்குப் போ – மசூதிக்குப் போ – கோயிலுக்குப் போ — கடைசில — எல்லாதெய்வங்களும் ஒண்ணு தானே ….”
“விபூதி வரவழைப்பாரா ?”
“அது சாய்பாபாங்க. அவர் உங்களைப் பார்த்தாலே போதுங்க — நினைச்ச காரியம் நடக்கும்.”
“உனக்கு நடந்ததா ?”
“பின்ன ? நம்ம புள்ள ரோஸ்மேரிக்குத் தபால் ஆபீஸ் உத்தியோகம் கிடைக்கணும்னு ஒருமுறை கேட்டேங்க. அடுத்த ட்ரிப்ல ஆர்டர் வந்துருச்சு !”
“அப்படியா டெலிபோன்ஸ்லயும் இருக்காரா இவர் !” என்றார்.அந்தக் கேலியை பால்ராஜ் கவனிக்கவில்லை.
“பெரியவர்தாங்க தெய்வம். தூரக்க இருந்து பார்த்து மனசில கேட்டா காரியம் நடக்குது. உங்களுக்கு என்ன வேணுங்க !”
“காஞ்சிபுரத்தில நல்ல ஓட்டல்பா !”
“அம்மா உங்களுக்கு ?”
“நிம்மதி “ என்றாள்.
“அய்யாதான் கேலியாய்ப் பேசறாரு !”
“பால்ராஜ், பாருங்க எனக்கு இதிலே எல்லாம் நம்பிக்கை இல்லை. நான் செய்யற ஆராய்ச்சில கடவுள் தேவைப்படறதில்லை.”
“எனக்குத் தேவைப்படுதுங்க.”
“லுக் அவுட் !” என்று கத்தினார்.வண்டி ஒரு லாரியை நூலிழையில் தவிர்த்து, தார் சாலையை விட்டு இறங்கி பாம்பு போல் நெளிந்து மரத்தருகே நின்றது.அவர் உடல் நடுங்கி நெற்றி வியர்வை படர்ந்திருக்க, பால்ராஜ் இறங்கி டயரை உதைத்து, “பஞ்சர்ங்க! பதினைந்து நிமிஷத்தில ஸ்டெப்னிபோட்டுரலாங்க. இளநி சாப்பிடுங்க.”சிவசங்கர் சிகரெட் பற்றவைத்தார். மரத்தடியில் கயிற்றில் குலை குலையாக இளநீர் தொங்கியது.
“இளநி சீவலாங்களா ?”
“வேண்டாம்ப்பா .”
“சீவிட்டேங்களே…”பாகீரதி பதற்றத்துடன் மற்றொரு வாக்குவாதத்தை எதிர்பார்த்தாள்.
“சரி, குடு” என்றார். நல்ல வேளை.இளநீரை உறிஞ்சுகையில், “இந்தியால இது ஒண்ணு தான் உருப்படியா இருக்கு !”பால்ராஜ் டயர் ஸ்பானரை டிக்கி இடைவெளியில் செருகி விட்டு, “போவலாங்க” என்றார்.
“இளநி சாப்பிடுங்க பால்ராஜ்” என்றாள் பாகீ.
“வேண்டாம்மா. பெரியவரைப் பார்க்கிற வரைக்கும் பச்சை தண்ணி பல்லுல படக்கூடாது.”
“மயிரிழைல தப்பினம்.”
“எல்லாம் பெரியவர் ஆசிங்க !”
“அப்படியா ?” மறுபடி கேலிக் குரல்.காஞ்சிபுரத்தை அணுகும்போது மணி மூன்றாகிவிட்டது. ஏரியில் வாத்துகள் நீந்த, அதை அணைத்துச் சென்ற பாதையில் பனைமர சோல்ஜர்கள்காவல் நின்றன. கோபுரங்கள் வெண்மையாக, புதுசாகத் தெரிந்தன. நகரமே நூறாவது ஆண்டைக் கொண்டாட அலங்கரித்துக் கொண்டிருந்தது.குறுக்கும் நெடுக்கும் தட்டியும் மூங்கிலும், சுதந்திர மாடுகளும், ஓடும் நாய்களும், லாட்டரி டிக்கெட் நிறைந்த சைக்கிள்களும்…. பாகீரதிக்குஉற்சாகம் பொங்கியது.பெரிசாக பந்தல் போட்டுக் கொண்டிருந்தார்கள்.
“இங்கதான் விழா நடக்கப் போகுதுங்க.”
“யாராவது இந்த ஊரைப் பார்த்தா பழைய பல்லவர் காலத்து தலைநகர்னு சொல்வாங்களா ? வாட்டிகனைப் பார்த்தியே எப்படி இருந்தது ? ஆயிரம்ஆண்டு பழசுன்னா அமெரிக்கால என்னமா ‘ப்ரிசர்வ்’ பண்ணுவா !”
“நமக்கு அதெல்லாம் முக்கியமில்லைங்க,”
“நான் உன்கிட்ட பேசலை பால்ராஜ்.”
“நேராப் போய்ப் பெரியவரை முதல் தரிசனம் பண்ணிரலாங்க. அப்புறம் போயி மத்த சாமிங்களைப் பார்த்துரலாம்.”சிவசங்கர் தீர்மானமாக மறுத்தார். “முதல்ல ஓட்டல் போய் ‘செக் இன்’ பண்ணிட்டு அப்புறம்தான் மத்ததெல்லாம்.”
“இல்லைங்க. அரைமணிதான் அவரைப் பார்க்க சமயம். அதுக்குத்தாங்க வண்டியை விரட்டிக்கிட்டே வந்தேன்.”
“நாளைக்குப் பார்த்துக்கலாம். முதல்ல ஓட்டல். எனக்குப் பசிக்கிறது.”ஆர்ச் வளைவுகளில் மூன்று பெரியவர்களும் ஆசிர்வதிக்க நரசிம்மராவ் எழுதிக் கொண்டிருந்தார்.
‘காமாந்தகார கன்னி’ என்ற சினிமா சுவரொட்டியை உரக்கப் படித்தார்.ஒரே ஒரு த்ரீ ஸ்டார் ஓட்டல்தான் இருந்தது. அதிலும் ரூம் போட்டு உள்ளே சென்று படுக்கையில் உட்கார்ந்ததும் குறை சொன்னார்.
“பாத்ரூமில் கரப்பான் பூச்சி, சுவர்களில் ரத்தக் கரை, டவல் அழுக்கு, மருந்து நாற்றம்…அமெரிக்கால ஒரு மினிமம் comfort - ஆவது….”பாகீரதி கடைசியாகப் பொறுக்க முடியாமல், “ரெண்டு நாளைக்கு அமெரிக்காவை விட்டு இந்தியாவுக்கு வாங்களேன். நாம வந்ததுபரமாச்சாரியாளைத் தரிசனம் பண்ண. ஓட்டல் மூட்டைப்பூச்சியை எண்ண இல்லை.”
“நாம வந்ததுன்னு சொல்லாதே. நீ வந்தது! எனக்கு இதில இஷ்டமில்லை; நம்பிக்கை இல்லை.அவரைப் பார்க்காட்டிக் கூட எனக்குப்பரவாயில்லை. தலைவலி எனக்கு !”அதற்குள் பால்ராஜ் வந்து, “அம்மா, அம்பாள் பூசை செய்யறாரு சின்னவரு. வாங்க… போய் தரிசனம் பண்ணிடுங்க.”
“வரேன் பால்ராஜ்… கிளம்புங்க.”
“நான் வரலை நீ போ. நான் ரூம்ல இருக்கேன்.”
“நீங்க வராம தனியாப் போக மாட்டேன்.”
“அதான் பால் இருக்கானே ?”
“அய்யா நான் உள்ளே வர மாட்டேங்க! வெளியே பெரியவரை ஒருமுறை தரிசனம் செய்தா போதும்….”
“ச்சே! உன்னோட வேதனை பாகீ !”
“ப்ளீஸ்! ஒரு நாளைக்கு, ஒரே ஒரு நாளைக்கு உங்க ஃபிசிக்ஸ் பேசறதை மறக்கக் கூடாதா, பிடிவாதத்தை விட்டுக் கொடுக்கக் கூடாதா ? இந்தப்பிடிவாதம் பிடிச்சுத் தானே பிள்ளையைப் பறிகொடுத்தோம் .”அவர் சட்டென்று மௌனமாகத் தீய்க்கும் கண்களால் பாகீரதியைப் பார்த்து, “நான் தான் காரணமா ! நான் மட்டும்தான் காரணமா ?” என்றார்.
“மறுபடி ஆரம்பிக்க வேண்டாம்.”
“நான்தான் காரணமா சொல்லு ?”
“சரி நானும்தான் காரணம்.”பால்ராஜ் தர்மசங்கடத்தை உணர்ந்து, “நான் ஓட்டல் வாசல்ல வண்டி கொண்டு வரேங்க!”சிவசங்கர் “ஆல் ரைட் ! வரேன். ஆனா என்னால சட்டையெல்லாம் கழட்ட முடியாது. அப்பப்ப ஸ்மோக் பண்ணுவேன். நான் நாஸ்திகன். மதமும்ஒரு போதைப் பொருள். ஒரு ஏமாற்று வேலைன்னு நம்பறவன்.”
“சும்மா வாங்களேன் துணைக்கு!”அவர் அரை டிராயரையும் யுனிவெர்சிட்டி பனியனையும் மாட்டிக் கொண்டு தலையில் பேஸ்பால் குல்லா போட்டுக் கொண்டு “லெட்ஸ் மூவ்!”என்றார்.பாகீரதிக்கு அழுகை வந்தது. ஏன் இத்தனை பிடிவாதம் பிடிக்கிறார் ! ஏதோ நிகழப் போகிறது என்று வயிற்றில் பயம் முலாம் பூசியது.மடத்துக்குள் நூற்றுக்கணக்கானவர்கள் உட்கார்ந்திருக்க மேடை மேல் பூஜை நடந்து கொண்டிருந்தது.
“ஹூ இஸ் திஸ் பாய் ?”
“புதுப் பெரியவா.”
“வாட் நான்சென்ஸ், இந்தப் பையன் கால்ல விழணுமா ?”
“நீங்க விழ வேண்டாம்.”
“இவர் நம்பர் த்ரீயா ? வேர் இஸ் நம்பர் டூ ?”
“பேசாம இருங்களேன் ப்ளீஸ்.”ஆயாசம் தரும் அளவுக்குக் காத்திருந்த பின் ஆரத்தி எடுத்தார்கள்.
அங்கிருந்து சுவரோரமாக நடந்து நழுவி, பெரியவரைப் பார்க்கச் சென்றார்கள்.சிவசங்கரன் ஓரமாக நிற்க ........
“நிக்கறேளே உட்காருங்கோ. பேரு ? “
“ஷிவ்ஷங்கர்.”
“ஊரு ?”
“அமெரிக்கால ப்ரின்ஸ்டன்ல பிசிக்ஸ் ப்ரொபசரா இருக்கேன்.”
” ப்ரின்ஸ்டன்லதானே ஜெயராமன்னு மடத்துக்கு ரொம்ப வேண்டப்பட்டவர் இருக்கார்.”
“எனக்குத் தெரியாது. ப்ரின்ஸ்டன்ல ஐன்ஸ்டைன்னு ஒரு மகாமேதை இருந்தார்.”
“உங்க பௌதீக சாஸ்திரம் என்ன சொல்றது, ஆதி சங்கரர் சொன்னதைத் தானே !”
“இல்லை சுவாமி. பௌதீகம் ரொம்ப தூரம் போயிட்டது. பிரபஞ்சத்தையே ஒரு துகள், ஒரே ஒரு சக்தி இதில் விளக்க முடியுமா பார்க்கறா !”
“அதையே தான் – சக்தியும் சிவமும்னு ஒரு சரீரத்தில் அர்த்தநாரீஸ்வர திருக்கோலத்தோட ஒரே பொருளா விளங்கறா !”
”இல்லை நாங்க சொல்றது வேற .”
“அது இங்கிலீஷ், இது சம்ஸ்கிருதம். பவானீத்வம். இனி நீயாவே நான் ஆகி விடுகிறேன். நான், என்னுடையது என்கிறதை உன்னிடத்திலேயேகரைச்சுடறேன்ன்னு சொல்றார்…”
“அப்படி இல்லை “ என்றார் சிவசங்கரன்.
“வாங்க போகலாம்” என்றாள் பாகீரதி.
“உங்களுக்கு மிராகிள்ஸ்ல நம்பிக்கை இல்லையா ?”
“இல்லை.”
“பால்ப்ரண்டன், ஆர்தர் கோஸ்லர் எல்லாரும் எழுதிருக்காளே படிச்சதில்லை ?”
“இல்லை.”
“பரமாச்சார்யாள் மெஹபூப் நகர்ல சாதுர்மாஸ்ய பூஜைக்காக காம்ப் இருக்கறப்ப, உங்களைப் போலத் தான் ஒருத்தர் அமெரிக்காவில இருந்துவந்திருந்தார். பஸ் ஸ்டாண்டில சைக்கிள் ரிக்ஷாவைப் போட்டுண்டு வந்தார். ஆசீர்வாதம் வாங்கிண்டார்.அப்பல்லாம் மஹாபெரியவா நன்றாகவே எல்லோருடனும் பேசுவா. அவர் கொடுத்த குங்குமத்தைத் தன் தலையிலே அப்பிண்டு, ஆப்பிளைக்கொடுத்து அனுப்பிச்சார்.அவர் மடத்திலேயே சாப்பிட்டுட்டு ஏதாவது கான்ட்ரீப்யூஷன் பண்ணலாம்னு பர்சை எடுக்கறார். காணோம். பதறிப் போய்ட்டார்.பர்ஸ் மட்டும் இல்லை. பாஸ் போர்ட்டு, ‘டிராவலர் செக்’குங்கறாளே — பதினஞ்சாயிரம் டாலர் — எல்லாமே காணும். அப்படியே ஒடிஞ்சுபோய்ட்டார். எங்கன்னு தேடுவார் ? சாப்ட்ட இடத்தில இல்லை. சைக்கிள் ரிக் ஷாக்காரனை வீடு தேடித் போனா அவங்கிட்டேயும் இல்லை.கடைசில எங்க இருந்தது தெரியுமா ? பஸ் ஸ்டாண்டில சிமெண்ட் பெஞ்சில அவர் உட்கார்ந்திருந்த இடத்தில. அந்த இடத்தில் ரெண்டாயிரம்பேராவது புழங்கியிருப்பா. இதுக்கு என்ன சொல்றேள் சிவசங்கரன், மிராக்கிள் இல்லையா இது ? இதை உங்க பௌதீக சாஸ்திரம் எப்படி விளக்கமுடியும் ?”
“நீங்க மிராக்கிள்ன்னு சொல்லலாம். நான் இதை பிராபபிலிட்டி — சான்ஸ் இப்படித்தான் சொல்வேன். தரிசனம் ஆச்சோல்லியோ போகலாமா பாகீ !”அவர் புன்னகைத்துப் பிரஸாதம் படாமல் கொடுத்தார்.வெளியே வரும்போது பாகீரதி கோபத்தில், “அவர் கிட்ட கூடவா ஆர்க்யுமென்ட்?”
“ஏன் ? அவரும் என்னைப் போல் ஒரு ஆத்மா தானே ? அதானே அத்வைதம் சொல்றது ?”பால்ராஜ் வெளியே காத்திருந்தான். “வேகமா வாங்க, நீங்க அதிர்ஷ்டம் பண்ணவங்க. மஹா பெரியவரை இன்னும் அரை மணி பார்க்கலாமாம்!”அந்த மண்டபத்தை ஒட்டி புறப்பட்ட க்யூ தெருவில் தொடர்ந்தது. மெல்ல மெல்ல நகர பாகீரதி ஓட்டமும் நடையுமாக அதன் வாலில் சேர்ந்துகொண்டாள். மற்றதெல்லாம் மறந்து போய் விட்டது.ஒரு வெள்ளைக்காரி பல்பொடி கலரில் ஜிப்பா அணிந்து கொண்டு நிஷ்டையில் எதிரே திறந்திருந்த வாசலையே நோக்கிக் கொண்டிருந்தாள்.உள்ளே இலேசான இருட்டாக இருந்தது. மெல்ல அணுகினார்கள்.உள்ளே அந்த நூறு வயதுப் பெரியவர் ஏறக்குறைய மல்லாந்த வாக்கில் உட்கார்ந்திருந்தார். காவி முட்டாக்கின் மேல் இலைக் கிரீடம்வைத்திருந்தார்கள். முழங்கால் மடங்கியிருந்தது. யாரையும் குறிப்பாகப் பார்க்கவில்லை.அருகே ஒரு பிராமண இளைஞன் வரிசையை “ம்ம் நகருங்க” என்று துரிதப்படுத்திக் கொண்டிருக்க, அவ்வப்போது மாலையை அணிவித்துக்கழட்டிக் கொண்டிருந்தான். இளைஞன் பால்ராஜை அடையாளம் கண்டு கொண்டு, “என்ன பால்ராஜ் எத்தனாவது தடவை தரிசனம் ?”
“தொண்ணூறுங்க ! அய்யா ..... அமெரிக்காவிலிருந்து வந்திருக்காரு”
“அமெரிக்காலருந்து நிறைய பேர் வரா ! வாங்கம்மா கிட்ட பாருங்கோ ” என்று பாகீரதியை அருகே அழைக்க .......பாகீரதி அந்தக் கணத்தில் தன் சகல கட்டுப்பாடுகளையும் இழந்து கண்ணீர் உதிர்க்க, புடவை மேல் பட்டுத் தெறித்தது.
“பரமாச்சார்யாள் கிட்டே சொல்லுங்கோ. இந்த க்ஷணத்துக்குத்தான் பத்தாயிரம் மைல் கடந்து வந்திருக்கோம். மேம்போக்கா இவர் குதர்க்கம்பேசினாலும் உள்ளுக்குள்ளே இவருக்கும் நம்பிக்கைதான்.ஒரே பிள்ளை. பாலாஜின்னு பேர் வச்சோம். 12 வயசு வரைக்கும் சமத்தா வளர்ந்தான். பாழாப்போன அமெரிக்காவில அப்பாவுக்கும் பிள்ளைக்கும்சரிப் படாம வாக்குவாதம் வந்து வீட்டை விட்டுப் போய்ட்டான் !உலகம் பூரா தேடியாச்சு. நேபாள், சிலோன், ஜப்பான், எல்லாம் தேடியாச்சு. ஆக்சிடெண்டில போய்ட்டானா, செத்துப் போய்ட்டானா, இருக்கானா…. ?எம்புள்ளை போய்ட்டான். நிம்மதியே இல்லை. இன்னி வரைக்கும் !”
“பரமாசார்யாளைத் தரிசனம் பண்ணிக்குங்க. சார் நீங்களும்தான் சார்.”அந்த இளைஞன், அருகில் சென்று அவர் காதுடன் சொல்ல, ஸ்ரீமஹா பெரியவா கைகளை உயர்த்தி வாழ்த்தினார். பாகீரதியின் நெஞ்சு நிறைந்தது.காட்டராக்ட் கண்ணாடி வழியாகப் பெரிய கண் ஒன்று அவளைப் பார்த்தது.ஆப்பிள் பழத்தையும் ரோஜாவையும் கொடுத்த அந்த இளைஞன்,
“எல்லாம் சரியாய்ப் போய்டும்.கவலைப்படாதீங்கோ.பையன் பேர் என்ன சொன்னேள் ?”
“பாலாஜி.”அவர்கள் வெளியே வந்தனர்.சிவசங்கர் கோபமாக, “ஏன் சின்னக் குழந்தை மாதிரி அழறே ?”
“சினிமாவில வர மாதிரி உன் பிள்ளை வருவான்னு நினைச்சியா !
அவள் அடங்காமல் அழுதாள்.
“பாகீ ! பாகீ ... டோன்ட் பி சில்லி. டோன்ட் மேக் எ ஸீன் ! கமான் !” அவளைத் தோளில் பற்றி, பரிவு என்பதன் முதல் அடையாளம் சற்றே தெரிய நடத்திஅழைத்துச் சென்றார். பின்னால் குரல் கேட்டது. மடத்து சிப்பந்தி ஒருவர் ஓடி வருகிறார். '' மாமி மாமி, பெரியவா உங்க கிட்ட யாரையோ அனுப்பியிருக்கா "'
“பாகீ ! பாகீ ... டோன்ட் பி சில்லி. டோன்ட் மேக் எ ஸீன் ! கமான் !” அவளைத் தோளில் பற்றி, பரிவு என்பதன் முதல் அடையாளம் சற்றே தெரிய நடத்திஅழைத்துச் சென்றார். பின்னால் குரல் கேட்டது. மடத்து சிப்பந்தி ஒருவர் ஓடி வருகிறார். '' மாமி மாமி, பெரியவா உங்க கிட்ட யாரையோ அனுப்பியிருக்கா "'
யார்?
ஒரு கட்டுக்குடுமிக்காரர் ஒருவர் ஒரு இளம் வாலிபனுடன் வந்தவர் '' டேய் பாலாஜி நேத்திக்கி பெரியவா சொன்னாளே இன்னிக்கி வருவான்னு ''இவா தானே அது -
''எங்க அப்பா அம்மா தான் வந்திருக்கா !”
இதற்கு மேல் எழுதுவது அர்த்தமில்லை. இதயமும் மனமும் தானே எழுதிக்கொள்ளும்.
Courtesy : mail from Meera Neelakantan
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.
Namaskaram
Narayanan Ramaswamy
No comments:
Post a Comment