Friday, February 13, 2015

“ஆமா……இதெல்லாம் என்ன ஞாபகசக்தி? ஈஸ்வரன் ஞாபகம் எப்பவுமே இருக்க மாட்டேங்கறதே!…






“ஆமா……இதெல்லாம் என்ன ஞாபகசக்தி? ஈஸ்வரன் ஞாபகம் எப்பவுமே இருக்க மாட்டேங்கறதே!…

(பெரியவாளின் ஞாபக சக்தி)

ஒருநாள் காலை தர்சனத்துக்கு ஒரு வயஸான தம்பதி வந்திருந்தனர். பெரியவா ஒரு வாதா மரத்தின் கீழ் அமர்ந்து தர்சனம் குடுத்துக் கொண்டிருந்தார். தம்பதிகள் பழங்களை சமர்ப்பித்துவிட்டு நமஸ்கரித்தனர்.

“இதே மாதிரி வாதா மரம் ஒங்காத்து வாசல்ல இருந்ததே!……இன்னும் இருக்கோ?….”

“ஆமா…இன்னும் இருக்கு! பெரியவா பாத்து இருவது வர்ஷத்துக்கு மேலேயே இருக்கும்….இப்போ நன்னா பெருஸா வளந்திருக்கு; நெறைய காய்க்கறது; தெருப் பசங்க கல்லை விட்டெறிஞ்சு வாதம் பழத்தை பொறுக்கித் திங்கறதுகள்..”

“கூடத்ல ஒரு பத்தாயம் இருந்துதே!….அதுல கரையான் அரிச்சு ரிப்பேர் பண்றா..போல ஆயிருந்துதே!..”

“ஆமா….அத அப்போவே ரிப்பேர் பண்ணியாச்சு. அதுலதான் சாப்பாட்டு நெல்லைக் கொட்டி வெக்கறோம்….”

“ஒரு சே…ப்பு பசுமாடு கன்னு போடாம இருந்துதே!…..”

“அது ஆறு கன்னு போட்டுது பெரியவா…..இப்போ, சமீபத்லதான் தவறிப் போச்சு. எல்லாக் கன்னும் நன்னா இருக்கு…நல்ல வம்சம்….”

“ஐயங்கார் கணக்குப்பிள்ளை இருந்தாரே! திருநக்ஷத்ரம் எம்பதுக்கு மேலே இருக்குமோ இப்போ?….”

“சதாபிஷேகத்துக்கு ரெண்டு வர்ஷம் முன்னாடி, வைகுண்டம் போய்ட்டார் பெரியவா….”

“எட்டுக்குடி முருகனுக்கு தைப்பூசம் காவடி எடுக்கற வழக்கமாச்சே! ஒங்க புத்ராள் யாராவுது வந்து காவடி எடுக்கறாளா?…”

“பெரியவா க்ருபைல எட்டுக்குடி முருகன் கைங்கர்யம் நடந்துண்டிருக்கு..”

“வடுவூர் துரைஸ்வாமி ஐயங்கார், வை.மு.கோதைநாயகி அம்மாள்,பம்மல் சம்மந்த முதலியார் நாவல்கள், மதனகாமராஜன், விக்ரமாதித்தன் புஸ்தகங்கள் எல்லாம் அலமாரி நெறைய இருந்துதே! இருக்கா? யாராவுது படிக்கறாளா?….”

“எல்லாப் புஸ்தகமும் இருக்கு…ஆனா யாரும் படிக்கறதில்லே பெரியவா…..”

“ராமாயண பாராயணம் பண்ணிண்டிருந்தியே! நடக்கறதா..?”

“கண் செரியாத் தெரியறதில்லே, அதுனால ஒரு சர்க்கம் மட்டும் படிக்கிறேன்…”

கேட்டுக்கொண்டிருந்த பாட்டிக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம்! பாட்டி சொன்னாள்….”எத்தனையோ வர்ஷத்துக்கு முன்னாடி பெரியவா எங்க க்ராமத்துக்கு வந்தப்போ, எங்காத்துக்கு வந்து, கொஞ்ச நேரம் இருந்திருப்பேள் …..ஆனா, எப்டி இத்தனை நுணுக்கமா எல்லாத்தையும் பாத்து, இத்தனை வர்ஷத்துக்கப்புறம் கூட எதையுமே மறக்காம, அவ்வளவு ஞாபகமாக் கேக்கறேளே!…பெரியவா கேட்டதுல பாதி விஷயங்கள், அந்தாத்துல இருக்கற நேக்கே நெனைவுல இல்லே!……”

பெரியவா படாரென்று ஒரு பெரிய விஷயத்தை போட்டுடைத்தார்……..

“ஆமா……இதெல்லாம் என்ன ஞாபகசக்தி? ஈஸ்வரன் ஞாபகம் எப்பவுமே இருக்க மாட்டேங்கறதே!…

” ஸூர்யனுக்கு அக்னியின் நினைவு இல்லையாம்!!

குறை என்று வரும்போது, பெரியவா மாதிரி மஹான்கள் தங்களை முன்னிறுத்தி சொல்லுவார்கள். நம்மை மாதிரி அல்பங்களோ, குறை என்றால் அடுத்தவர்களைத்தான் முன்னிறுத்திச் சொல்லுவோம்.











Courtesy :  Varagooran Narayanan

Thanks for the pictures of Mahaperiyava bhaktas

No comments: