Tuesday, February 17, 2015

பெரியவா செய்த பேருதவி.



கலவையில் பிறந்த பேரொளி’ என்ற புத்தகத்தில் இருந்து சில நினைவுகள்.

Author: கவிஞர் நெமிலி எழில்மணி.

பெரியவர் செய்த பேருதவி.

நெமிலியிலே அருள்மிகும் தேவி அன்னை பாலாவின் சன்னிதியில் ஒரு வெள்ளிக்கிழமையன்று அற்புதம் ஒன்று நடந்தது.

ஆம் ! விழியற்றவருக்கு வழி காட்டினாள் அன்னை ! இதோ அந்தச் செய்தி.

“அன்னைக்கு பாலபிஷேகம் முடிந்தது. தேனபிஷேகம் நடைபெறும் சமயம். வேதங்கள் ஒலிக்கும் சன்னிதிக்கு விழியற்ற ஒருவர் வயதான தமது தந்தையாருடன் வந்தார். பெயர் எம்.எஸ்.ராமமூர்த்தி என்றும், பெரம்பூர் ஐ.ஸி.எஃப் கோச் ஃபாக்டரியில் பணி புரிவதாகவும் கூறினார். அவரை அழைத்துச் சென்று அன்னையிடம் அமர வைத்தோம். பஞ்சாமிர்தபிஷேகம், சந்தனாபிஷேகம், இளநீர் அபிஷேகம் என அன்னைக்கு ஒவ்வொரு அபிஷேகத்தையும் பக்தி ஸ்ரத்தையுடன் செய்து கொண்டிருந்தார்கள்.

ஒவ்வொரு அபிஷேக முடிவிலும் தீபாராதனை காட்டும்போது, “இருள் நீக்கும் திரிபுர சுந்தரியே—மருள் போக்கும் திரிபுர சுந்தரியே ! திருமணம் முடிக்கும் திரிபுர சுந்தரியே!” என்று அன்பர்கள் மனம் உருக கோஷித்தனர். அபிஷேகம் முடிந்து அலங்காரம் நடக்கும்போது விக்கி விக்கி அழுகின்ற குரல் கேட்டு அனைவரும் திகைத்தோம். யாரென்று பார்த்தால் அந்த விழியற்ற அன்பர் திரு ராமமூர்த்தி அவர்களிடம்தான் அந்த ஒலி எழும்பியது. பதறிப்போய் அவரை மெல்ல அழைத்து விவரம் கேட்டோம்.

“நான் பெரம்பூர் ஐ.ஸி.எஃப் கோச் ஃபாக்டரியில் வேலை பார்த்து வர்றதுக்குக் காரணம் பெரியவர் முன்னாள் நாடாளுமன்ற துணை சபாநாயகர் திரு. ஜி. லக்ஷ்மணன் அவர்கள்தான். அவர்களின் உதவியால்தான் இந்த விழியற்றவனுக்கு வேலை கிடைத்தது. இதுவரை எனது வயதான அம்மாதான் என்னையும் என் அப்பாவையும், பார்வையற்ற என் அண்ணாவையும் கவனித்துக் கொண்டாள். இரண்டு மாதங்களுக்கு முன்தான் எனது அம்மா காலமாகி விட்டார். நாங்கள் எப்படி வாழ்வது? அப்பாவுக்கோ வயதாகி விட்டது. திருமணத்தைப் பற்றி நான் நினைத்ததே கிடையாது. ஆனால் இப்போது என்ன செய்வதென்றே தெரியவில்லை. பார்வையற்ற என்னை யார் விரும்புவார்கள் ? இது என்ன சோதனை ! நினைக்க நினைக்க எனக்கு துக்கம் தாங்கவில்லை. கடந்த நூறு ஆண்டுகளாக அன்னை பாலா திரிபுர சுந்தரியை நீங்கள் வீட்டிலேயே பிரதிஷ்டை செய்து பூஜைகள் செய்து வருவதாகக் கேள்விப்பட்டேன். நடக்கமுடியாத திருமணங்களை அன்னை பாலா திரிபுரசுந்தரி நடத்திக் காட்டியதாக பலர் கூறவும் நாங்கள் இங்கே வந்துள்ளோம்.. “அம்மா! எங்களை ஆதரிக்க வேண்டும்” என்று கேட்க இங்கே வந்துள்ளோம்.

“பார்வையற்ற என்னைப் பார்த்துக்கொள்ளவும், பாசத்துடன் கவனித்துக் கொள்ளவும் ஒரு பெண்துணை வேண்டும் என்று கேட்பதற்காக வந்துள்ளேன். வயதான அப்பாவை வாஞ்சையுடன் பார்த்துக்கொள்ள எனக்கு ஒரு மனைவியைக் கொடு “ என்று பாலாவை வேண்டிக்கொள்ள வந்துள்ளேன். அம்மாவை இழந்த துக்கம் தாங்காமல்தான் அன்னையின் சன்னிதியில் கதறி அழுதுவிட்டேன்” என்றார்.

எங்களுக்குத் தூக்கிவாரிப் போட்டது. கடந்த பல ஆண்டுகளாகப் பூஜை செய்து வருவது வாஸ்தவந்தான். சொந்த வீடாயிருந்தாலும், குடும்ப பூஜை செய்து வந்தாலும், யார் வந்தாலும் அவர்களைப் பூஜைகள் பார்க்க அனுமதித்துத் தரிசனம் செய்து வைப்பது வழக்கம்தான். ஆனால் இப்படி “கண்ணற்ற எனக்குப் பெண்ணொன்று தருவாளா?” என்று கேட்டால் என்ன சொல்வது ? அனைவரும் அதிர்ந்து போனோம். அவரது நிலையைப் பார்த்தால் பரிதாபமாகத்தான் இருந்தது. இருந்தாலும் பார்வையற்றவரை யார்தான் மணப்பார்கள்? அம்பாளிடம் இப்படி ஒரு வேண்டுகோளைக் கேட்டு விட்டார்களே ?” என்று அதிர்ந்து போனோம். ஆனால் அடுத்த கணம் அங்கே ஓர் அற்புதம் நிகழ்ந்தது.

ஆம்! திமிரியைச் சேர்ந்த திரு. பாஸ்கர ஐயர் என்பவர் தம் பெண் லலிதாவுடன் அம்மனின் சன்னிதிக்கு வந்தார். அவர் தம் பெண்ணுக்கு மணம் முடிக்க ஏற்பாடு செய்து வரதட்சிணை அரக்கனால் அடிபட்டுத் தோற்றுப்போனவர்.

‘சவரன்’ என்ற பெயரைக் கேட்டதும் ‘சர்ப்பம்’ என்ற பெயரைக் கேட்டது போன்று சரிந்து விடுவார்.

புரோஹிதம் மூலம் குடும்பத்தை நடத்திக் கொண்டிருக்கும் அவருக்கும் ஆயிரங்களுக்கும் வெகு தூரம். வந்தவர் அங்கே வந்திருந்த ராமமூர்த்தியின் நிலை அறிந்தார். லலிதாவும் அவரைப் பார்த்தார். “கண்பார்வை இல்லாவிடினும் பரவாயில்லை. நான் இவரையே கல்யாணம் பண்ணிக் கொள்கிறேன்” என்று அந்தப் பெண் கூறவும் ஆச்சரியத்தால் பிரமித்தனர் அனைவரும். மனப்பூர்வமாக ஒத்துக்கொண்ட அந்தப்பெண்ணை அனைவரும் பாராட்டினர்.

“அன்னையே ! என்னே உன் கருணை ! என்னே உன் திருவிளையாடல் ! நடக்க முடியாதது என்று நாங்கள் நினைத்ததை ஒரு நொடிக்குள் நடத்திக் காட்டிவிட்டாயே! முடியாதது என்று நாங்கள் நினைத்ததை ஒரு கணத்தில் முடிக்க வைத்து முறுவல் செய்கிறாயே !

அவரை வரவழைத்ததும் நீயே !

அவளை வரவழைத்ததும் நீயே !

திருமணம் முடிக்கும் திரிபுரசுந்தரி என்பது பொய்யாகுமா ? 

தீபாராதனை முடிந்ததும் எல்லோரும் ஒன்றுகூடிப் பேசி நிச்சியதார்த்தம் வைக்க முடிவு செய்யப்பட்டது.

காஞ்சிப் பெரியவாளிடம் சென்று ஆசி பெறுவதற்காக திமிரி பாஸ்கர ஐயரும் அவரது துணைவியார் லட்சுமியும், மகள் லலிதாவும் சென்றனர். காரணம் திரிபுரசுந்தரியின் சன்னிதியைப் பார்க்கும்போது அவருக்குக் காஞ்சிப் பெரியவாளின் கருணை முகம்தான் நினைவுக்கு வரும்.

ஆம்! தற்போது பாலா திரிபுரசுந்தரி பூஜை செய்பவர்களின் முன்னோர்களான நெமிலி ஹெட்மாஸ்டர் டி.கே.ஜானகிராம ஐயர் அவர்களும் மற்றவர்களும் காஞ்சிப் பெரியவாளை நெமிலிக்கு வரவழைத்து அன்னை பாலா திரிபுரசுந்தரியின் சன்னிதியில் பாத பூஜை செய்ததை அறிந்தவர் அவர்,

அபிராமி அருட்செல்வம்----காமாட்சித்தாய் மடியில் சீரட்சி புரிந்து வரும் காமகோடித் திருவிளக்கு----கலவையில் பிறந்த கருணைப் பேரொளி அன்று ராஜரிஷியாக தமது சமஸ்தான பரிவாரங்கள் புடைசூழ வந்தமையும், பாரதம் முழுதும் பதித்த பாதங்களை வருடி பாதபூஜை செய்த நிகழ்ச்சியும் அவருக்கு நினைவுக்கு வந்தது. அது மட்டுமா ! ஒவ்வொரு நவராத்திரியின்போதும் பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்துவிட்டு அன்னை பாலா திரிபுரசுந்தரியின் நவராத்திரி பூஜைப் பத்திரிகையை பெரியவாள் திருக்கரங்களில் சமர்ப்பிக்கும் செய்கையும் அறிந்தவராதலால், அன்னையின் சன்னிதியில் நடைபெற்ற இந்த அற்புதத்தைப் பெரியவாளிடம் கூறி அவரது ஆசியைப் பெறவேண்டும் என்று முடிவு செய்து விட்டார். அதனால்தான் காஞ்சிக்குப் பயணமானார்கள்.

பெரியவர் சன்னிதியிலே திமிரி பாஸ்கர ஐயர் சென்றதும் நமஸ்காரம் செய்துவிட்டு தாம் திமிரியிலிருந்து வருவதாகத் தெரிவித்தார்.

முதல் விசாரிப்பு, திமிரியில் இருந்த ஹெட்மாஸ்டர் குப்புசாமி ஐயரைப் பற்றியதுதான்.

அதிர்ந்து போனார் பாஸ்கர ஐயர். எத்தனை வருடங்களுக்கு முன்னே திமிரிக்கு வந்தாரோ தெரியவில்லையே ! பத்து வருடங்களுக்கு முன் அமரராகிவிட்ட அந்த ஹெட்மாஸ்டரைப் பற்றி ஞாபகமாகக் கேட்கிறாரே !.

அடுத்த கேள்வி, “திமிரியிலிருந்து இங்கே வந்து, மடத்திலே கோலாட்டம் போட்டாளே ஒரு சின்னப்பெண் ! சுகுணா! அவ எப்படி இருக்கா?”

பாஸ்கர ஐயருக்கு உடம்பு முழுவதும் ஷாக் அடித்தது போன்று ஆயிற்று. ஆம் ! திமிரியிலிருந்து பள்ளிப் பெண்களோடு வந்து மடத்தில் கோலாட்டம் நடத்திய சுகுணா அவரது மூத்த பெண்ணல்லவா! சுமார் முப்பது வருடங்களுக்கு முன்னே நடந்த நிகழ்ச்சியை எத்தனை ஞாபக சக்தியுடன் கூறி பிரமிப்பில் ஆழ்த்துகிறார் !

‘தான் வந்ததோ தனது இளைய மகள் திருமண விஷயமாக! விசாரிப்போ தனது மூத்த மகளைப் பற்றி !’ எப்படி இருக்கும் அவருக்கு !

“என் மூத்த மகள்தான்” என்று கூறியவர், “அவ மெட்ராஸ்லே இருக்கா” என்று பரபரப்புடன் முடிக்கிறார். வார்த்தைகள் குழறுகின்றன, பெரியவரோ வாத்ஸல்யத்துடன் பார்க்கிறார்.

உடனே தான் வந்த செய்தியினை மெல்ல விவரிக்கிறார்.

புளகாங்கிதமடைகிறார் பெரியவாள்.

“அப்படியா விஷயம் ! இவரோட பெண் கல்யாணத்துக்கு யார் உதவி பண்ணப்போறா?: என்று வந்திருந்தவர்களைப் பார்த்து வினவினார். ஒருவர் 50 ரூபாய் தந்தார் மற்றொருவர் 51 ரூபாய் தந்தார். இன்னுமொருவர் 11 ரூபாய் தந்தார். அதனை அன்போடு எடுத்துக்கொள்ளச் சொன்னார் பெரியவர்.

ஆனந்தம் மேலிட அதனை எடுத்துக்கொண்டார் பாஸ்கர ஐயர்.

திடீரென்று ஒரு விசாரிப்பு.

“வக்கீல் ஓரிக்கை கண்ணாட்டியைத் தெரியுமா?” 

மெய் சிலிர்த்தது பாஸ்கர ஐயருக்கு. தெரியுமாவது ! அவருக்கு கண்ணாட்டி என்பவர் உறவு அல்லவா! இது என்ன திருவிளையாடல் ! உனது ஜாதகமே தெரியும் என்கிறாரே பெரியவர் !

“அவர் எனக்கு உறவு” என்றதும் புன்னகை பூக்கிறார் பரமாச்சாரியாள். 

“கல்யாணம்னா லேசா? எவ்வளவோ பணம் தேவைப்படுமே ! இதுவெல்லாம் போறாதே !” என்று கூறிய பெரியவாளின் முகத்திலே ஒரு கேள்விக்குறி.

சரியாக ஒரு மாதத்திற்குள் அந்தக் கேள்விக்குறி பாஸ்கர ஐயரின் முகத்திலே ஆச்சரியக் குறியாக மாறியது.

பெரியவாளின் உத்தரவுக்கிணங்க, அடையாறு டாக்டர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கணிசமாக உதவி செய்ய வள்ளிமலை முருகன் சன்னிதியில் லலிதாவிற்கும் ராமமூர்த்திக்கும் மிகச் சிறப்பாகத் திருமணம் நடந்தது.

திருமணத்தை நாடாளுமன்ற முன்னாள் உதவி சபாநாயகர் திரு.லக்ஷ்மணன் வந்திருந்து அன்புடன் நடத்திக் கொடுத்தார்.
பாரதப் பிரதமர் காரியாலத்திலிருந்து “உடல் ஊனமுற்றவராயிருந்த போதும் லலிதாவை மணந்துகொண்டு மற்றொரு முக்கியமான படியைத் தாண்டியுள்ளார்!" என்று வாழ்த்திக் கடிதம் வந்தது.

ஆச்சார்யாளின் குருவருளும், அம்பாளின் திருவருளும் சேர்ந்து அந்தக் கல்யாணம் ஜாம் ஜாமென்று நடைபெற்றது. பெரியவாளின் பேருதவியை எண்ணி எண்ணி அத்தனை பேரும் நன்றியால் விழிநீரை உகுத்தனர்!

“தவக்கோலம் தமக்காக—தர்மங்கள் நமக்காக” என்று சீரிய வாழ்வு வாழ்ந்து வரும் அந்தப் பரமாச்சார்யாளைப் போற்றிப் புகழ்ந்திட வார்த்தைகளும் உண்டோ ?

இருப்பினும் இந்த ஏழைக் கவிஞனின் இதயத்து வரிகள் அடுத்த பக்கங்களில் பாடல்களாக உருவாகி உள்ளன. படித்து அந்தப் பரமாச்சார்யாளின் பாத கமலங்களைப் பணியுங்கள் !

அல்லவை நீங்கும் !
நல்லவை ஓங்கும் !










Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.


No comments: