Wednesday, February 18, 2015

”என்னைத் தெரியறதான்னு உங்க சம்சாரத்துக்கிட்டே கேளுங்க!” - மஹா பெரியவா




















இழந்த கண் பார்வை மீண்டும் கிடைத்த அதிசயம்

காஞ்சி தெய்வம் அவளுக்குக் கருணை புரிந்தது. ‘நம்பினார் கெடுவதில்லை… இது நான்கு மறைத் தீர்ப்பு’ என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள்! காஞ்சி முனிவரின் சந்நிதானத்தில் அந்தப் பெண்மணிக்குப் பார்வை கிடைத்தது.

இழந்த கண் பார்வை மீண்டும் கிடைத்த அதிசயம்:

மஹா பெரியவாளுக்குக் கைங்கர்யம் செய்துவந்த மடத்தின் மூத்த ஊழியர்களில் ஒருவர் பாலு. மஹா பெரியவர் தேனம்பாக்கத்தில் தங்கியிருந்தபோது நடந்த சிலிர்ப்பான சில சம்பவங்களை அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

”கேரளத்தில் இருந்து பெண்ணொருத்தி பெரியவாளைத் தரிசிக்க வந்தாள். அவள் கர்ப்பமாக இருந்தபோது, தரையில் தடுக்கி விழுந்ததில் தலையில் அடிபட்டு விட்டதாம். அதிலிருந்து அடிக்கடி ஃபிட்ஸ் மாதிரியான பாதிப்பால் அவஸ்தைப்பட்டு வந்தாள்.

அவளின் கண்பார்வையும் பறிபோனதாம். காலக்கிரமத்தில் குழந்தை பிறந்தது என்றாலும், அவளின் பார்வை திரும்பவில்லை.

இந்த நிலையில் அவர்களின் குடும்பத்துக்குப் பரிச்சயமான நண்பர் ஒருவர் பிரஸ்னம் பார்க்கச் சொன்னாராம். அவரே நம்பூதிரி ஒருவரையும் அழைத்து வந்திருக்கிறார்.
பெண்ணின் ஜாதகத்தை அலசி ஆராய்ந்த நம்பூதிரி, ”கவலைப்படாதீங்க, கண்பார்வை கிடைச்சுடும். ஆனால், நீங்க க்ஷேத்திராடனம் செய்யணும். குருவாயூரில் துவங்கி, கும்பகோணம், திருவிடைமருதூர்னு புண்ணிய ஸ்தலங்களுக்கெல்லாம் போயி வேண்டிக்கோங்க. முடிந்தால் அந்தத் தலங்களில் தீர்த்தமாடுறதும் விசேஷம்”னு சொல்லியிருக்கார்.

அதன்படியே க்ஷேத்திராடனம் கிளம்பிய அந்தப் பெண்மணி, வைத்தீஸ்வரன் கோயிலுக்கும் சென்றாளாம். அங்கே ஸ்வாமி சந்நிதியில், குருக்கள் தீபாராதனை முடிந்து தட்டை நீட்டியதும், ஆரத்தி எடுத்துக்கொண்டவள், தட்டில் நூறு ரூபாய் தக்ஷணை வைத்தாளாம்.

குருக்களுக்கு ஆச்சரியம். இவளுக்குப் பார்வை இல்லை என்பதைத் தெரிந்துகொண்டவர், ”அம்மா… இது பத்து ரூபாய் இல்ல; நூறு ரூபாய் நோட்டு” என்று சொல்லியிருக்கிறார்.
இவளும், ”பரவாயில்லை… எடுத்துக்கோங்க” என்றாளாம்.
உடனே அந்தக் குருக்கள், ”நீங்க பெரியவாளைப் பார்த்ததில்லையா?” என்று கேட்டாராம்.
அவர் யாரைச் சொல்கிறார் என்று இந்தப் பெண்மணிக்குத் தெரியவில்லை. குருக்களிடமே விசாரித்திருக்கிறாள்.
“காஞ்சிபுரத்தில் இருக்காரே, சங்கர மடத்தில்… அவரை தரிசனம் செய்யுங்கோ” என்று அறிவுறுத்தியிருக்கிறார் குருக்கள்.

இவளும் உடனே அங்கிருந்து புறப்பட்டு, சிதம்பரம் சென்றுவிட்டு, அப்படியே காஞ்சிபுரத்துக்கும் வந்தாளாம். அன்று, சென்னையில் ஒரு பிரமுகர் வீட்டில் உபநயனம். அவர்களுக்குப் பிரஸாதம் எல்லாம் அனுப்பிவிட்டு, மடத்தில் அமர்ந்திருந்தார் பெரியவா.

அந்த நேரம் அங்கே வந்த இந்தப் பெண்மணி, தான் கொண்டு வந்த பழங்களை அருகில் இருந்த நாற்காலியில் வைத்துவிட்டு, தனது நிலைமையை விவரித்தாள்.

வைத்தீஸ்வரன் கோயில் குருக்கள் சொன்னபடி, காஞ்சி முனிவரைத் தரிசிக்க வந்திருக்கும் விஷயத்தையும் கண்கலங்கச் சொன்னாள்.

உடனே அவளின் புருஷனைக் கூப்பிட்ட பெரியவா, ”என்னைத் தெரியறதான்னு உங்க சம்சாரத்துக்கிட்டே கேளுங்க!” என்றார். அத்துடன், அருகிலிருந்த டார்ச் லைட்டை எடுத்து, தன் முகத்தில் வெளிச்சம் அடித்துக் கொண்டார் மஹா பெரியவா.
அதே நேரம் அந்தப் பெண், ”குருக்கள் சொன்ன சந்நியாஸி இதோ தெரிகிறாரே!” என்றாளாம் சத்தமாக… பரவசம் பொங்க!
ஆமாம்… காஞ்சி தெய்வம் அவளுக்குக் கருணை புரிந்தது.

‘நம்பினார் கெடுவதில்லை… இது நான்கு மறைத் தீர்ப்பு’ என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள்! காஞ்சி முனிவரின் சந்நிதானத்தில் அந்தப் பெண்மணிக்குப் பார்வை கிடைத்தது.
அவளுக்கு கண்பார்வை மீண்டும் கிடைக்க பிராப்தம் இருந்தது. அதற்கும் மேலாக தெய்வத்தின் மீதும், வைத்தீஸ்வரன் கோயில் குருக்கள் சொன்ன பிறகு மஹாபெரியவா மீதும் அவள் வைத்திருந்த அதீத நம்பிக்கையும் வீண்போகவில்லை.
ஆனால் இது குறித்து மஹா பெரியவாளிடம் கேட்டபோது, அவர் என்ன சொன்னார் தெரியுமா?

‘என்கிட்ட எந்த சக்தியும் இல்லை. உன் பூர்வ ஜன்ம பலன், உன்னோட நம்பிக்கை, நான் தினம் தினம் தியானம் செய்யற அம்பாள் காமாக்ஷியோட கருணை… எல்லாம்தான் காரணம்!’ என்றார்.











Courtesy : Facebook post : Natarajan Parameswaran

Thanks to  Mahaperiyava bhaktas for the scanned photos posted 

No comments: