Wednesday, February 11, 2015

பெரியவர் -- "விஞ்ஞானியை உருவாக்கியவர்!"




"விஞ்ஞானியை உருவாக்கியவர்!"
பிப்ரவரி 10,2015,தினமலர்.
காஞ்சி மகாபெரியவரிடம் 60 ஆண்டுகள் சீடராக இருந்தவர் வைத்தியநாதன். பெரியவரால், ஒரு ஏழை மாணவன் விஞ்ஞானியானது குறித்து, அவர் சொன்ன தகவல் நெஞ்சை நெகிழச் செய்கிறது.
சுந்தரராமன் என்பவர் மகாபெரியவரிடம் மிகவும் பக்தி கொண்டவர். அடிக்கடி மடத்திற்கு வந்து பெரியவரைத் தரிசனம் செய்வார். பெரியவர் சொல்வது தான் அவருக்கு வேதவாக்கு. இதற்கு காரணமும் உண்டு. மகாபெரியவர் கைகாட்டிய செல்வந்தர்களின் உதவியுடன் படித்து தேறியவர். பலநாடுகளிலும் பணியாற்றியவர். கடைசியாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தார்.
அவர் பேராசிரியராக இருந்த சமயத்தில், ஒருமுறை காஞ்சிபுரத்திற்கு வந்தார். பெரியவரைத் தரிசிப்பதற்காக வரிசையில் நின்றார். அனைவருக்கும் ஆசியளித்துக் கொண்டிருந்த பெரியவர், சுந்தரராமனை நோக்கி இரண்டு விரல்களைக் காட்டி, தனியாக அமரும்படி சொன்னார். பக்தர்கள் எல்லாரும் தரிசனம் பெற்று சென்ற பிறகு, ""சுந்தரராமா! இங்கே வா!'' என்றார்.
""நீ நிறைய சம்பளம் வாங்குறியே! நான் ஒரு பிச்சை கேட்பேன், தருவியா?'' என்றார்.
பேராசிரியர் சிலிர்த்துப் போய்விட்டார்.
எவ்வளவு பெரிய மகான்! அவர் கையசைத்தால் உலகமே ஆடும். அவரா தன்னிடம் "பிச்சை' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது! அவரது கண்களில் கண்ணீர் வந்து விட்டது.
""பெரியவா! நீங்களா இப்படி சொல்வது! உங்களால் வளந்தவன் நான். என்னவென்று சொல்லுங்கோ! அதைச் செய்ய கடமைப்பட்டுள்ளேன்!'' என்று சாஷ்டாங்கமாக பெரியவர் முன்னால் விழுந்து வணங்கினார்.
""சுந்தரராமா! காரைக்குடியில் ஒரு வேத பண்டிதர் இருக்கார். ரொம்ப ஏழை. அவரது பையன் ராமச்சந்திரனுக்கு உனது கல்லூரியில் எம்.எஸ்சி., படிக்க இடம் கிடைத்துள்ளது. அவனை உனது வீட்டில் தங்க வைத்து வசதி செய்து கொடுத்து படிக்க வைக்க முடியுமா?'' என்று கேட்டார்.
கண்களில் வழிந்த நீர் நிற்காமல், சுந்தரராமன் பெரியவரிடம்,""நீங்க சொன்னபடி செய்ய சித்தமாயிருக்கேன். இது எனக்கு பெரிய பாக்கியம்,'' என்றார். அதன்படியே, காரைக்குடியில் இருந்த வேதப்பண்டிதருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது மகனும் சிதம்பரம் வந்து பேராசிரியர் வீட்டில் தங்கிப் படித்து சிறந்த மதிப்பெண் பெற்றார். அந்த மதிப்பெண்ணின் அடிப்படையில் அவருக்கு மத்திய அரசின் ஒரு நிறுவனத்தில் "சீனியர் சயன்டிஸ்ட்' பதவி கிடைத்தது. அவர் உயர்ந்த நிலைக்கு சென்றார்.
கல்வியில் சுந்தரராமனை உயர்த்திய அதே பெரியவர், அவர் மூலம் இன்னொரு விஞ்ஞானியையும் நாட்டுக்கு தந்து விட்டார். மகாபெரியவரின் கருணையே கருணை!








Courtesy :  facebook : Varagooran Narayanan , photos : Mahaperiyava Bhaktas



No comments: