Wednesday, February 11, 2015

"இளையாத்தங்குடிப் பிள்ளையாருக்குத் தாமே தள்ளாத வயதில் துள்ளும் பாலகனைப் போல் முட்டிக்கால் தோப்புக்கரணம் போடுகிறார் பெரியவா"






"இளையாத்தங்குடிப் பிள்ளையாருக்குத் தாமே
தள்ளாத வயதில் துள்ளும் பாலகனைப் போல்
முட்டிக்கால் தோப்புக்கரணம் போடுகிறார்பெரியவா" -- கட்டுரையாளர்;ரா.கணபதி
(கைலாஸ சங்கரனின் மறு அவதாரமோ!)
((வரும் சிவராத்திரி வரை ரா.கணபதியின் கட்டுரைகள்
தொடரும்)
கட்டுரையாளர்;ரா.கணபதி
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
ராமேச்வரத்தில் அப்போது நிர்மாணமாகி வந்த
ஸ்ரீ சங்கரமடத்துக்குச் சென்னையிலிருந்து சிலர்
விக்கிரகங்களுடன் சென்ற லாரி வழியே 'ஆக்ஸில்'
உடைந்து நின்று விட்டது. இளையாத்தங்குடியிலிருந்த
பெரியவாளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
"எந்த இடத்தில் நின்று விட்டது" என்று வினவுகிறார்.
"அச்சரப்பாக்கத்தில்" என்று பதில் வருகிறது.
பெரியவாள் முகத்தில் புன்னகை விரிகிறது.
இடுக்கண் வருங்கால் நகைக்கிறார்.
இளையாத்தங்குடிப் பிள்ளையாருக்குத் தாமே
தள்ளாத வயதில் துள்ளும் பாலகனைப் போல்
முட்டிக்கால் தோப்புக்கரணம் போடுகிறார்.
ராமேச்ர விஷயம் விக்கினமின்றி நடைபெறவே
விக்னேஸ்வர வழிபாடு என்பது வெளிப்படை.
மூர்த்தி வழிபாட்டுக்கு மேம்பட்ட முற்றிய அருள்
நிலையில் இருந்து இவரே இடையூற்றைத்
தீர்த்துவிடலாம்.ஆயினும் விக்கினம் தீர்க்கவே
ஏற்பட்ட தெய்வத்தை, மானுடருக்கு முன்னுதாரணமாகத்
தாமே வழிபட்டுக் காட்டுகிறார்.அதைச் சொல்லாமல்
சொல்லுகிறார்.
"பரமசிவன் பிள்ளையாரை வேண்டிக் கொள்ளாமலே
திரிபுர தகனத்துக்குப் புறப்பட்டார். 'எந்தக் காரியம்
ஆரம்பித்தாலும் பிள்ளையாரை முதலில் பூஜிக்க வேண்டும்
என்று லோகத்துக்கு ஏற்பட்ட சம்பிரதாயத்தை ஈஸ்வரனே
செய்து காட்டினால்தானே, மற்ற ஜனங்களும் அப்படிச்
செய்வார்கள்? அதனால், ஈஸ்வரன் இப்படிப் பண்ணாத போது
அவர் புறப்பட்ட ரதத்தின் அச்சு முறிந்து போயிற்று.அப்புறம்
அவர் விக்னேஸ்வரரைப் பிரார்த்தனை செய்து கொண்ட பிறகு
தான் அது புறப்பட்டது.
அச்சு இற்று முறிந்த போன இடம்தான் 'அச்சரப்பாக்கம்' என்று
இப்போது சொல்லும் அச்சிறுப்பாக்கமான ஊர்.அங்கேயேதான்
நம் லாரியும் அச்சு முறிந்து நின்றிருக்கிறது.!"
எப்பேர்ப்பட்ட பொருத்தம்! பொருந்தாமல் இடையூறு
ஏற்பட்டதிலேயே ஒரு பொருத்தம் கண்டுவிட்டார்.
"கைலாஸ சங்கரன் ரதத்தில் போனபோது எங்கே அச்சு
முறிந்ததோ, அதே ஊரில் காலடி சங்கரர் லாரியில்
போகிறபோது ஆக்ஸில் உடைந்திருப்பதால் இவர்
அவனுடைய அவதாரமே என்றும் நிரூபணம் ஆகிறது!"
என்று பின்னரும் ஒரு பொருத்தம் காட்டிவிட்டார்


Courtesy : Varagooran Narayanan  -- Facebook  , Mahaperiyava bhaktas for the photos.

No comments: